நடப்பு நிகழ்வுகள்
Notifications
Notifications
Welcome to TNPSC Portal !
Search this website

TNPSC தேர்வுகளுக்கான நடப்பு நிகழ்வுகள் – 8 மார்ச் 2018


TNPSC Current Affairs in Tamil 8th March 2018

தமிழகம்

v  கி.மு., 3ம் நூற்றாண்டு கல்வட்டம் : சிவகங்கை அருகே கண்டுபிடிப்பு : 
o    கி.மு., 1000க்கு முன்பே, இறந்தோர் நினைவாக பெருங்கற்களை கொண்டு கல்லறை எழுப்பி வணங்கும் பழக்கம், இங்கு இருந்துள்ளது.
o    பெருங்கற்கால ஈமச்சின்னங்களில் ஒருவகையாக, கல்வட்டம் உள்ளது. இதில், சவக்குழியின் மேற்பகுதி அடைக்கப்பட்டு, கற்கள் வட்டமாக அடுக்கப்பட்டிருக்கும்.
o    சிவகங்கை மாவட்டம், அலவாக்கோட்டை என்ற இடத்தில், கீழப்பூங்குடி சாலையில் 100 க்கும் மேற்பட்ட கல்வட்டங்கள் காணப்படுகின்றன. இவை, கி.மு., 5 முதல், கி.மு., 3 ம் நுாற்றாண்டைச் சேர்ந்தவை. 
v  முதல்-அமைச்சர் தனிப்பிரிவுக்கு வரும் மனுக்கள் மீது துரித நடவடிக்கை எடுத்த கலெக்டர், போலீஸ் சூப்பிரண்டுகளுக்கு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி விருது வழங்கி கவுரவித்தார்.
o    முதல் பரிசை காஞ்சீபுரம் கலெக்டர் பொன்னையா, 2-ம் பரிசை விழுப்புரம் கலெக்டர் எல்.சுப்பிரமணியன், 3-ம் பரிசை சேலம் கலெக்டர் ரோகிணி பாஜிபாகரே ஆகியோர் பெற்றனர்.
o    அதுபோல அரியலூர், கன்னியாகுமரி, சிவகங்கை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுகள் அபினவ் குமார், என்.ஸ்ரீநாதா, டி.ஜெயச்சந்திரன் முறையே முதல், இரண்டாம் மற்றும் மூன்றாம் பரிசுகளை வென்றனர்.
v  தாம்பரம் - செங்கோட்டைக்கு அந்த்யோதயா விரைவு ரயில்:  தென்னக ரயில்வே தாம்பரத்திலிருந்து காரைக்குடி வழியாக செங்கோட்டைக்கு பகல் நேர அந்த்யோதயா விரைவு ரயில் சேவையை துவங்கியுள்ளது.

இந்தியா

v  சர்வதேச மகளிர் தினத்தையொட்டி,   நிதி ஆயோக் மகளிர் தொழில்முனைவு மேடையை ( Women Entrepreneurship Platform (WEP)) அறிமுகப்படுத்தியுள்ளது. பெண்கள் பாலின அடிப்படையிலான தடைகளை எதிர்கொள்ளாத வகையில் துடிப்புமிக்க தொழில்முனைவு சூழலை இந்த மகளிர் தொழில்முனைவு மேடை ஏற்படுத்திக் கொடுக்கும். 
v  2018ஆம் ஆண்டின் மத்தியஸ்தம் மற்றும் சமரச (சட்டத்திருத்த) மசோதாவிற்கு (Arbitration and Conciliation (Amendment) Bill, 2018) மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது. மத்தியஸ்த நடைமுறையை அதில் சம்பந்தப்பட்டவர்களுக்கு ஏற்றவகையில் மாற்றுதல், தரங்களை வரையறுத்தல், அனைத்து மத்தியஸ்த வழக்குகளுக்கும் குறைந்த செலவில் குறிப்பிட்ட காலத்தில் தீர்வுகாண்பதை உறுதி செய்தல் ஆகியவற்றை மேற்கொள்வதற்கான சுதந்திரமான அமைப்பை உருவாக்குவதன் மூலம் அமைப்பு சார்ந்த மத்தியஸ்த முறையை மேம்படுத்த வேண்டும் என்ற இலக்கை எட்டுவதற்கு 1996ஆம் ஆண்டு இயற்றப்பட்ட இந்தச் சட்டத்தில் திருத்தங்களை செய்வது உதவும்.
இச்சட்டத்தின் முக்கிய அம்சங்கள்
1. நீதிமன்றங்களுக்குச் செல்லவேண்டிய தேவையில்லாமல், மத்தியஸ்த பணிக்காக ஏற்படுத்தப்பட்ட அமைப்புகளான உச்சநீதிமன்றம் அல்லது உயர்நீதிமன்றங்களின் மூலம் மத்தியஸ்தர்களை விரைவாக நியமிக்க வகை செய்கிறது. சர்வதேச அளவிலான வணிக மத்தியஸ்தங்களுக்காக உச்சநீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட மத்தியஸ்த நிறுவனங்களையும், மற்ற வழக்குகளுக்காக மாநில அரசுகளால் நியமிக்கப்பட்ட மத்தியஸ்த நிறுவனங்களையும் அணுகுவதற்கு இந்தச் சட்டத்திருத்தம் வகை செய்கிறது.
2. இந்திய மத்தியஸ்த கவுன்சில் (Arbitration Council of India (ACI))என்ற சுதந்திரமான அமைப்பை ஏற்படுத்த இந்தச் சட்டத்திருத்தம் வகை செய்கிறது.
3. இந்திய மத்தியஸ்த குழுவின் தலைவர் உச்சநீதிமன்ற நீதிபதியாகவோ, அல்லது உயர்நீதிமன்ற நீதிபதி அல்லது தலைமை நீதிபதியாகவோ அல்லது வேறு மதிப்புறு நபராகவோ இருப்பர். இந்தக் குழுவின் மற்ற உறுப்பினர்களின் ஒரு மதிப்புறு கல்வியாளரும், மற்ற அரசு பிரதிநிதிகளும் இருப்பார்கள்.
4. சர்வதேச மத்தியஸ்தத்தை கால வரையறை என்ற கட்டுப்பாட்டில் இருந்து விலக்கவும், மற்ற மத்தியஸ்தங்களின் வழக்கு தாரர்கள் அவர்களின் வாதத்தை முடித்த நாளில் இருந்து 12 மாதங்களுக்குள் தீர்ப்பு வழங்கவேண்டும் என்ற கால வரையறையை நிர்ணயிக்கவும் வசதியாக  திருத்தம் செய்ய தீர்மானிக்கப்படுகிறது.
கூ.தக.: நிதியரசர் பி.எச்.ஸ்ரீகிருஷ்ணா உயர்நிலைக் குழு  (Justice B. H. Srikrishna High Level Committee)  :   அமைப்புசார்ந்த மத்தியஸ்தம், தற்காலிக மத்தியஸ்தம் ஆகியவற்றுக்கு உத்வேகம் அளிக்கவும், 2015ஆம் ஆண்டின் மத்தியஸ்தம் மற்றும் சமரச திருத்தச் சட்டத்தை செயல்படுத்துவதில் உள்ள சில நடைமுறைச் சிக்கல்களை களைவதற்காகவும் உச்சநீதிமன்றத்தின் ஓய்வுபெற்ற நீதிபதி திரு.பி.எச்.ஸ்ரீகிருஷ்ணா தலைமையில் அமைக்கப்பட்ட உயர்நிலைக் குழு. இந்த உயர்நிலைக்குழு 30.07.2017 அன்று அதன் அறிக்கையைத் தாக்கல் செய்தது. அதில், 1996ஆம் ஆண்டின் மத்தியஸ்தம் மற்றும் சமரச சட்டத்தில் திருத்தங்களை செய்ய பரிந்துரைத்தது குறிப்பிடத்தக்கது.
v  வர்த்தக நீதிமன்றங்கள், உயர்நீதிமன்றங்களின் வர்த்தக பிரிவு மற்றும் வர்த்தக மேல்முறையீட்டு பிரிவு (திருத்த) மசோதா 2018-(Cabinet approves the Commercial Courts, Commercial Division and Commercial Division of High Courts (Amendment) Bill, 2018 ) க்கு  மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.        
o    வர்த்தக விவகாரத்திற்கான குறிப்பிட்ட மதிப்பை தற்போதுள்ள ஒரு கோடியில் இருந்து 3 லட்சத்திற்கு இந்த மசோதா கொண்டு வருகிறது. எனவே வர்த்தக விவகாரங்களுக்கான நியாயமான மதிப்பை வர்த்தக நீதிமன்றங்கள் முடிவு செய்யலாம்.
o    சம்பந்தப்பட்ட உயர்நீதிமன்றங்களின் சாதாரண அசல் சிவில் வரையறைக்கு உட்பட்ட அதாவது சென்னை, தில்லி, கொல்கத்தா, மும்பை மற்றும் இமாச்சல பிரதேச மாநிலம் ஆகியவற்றில் மாவட்ட நீதிபதி மட்டத்தில் வர்த்தக நீதிமன்றங்களை உருவாக்க இந்த திருத்தம் வகை செய்கிறது.
v  சுதந்திரப் போராட்டத் தியாகிகளுக்கு மரியாதை அளிக்கும் திட்டத்தை (Swatantra Sainik Samman Yojana (SSSY) ) 2017 முதல் 2020 வரை நீட்டிக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இந்த ஒப்புதல் மூலம், சுதந்திரப் போராட்டத் தியாகிகளுக்கு, நாட்டின் சுதந்திரப் போராட்டத்துக்கு அளித்த பங்களிப்புக்கு மரியாதை அளிக்கும் அடையாளமாக மாதாந்திர ஓய்வூதியம் வழங்க வழிவகை செய்யப்படுகிறது.
v  இந்தியாவில் தயாரிப்போம்செயல் திட்டத்தின் (“Make in India” Action Plan) கீழ்   21 முக்கிய பிரிவுகள் செயல் திட்டத்துக்காக கண்டறியப்பட்டுள்ளன. கொள்கை முயற்சிகள், நிதி ஊக்கத் தொகை, கட்டமைப்பு உருவாக்கம், எளிதில் வர்த்தகம் புரிதல், புதிய கண்டுபிடிப்புகள்,  ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு, திறன் மேம்பாடு ஆகியவை இதில் அடங்கும். மாநிலங்களவையில் வர்த்தகம் மற்றும் தொழில் துறை இணையமைச்சர் சி.ஆர்.சவுத்ரி அளித்த பதிலில் இத்தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
v  டி.பி. ஷெகத்கர் குழு (DB Shekatkar  Committee)  :  பாதுகாப்பு படைகளின் போர் திறன்களை மேம்படுத்தவும் பாதுகாப்பு செலவினங்களை மீள்சமன்படுத்தவும் எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகளை பரிந்துரை செய்ய லெஃடினன்ட் ஜெனரல் (ஓய்வு) டி.பி. ஷெகத்கர் தலைமையில் நிபுணர் குழு ஒன்று பாதுகாப்பு அமைச்சகத்தால் அமைக்கப்பட்டது. இந்தக் குழு கடந்த 2016 டிசம்பரில் தனது அறிக்கையை தாக்கல் செய்தது. இதனை நடைமுறைப்படுத்தவும் முக்கிய செயல் திட்டங்களை வகுக்கவும் இந்த அறிக்கை பாதுகாப்பு அமைச்சகத்தால் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. இந்த அறிக்கையின் முழு விவரங்கள் மற்றும் அதன் பரிந்துரைகள் ஆயுதப் படைகளின் செயல் திட்டங்களை உள்ளடக்கியதாக இருப்பதால் அவை வெளிப்படுத்தப்படுவது நாட்டின் பாதுகாப்பு ஏற்றதல்ல என்பதால் அவை பொதுத் தளத்தில் வைக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
v  ஸ்வச் சக்தி 2018” (Swachh Shakti 2018) : சர்வதேச பெண்கள் தினத்தை முன்னிட்டு, 08-03-2018 அன்று, மத்திய  குடிநீர் மற்றும் சுகாதார அமைச்சகம் மற்றும் உத்தரப்பிரதேச அரசினால் ஸ்வச் சக்திஎன்ற பெயரில் மாபெரும் பெண்கள் கூடுகை நடத்தப்பட்டது. சென்ற ஆண்டு, இதே மாதிரியான நிகழ்வு குஜராத் மாநிலத்தில் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.   
கூ.தக. :  ஸ்வச் பாரத் திட்டம்  2014 ஆம் ஆண்டு அக்டோபர் 2 ம் தேதி பிரதமர் நரேந்திர மோடி அவர்களால் துவங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
v  வீட்டு வேலை செய்யும் பணியாளர்களுக்கு குறைந்தபட்ச ஊதிய நிர்யணயம் குறைந்தபட்ச ஊதிய சட்டத்தின் பட்டியலில் வீட்டுவேலை செய்யும் பணியாளர்களை தமிழ்நாடு, கேரளா, திரிபுரா, ராஜஸ்தான், பஞ்சாப் போன்ற மாநிலங்கள் பட்டியலில் சேர்த்துள்ளன.
v  சமூக தளங்களில், அதிகம் பின்தொடரப்படும் அரசியல் தலைவர்களில், பிரதமர் நரேந்திர மோடிக்கு அடுத்த இடத்தில், பா.ஜ., தேசியத் தலைவர், அமித் ஷா உள்ளார்.
v  தரமான விமான நிலைய சேவை விருது 2017 -டில்லி விமான நிலையம், முதலிடம்:   நான்கு கோடிக்கும் மேல் பயணியர் வந்து செல்லும் திறனுடைய விமான நிலையங்களுக்கு இடையில்,'ஏர்போர்ட் கவுன்சில் இன்டர்நேஷனல்' நடத்திய ஆய்வில்,   டில்லியில் உள்ள, இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையம், தரமான சேவை பிரிவில், முதலிடம் பெற்றுள்ளது.
v  ஃபோர்ப்ஸ் பத்திரிகை வெளியிட்டுள்ள கோடீஸ்வரர்கள் பட்டியலில், இந்தியாவில் ரிலையன்ஸ் நிறுவன அதிபர் முகேஷ் அம்பானி முதலிடம் (உலக அளவில் 19 வது இடம்) பிடித்துள்ளார். இதன்மூலம் தொடர்ந்து 11 ஆண்டுகளாக முதலிடத்தை பிடித்த பெருமை அவருக்கு கிடைத்துள்ளது.
o    இந்திய கோடீஸ்வரர்கள் பட்டியலில் அஸிம் பிரேம்ஜி  2ஆவது இடத்திலும், லட்சுமி மிட்டல்  3ஆவது இடத்திலும், சிவ் நாடார் 4ஆவது இடத்திலும், திலிப் சங்வி   5ஆவது இடத்திலும் உள்ளனர். இவர்களைத் தொடர்ந்து, குமாரமங்கலம் பிர்லா, உதய் கோடக், ராதாகிஷண் தமானி, கௌதம் அதானி, சைரஸ் பூனாவாலா ஆகியோர் முறையை 6 முதல் 10 வரையிலான இடங்களைப் பிடித்துள்ளனர்.
o    உலகளவில், மைக்ரோசாஃப்ட் நிறுவனர் பில் கேட்ஸை பின்னுக்கு தள்ளி, அமேசான் நிறுவனத்தின் நிறுவனர் ஜெப் பேஜோஸ் முதலிடத்தை பிடித்துள்ளார். அவரது சொத்து மதிப்பு 112 பில்லியன் அமெரிக்க டாலர்களாக (சுமார் ரூ.7.27 லட்சம் கோடி) உயர்ந்துள்ளது. 2ஆவது இடத்தை பில் கேட்ஸ் பிடித்துள்ளார். அவரது சொத்துகளின் மதிப்பு 90 பில்லியன் அமெரிக்க டாலர்கள் (சுமார் ரூ.5.84 லட்சம் கோடி) ஆகும்.

வெளிநாட்டு உறவுகள்

v  மத்திய பணியாளர் தேர்வாணையம் (UPSC) மற்றும் மொரீசியஸ் பணியாளர் தேர்வாணையம் (Public Service Commission of Mauritius) இடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தத்துக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.
கூ.தக.: கடந்த காலங்களில் மத்திய பணியாளர் தேர்வாணையம், கனடா, பூடான் ஆகிய நாடுகளின் பணியாளர் தேர்வாணையங்களுடன் ஏற்கனவே புரிந்துணர்வு ஒப்பந்தங்களை செய்து கொண்டுள்ளது.
o    கனடாவுடனான ஒப்பந்தம் 15.3.2011 முதல் 14.4.2014 வரை செயல்பாட்டில் இருந்தது.
o    பூடானின் ராயல் சிவில் பணியாளர் தேர்வாணையத்துடனான ஒப்பந்தம் 2005-ம் ஆண்டு நவம்பர் 10-ம்தேதி கையெழுத்தாகி மூன்று ஆண்டுகளுக்கு செயல்பாட்டில் இருந்தது. அது 2011-ம் ஆண்டு செப்டம்பர் 9-ம் தேதி புதுப்பிக்கப்பட்டு, மேலும் மூன்றாண்டுகளுக்கு நீட்டிக்கப்பட்டு, 2014-ம் ஆண்டு செப்டம்பர் 8-ம் தேதி காலாவதி ஆனது. ஒப்பந்தங்களின் மூலம், பூடான் ராயல் சிவில் தேர்வாணைய அதிகாரிகளுக்கு பயிற்சிகளை மத்திய தேர்வாணையம் அளித்தது. அண்மையில், பூடானுடன் மூன்றாவது முறையாக 29.5.2017 அன்று புரிந்துணர்வு ஒப்பந்தம் மூன்றாண்டு காலத்துக்கு செல்லுபடி ஆகும் வகையில்,கையெழுத்தாகியது.
v  இந்தியா மற்றும் பிரான்ஸ் இடையே சுற்றுச்சூழல் துறையில் ஒத்துழைப்புக்கான ஒப்பந்தத்திற்கு அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது. சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் இயற்கை ஆதாரங்கள் மேலாண்மை ஆகியவற்றில் சமபங்கு, எதிரெதிர் மற்றும் இயற்கைப் பயன்கள் அடிப்படையில் ஒவ்வொரு நாட்டின் சட்டங்களுக்கு உட்பட்டு இரு நாடுகளும் நெருக்கமான மற்றும் நீண்டகால ஒத்துழைப்பை அளிக்க இந்த ஒத்துழைப்புக்கான ஒப்பந்தம் வகை செய்யும்.
v  இந்தியா - இஸ்ரேல் விமான சேவை - மார்ச் 22 இல் துவக்கம் : டில்லியில் இருந்து சவூதி அரேபியா வழியாக இஸ்ரேலின் பெரிய நகரமான டெல் அவிவ் நகருக்கு , விமான சேவையை ஏர் இந்தியா துவக்குகிறது.  மார்22-ம் தேதி டில்லியில் இருந்து ஏர் இந்தியா விமானம் வாரத்தில் செவ்வாய், வியாழன், ஞாயிறு என மூன்று நாள் சேவையை துவக்குகிறது.

சர்வதேச நிகழ்வுகள்

v  முன்னாள் போப்பாண்டவர் 6-ஆவது பால், புனிதர் பட்டத்துக்காக கத்தோலிக்க மதத் தலைமையகமான வாடிகனால் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.மேலும், சான் சால்வடார் நாட்டைச் சேர்ந்த தலைமைப் பாதிரியார் ஆஸ்கர் ரோமரேவுக்கும் புனிதர் பட்டம் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.தனது நாட்டில் நடைபெறும் அடக்குமுறை குறித்து வெளிப்படையாகப் பேசி வந்த ஆஸ்கர், கடந்த 1980-ஆம் ஆண்டு படுகொலை செய்யப்பட்டார்.

விளையாட்டுகள்

v  தேசிய தடகளம்: சூரியாவுக்கு தங்கம்  : ஞ்சாப் மாநிலம் பாட்டியாலாவில் நடைபெறும்  தேசிய சீனியர் தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் மகளிருக்கான 10,000 மீட்டர் ஓட்டத்தில் எல்.சூரியா தங்கம் வென்றார்.  முன்னதாக அவர், 5000 மீட்டர் ஓட்டத்திலும் தங்கம் வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.


படியுங்கள் !     பகிருங்கள் !         வெற்றி பெறுங்கள் !

Announcement !
உரையாடலில் சேர்
கருத்துரையிடுக
கிளிப்போர்டுக்கு இணைப்பு நகலெடுக்கப்பட்டது!