நடப்பு நிகழ்வுகள்
Notifications
Notifications
Welcome to TNPSC Portal !
Search this website

TNPSC Current Affairs 1 October 2020

Current Affairs Today 1-10-2020

தமிழ்நாடு

நாட்டிலேயே முதல் முறையாக தனியார் பங்களிப்புடனான செயல்திறன் அளவீட்டு முறையில் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தை பெருநகர சென்னை மாநகராட்சி 7 மண்டலத்திற்கு உட்பட்ட பகுதிகளில் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் 30-9-2020 அன்று தொடங்கி வைத்தார்.

o பெருநகர சென்னை மாநகராட்சியில், திடக்கழிவு மேலாண்மைத் திட்டத்தினை மேலும் சிறப்பாக செயல்படுத்தும் பொருட்டும், மண்டலங்களில் உள்ள தெருக்களை பெருக்குதல், வீடுகள்தோறும் தரம்பிரித்து சேகரிக்கப்படும் கழிவுகளை, அதற்குரிய பதப்படுத்தப்படும் நிலையங்களுக்கு கொண்டு செல்லுதல், எஞ்சிய கழிவுகளை குப்பை கொட்டும் வளாகங்களுக்கு கொண்டு சேர்த்தல் ஆகிய பணிகளை பொதுமக்கள் மற்றும் தனியார் பங்களிப்புடன் மேற்கொள்ளும் வகையிலும், ஸ்பெயின் நாட்டைச் சார்ந்த உர்பசேர் சுமீத் நிறுவனத்திற்கு 8 ஆண்டு காலத்திற்கு பணிகள் மேற்கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்நிறுவனம் ஸ்பெயின், பிரான்ஸ், இத்தாலி, இங்கிலாந்து, ஓமன், பக்ரைன், பிரேசில், அர்ஜென்டினா, சிலி, பெரு ஆகிய நாடுகளிலும், நம் நாட்டின் தலைநகரமான டில்லி மாநகரத்திலும் தூய்மைப் பணிகளை மேற்கொண்டு வருகிறது.

தமிழகத்தில் ‘ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு’ திட்டத்தை  முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் 1-10-2020 அன்று தொடங்கி வைத்தார்.

o மத்திய நுகர்வோர் நலன் மற்றும் பொதுவினியோக அமைச்சகம், அனைத்து ரேஷன் கடைகளையும் கணினி மயமாக்குவதற்காக ஒருங்கிணைந்த மேலாண்மை பொதுவினியோக திட்டத்தை அறிமுகப்படுத்தியது. இதன் மூலம், நாடு முழுவதும் உள்ள ரேஷன் கடைகள் அனைத்தும், ஒரே கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரப்படும். ரேஷன் கார்டு வைத்திருப்பவர்கள், இந்தியாவின் எந்த மாநிலத்தில் உள்ள ரேஷன் கடையிலும் பொருட்கள் வாங்க முடியும். இந்த திட்டம் தான் ‘ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு’ என்று அழைக்கப்படுகிறது.

o தமிழகத்தில் தற்போது ஸ்மார்ட் ரேஷன் கார்டை ‘ஸ்கேன்’ செய்து அதன்மூலம் பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன. இதனைத்தொடர்ந்து சோதனை அடிப்படையில் ‘ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு’ திட்டம் தூத்துக்குடி, நெல்லை மாவட்டங்களில் கடந்த ஜனவரி 1, 2020-ந்தேதியில் இருந்து பிப்ரவரி 29, 2020 -ந்தேதி வரை அமல்படுத்தப்பட்டது. இந்த திட்டம் 1 அக்டோபர் 2020 முதல் தமிழகத்தில் 32 மாவட்டங்களில் அமல்படுத்தப்படுகிறது.இதுதவிர தூத்துக்குடி, தஞ்சாவூர், விருதுநகர், ராமநாதபுரம், மதுரை, திருவண்ணாமலை ஆகிய 6 மாவட்டங்களில் வருகிற 15-ந்தேதி முதல் இந்த திட்டம் அமல்படுத்தப்படுகிறது.

இந்தியா

☞ அதிவிரைவு ரோந்து கப்பலான ‘கனகலதா பருவா’ கடலோர காவல் படையில் 30-9-2020 அன்று மேற்கு வங்க மாநிலம், கொல்கத்தாவில் உள்ள கப்பல் கட்டுமான தளத்தில் நடைபெற்ற சிறப்பு நிகழ்வின் போது சோ்க்கப்பட்டது.மூன்று பெரிய என்ஜின்கள் கொண்ட இந்தக் கப்பல் அதிகபட்சமாக 34 நாட்ஸ் வேகத்தில் செல்லக்கூடியது .

☞ ஒலியை விட பல மடங்கு வேகத்தில் செல்லும் அதிநவீன பிரமோஸ் ஏவுகணையை இந்தியா 30-9-2020 அன்று ஒடிஸாவின் பாலாசூா் கடற்கரையில் உள்ள ஒங்கிணைந்த ஏவுதளத்தில் இருந்து வெற்றிகரமாக சோதித்தது. ஒலியைக் காட்டிலும் மூன்று மடங்கு வேகத்தில் செல்லும் இந்த அதிநவீன ஏவுகணை, 400 கி.மீ. தொலைவில் உள்ள இலக்கை தாக்கி அழிக்கும் வல்லமை கொண்டது.

o கூ.தக. : இந்தியாவும், ரஷியாவும் இணைந்து பிரமோஸ் ஏரோஸ்பேஸ் என்ற கூட்டு நிறுவனத்தை உருவாக்கியுள்ளன. இந்த நிறுவனம்தான் அதிநவீன பிரமோஸ் ஏவுகணையை தயாரித்துள்ளது. முற்றிலும் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட இந்த ஏவுகணையை நிலத்தில் இருந்தும், கடலில் இருந்தும், விமானத்தில் இருந்தும், கடலுக்கு அடியில் இருந்தும் இலக்குகளை நோக்கி ஏவமுடியும்.

அம்பேத்கர் சமூக கண்டுபிடிப்பு மற்றும் அடைவுக்கால திட்டத்தை (Ambedkar Social Innovation and Incubation Mission) மத்திய சமூக நீதி அமைச்கம் அறிமுகப்படுத்தியுள்ளது. உயர் கல்வி நிறுவனங்களில் படிக்கும் எஸ்.சி. மாணவர்களிடையே கண்டுபிடிப்பு மற்றும் தொழில்முனைவை ஊக்குவிக்கும் நோக்கிலான, இந்த திட்டத்தின் படி,

o அடுத்த நான்கு ஆண்டுகளில் ஆயிரம் எஸ்சி இளைஞர்கள் பல்வேறு உயர் கல்வி நிறுவனங்களில் அடையாளம் காணப்படுவார்கள்.

o தங்களது தொழில்முனைவு முயற்சிகளுக்காக மூன்று ஆண்டுகளில் 30 லட்சம் ரூபாய் பங்கு நிதியுதவியாக அவர்களுக்கு வழங்கப்படும்.

o வெற்றிகரமான தொழில்முனைவுகளுக்கு மூலதன நிதியிலிருந்து ஐந்து கோடி ரூபாய் வரை வழங்கப்படும்.

வெளிநாட்டு உறவுகள்

மாஸ்கோ 5 அம்ச உடன்பாட்டை அமல்படுத்துவது பற்றி இந்தியா-சீனா இடையே ராஜ்யரீதியிலான புதிய சுற்று பேச்சுவார்த்தை 30-9-2020 அன்று நடைபெற்றது.

கூ.தக. : மாஸ்கோ உடன்பாடு பற்றி ....

இந்தியா - சீனா இடையே மாஸ்கோ உடன்பாடு கடந்த ஆகஸ்டு 2020 மாதம் 10-ந் தேதி, ரஷிய தலைநகர் மாஸ்கோவில், ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு மாநாட்டின் பின்னணியில், இந்திய-சீன வெளியுறவுத்துறை மந்திரிகள் இடையே பேச்சுவார்த்தையின் போது 5 அம்ச உடன்பாடு எட்டப்பட்டது. படைகளை விரைவாக விலக்கிக் கொள்வது, பதற்றத்தை அதிகரிக்கும் செயல்களை தவிர்ப்பது, எல்லை பிரச்சினை தொடர்பான அனைத்து ஒப்பந்தங்களையும் கடைப்பிடிப்பது, எல்லை கோடு பகுதியில் அமைதியை பராமரிப்பது உள்ளிட்டவை அந்த 5 அம்சங்கள் ஆகும்.

சர்வதேச நிகழ்வுகள்

☞      குவைத்தின் புதிய மன்னராக ஷேக் நவாப் அல் அஹ்மத் அல் சபா பொறுப்பேற்றுள்ளார்.

o கூ.தக. : குவைத் முந்தைய மன்னர் அமீர் ஷேக் சபா அல் அஹ்மத் உடல்நலக் குறைவு காரணமாக செப்டம்பர் 2020 ல் காலமானார்.

☞   முன்னாள் சோவியத் யூனியன் நாடுகளான ஆா்மீனியாவுக்கும், அஜா்பைஜானுக்கும் சா்ச்சைக்குரிய நகோா்னோ-கராபக் பிராந்தியத்தில் நடந்து வரும் சண்டையை உடனடியாக முடிவுக்குக் கொண்டு வர வேண்டும் என ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் வலியுறுத்தியுள்ளது.

பொருளாதாரம்

இந்தியாவின் மொத்த வெளிநாட்டுக் கடன் ரூ.40.78 லட்சம் கோடி : கடந்த ஜூன் 2020 மாத இறுதியில் இந்தியாவின் மொத்த வெளிநாட்டுக் கடன் ரூ.40.78 லட்சம் கோடியாக இருந்தது. இது கடந்த மாா்ச் மாதத்தில் இருந்த கடன் தொகையைவிட ரூ.28,686 கோடி குறைவாகும் என்று ரிசா்வ் வங்கி தெரிவித்தது.

o கடந்த மாா்ச் 31-ஆம் தேதி இந்தியாவின் வெளிநாட்டுக் கடனுக்கும், மொத்த உள்நாட்டு உற்பத்திக்கும் இடையிலான விகிதம் 20.6 சதவீதமாக இருந்தது. இது கடந்த ஜூன் இறுதியில் 21.8 சதவீதமாக அதிகரித்தது.

o கடந்த ஜூன் 30-ஆம் தேதி நிலவரப்படி, மொத்த வெளிநாட்டுக் கடனில் நீண்ட கால கடன் ரூ.33.06 லட்சம் கோடியாக உள்ளது. இது கடந்த மாா்ச் மாதம் இருந்த நீண்ட கால கடனுடன் ஒப்பிடுகையில் ரூ.14,711 கோடி குறைவாகும்.

o மொத்த வெளிநாட்டுக் கடனில் குறுகிய கால கடனின் அளவு கடந்த மாா்ச் இறுதியில் 19.1 சதவீதமாக இருந்தது. இது கடந்த ஜூன் 30-ஆம் தேதி நிலவரப்படி சற்று குறைந்து 18.9 சதவீதமாக இருந்தது என்று தெரிவிக்கப்பட்டது.

முக்கிய தினங்கள்

சா்வதேச முதியோா் தினம் (International Day of Older Persons) - அக்டோபர் 1

o கூ.தக. : ஆரோக்கியமான முதிர் வயதிற்கான பத்தாண்டு (Decade of Healthy Ageing) - 2020-2030 (3-8-2020 அன்று நடைபெற்ற 73வது உலக சுகாதார கூடுகையின் (World Health Assembly) போது அறிவிக்கப்பட்டது.)

☞ சர்வதேச மொழிபெயர்ப்பு தினம் (International Translation Day) - செப்டம்பர் 30

Announcement !
உரையாடலில் சேர் (1)
1 கருத்து உள்ளது
  1. Profile
    பெயரில்லா
    Said: Is this information is enough to know about current affairs for TNPSC examination?
    Is this information is enough to know about current affairs for TNPSC examination?
கிளிப்போர்டுக்கு இணைப்பு நகலெடுக்கப்பட்டது!