Current Affairs, Latest News Updates, Online Tests for TNPSC Exams

TNPSC Current Affairs in Tamil - 7-8 February 2021

 Current Affairs for TNPSC Exams 7-8 February 2021

Click Here to Subscribe for Current Affairs PDF

(Registered Aspirants will get current affairs PDF files to your email ID)

தமிழகம்

தமிழ்நாட்டின் 5வது  புலிகள் காப்பகம் (Tiger Reserve) மற்றும் இந்தியாவின் 51 வது புலிகள் காப்பகமாக ஸ்ரீவில்லிபுத்தூர் மேகமலை புலிகள் காப்பகத்தை மத்திய அரசு  அங்கீகரித்துள்ளது.   

கூ.தக. : தமிழகத்திலுள்ள மற்ற நான்கு  புலிகள் காப்பகங்கள் சத்தியமங்கலம் புலிகள் சரணாலயம், முதுமலை புலிகள் காப்பகம், களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகம் மற்றும் ஆனைமலை புலிகள் காப்பகம் ஆகியவையாகும். 

இந்தியா

☞  ”இ-கேபினட்” (e-Cabinet)  முறையை  இந்தியாவில் அமல்படுத்தியுள்ள முதல் மாநிலம் எனும் பெருமையை ஹிமாச்சலப்பிரதேச மாநிலம் பெற்றுள்ளது.  அம்மாநிலத்தின் சிம்லாவில் 5-2-2021 அன்று இந்த இ-கேபினட் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. 

இந்தியாவின் முப்படைகளில் பெண்களின் நிலை (Gender Ratio in the Armed Forces)

இந்திய இராணுவம் (Indian Army) - 6807  (0.56%)  பெண்கள்

இந்திய விமானப்படை (Indian Air Force) - 1607 (1.08%) பெண்கள்

இந்திய கடற்படை (Indian Navy) - 704 (6.5%) பெண்கள்   

ஆதாரம்  : pib.gov.in

☞ ஜம்மு-காஷ்மீர் மறுசீரமைப்பு (திருத்த) மசோதா, 2021  8-2-2021 அன்று குரல் வாக்கெடுப்பு மூலம் மாநிலங்களவையில் நிறைவேறியது.  இந்த மசோதாவின் நோக்கம்,  ஜம்மு-காஷ்மீர்  கேடரையும், அருணாச்சல பிரதேசம், கோவா, மிஷோராம் மற்றும் யூனியன் பிரதேச  குடிமைப்பணி கேடர்களுடன் ( cadre-பணிநிலைப் பிரிவு) இணைப்பதாகும். 

 ☞ சர்வதேச நிலைத்த வளர்ச்சி மாநாடு 2021 (World Sustainable Development Summit 2021) , 10-12   பிப்ரவரி 2021 தினங்களில் இணையவழியில் நடைபெறுகிறது. 'நமது பொதுவான எதிர்காலத்தை மறுவரையறை செய்தல்: அனைவருக்கும் பாதுகாப்பான சுற்றுச்சூழல்' (‘Redefining our common future: Safe and secure environment for all’.) என்பது இம்மாநாட்டின் மையக்கருவாகும். எரிசக்தி மற்றும் வளங்கள் நிறுவனத்தின் 20-வது பதிப்பின் முக்கிய நிகழ்வான இந்த சர்வதேச நீடித்த வளர்ச்சி மாநாட்டை இந்திய அரசின் மத்திய சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்றம் அமைச்சகம், புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சகம் மற்றும் புவி அறிவியல் அமைச்சகம் ஆகியவை  இணைந்து நடத்துகின்றன.  கயானா கூட்டுறவு குடியரசின் அதிபர் மேன்மைமிகு டாக்டர் முகமது இர்ஃபான் அலி, பப்புவா நியூ கினியா பிரதமர் மாண்புமிகு ஜேம்ஸ் மராபே, மாலத்தீவு மக்களவையின் சபாநாயகர் திரு முகமது நஷீத், ஐக்கிய நாடுகள் சபையின் துணை தலைமை இயக்குநர் திருமிகு அமினா ஜே முகமது மற்றும் மத்திய சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்றம் அமைச்சர் திரு பிரகாஷ் ஜவடேகர் ஆகியோர் இதில் பங்கேற்கின்றனர்.

☞ ரிஷிகங்கா மின்திட்டம் : உத்தரகாண்ட் மாநிலம், சமோலி மாவட்டத்தில் 7-2-2021   அன்று பனிப்பாறை  உடைந்து பெரும் பனிச்சரிவு ஏற்பட்டு ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால், ரிஷிகங்கா ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டு வந்த ரிஷிகங்கா மின்திட்டம் முழுமையாக அடித்துச் செல்லப்பட்டது.
☞ மனித உரிமைகள் ஆணையத்தின் உத்தரவுகள் மாநில அரசைக் கட்டுப்படுத்தும் என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. மனித உரிமைகள் ஆணையம் பிறப்பித்த உத்தரவுகளை எதிர்த்து தமிழக அரசின் பல்வேறு துறையைச் சேர்ந்த அதிகாரிகள் தொடர்ந்த வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் இன்று இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. மேலும், மனித உரிமைகள் ஆணையத்தால் பிறப்பிக்கப்படும் உத்தரவுகள் அரசை கட்டுப்படுத்தும் என்று சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்திருப்பதோடு, மனித உரிமைகள் ஆணைய உத்தரவுகளை அரசு அமல்படுத்தவில்லை என்றால்  மனித உரிமைகள் ஆணையமே உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரலாம் என்றும் உத்தரவிட்டுள்ளது.
☞ உத்தரகண்ட் மாநிலத்தில் சமோலி மாவட்டம், ஜோஷிமாத் பகுதியில் உள்ள நந்தாதேவி பனிமலை 7-2-2021 அன்று திடீரென உடைந்து  ஏற்பட்ட பனிச்சரிவினால்  தவுளிகங்கா ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, பெரும் உயிர் சேதமும் பொருள் சேதமும் ஏற்பட்டுள்ளது. 
☞ இந்திய ரயில்வே உணவு சேவை மற்றும் சுற்றுலா நிறுவன (ஐஆர்சிடிசி) தளத்தில் இணையவழி பேருந்து முன்பதிவுகள் சேவையும்  புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.  ஏற்கனவே  ஐஆர்சிடிசி தளத்தில் ரயில்  முன்பதிவுடன்,   விமானப் பயணங்களுக்கான முன்பதிவு சேவையும் வழங்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. 
☞ சி.ஆர்.பி.எப்.பில் இருந்து முதல் முறையாக நக்சலைட்டு எதிர்ப்பு படைக்கு பெண் கமாண்டோக்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
☞ பிச்சை எடுப்பவர்களும் உழைத்து கவுரவமாக வாழ்வதற்காக அவர்களுக்கு சுய தொழில் கற்றுக்கொடுத்து வாழ வழிகாட்டும் திட்டத்தை ராஜஸ்தான் அரசு தொடங்கியுள்ளது.
☞ உலக சாதனை முயற்சியாக இந்தியா முழுவதுமிலிருந்து பள்ளி மாணவர்கள் தயாரித்த 100 மிகச் சிறிய கையடக்க பெம்டோ செயற்கைக்கோள்கள் (Femto satellite)   7-2-2021 அன்று  ராமேசுவரத்திலிருந்து விண்ணில் செலுத்தப்பட்டது.ஹீலியம் நிரப்பப்பட்ட இரண்டு ராட்சத பலூனில் 100 செயற்கைக்கோள்களும் விண்ணில் செலுத்தப்பட்டது. இந்த ஹீலியம் பலூன் சுமார் 38 ஆயிரம் மீட்டர் உயரம் வரையிலும் செல்லக் கூடியது.
ஹீலியம் பலூன் இலக்கினை அடைந்த பின்னர் செயற்கைகோள்கள் பாராசூட் மூலமாக பூமியை வந்தடையும். இந்த செயற்கைக்கோள்களால் சேகரிக்கப்பட்ட ஓசோன் படலம், கதிர்வீச்சு, விவசாயம், காற்றின் வேகம், புவி வெப்பமடைதல் உள்ளிட்ட பல விவரங்கள் கணிணிகளில் பதிவு செய்யப்படும்.
 ராமேசுவரத்தில் உள்ள அப்துல்கலாம் சர்வதேச அறக்கட்டளை, ஸ்பேஸ் சோன் இந்தியா மற்றும் மார்டின் குரூப்ஸ் ஆகியோர் இணைந்து செயல்படுத்திய இந்த சாதனையானது  வேர்ல்டு ரெக்கார்டு, ஏசியா புக் ஆப் ரெக் கார்டு, இந்தியா புக் ஆப் ரெக்கார்டு, அசிஸ்ட் புக் ஆப் ரெக்கார்டு என 5 சாதனைகள் புத்தகங்களில் பதிவாகியுள்ளது. 
☞ ஜெனரல் திம்மய்யாவின் சாதனையை விவரிக்கும் அருங்காட்சியகத்தை  கர்நாடகா மாநிலம் குடகு மாவட்டத்தில் குடியரசுத்தலைவர்  ராம்நாத் கோவிந்த் திறந்து வைத்தார்.
கூ.தக. : இந்திய ராணுவ தளபதியாக கடந்த 1957 முதல் 1961-ம் ஆண்டு வரை பணியாற்றியவர் ஜெனரல் திம்மய்யா. கர்நாடக மாநிலம் குடகு மாவட்டம் மடிகேரியை சேர்ந்த அவர் வாழ்ந்த பூர்வீக பாரம்பரிய இல்லம், புதுப்பிக்கப்பட்டு நினைவு அருங்காட்சியகமாக மாற்றப்பட்டுள்ளது. 
☞ அசாம், ஹரியானா, ஹிமாச்சலப் பிரதேசம் மற்றும் பஞ்சாப் ஆகிய நான்கு மாநிலங்கள், மத்திய நிதி அமைச்சகத்தின் செலவினங்கள் துறை (Department of Expenditure, Ministry of Finance) பரிந்துரைத்த வர்த்தகம் செய்வதை எளிதாக்கும் சீர்திருத்தங்களை (Ease of Doing Business reforms )சிறப்பாக செயல்படுத்தியுள்ளன. இதன் மூலம், இந்தியாவில், வர்த்தகம் செய்வதை எளிதாக்கும் சீர்திருத்தங்களை இது வரை செயல்படுத்தியுள்ள மாநிலங்களின் எண்ணிக்கை 12 ஆக உயர்ந்துள்ளது.  ஆந்திரப் பிரதேசம், கர்நாடகா, கேரளா, மத்தியப் பிரதேசம், ஒடிசா, ராஜஸ்தான், தமிழ்நாடு மற்றும் தெலங்கானா ஆகிய மாநிலங்கள் இந்த சீர்திருத்தங்களை ஏற்கனவே நிறைவு செய்துள்ளன.இதன் மூலம், ரூ 28,183 கோடி கூடுதல் கடன் அனுமதி இந்த 12 மாநிலங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. இதில், தமிழ்நாட்டுக்கு ரூ 4,813-க்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
☞ ஆல் இந்தியா ரேடியோ நடத்தும்  ஆகாஷ்வாணி சங்கீத் சம்மேளம் (Akashvani Sangeet Sammelan/ Akashvani Music Festival) எனும் பாரம்பரிய  இசை நிகழ்ச்சியின் பெயர்,   பாரத் ரத்னா பண்டிட் பீம்சென் ஜோஷி (Bharat Ratna Pandit Bhimsen Joshi) இசை நிகழ்ச்சி என மாற்றப்பட்டுள்ளது. 
☞ அதிக பயனாளிகளுக்கு கொவிட்-19 தடுப்பூசியை வழங்கிய நாடுகளின் பட்டியலில் இந்தியா மூன்றாவது இடம் வகிக்கிறது. அமெரிக்கா மற்றும் இங்கிலாந்து நாடுகள் முறையே முதல் இரு இடங்களில் உள்ளன. 
☞ பிரதமரின் பயிர் பாதுகாப்பு திட்டத்துக்கு (Pradhan Mantri Fasal Bima Yojana (PMFBY) ) 2021-22 ஆம் நிதியாண்டில், மத்திய அரசு ரூ.16,000 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது.  
கூ.தக. : 
விவசாயிகளின் பயிர் பாதுகாப்பை அதிகரிக்கவும்,  பயிர் காப்பீடு மூலம் விவசாயிகளுக்கு அதிகளவிலான பயனை உறுதி செய்யவும் உதவும்   இந்த பயிர் காப்பீடு திட்டத்துக்கு கடந்த 2016ம் ஆண்டு ஜனவரி 13ம் தேதி மத்திய அரசு ஒப்புதல் அளித்தது. 
இழப்பீட்டுத் தொகை மின்னணு முறையில் விவசாயிகளின் வங்கி கணக்கில் நேரடியாக செலுத்தப்படுகிறது.
பிரதமரின் பயிர் காப்பீடு திட்டத்துடன் நில ஆவணங்கள் ஒருங்கிணைப்பு, எளிதில் பதிவு செய்வதற்கு செல்போன் செயலி, பயிர் இழப்பை மதிப்பீடு செய்ய செயற்கை கோள் படம், தொலை உணர்வு தொழில்நுட்பம், ட்ரோன் வசதி, செயற்கை நுண்ணறிவு, இயந்திர மூலம் அறிதல்(மெஷின் லேர்னிங்) போன்ற பல முக்கிய அம்சங்கள் இத்திட்டத்தில் உள்ளன.
வெளிநாட்டு உறவுகள்

☞ ஆப்கானிஸ்தான் நாட்டிற்கு இந்தியாவிலிருந்து   5 லட்சம் கரோனா தடுப்பூசிகள்  வழங்கப்பட்டுள்ளன.  ஏற்கனவே, இந்தியாவிலிருந்து பூடான், மாலத்தீவு, வங்கதேசம், நேபாளம், மியான்மர், இலங்கை ஆகிய நாடுகளுக்கு கரோனா தடுப்பூசி அனுப்பப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 

☞ கொழும்பு துறைமுகத்தில் கிழக்கு கன்டெய்னர் முனையத் திட்டம் அமைக்கும் இந்தியாவுடனான ஒப்பந்தத்தை இலங்கை ரத்து செய்துள்ளது.
கூ.தக. : கொழும்பு துறைமுகத்தில் கிழக்கு கன்டெய்னர் முனையம் அமைக்க இந்தியா, ஜப்பான் ஆகிய நாடுகளுடன் கடந்த 2019-ம் ஆண்டு இலங்கை ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது. இதற்கான ஏற்பாடுகளை இந்தியா, ஜப்பான் நாடுகள் செய்து வந்த நிலையில் திடீரென இந்தஒப்பந்தத்தை இலங்கை ரத்துசெய்துள்ளது.
கொழும்பு துறைமுகத்தில் உள்ள 23 தொழிற்சங்கங்களின் கடும் எதிர்ப்பின் காரணமாக இந்த ஒப்பந்தத்தை இலங்கை ரத்து செய்துள்ளதாகத்தெரிகிறது. 

சர்வதேச நிகழ்வுகள்

☞ சீனாவின் 2வது கொரோனா தடுப்பூசி “கொரோனாவாக்” (CoronaVac) :    சீனாவின் 2வது உள்நாட்டு தயாரிப்பான ‘கொரோனாவாக்’ (CoronaVac) தடுப்பூசியை பொதுமக்களுக்கு பயன்படுத்தவும், சில நிபந்தனைகளுடன் சந்தைப்படுத்தவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.  இதனை சீனாவைச் சேர்ந்த ‘சினோவாக் பயோடெக்’  (Sinovac Biotech)  நிறுவனம்  தயாரித்துள்ளது.  சீனாவில் அரசுக்கு சொந்தமான   ‘சினோஃபார்ம்’ (Sinopharm)   நிறுவனம் தயாரித்துள்ள ’சினோவாக்’ (Sinovac) கொரோனா தடுப்பூசி ஏற்கனவே பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வந்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

☞  உலகின் மிகப்பெரிய கடலோர காற்றாலைப் பண்ணை (offshore wind farm) தென்கொரியாவில் அமைக்கப்படவுள்ளது. 

☞ யேமன் போரில் சவூதி அரேபியாவுக்கு அமெரிக்கா அளித்து வந்த ஆதரவை நிறுத்தியுள்ளதாக அதிபா் ஜோ பைடன் அறிவித்துள்ளாா்.
பின்னணி : 
யேமனில் சா்வதேச நாடுகளால் அங்கீகரிக்கப்பட்ட மன்சூா் ஹாதி தலைமையிலான அரசை எதிா்த்து, ஷியா பிரிவினரைப் பெரும்பான்மையாகக் கொண்ட ஹூதி கிளா்ச்சியாளா்கள் சண்டையிட்டு, கடந்த 2014-ஆம் ஆண்டில் தலைநகா் சனா உள்ளிட்ட கணிசமான பகுதிகளைக் கைப்பற்றினா்.
அந்தக் கிளா்ச்சியாளா்களுக்கு ஷியா பிரிவினா் அதிகம் வசிக்கும் ஈரான் ஆதரவு அளித்து வந்தது. 
சன்னி பிரிவினரைப் பெரும்பான்மையாகக் கொண்ட மன்சூா் ஹாதி அரசுக்கு, அந்தப் பிரிவினா் பெரும்பான்மையாக வசிக்கும் சவூதி அரேபியா ஆதரவளித்து வருகிறது. அரசுப் படையினருக்கு ஆதரவாக, ஹூதி கிளா்ச்சியாளா்கள் மீது சவூதி அரேபியா கடந்த 5 ஆண்டுகளாக தாக்குதல் நடத்தி வருகின்றனா். இந்த நடவடிக்கைகளுக்கு டிரம்ப் தலைமையிலான அமெரிக்க அரசு பல்வேறு உதவிகளை அளித்து வந்தது.
இந்த நிலையில், புதிதாக அமைந்துள்ள ஜோ பைடன் அரசு அந்த ஆதரவை நிறுத்தியுள்ளது. அதிபா் ஜோ பைடன் பதவியேற்றதிலிருந்து, டிரம்ப்பின் கொள்கை முடிவுகளை மாற்றியமைக்கும் பல்வேறு உத்தரவுகளைப் பிறப்பித்துள்ளாா்.
பொருளாதாரம்

☞ அரசு கடன் பத்திரங்களில் சிறு முதலீட்டாளா்கள் நேரடியாக முதலீடு செய்வதற்கு அனுமதியளிக்கவுள்ளதாக ரிசா்வ் வங்கி  அறிவித்துள்ளது. 

☞ இணையவழி நிதிச் சேவைகளை வழங்கி வரும் முன்னணி நிறுவனமான பேபால் (PayPal) , இந்தியாவில் உள்நாட்டு பணப் பட்டுவாடா சேவைகளை  1-4-2021 அன்று முதல் நிறுத்தப்போவதாக அறிவித்துள்ளது.

நியமனங்கள்

☞ தேசிய பாதுகாப்புக் குழுவின் (National Safety Council) தலைவராக திரு எஸ்.என். சுப்பிரமணியன் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் மூன்று ஆண்டுகள் இந்த பதவியில் பொறுப்பு வகிப்பார்.   இவர் எல் அண்ட் டி நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாகவும், நிர்வாக இயக்குநராகவும் பொறுப்பு வகிக்கிறார். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Respected visitors , this is your area. Ask your queries, post your suggestions. If you know correct answers for other friend's questions, kindly reply them. Motivate One another . Your comments will be posted soon with a small moderation.
Note:Please avoid sharing phone numbers, email Ids and posting abusive comments against the government and recruitment agencies.

Post Bottom ads

Your Ad Spot