2022ஆம் ஆண்டில் ஏழு இடங்களில் அகழாய்வுகள் செய்யப்படவுள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. அவற்றின் விவரம் வருமாறு,
1. கீழடி மற்றும் அதனைச் சுற்றியுள்ள இடங்கள்( கொந்தகை, அகரம், மணலூர்), சிவகங்கை மாவட்டம் – எட்டாம் கட்டம்
2. சிவகளை, தூத்துக்குடி மாவட்டம் – மூன்றாம் கட்டம்
3. கங்கைகொண்டசோழபுரம், அரியலூர் மாவட்டம்- இரண்டாம் கட்டம்
4. மயிலாடும்பாறை, கிருஷ்ணகிரி மாவட்டம்- இரண்டாம் கட்டம்
5. வெம்பக்கோட்டை, விருதுநகர் மாவட்டம் – முதல் கட்டம்
6. துலுக்கர்பட்டி, திருநெல்வேலி மாவட்டம்- முதல் கட்டம்
7. பெரும்பாலை, தர்மபுரி மாவட்டம்- முதல் கட்டம்
துலுக்கர்பட்டி
திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூரிலிருந்து தென்கிழக்கே 6 கி.மீ தொலையில் நம்பி ஆற்றின் இடது கரையில் துலுக்கர்பட்டி என்ற ஊர் அமைந்துள்ளது. இவ்வூரிலிருந்து கண்ணநல்லூர் செல்லும் சாலையில் 2.5. கி.மீ தொலைவியில் வாழ்வியல் மேடு காணப்படுகிறது. இந்தப் பகுதி விளாங்காடு என்றழைக்கப்படுகிறது. இரும்பு மற்றும் தொடக்க வரலாற்றுக் காலத்தைச் சார்ந்த வாழ்வியல் மேடானது 2.5 மீ உயரத்தில் 12 ஹெக்டேர் பரப்பளவில் விரிந்து காணப்படுகிறது. இங்கு செவ்வண்ணம், கருப்பு-சிவப்பு வண்ணம், கருப்பு வண்ணம், வெண்புள்ளி இட்ட கருப்பு-சிவப்பு வண்ண ஆகிய மட்கல ஓடுகளும் குறியீடுகள் கொண்ட மட்கல ஓடுகளும் ஈமத்தாழிகளும் கிடைக்கின்றன. இந்தப் பண்பாட்டு மேட்டில் கிடைக்கப்பெற்றுள்ள அரிய தொல்பொருட்களைக் கருத்தில் கொண்டு தன்னுள் மறைத்துள்ள பண்பாட்டுக்கூறுகளை கண்டறிய இப்பண்பாட்டு மேடு காத்திருக்கிறது. இந்த அகழாய்வின் குறிக்கோள் செரிவுமிக்க இத்தொல்லியல் தளத்தின் உருவாக்கம், குடியேற்ற முறை மற்றும் தொல்பொருட்களின் தன்மை ஆகியவற்றை கண்டறிவதாகும். நம்பி ஆற்றின் கரையில் இரும்புக்காலப் பண்பாட்டின் வேர்களைத் தேடுவதே இவ்வகழாய்வின் நோக்கமாகும். இத்தொல்லியல் தளமானது சிவகளை, ஆதிச்சநல்லூருக்கு சமகாலக்கட்டமாகும்.
வெம்பக்கோட்டை:
விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் இருந்து தெற்கே 15 கி.மீ தொலைவில் வைப்பாறு ஆற்றின் இடது கரையில் வெம்பக்கோட்டை என்ற ஊர் அமைந்துள்ளது. மேட்டுக்காடு என்றும் உச்சிமேடு என்றும் அழைக்கப்படுகின்ற 25 ஏக்கர் பரப்பளவில் பரந்து கிடக்கின்ற தொல்லியல் மேட்டில் நுண்கற்காலம் முதல் இடைக்காலம் வரை தொடர்ந்து வாழ்ந்ததற்கான அடையாளங்களை வெளிப்படுத்துகின்றது. இத்தொல்லியல் மேடு தற்போதைய நிலப்பரப்பில் இருந்து 2 மீ உயரம் கொண்டது. இங்கு இரும்புக் கால மட்கல ஓடுகள் மிகுதியாக சிதறிக்கிடக்கின்றன. இம்மேட்டில் நுண்கற்கருவிகள், பல்வேறு வகையான மணிகள், அலங்கரிக்கப்பட்ட சங்கு வளையல்கள், காதணிகள், சுடுமண்ணால் ஆன வட்டுகள், இரும்புக் கசடுகள் ஆகியவையும் கிடைத்துள்ளன.
தற்போது மேற்கொள்ளப்படவுள்ள அகழாய்வின் நோக்கமானது காலவாரியாக தொடர்ந்து நிலவியல் உருவாக்கத்தின் பின்னனியில் அதிக எண்ணிக்கையிலான நுண்கற்கருவிகளை சேகரிப்பதாகும்.
பெரும்பாலை:
தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் – மேலச்சேரி சாலையில் பென்னாகரம் இருந்து 25 கி.மீ தொலைவில் பாலாறு ஆற்றின் இடது கரையில் பெரும்பாலை என்னும் வராலாற்றுச் சிறப்புமிக்க இடம் அமைந்துள்ளது. இவ்வூர் கொங்கு நாட்டின் வடவெல்லையாக தொன்றுதொட்டு கருதப்படுகிறது. இங்குள்ள வாழ்விட மேடானது தற்போதைய நிலவியல் அமைப்பிலிருந்து 3 முதல் 4 மீட்டர் உயரத்தில் 75 ஏக்கர் நிலப் பரப்பளவில் விரிந்து காணப்படுகிறது. இம்மேட்டில் கருப்பு-சிவப்பு நிற மட்கல ஓடுகள், கருப்பு நிற மட்கல ஓடுகள், சிவப்பு பூச்சுப்பெற்ற மட்கல ஓடுகள், சிவப்பு நிற மட்கல ஓடுகள் கிடைக்கின்றன. செம்மனூர் சிவன் கோயில் எதிரே ஈமக்காடுப் பகுதி காணப்படுகிறது. அண்மையில் ஈமக்காட்டுப் பகுதியின் நடுவே கால்வாய் வெட்டியபோது உயரமான வயல்வெளியில் 50க்கும் மேற்பட்ட கல்வட்டங்கள் கண்டறியப்பட்டன. கிடைக்கப்பெற்றுள்ள தொல்பொருட்கள் மூலம் தொடக்க வரலாற்றுக் காலத்தைப் பற்றிய சிறந்த நுண்ணறிவை பெரும்பாலைத் தொல்லியல் தளம் நாட்டிற்கு வழங்கிடும். அகழ்வாராய்ச்சியின் குறிக்கோளானது இத்தகைய தொல்லியல் திறன் வாய்ந்த தளத்தின் தள உருவாக்கம், குடியேற்றம், தொல்பொருட்களின் தன்மை ஆகியவற்றை வெளிப்படுத்துவதாகும். காவிரியின் கிளை ஆறான பாலாற்றின் ஆற்றங்கரைகளில் இரும்புக்காலப் பண்பாட்டின் வேர்களைத் தேடுவது இந்த அகழாய்வின் நோக்கமாகும்.
கூ.தக. :
- இதுவரை கங்கைச் சமவெளியில் கி.மு. ஆறாம் நூற்றாண்டிலிருந்த “நகரமயமாக்கம்’’ தமிழ்நாட்டில் இல்லையென்றும், பிராமி எழுத்து மௌரியர் தோற்றுவித்தது என்றும் கருதுகோள்கள் இருந்தன. அத்தகைய கருதுகோள்களுக்கு அறிவியல்பூர்வமாக விடையளித்துள்ளது கீழடி அகழாய்வு. தமிழ்நாட்டில் கி.மு. ஆறாம் நூற்றாண்டிலேயே நகரமயமாக்கம் ஏற்பட்டிருந்தது என்பது மட்டுமல்லாமல், படிப்பறிவும் எழுத்தறிவும் பெற்ற மேம்பட்ட சமூகமாக விளங்கியதை கீழடி அகழாய்வு நிலைநிறுத்தியுள்ளது.
- சிவகளை முதுமக்கள் தாழியில் கண்டெடுக்கப்பட்ட உமி நீங்கிய நெல்மணிகளின் காலம் கி.மு. ஆயிரத்து நூற்று ஐம்பத்தைந்து எனக் கண்டறியப்பட்டுள்ளது.
- “தண் பொருநை’’ என்று அழைக்கப்பட்ட தாமிரபரணி ஆற்றங்கரை நாகரிகம் மூவாயிரத்து இருநூறு ஆண்டுகளுக்கு முற்பட்டது
நன்றி : செய்தி மக்கள் தொடர்புத்துறை
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
Respected visitors , this is your area. Ask your queries, post your suggestions. If you know correct answers for other friend's questions, kindly reply them. Motivate One another . Your comments will be posted soon with a small moderation.
Note:Please avoid sharing phone numbers, email Ids and posting abusive comments against the government and recruitment agencies.