நடப்பு நிகழ்வுகள்
Notifications
Notifications
Welcome to TNPSC Portal !
Search this website

TNPSC Current Affairs 1-2 February 2020

TNPSC Current Affairs 1-2 பிப்ரவரி 2021

Click Here to Subscribe for Current Affairs PDF

(Registered Aspirants will get current affairs PDF files to your email ID)

தமிழகம்

‘ஆபரேஷன் ஸ்மைல்’ திட்டம்: சென்னை பெருநகரில் சாலையோரம் சுற்றித் திரியும் குழந்தைகள், காணாமல் போன குழந்தைகள், கடத்தப்பட்ட குழந்தைகள், பாதுகாப்பும் பராமரிப்பும் தேவைப்படும் குழந்தைகளுக்கு உதவும் வகையில் ‘ஆபரேஷன் ஸ்மைல்’ என்ற திட்டத்தை சென்னை காவல்ஆணையர் மகேஷ் குமார் அகர்வால் 1-2-2021 அன்று தொடங்கி வைத்தார். அதன்படி சென்னை பெருநகரில் உள்ள 12 காவல் மாவட்டங்களிலும் அந்தந்த துணை ஆணையர்களின் தலைமையில் ஓர் உதவி ஆணையர் கண்காணிப்பில், 2 ஆய்வாளர்கள், குழந்தை நல காவல் அதிகாரி, குழந்தை நலகுழுமம் உள்ளிட்டவர்கள் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. மீட்கப்படும் குழந்தைகளுக்கு தேவையான அனைத்துஉதவிகளையும் இந்த தனிப்படையினர் செய்து கொடுப்பார்கள்.

தமிழக அரசின் 47-ஆவது தலைமைச் செயலாளராக ராஜீவ் ரஞ்சன் 1-2-2021 அன்று பொறுப்பேற்றார். புதிய தலைமைச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ள ராஜீவ் ரஞ்சன், ஜார்க்கண்ட் மாநிலத்தைச் சோ்ந்தவா். 1985-ஆம் ஆண்டு தமிழகப் பிரிவு ஐஏஎஸ் அதிகாரியான அவா் இதற்கு முன்னதாக மத்திய மீன்வளத் துறை செயலாளராகப் பொறுப்பு வகித்து வந்தார்.

* ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் யானை-மனித மோதலை தவிர்க்க, ஒலி எழுப்பி யானையை விரட்டும் புதிய தற்காப்பு கருவியை பண்ணாரிஅம்மன் தொழில்நுட்கக் கல்லூரி பேராசிரியர்கள் சஞ்சய்தேப், சரவணகுமார், ராம்குமார் மற்றும் குணசேகரன் ஆகியோர் கண்டுபிடித்துள்ளனர்.

21 ஆண்டுகளுக்குப்பின் முல்லைப் பெரியாறு அணைக்கு மின்சாரம் : முல்லைப்பெரியாறு அணைக்கு தரைவழி மின்சாரம் வழங்குவதை கேரள மின்வாரிய அமைச்சர் எம.எம்.மணி குத்துவிளக்கேற்றி 1-2-2021 அன்று துவக்கி வைத்தார்.

பின்னணி :

முல்லைப்பெரியாறு அணைப்பகுதிக்கு வல்லக்கடவு பகுதியிலிருந்து 1980 முதல் வனப்பகுதி வழியாக மின்சாரம் வழங்கப்பட்டு வந்தது. கடந்த 1999-இல் இப்பகுதி வழியாகச் சென்ற உயரழுத்த மின்கம்பி உரசியதில், காட்டுயானை ஒன்று இறந்ததைத் தொடர்ந்து கடந்த 2000-ஆவது ஆண்டு முதல் பெரியாறு அணைப்பகுதிக்கு மின்சாரம் நிறுத்தப்பட்டது. தற்போது, வனவிலங்குகளுக்கு இடையூறு ஏற்படாத வகையில் மின் கம்பிகளை வனப்பகுதியில் தரைவழியாகக் கொண்டுச் செல்ல 1 கோடியே 65 லட்சம் ரூபாயை தமிழக பொதுப்பணித்துறை, கேரள மின்வாரியத்திற்கு செலுத்தியதையடுத்து 21 ஆண்டுகளுக்கு பிறகு மின்னிணைப்பு மறுபடியும் வழங்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் அரசுப் பள்ளிகளில் பணியாற்றும் பகுதிநேர ஆசிரியர்களுக்கு ரூ.7,700 ஊதியத்திலிருந்து ரூ.10,000 உயர்த்தி தமிழக அரசு அறிவித்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

மத்திய பட்ஜெட் 2021-22 ல் தமிழகத்துக்கான திட்டங்கள்:

* தமிழகத்தில் 3,500 கிமீ தொலைவுக்கான தேசிய நெடுஞ்சாலைகள் அமைக்கும் பணி ரூ.1.03 லட்சம் கோடி செலவில் அடுத்த ஆண்டு தொடங்கும். மதுரை-கொல்லம், சித்தூா்-தச்சூா் வழித்தடங்களில் இந்த தேசிய நெடுஞ்சாலைகள் அமைக்கப்படவுள்ளன. மதுரையில் இருந்து கேரளாவின் கொல்லம் வரை நவீன வசதிகளுடன்கூடிய நெடுஞ்சாலை அமைக்கப்படும்.

* சென்னை மெட்ரோ ரயில் 2-ஆம் கட்ட திட்டம் ரூ.63,246 கோடி செலவில் 118.9 கிமீ தொலைவுக்கு அமைக்கப்படும்.

* தமிழ்நாட்டில் பன்னோக்கு கடல்பாசி பூங்கா ஒன்றை ஏற்படுத்த நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.

இந்தியா

☞13-வது பெங்களூரு சர்வதேச விமான கண்காட்சியை மத்திய பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத்சிங் 3-2-2021 அன்று தொடங்கி வைக்கிறார்.

வலிப்பு நோய் குறித்து முன்கூட்டியேஎச்சரிக்கை விடுக்கும் தலைக்கவசத்தை கேரளாவைச் சேர்ந்த பேராசிரியர்கள் ராஜேஷ், தஸ்லீம்மா, ஆய்வு மாணவர் பாசில் இணைந்து கண்டுபிடித்துள்ளனர்.

உள்நாட்டிலேயே வடிவமைக்கப்பட் தேஜஸ் மார்க்-2 விமானத்தின் புதிய ரகம், அடுத்த ஆண்டில் அறிமுகம் செய்யப்படும், என எச்.ஏ.எல்., எனப்படும் ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் நிறுவனத்தின் தலைவர் ஆர். மாதவன் கூறியுள்ளார்.

வெளிநாட்டு உறவுகள்

துறைமுகங்களில் 140 டன் எடையைக் கையாளும் திறன் கொண்ட இரண்டு கிரேன்களை ஈரானின் சாபஹார் துறைமுக அதிகாரிகளிடம் இந்திய அதிகாரிகள் 1-2-2021 அன்று வழங்கினர்.

கூ.தக. : இந்தியா, ஈரான், ஆப்கானிஸ்தான் இடையே வணிகத்தை மேம்படுத்தும் நோக்கில், ஈரானில் சிஸ்தான்-பலுசிஸ்தான் மாகாணத்தில் உள்ள சாபஹார் துறைமுகத்தை மூன்று நாடுகளும் இணைந்து கட்டமைத்து வருகின்றது குறிப்பிடத்தக்கது.

உலகம்

அமெரிக்காவின் நாசாவின் செயல் தலைவராக இந்தியா வம்சாவளியை சேர்ந்த பவ்யா லால் நியமனம் செய்யப்பட்டுள்ளார் .

சீனாவின் எதிர்ப்பை மீறி ஹாங்காங் மக்களுக்கான சிறப்பு விசா திட்டத்தை தொடங்கியது இங்கிலாந்து . இங்கிலாந்தின் காலனி ஆதிக்கத்தின் கீழ் ஹாங்காங் இருந்தபோது, அந்த பிராந்திய மக்களுக்கு இங்கிலாந்தில் நிரந்தர குடியேற்ற உரிமையை 1997-ம் ஆண்டு வரை வழங்கக்கூடிய பாஸ்போர்ட் வழங்கப்பட்டது.இந்த நிலையில் சர்ச்சைக்குரிய தேசிய பாதுகாப்பு சட்டத்தை சீனா ஹாங்காங்கில் அமல்படுத்தியதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக தங்கள் நாட்டின் பாஸ்போர்ட் வைத்திருப்பவர்கள் தங்கள் நாட்டில் 5 ஆண்டுகள் வசிப்பதற்காக விண்ணப்பிக்கலாம் என்கிற புதிய விசா திட்டத்தை இங்கிலாந்து அரசு அண்மையில் அறிவித்தது.

மியான்மரில் ஆட்சியை கைபற்றியுள்ள அந்நாட்டு ராணுவம் ஓராண்டுக்கு நெருக்கடி நிலையை அறிவித்துள்ளது . ஆங் சான் சூச்சி உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் அனைவரும் சிறை வைக்கப்பட்டுள்ளனர். முன்னதாக, கடந்த 1962 முதல் 50 ஆண்டுகளுக்கும் மேலாக மியான்மரில் ராணுவ ஆட்சி நடைபெற்றது. இதை எதிர்த்து தேசிய ஜனநாயக கட்சியின் தலைவர் ஆங் சாங் சூச்சி சுதந்திர போராட்டத்தை வழிநடத்தினார். சுமார் 21 ஆண்டுகள் அவர் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டார்.மக்களின் போராட்டம் காரணமாக கடந்த 2015-ல் அங்கு பொதுத்தேர்தல் நடைபெற்றது. இதில்ஆங் சான் சூச்சியின் கட்சி அமோக வெற்றி பெற்றது. அவரின் மகன்கள் வெளிநாட்டு குடியுரிமை பெற்றிருப்பதால் அவரால் அதிபர் பதவியேற்க முடியவில்லை. இதைத் தொடர்ந்து சூகிக்கு நெருக்கமான டின் கியாவ் (71) அதிபர் பதவியேற்றார். நாட்டின் தலைமை ஆலோசகராக ஆங் சாங் சூச்சி பொறுப்பேற்றார்.

பொருளாதாரம்

வரி வருவாயில் மாநிலங்களுக்கு 42.2 லட்சம் கோடி ஒதுக்கீடு செய்ய 15-ஆவது நிதி ஆணையம் பரிந்துரை செய்துள்ளது : நாடாளுமன்றத்தில் மத்திய நிதியமைச்சா் தாக்கல் செய்த 15 -ஆவது நிதி ஆணையத்தின் அறிக்கையில் அடுத்த 5 ஆண்டுகளுக்கு ரூ.42.20 லட்சம் கோடியை மாநிலங்களுக்கு ஒதுக்கீடு செய்ய பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

கூ.தக. : மத்திய - மாநில அரசுகளுக்கிடையே 2021-22 முதல் 2025-26 வரையிலான நிதியை பங்கிட்டுக் கொள்ள என்.கே.சிங் தலைமையில் பதினைந்தாவது நிதிக் குழு அமைக்கப்பட்டது. இந்தக் குழு தனது அறிக்கையை கடந்த நவம்பா் மாதம் மத்திய அரசிடம் சமா்ப்பித்தது. நிதியமைச்சா் நிர்மலா சீதாராமன் 1-2-2021 அன்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார்.

மத்திய பட்ஜெட் 2020-21

இந்திய வரலாற்றில் முதல் முறையாக காகிதமில்லா முறையிலான பட்ஜெட்டை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 1-2-2021 அன்று தாக்கல் செய்து, பட்ஜெட் உரையை வாசித்தார்.

நிதியமைச்சர் நிர்மலா சீத்தாராமன் அவர்கள் பட்ஜெட் உரையில் மேற்கோள் காட்டிய இரண்டு திருக்குறள்கள்.

1. ``இயற்றலும் ஈட்டலும் காத்தலும் காத்த

வகுத்தலும் வல்லது அரசு"(அதிகாரம்:இறைமாட்சி - குறள் எண்:385)

விளக்கம் (மு வரதராசன்): பொருள் வரும் வழிகளை மேன்மேலும் இயற்றலும், வந்த பொருள்களைச் சேர்த்தலும், காத்தலும், காத்தவற்றை வகுத்துச் செலவு செய்தலும் வல்லவன் அரசன்.

2. ``பிணியின்மை செல்வம் விளைவின்பம் ஏமம்

அணியென்ப நாட்டிவ் வைந்து." (அதிகாரம் : நாடு - குறள் எண் :738)

விளக்கம் ( மு.வரதராசன் ): நோயில்லாதிருத்தல், செல்வம், விளை பொருள், வளம், இன்பவாழ்வு, நல்ல காவல் இந்த ஐந்தும் நாட்டிற்கு அழகு என்று கூறுவர்.

இந்தியாவின் வளர்ச்சிக்கு 6 முக்கிய துறைகள் தூண்களாக கவனிக்கப்படும் என நிதியமைச்சர் நிர்மலா சீத்தாராமன் அவர்கள் தனது பட்ஜெட் உர்ர்ரையின் போது கூறியுள்ளார். அவையாவன,

* சுகாதாரம் மற்றும் நல்வாழ்வு (Health and Wellbeing)

* நிதி மூலதனம் மற்றும் உள்கட்டமைப்பு (Physical & Financial Capital, and Infrastructure)

* வளர்ச்சிக்கான நோக்கங்களை கொண்ட இந்தியா (Inclusive Development for Aspirational India)

* மனித மூலதனத்திற்கு புத்துயிரூட்டுதல் (Reinvigorating Human Capital)

* புதிய கண்டுபிடிப்புகள், ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு (Innovation and R&D)

* குறைந்தபட்ச அரசு மற்றும் அதிகபட்ச நிர்வாகம் (Minimum Government and Maximum Governance)

1 ரூபாயில் வரவு - செலவு

1 ரூபாயில் வரவு

* பெரு நிறுவன வரி- 13 காசுகள்

* வருமான வரி- 14 காசுகள்

* சுங்க வரி- 3 காசுகள்

* மத்திய கலால் வரி- 8 காசுகள்

* சரக்கு-சேவை வரி- 15 காசுகள்

* வரி அல்லாத வருவாய்- 6 காசுகள்

* கடன்சாரா மூலதன வருவாய்- 5 காசுகள்

* கடன்கள், இதர நிதி திரட்டல்- 36 காசுகள்

1 ரூபாயில் செலவு

* வட்டிக்கான செலவினம்- 20 காசுகள்

* மத்திய அரசின் நேரடி திட்டங்கள்- 13 காசுகள்

* மத்திய அரசு நிதியுதவி திட்டங்கள்- 9 காசுகள்

* பாதுகாப்புத் துறைக்கு- 8 காசுகள்

* மானியங்கள்- 9 காசுகள்

* நிதி ஆணையம், இதர பரிவா்த்தனை- 10 காசுகள்

* மாநிலங்களுக்கு வரி பகிா்வு-16 காசுகள்

* ஓய்வூதியம்- 5 காசுகள்

* இதர செலவினம்- 10 காசுகள்

☞ நிதிபற்றாக்குறை

நடப்பு நிதியாண்டில் நிதிப்பற்றாக்குறை ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தியில் 9.5 சதவீதமாக இருக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. வரும் நிதியாண்டில் இந்த நிதிப்பற்றாக்குறை 6.8 சதவீதமாக இருக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. வரும் நிதியாண்டில் அரசு வெளிச்சந்தையிலிருந்து 12 லட்சம் கோடி ரூபாய் திரட்டத் திட்டமிட்டுள்ளது.

வருவாயைப் பெருக்கும் வகையில் பொதுத் துறை நிறுவனங்களில் உள்ள சொத்துக்களைப் பணமாக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்படும்.பாரத் பெட்ரோலியம், ஏர் இந்தியா, ஐ.டி.பி.ஐ பேங்க், பவன் ஹன்ஸ், கன்டெய்னர் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா ஆகிய நிறுவனங்களின் பங்குகள் விற்க நடவடிக்கை எடுக்கப்படும். வருகிற நிதியாண்டில் பொதுத்துறை நிறுவனப் பங்குகளை விற்பதன் மூலம் 1.75 லட்சம் கோடி ரூபாய் நிதி திரட்ட முடியும்.

ரெயில்வேத் துறையில் சிறப்பு வழித்தடங்கள் ஏற்படுத்தப்பட்டு அதன்மூலமாகவும், விமானப் போக்குவரத்துத் துறையில் மேலும் சில விமான நிலையங்களை தனியாருக்கு வழங்குவதன் மூலமாகவும் இத்தகைய பணமாக்கல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.

துறைவாரியான முக்கிய அறிவிப்புகள்

ரயில்வே:

* இந்திய தேசிய ரயில் திட்டம் 2030 தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின்கீழ் பல்வேறு புதிய ரயில் பாதைகள் அமைப்பது மற்றும் சிறப்பு சரக்கு வழித்தடங்களை உருவாக்குவது போன்ற பணிகள் மேற்கொள்ளப்படும்.

அகல ரயில்பாதை வழித்தடங்கள் அனைத்தும் 2023 ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்திற்குள்ளாக 100 சதவீதம் மின்மயமாக்கப்படும்.

* ரெயில்வேக்கு 1,10,055 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு உள்ளது. அதில் ரூ .1,07,100 கோடி மூலதன செலவினங்களுக்கு மட்டுமே..

* அகல ரயில்பாதை வழித்தடங்கள் அனைத்தும் 2023-ஆம் ஆண்டு டிசம்பருக்குள் முற்றிலும் மின்மயமாக்கப்படும்.

சுகாதாரத் துறை :

* சுகாதாரத் துறைக்கு ரூ. 2.23 லட்சம் கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். இது கடந்த ஆண்டைக் காட்டிலும் 137 சதவீதம் அதிகமாகும்.

* கொரோனா தடுப்பூசிக்கு 35,000 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

* ஊட்டச்சத்து இயக்கம் 2.0 என்ற புதிய திட்டம் அமல்படுத்தப்படுத்தப்பட உள்ளது. இது ஒருங்கிணைந்த திட்டமாக அமல்படுத்தப்படும்.

* காற்று மாசை கட்டுப்படுத்துவதற்காக 2,217 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படும்.

* சுமார் 64,180 கோடி ரூபாயில் புதிய மத்திய நிதியுதவித் திட்டமான சுயசார்பு ஆரோக்கியத் திட்டம் (Aatmanirbhar Health Yojana) தொடங்கப்படும்

* இந்தியாவில் உலக சுகாதார அமைப்பின் கிளை தொடங்கப்படும் என மத்திய பட்ஜெட் 2021 ல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

* ஆத்ம நிர்பர் ஸ்வஸ்த் பாரத் (சுயசார்பு ஆரோக்கியத் திட்டம்) என்ற புதிய திட்டம் தொடங்கப்பட உள்ளது. இதன் மூலம் மத்திய அரசின் தற்சார்பு இந்தியா திட்டம் சுகாதாரத்துறைக்கும் விரிவுபடுத்தப்படுகிறது.

பொதுப் போக்குவரத்து:

* சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறைக்கு ரூ.1,18,101 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

* நாடு முழுவதும் 13,000 கி.மீ தூரத்துக்கு சாலைப் பணிகள் நடைபெற்று வருகின்றன. மேலும் கூடுதலாக 11,500 கி.மீ தூரத்துக்கு சாலைப் பணிகள் தொடங்கப்படும். அதனடிப்படையில் தமிழகத்தில் 3,500 கி.மீ தூரத்துக்கு புதிய தொழில் வழித்தடம் அமைக்க 1.03 லட்சம் கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்படும். அதே போல மேற்கு வங்கத்துக்கு 25,000 கோடி ரூபாயும், கேரளாவுக்கு 65,000 கோடி ரூபாயும் சாலைப் பணிகளுக்காக நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

* பொதுப் பேருந்து போக்குவரத்தை மேம்படுத்த ரூ.18 ஆயிரம் கோடியில் புதிய திட்டம் அறிமுகம். இதன் மூலம் வேலைவாய்ப்பு, நகா்ப்புற பொதுப் போக்குவரத்து மேம்பாடு, ஆட்டோமொபைல் உற்பத்தித் துறை ஊக்கம் பெறும்.

எரிபொருள்:

* பசுமை எரிசக்தித் திட்டத்தை அறிமுகப்படுத்தும் வகையில், ஹைட்ரஜன் எரிபொருள் திட்டம் நடப்பாண்டில் நடைமுறைப்படுத்தப்படும்.

* உஜ்வலா திட்டத்தினால் சமையல் எரிவாயு 8 கோடி குடும்பங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. அடுத்த 3 ஆண்டுகளுக்குள் மேலும் 100 நகரங்களில் இந்தத் திட்டம் விரிவுபடுத்தப்படும். குழாய் வழியாக சமையல் எரிவாயு வழங்கும் திட்டம் ஜம்மு-காஷ்மீரில் அறிமுகப்படுத்தப்படவுள்ளது.

மின்சாரம் :

* 3.95 லட்சம் கோடி ரூபாய் மதிப்பில் மின் விநியோக கட்டமைப்பு மேம்படுத்தப்படும். மின் விநியோகத்தில் தனியார் துறைக்கு அனுமதி வழக்கப்படுகிறது. எந்த நிறுவனத்திலிருந்து மின்சாரத்தைப் பெறலாம் என்பதை வாடிக்கையாளர்களே முடிவு செய்துகொள்ளலாம்.

கப்பல் போக்குவரத்து:

* வா்ததக நோக்கிலான கப்பல் போக்குவரத்து என்ற புதிய திட்டம் ஒன்று தொடங்கப்படவுள்ளது. வரும் ஐந்தாண்டுகளுக்கு இத் திட்டத்துக்காக ரூ.1,624 கோடி ஒதுக்கப்படும்.

முக்கிய துறைமுகங்கள் தங்களது செயல்பாட்டு சேவைகளை சொந்தமாக நிர்வகித்து வரும் முறையானது, தனியார் நிர்வகிக்கும் முறைக்கு மாற்றப்படும். இதற்காக 2021-22-இல் ரூ.2 ஆயிரம் கோடி மதிப்பு கொண்ட 7 திட்டங்கள் முக்கிய துறைமுகங்களால் அரசு-தனியார் கூட்டு முறைக்கு அளிக்கப்படும்.

ஜவுளித்துறை

ஜவுளித்துறையில் உலகத்தரம் வாய்ந்த நவீன கட்டமைப்புகளை உருவாக்க மித்ரா என்ற திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதன்படி, அடுத்த 3 ஆண்டுகளில் 7 ஜவுளி பூங்காக்கள் உருவாக்கப்படும்.

காப்பீட்டுத் துறை:

* காப்பீட்டுத் துறையில் அந்நிய நேரடி முதலீடு வரம்பு 49 சதவீதத்திலிருந்து 74 சதவீதமாக அதிகரிக்க ஒப்புதல் வழங்கப்படுகிறது.

* எல்ஐசி நிறுவனத்தின் பங்குகள் பொதுமக்கள் வாங்கும் வகையில் வெளியிடப்பட உள்ளன.

*ஐடிபிஐ வங்கி, மேலும் இரண்டு பொதுத்துறை வங்கிகள், ஒரு பொதுக் காப்பீட்டு நிறுவனம் ஆகியவை தனியார் மயமாக்கப்படவுள்ளன.

* நிறுவனங்கள் சட்டம்-2013, சிறிய நிறுவனங்களுக்கும் பயனளிக்கும் வகையில் திருத்தம் செய்யப்படும்.

* நிதி நிறுவன முதலீட்டாளா்களின் குறை தீா்ப்புக்கு புதிய அமைப்பு.

* மாநிலங்களின் கட்டுப்பாட்டில் உள்ள பொதுத் துறை நிறுவனங்களின் பங்குகளை விற்பது குறித்து மாநிலங்களே முடிவெடுக்கலாம்.

* அரசின் வருவாய் ஈட்டாத சொத்துகளை கண்டறிந்து அவற்றை வருவாய்க்கு உரியதாக ஆக்க தனி அமைப்பு ஏற்படுத்தப்படும்.

* பொதுத்துறை நிறுவனங்களின் பங்குகள் விற்பனை மூலம் வரும் நிதியாண்டில் ரூ.1,75,000 கோடி ரூபாய் திரட்ட திட்டம்.

வங்கிகள் :

தேசியமயமாக்கப்பட்ட அரசு வங்கிகளுக்கு மூலதன நிதியாக கூடுதலாக ரூ.20 ஆயிரம் கோடி வரை வழங்கப்படும்.

வேளாண் துறை:

* நடப்பு ஆண்டில் ரூ. 1.72 லட்சம் கோடி மதிப்பிலான விவசாயப் பொருள்கள் கொள்முதல் செய்யப்படும்.

* ரூ. 16.5 லட்சம் கோடி விவசாயக் கடன்கள் தர நடப்பாண்டில் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

* நுண்ணீர் பாசனம் மூலம் விவசாயம் செய்யும் விவசாயிகளுக்கு மானியம் வழங்க ரூ. 10,000 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

* வேளாண் உற்பத்திப் பொருட்களுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலை ஒன்றரை மடங்கு அளவு உயா்வு.

* கால்நடை வளா்ப்பு, பால்வளம், மீன்வளத் துறைகளுக்கும் கூடுதல் கடன் வசதி.

* வேளாண் பொருள்களை சந்தைப்படுத்தும் இ-நாம் (தேசிய வேளாண் மின்னணு சந்தை) திட்டத்தில் 1.68 லட்சம் கோடி போ் பதிவு செய்து கொண்டுள்ளனா். இ-நாம் திட்டத்தின் கீழ் இணையவழியாக மேலும் 1,000 மண்டிகள் இணைக்கப்படுகின்றன.

* ஊரக வளர்ச்சி மேம்பாட்டு நிதி ரூ.30,000 கோடியிலிருந்து ரூ.40,000 கோடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது

தொழிலாளா் நலன்:

* அனைத்து விதமான தொழிலாளா்களுக்கும் குறைந்தபட்ச ஊதிய நிா்ணயம் செய்யப்படவுள்ளது.

* கட்டுமானப் பணியில் ஈடுபட்டுள்ள தொழிலாளா்களின் நலனைக் காக்க வலைதளம்.

* அனைத்துத் துறைகளிலும் மகளிா் இரவு நேரப் பணியை போதிய பாதுகாப்புடன் மேற்கொள்ள தகுந்த திட்டம்.

* சிறு-குறு மற்றும் நடுத்தர தொழில்துறைக்கு 15,700 கோடி ரூபாய் ஒதுக்கீடு.

கல்வித்துறை:

* அடுத்த 5 ஆண்டுகளில் 4 கோடி எஸ்சி மாணவர்களுக்கு ரூ.35,219 கோடி கல்வி உதவித்தொகை வழங்கப்படும் என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார்.

* 100 புதிய சைனிக் பள்ளிகள் தொடங்கப்படவுள்ளன.

* லடாக் தலைநகா் லேயில் புதிய மத்திய பல்கலைக் கழகம் தொடங்கப்படும்.

* மலைவாழ் மக்கள் வசிக்கும் பகுதிகளில் புதிதாக 750 ஏகலைவ பள்ளிகள்.

* அடுத்த 6 ஆண்டுகளில் ஆதிதிராவிட மாணவ-மாணவியருக்கு உதவும் வகையில் ரூ.35,219 கோடி ஒதுக்கீடு.

* அடுத்த 6 ஆண்டுகளில் ஆதிதிராவிட மாணவ-மாணவியருக்கு உதவும் வகையில் 35,219 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

ஆதிதிராவிட மாணவா்களுக்கு 10-ஆம் வகுப்பு பிந்தைய கல்விக்கான திருத்தியமைக்கப்பட்ட கல்வி உதவித் தொகை திட்டம் அறிமுகம்.

* தேசிய ஆராய்ச்சி மையத்திற்கு அடுத்த ஐந்தாண்டுகளில் ரூ.50,000 கோடி ஒதுக்கீடு.

விண்வெளித்துறை:

* இந்திய விண்வெளித் துறையின் கீழ் புதிய பொதுத்துறை நிறுவனமாக நியூ ஸ்பேஸ் இந்தியா தொடங்கப்படும். இதன் வாயிலாக பிஎஸ்எல்வி சிஎஸ்51 ஏவுகணை உருவாக்கப்படும்

* ககன்யான் திட்டத்தின்படி, 2021ம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் ஆளில்லா விண்கலத்தை இந்தியா விண்ணில் செலுத்தும் என்று மத்திய பட்ஜெட்டில் அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

வரி விகிதம்:

* வேளாண் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்காக பெட்ரோல், டீசல், தங்கம் உள்ளிட்ட பொருள்கள் மீது செஸ் வரி விதிக்கப்பட்டுள்ளது.

அதே வேளையில், பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை மத்திய அரசு குறைத்துள்ளது.நிதிநிலை அறிக்கையின்படி, வேளாண் கட்டமைப்புகளை மேம்படுத்துவதற்காக பெட்ரோல் மீது லிட்டருக்கு ரூ.2.50-யும், டீசல் மீது லிட்டருக்கு ரூ.4-யும் செஸ் வரியாக விதிக்கப்பட்டுள்ளது. இதனால், நுகா்வோா்கள் பாதிக்கப்படாமல் இருக்கும் நோக்கில், பெட்ரோல், டீசல் மீது விதிக்கப்பட்டு வரும் அடிப்படை கலால் வரி, சிறப்பு கூடுதல் கலால் வரி ஆகியவற்றை மத்திய அரசு குறைத்துள்ளது.

* 12.5 சதவீதமாக உள்ள தங்கத்தின் மீதான சுங்க வரி 10 சதவீதமாகக் குறைக்கப்பட உள்ளது. வெள்ளியின் மீதான சுங்க வரியும் குறைக்கப்படுகிறது.

* இறக்குமதி செய்யப்படும் தங்கம், வெள்ளி மீது 2.5 சதவீதம் செஸ் வரியும், மதுபானங்கள் மீது 100 சதவீதமும், பாமாயில் மீது 17.5 சதவீதமும், ஆப்பிள் மீது 35 சதவீதமும், நிலக்கரி மீது 1.5 சதவீதமும், உரங்கள் மீது 5 சதவீதமும், பருத்தி மீது 5 சதவீதமும் வேளாண் கட்டமைப்பு மேம்பாட்டு கூடுதல் வரி விதிக்கப்பட்டுள்ளது.

* தங்கம், வெள்ளிக்கான கலால் வரி 7.5 சதவீதமாக குறைப்பு.

* மாத வருவாயாக, ஓய்வூதியம் மற்றும் வட்டியை மட்டுமே நம்பியுள்ள 75 வயதுக்கு மேற்பட்டோர் வருமான வரி கணக்கு தாக்கல் செய்வதிலிருந்து விலக்கு அளிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

* தனிநபா் வருமான வரிக் கணக்கு தாக்கல் சச்சரவுகளைத் தீா்க்க புதிய குறைதீா்ப்பு அமைப்பு ஏற்படுத்தப்படும்.

* ஓராண்டில் ரூ.2.5 லட்சத்துக்கும் அதிகமாக வருங்கால வைப்பு நிதி (பி.எஃப்.) கணக்கில் பணம் செலுத்தப்பட்டால், அதற்கான வட்டிக்கு வரி விதிக்கப்படும் என்று நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்டுள்ளது.

* வெளிநாடு வாழ் இந்தியா்களுக்கு இரட்டை வரி விதிப்பு விலக்கு அளிக்க புதிய திட்டம்.

*வீட்டுக்கடனில் 1.5 லட்சத்திலிருந்து 3 லட்சமாக உயர்த்தப்பட்ட வீட்டுக்கடன் வட்டிச்சலுகை மேலும் ஓராண்டு நீட்டிக்கப்பட்டுள்ளது. குறைந்த விலை வீடு கட்டும் திட்டங்களுக்கும், குறைந்த விலை வீடுகளை வாங்குபவர்களுக்கும் 2022-ம் ஆண்டு வரை வரிச்சலுகை வழங்கப்படும்.

* பருத்தி மீது 10 சதவீத சுங்கவரி அறிமுகம்.

* பட்டு மற்றும் பட்டு நூல் மீதான சுங்கவரியும் 10-லிருந்து 15 சதவீதமாக அதிகரிப்பு.

* உள்நாட்டு உற்பத்தியை அதிகரிக்க சூரிய மின்சக்தி கட்டமைப்பு பொருட்கள் இறக்குமதி மீது சுங்கவரி அதிகரிப்பு.

* வேளாண் கட்டமைப்பு மற்றும் மேம்பாடு தீா்வை விதிக்க திட்டம்

* வருமான வரி கணக்குகளை மறுஆய்வு செய்வதற்கான கால வரம்பு குறைப்பு :

வருமான வரி மோசடி வழக்குகளில், கணக்குகளை மறுஆய்வு செய்வது தொடா்பாக வரி செலுத்துவோா் மத்தியில் நிலவி வரும் நிச்சயமற்றத் தன்மையை போக்கும் வகையில், மறுஆய்வு செய்யும் கால வரம்பு மாற்றியமைக்கப்படுகிறது. அதன்படி, சிறிய அளவிலான வரி ஏய்ப்பு வழக்குகளில் வருமான வரி கணக்குகளை மறுஆய்வு செய்வதற்கான கால வரும்பு 6 ஆண்டுகளிலிருந்து 3 ஆண்டுகளாக குறைக்கப்படுகிறது.

* அதே நேரம், ரூ. 50 லட்சம் மற்றும் அதற்கு மேல் ஆண்டு வருமானம் பெற்று பெரிய அளவில் மோசடியில் ஈடுபடுபவா்களுக்கு, அவா்களின் 10 ஆண்டு வருமான வரி கணக்குகள் மறுஆய்வு செய்யப்படும்.

* மேலும், ரூ. 50 லட்சத்துக்கு கீழ் ஆண்டு வருமானம் பெறும் சிறிய அளவில் வரி செலுத்துவோருக்கான சச்சரவுக்களுக்கு விரைந்து தீா்வு காணும் வகையில், தனி சச்சரவு தீா்வுக் குழு ஒன்று அமைக்கப்படும். அதுமட்டுமின்றி, தனித்துவமான வருமான வரி குறைதீா் தீா்ப்பாயம் (ஐடிஏடி) ஒன்றும் விரைவில் அமைக்கப்படும்.

பாதுகாப்புத்துறை

* மத்திய பட்ஜெட்டில் பாதுகாப்புத் துறைக்கு ஓய்வூதியத் திட்டங்கள் உள்பட கடந்த ஆண்டு ரூ.4.71 லட்சம் கோடி ஒதுக்கப்பட்ட நிலையில் வரும் 2021-22 நிதியாண்டுக்கு ரூ.4.78 லட்சம் கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

* ஓய்வூதியத் திட்டங்களுக்கான தொகை போக, பாதுகாப்புப் படைக்கு ரூ.3.62 லட்சம் கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. மொத்த ஒதுக்கீட்டில் ரூ.1.35 லட்சம் கோடி புதிய ஆயுதங்கள், விமானங்கள், போர்க்கப்பல்கள் மற்றும் இதர ராணுவத் தளவாடங்கள் கொள்முதல் செய்வதற்கு முதலீட்டு செலவாகப் பயன்படுத்தப்படும்

பெட்ரோலியம் துறை

* உஜ்வாலா எனப்படும் இலவச எரிவாயுத் திட்டத்தின் கீழ் 8 கோடி குடும்பங்களுக்கு எரிவாயு உருளை இலவசமாக விநியோகம் செய்யப்பட்டது. இது மேலும் 1 கோடி குடும்பங்களுக்கு விரிவுபடுத்தப்படும்.

* நகர குழாய் எரிவாயுத் திட்டத்தின் கீழ் அடுத்த 3 ஆண்டுகளில் 100 மாவட்டங்கள் இணைக்கப்படும்.

* ஜம்மு - காஷ்மீர் யூனியன் பிரதேசங்களுக்கு பிரத்யேக குழாய் எரிவாயு இணைப்புத் திட்டம் ஒன்று செயல்படுத்தப்படும்.

* அனைத்து வகையான இயற்கை எரிவாயு குழாய் இணைப்புத் திட்டத்தில் தடையற்ற விநியோகம், அதற்கான முன்பதிவுக்கான ஒருங்கிணைப்பு ஆகியவற்றில் எவ்வித தங்கு தடையுமின்றி செயல்பட ஒரு பிரத்யேக எரிவாயு விநியோக இயக்கம் அமைக்கப்படும் என அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்தார்.

* பெட்ரோல் மீது லிட்டருக்கு ரூ.2.50 மற்றும் டீசல் மீது லிட்டருக்கு ரூ.4 வேளாண் கட்டமைப்பு மேம்பாட்டு கூடுதல் வரி விதிக்கப்பட்டுள்ளது.

இதர முக்கிய அறிவிப்புகள்

* அரசின் வருவாய் ஈட்டாத சொத்துக்களை கண்டறிந்து அவற்றை வருவாய்க்கு உரியதாக ஆக்க தனி அமைப்பு (SPV) ஏற்படுத்தப்படும்.

*டிஜிட்டல் பண பரிவர்த்தனையை ஊக்குவிக்க 2021-22 மத்திய பட்ஜெட்டில் ரூ.1,500 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

* நகர தூய்மை திட்டத்துக்கு 1.14 கோடி லட்சம் கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.

* நாட்டின் சுற்றுச் சூழலை மேம்படுத்த பழைய வாகனங்களைத் திரும்பப் பெறுவதற்கான திட்டம் வகுக்கப்படும் என பட்ஜெட்டில் சொல்லப்பட்டிருக்கிறது. காற்று மாசை கட்டுப்படுத்த 2,217 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

* சிறு-குறு மற்றும் நடுத்தர தொழில்துறைக்கு ரூ.15,700 கோடி ஒதுக்கீடு.

* தேயிலை தோட்டத் தொழிலாளா்கள் மற்றும் அவா்களின் குழந்தைகளின் நலனைக் காக்க ரூ.100 கோடி ஒதுக்கீடு.

* தேசிய செவிலியா் மற்றும் மருத்துவ உதவியாளா் ஆணைய மசோதா தாக்கல் செய்யப்படவுள்ளது.

* குஜராத்தில் பொருளாதார தொழில்நுட்ப முனையம் ஏற்படுத்தப்படவுள்ளது.

* நாட்டின் உள்நாட்டு மொழிகளுக்கு ஊக்கமளிக்கும் வகையில் தேசிய மொழிபெயா்ப்பு இயக்கம் தொடங்கத் திட்டம்.

பட்ஜெட் பற்றிய சுவாரஸ்ய தகவல்கள்:

(நன்றி! விகடன்- https://www.vikatan.com/government-and-politics/budget/the-history-and-some-interesting-facts-about-budget)

* பிரெஞ்சு சொல்லான 'Bougette' என்கிற வார்த்தையிலிருந்து திரிந்து வந்ததுதான் 'பட்ஜெட்'. பிரெஞ்சில் 'பவ்கெட்' என்றால் தோலால் செய்யப்பட்ட பர்ஸ் அல்லது பையைக் கூறிக்கும். ஆண்டின் வரவு செலவு குறித்த ஆவணங்களைத் தோலாலான பைகளில் கொண்டு செல்வதால் பட்ஜெட் என்ற பெயர் வந்ததாகச் சொல்லப்படுகிறது.

* பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில் இந்தியாவில் ஏற்பட்ட நிதி நெருக்கடி காரணமாக 1860-ம் ஆண்டு இந்தியாவில் பட்ஜெட் முறையை அறிமுகப்படுத்தியது பிரிட்டிஷ் கிழக்கிந்திய கம்பெனி. பிரிட்டிஷ் ஆட்சிக்காலத்தில் இந்தியக் கவுன்சிலின் நிதி உறுப்பினராக இருந்த ஜேம்ஸ் வில்சன் என்பவரின் அறிவுறுத்தலின்படி இந்தியாவின் முதல் பட்ஜெட் வடிவமைக்கப்பட்டது. பிப்ரவரி 18, 1869-ம் ஆண்டு இந்தியாவின் முதல் பட்ஜெட்டைத் தாக்கல் செய்தார் ஜேம்ஸ் வில்சன். ('தி எகனாமிஸ்ட்' பத்திரிகை மற்றும் 'ஸ்டாண்டர்ட் சார்டட் வங்கி' ஆகியவற்றின் நிறுவனர்தான் இந்த ஜேம்ஸ் வில்சன். இவரை 'ஃபாதர் ஆஃப் பட்ஜெட்' என்றும் அழைக்கிறார்கள்.)

* கடந்த 2020 ஆம் ஆண்டின் பட்ஜெட்டுக்கு முன்னர் வரை பட்ஜெட் குறித்த ஆவணங்கள் அனைத்தும் பெட்டி அல்லது பெட்டியைப்போல இருக்கும் Buckle கொண்ட தோல் பையில்தான் கொண்டு வரப்பட்டன. ஆனால், கடந்த ஆண்டின் பட்ஜெட் கூட்டத் தொடரின்போது நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், முதல் முறையாக 4 சிங்கங்கள் கொண்ட தேசிய சின்னம் பொறிக்கப்பட்ட சிவப்பு நிறத் துணியிலான ஃபைலில் நிதிநிலை ஆவணங்களைக் கொண்டு வந்தார்.

* 1999-ம் ஆண்டு வரை இந்தியாவின் மத்திய பட்ஜெட் ஆனது, பிப்ரவரி மாதத்தின் கடைசி வேலை நாளன்று மாலை 5 மணிக்கு வாசிக்கப்பட்டு வந்தது. பிரிட்டிஷ் அரசாங்கம் பின்பற்றிய அதே நேரத்தைப் பின்பற்றி வந்தது இந்திய அரசாங்கம். 2000-ம் ஆண்டு வாஜ்பாய் அரசாங்கத்தில் நிதியமைச்சராக இருந்த யஷ்வந்த் சின்ஹா பட்ஜெட் நேரத்தைக் காலை 11 மணிக்கு மாற்றியமைத்தார்.

* 2017-ம் ஆண்டு நிதியமைச்சராக இருந்த அருண்ஜெட்லி பிப்ரவரி மாதத்தின் கடைசி வேலை நாளிலிருந்து பிப்ரவரி 1-ம் தேதிக்கு பட்ஜெட்டை மாற்றினார்.

* அதேபோல 92 ஆண்டுகளாகத் தனியாக வாசிக்கப்பட்டு வந்த ரயில்வே பட்ஜெட்டும் 2017-ம் ஆண்டு முதல் மத்திய பட்ஜெட்டோடு இணைக்கப்பட்டது.

* சுதந்திர இந்தியாவின் முதல் பட்ஜெட்டை தாக்கல் செய்த ஆர்.கே.சண்முகம் ஒரு தமிழர்.1947-ம் ஆண்டு நிதியமைச்சராக இருந்த ஆர்.கே.சண்முகம் சுதந்திர இந்தியாவின் முதல் பட்ஜெட்டை வாசித்தார். இவர் தமிழ்நாட்டின் கோயம்புத்தூரைச் சேர்ந்தவர்.

* இந்தியாவின் 'மத்திய பட்ஜெட்டை அதிக முறை வாசித்தவர்' என்ற பெருமைக்குச் சொந்தக்காரர் மொரார்ஜி தேசாய். காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில் 2 முறை நிதியமைச்சராக இருந்தவர், 10 முறை பட்ஜெட் தாக்கல் செய்துள்ளார்.

* முன்னாள் நிதியமைச்சர்களில், ப.சிதம்பரம் 9 முறையும் பிரணாப் முகர்ஜி 8 முறையும் யஷ்வந்த் சின்கா, யஷ்வந்த்ராவ் சவான் மற்றும் சிடி தேஷ்முக் ஆகியோர் தலா 7 முறையும் பட்ஜெட் தாக்கல் செய்துள்ளனர். முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் நிதியமைச்சராக இருந்த காலத்தில் 6 முறை பட்ஜெட் தாக்கல் செய்துள்ளார். அதேபோல முன்னாள் நிதியமைச்சர் கிருஷ்ணமாச்சாரியும் 6 முறை பட்ஜெட் தாக்கல் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.இதில் யஷ்வந்த் சின்ஹா மற்றும் மன்மோகன் சிங் ஆகிய இருவர் மட்டுமே தொடர்ந்து 5 முறை பட்ஜெட் வாசித்துள்ளனர்.

☞ பிட் காயின் உள்ளிட்ட கிரிப்டோ கரன்சிகளுக்கு (மெய்நிகர் கரன்சி) தடை விதிக்கத் தேவையான சட்டம் இயற்ற மத்திய அரசு முடிவு செய்துள்ளது. மேலும் இதற்கு மாற்றாக அதிகாரப்பூர்வ டிஜிட்டல் கரன்சியை அறிமுகம் செய்வதற்கான முயற்சியில் ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ) ஈடுபட்டுள்ளது.

விளையாட்டு

முதலாவது கேலோ சன்ஸ்கார் இந்தியா குளிர்காலப் போட்டிகள் (Khelo India Zanskar Winter Sports) 18-30 ஜனவரி 2021 தினங்களில் லடாக் யூனியன் பிரதேசத்தின் சன்ஸ்கார் பள்ளத்தாக்கில் நடைபெற்றன.

--------------------------------------------------------

Announcement !
உரையாடலில் சேர்
கருத்துரையிடுக
கிளிப்போர்டுக்கு இணைப்பு நகலெடுக்கப்பட்டது!