நடப்பு நிகழ்வுகள்
Notifications
Notifications
Welcome to TNPSC Portal !
Search this website

TNPSC Current Affairs in Tamil - 1-4 June 2021

 நடப்பு நிகழ்வுகள் 1-4 ஜீன் 2021 

Click Here to Subscribe for Current Affairs PDF

(Registered Aspirants will get current affairs PDF files to your email ID)

தமிழ் நாடு

👉 மறைந்த முதலமைச்சர் கலைஞர் கருணாநிதி அவர்களின் பிறந்தநாளை (3-6-2021)   முன்னிட்டு தமிழக அரசு பல்வேறு புதிய திட்டங்களை அறிவித்துள்ளது. அவற்றின் விவரம் வருமாறு, (நன்றி : தினத்தந்தி) 

1. தென் சென்னையில் ரூ.250 கோடி மதிப்பீட்டில் 500 படுக்கை வசதிகளுடன் கூடிய பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனை அமைக்கப்படும். சென்னைப் பெருநகரத்தில் உள்ள கிங் இன்ஸ்டிடியூட் வளாகத்தில், 250 கோடி ரூபாய் செலவில் 500 படுக்கை வசதிகளுடன் கூடிய, பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனையாக அமைக்கப்படும்.

2. திருவாரூர் மாவட்டத்தின் நெல் உற்பத்தியினை கருத்தில் கொண்டும், விவசாய விளைபொருட்கள் மழை வெள்ள பாதிப்பினால் சேதமடைவதை தவிர்ப்பதற்கும்,   ரூபாய் 24 கோடியே 30 லட்சம் மதிப்பீட்டில் 16,000 டன் கொள்ளளவு கொண்ட சேமிப்புக் கிடங்குகள் அமைக்கப்படும். மேலும், அறுவடைக்கு பின் தானியம் மற்றும் பயறு வகைகளை சரியான முறையில் உலர வைக்காததால் ஏற்படும் இழப்பினை தவிர்க்க விவசாயிகள் நலன் கருதி திருவாரூர் மாவட்டத்தில் ரூபாய் 5 கோடி மதிப்பீட்டில் 10 வட்டாரங்களில் சூரிய ஒளியில் உலர்விக்கும் 50 களங்களும், கோட்டூர் மற்றும் வலங்கைமான் வட்டாரங்களில் ரூபாய் 60 லட்சம் மதிப்பீட்டில் 2 மறுசுழற்சி தொகுப்பு உலர்விப்பான்களும், நீடாமங்கலம் மற்றும் மன்னார்குடி வட்டாரங்களில் ரூபாய் 60 லட்சம் மதிப்பீட்டில் 2 தொடர் ஓட்ட உலர்விப்பான்களும் ஆகமொத்தம் ரூபாய் 6 கோடியே 20 லட்சம் மதிப்பீட்டில் மேற்கூறியவாறு 54 உலர்களம் மற்றும் உலர்விப்பான்கள் ஏற்படுத்தப்படும்.

3 சங்கத் தமிழ் வளர்த்த மதுரையில், இரண்டு இலட்சம் சதுர அடி பரப்பளவில் நவீன வசதிகளுடன் கூடியவகையில், 70 கோடி ரூபாய் செலவில், கலைஞர் நினைவு நூலகம் ஒன்று அமைக்கப்படும். அண்ணா நூற்றாண்டு நூலகம் போல தமிழ்நாட்டின் மற்ற பகுதிகளில் வாழும் மக்களும், இத்தகைய அரிய வாய்ப்பினைப் பெற வேண்டும் என்ற நோக்கத்தோடு, இந்த நூலகம் அமைக்கப்படும்.

4.  தமிழ் எழுத்தாளர்களை ஊக்குவித்து சிறப்பிக்கும் வகையில், "இலக்கிய மாமணி" என்ற விருது உருவாக்கப்பட்டு, தமிழின் இலக்கியத்திற்கு வளம் சேர்க்கும் எழுத்தாளர்கள் மூன்று பேருக்கு ஆண்டுதோறும் இந்த விருது வழங்கப்படும். இவ்விருதாளர்களுக்கு பாராட்டுப் பத்திரம் மற்றும் ஐந்து இலட்சம் ரூபாய் ரொக்க பரிசும் வழங்கப்படும்.

 5. தமிழ்நாட்டைச் சேர்ந்த எழுத்தாளர்களில் ஞானபீடம், சாகித்ய அகாடமி போன்ற தேசிய விருதுகள், மாநில இலக்கிய விருதுகள், புகழ்பெற்ற உலகளாவிய அமைப்புகளின் விருதுகள் பெற்றவர்களை ஊக்குவிக்கும் வகையில், அவர்கள் வசிக்கும் மாவட்டத்தில் அல்லது விரும்பும் மாவட்டத்தில் தமிழ்நாடு அரசு மூலமாக வீடு வழங்கப்படும்.

6. மகளிர் நலன் கருதி மகளிருக்கு அரசு நகரப் பேருந்துகளில் இலவச பயணச் சலுகை தமிழக அரசினால் வழங்கப்பட்டு வருகிறது. அதன் தொடர்ச்சியாக, மாற்றுத் திறனாளிகள் மற்றும் திருநங்கைகளுக்கும் நகரப்புற அரசு பேருந்துகளில் இலவச பயண சலுகை வழங்க மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் ஆணையிட்டுள்ளார்கள். 

 👉 ரேஷன் அட்டை இல்லாத மூன்றாம் பாலினர்கள் நல வாரியத்தில் பதிவு செய்திருந்தால் ரூ.2 ஆயிரம் நிவாரணம் தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. 

👉 முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பிறந்த தினத்தை ஒட்டி, 14 மளிகைப் பொருள்களான, கோதுமை மாவு, உப்பு, ரவை தலா 1 கிலோ, சா்க்கரை, உளுத்தம் பருப்பு தலா அரை கிலோ, புளி, கடலை பருப்பு தலா கால் கிலோ, கடுகு, சீரகம், மஞ்சள் தூள், மிளகாய் தூள் தலா 100 கிராம், டீதூள் 100 கிராம் பொட்டலம் 2, குளியல் சோப்பு, துணி சோப்பு தலா 1 ஆகிய பொருள்கள் அடங்கிய அடங்கிய பைகளை, அரிசி அட்டைதாரா்களுக்கு வழங்கும் திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் 3-6-2021 அன்று தொடங்கி வைத்தார். 
👉 தமிழக முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியின் 97-வது பிறந்த நாளை (3-6-2021) முன்னிட்டு,  மாவட்டந்தோறும் 1,000 மரக்கன்றுகள் வீதம் 38,000 மரக்கன்றுகள் நடும் திட்டத்தை தொடங்கி வைத்தார். 38 மாவட்டங்களிலும் வனத்துறை சார்பில் தலா 1,000 மரக்கன்றுகள் விதம், 38,000 மரக்கன்றுகள் நடப்படுகின்றன. 
👉 தமிழகத்தில் 2020- 21ஆம் கல்வியாண்டில் 1 முதல் 8-ம் வகுப்பு வரை அனைவரும் தோ்ச்சி பெற்றுள்ளதாகப் பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது. எந்த மாணவரையும் பள்ளியை விட்டு வெளியேற்றக் கூடாது எனவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
👉 டவ் தே புயலில் காணாமல் போன 21 மீனவர்களின் குடும்பத்திற்கு ரூ.20 லட்சம் நிவாரண உதவி வழங்கப்படும் என முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
👉 பிஎஸ்என்எல் தமிழ்நாடு வட்டத்தின் புதிய தலைமைப் பொது மேலாளராக ஜி.முரளிதரன் நியமிக்கப்பட்டுள்ளார். 

இந்தியா

👉 நிதி ஆயோக் வெளியிட்டுள்ள 2020-2021 நிதியாண்டுக்கான நிலையான வளர்ச்சி இலக்கு குறியீட்டு எண் பட்டியலில் 75 புள்ளிகள் பெற்று கேரளா தொடர்ந்து முதலிடம் வகிக்கிறது. 74 புள்ளிகள் பெற்று இமாசலபிரதேசமும், தமிழ்நாடும் இரண்டாம் இடம் பிடித்துள்ளன. யூனியன் பிரதேசங்களில் சண்டிகார் 79 புள்ளிகள் பெற்று தொடர்ந்து முதலிடம் வகிக்கிறது. 68 புள்ளிகளுடன் டெல்லி 2-ம் இடத்தில் உள்ளது. வளர்ச்சி இலக்கை எட்டுவதில், மிகவும் மோசமான மாநிலமாக, பீஹார், ஜார்க்கண்ட், அசாம் உள்ளன.

சமூகவியல், பொருளாதாரம், சுற்றுச்சூழல் ஆகியவற்றில் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் முன்னேற்றம் மதிப்பிடப்பட்டு, இந்த தரவரிசை உருவாக்கப்படுகிறது.

நாட்டின் ஒட்டுமொத்த வளர்ச்சி, 60 புள்ளிகளில் இருந்து, 66 புள்ளிகளாக உயர்ந்துள்ளது. 'பாதுகாப்பான குடிநீர், குறைந்த விலையில் எரிவாயு ஆகிய காரணிகளில் ஏற்பட்ட முன்னேற்றமே, இந்த உயர்வுக்கு காரணம்' என, நிடி ஆயோக் கூறியுள்ளது.

👉 ரூ.86 ஆயிரம் கோடியில் கோதாவரி - காவிரி நதிநீர் இணைப்பு திட்டத்தை,  தெலுங்கானா மாநிலத்தின் இச்சம்பள்ளியிலிருந்து, தமிழகத்தின் கல்லணை வரையிலான கோதாவரி - காவிரி இணைப்பு திட்ட அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது    . இதன் மூலம், ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மாதம் முதல் அக்டோபர் மாதம் வரை உள்ள 143 நாட்களில் 247 டிஎம்சி தண்ணீர் விடுவிக்கப்படும். இதில் வீணாகும் நீர் போக மீதமுள்ள 230 டிஎம்சி நீரில் தெலங்கானாவுக்கு 65.8 டிஎம்சியும், ஆந்திராவுக்கு 79.92 டிஎம்சியும், தமிழகத்துக்கு 84.28 டிஎம்சி நீரும் கிடைக்கும் என அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. 
👉 கூகுள் தேடலில் இந்தியாவின் மோசமான மொழி கன்னடம் என காட்டப்பட்டதற்கு கூகுள் நிறுவனம் மன்னிப்புக்கோரியுள்ளது. 
👉 ஆசிரியர் தகுதித் தேர்வில் (Teachers Eligibiltiy Test) தேர்ச்சி பெற்ற தகுதி சான்றிதழ் 7 ஆண்டுகளில் இருந்து வாழ்நாள் வரை நீட்டிப்பு செய்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த புதிய விதிமுறையானது, 2011 முதல் ஆசிரியர் தகுதி சான்றிதழ் பெற்றவர்களுக்கு பொருந்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
👉 ’பான் பயோ கோவிட்-19’ (“PanBio COVID-19”) என்ற பெயரில்   ரேப்பிட் ஆண்டிஜன் சோதனைக் கருவியை இந்தியாவில் பயன்படுத்த   இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுண்சில்  ஒப்புதல் வழங்கியுள்ளது. இந்த கருவியை அமெரிக்காவின் சிக்காகோவிலுள்ள ‘Abbott Rapid Diagnostics Division’ எனும் நிறுவனம் தயாரித்துள்ளது. 
கூ.தக. : ஏற்கனவே ’கோவிசெல்ஃப்’ (“CoviSelf test kit” ) என்ற பெயரில் பூனேவைச் சேர்ந்த 'Mylab Discovery Solutions' தயாரித்துள்ள ரேப்பிட் ஆண்டிஜன் சோதனைக் கருவிக்கு இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுண்சில்  ஒப்புதல் வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது. 
👉 SATAT - Sustainable Alternative Towards Affordable Transportation 
👉 IAMAI - Internet and Mobile Association of India
👉 இந்திய தரநிலைகள் பணியகத்தினால் (Bureau of Indian Standards (BIS)) தர உருவாக்கும் நிறுவனமாக (Standard Developing Organization (SDO)) அங்கீகரிக்கப்பட்டுள்ள  முதல் இந்திய நிறுவனம் எனும் பெருமையை ,   இந்திய இரயில்வேயின் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு பிரிவான , லக்னோவில் அமைந்துள்ள,  ‘ஆராய்ச்சி வடிவமைப்புகள் மற்றும் தரநிலைகள் அமைப்பு’ (Research Designs & Standards Organization (RDSO)) பெற்றுள்ளது. 
👉 விமான சோதனை பொறியாளராக  (flight test engineer) தகுதி பெற்ற முதல் மற்றும் ஒரே பெண்மணி  எனும் பெருமையை இந்திய விமானப்படையின் அதிகாரியான ஆஷ்ரிதா V ஒலெட்டி (Aashritha V Olety) பெற்றுள்ளார். 
 👉 உலகின் முதலாவது  திரவ வடிவ நானோ யூரியாவை (Nano Urea Liquid) புது தில்லியைத் தலைமையிடமாகக் கொண்ட  இந்திய விவசாயிகள் உரங்கள் கூட்டமைப்பு நிறுவனம் (Indian Farmers Fertiliser Cooperative Limited (IFFCO)) தயாரித்துள்ளது.
👉 Centre for World University Ranking (CWUR) 2021-22 - ல் ,  உலக பல்கலைக்கழகத் தரவரிசையில் இந்திய பல்கலைக்கழகங்களில் முதலிடத்தை இந்திய மேலாண்மை நிறுவனம், ஆமதாபாத்தும் (Indian Institute of Management(IIM), Ahmedabad) (உலகளவில் 415 வது இடம்) , உலகப் பல்கலைக்கழகங்களில் முதலிடத்தை  ஹார்வர்டு  பல்கலைக்கழகமும்  (Harvard University) பெற்றுள்ளன. 
👉 ‘பால ஸ்வராஜ்’ (Bal Swaraj) என்ற பெயரில் கோவிட்-19 நோயினால் பெற்றோர்களை இழந்த குழந்தைகளின் விவரங்களை தேசிய அளவில் ஆன்லைன் மூலம் கண்காணிப்பதற்கான  இணையதளத்தை  தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் (National Commission for Protection of Child Rights (NCPCR)) தொடங்கியுள்ளது. 
கூ.தக. : தில்லியைத் தலைமையிடமாகக் கொண்டதும், 2007 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டதுமான, தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்தின் தற்போதைய தலைவர் பிரியங் கனூங்கோ (Priyank kanoongo)
👉  மாதிரி வாடகை சட்டம்  (Model Tenancy Act)  : வாடகை மற்றும் குத்தகை முறைகளில் புதிய சட்டங்களை கொண்டு வரவும் அல்லது தற்போதுள்ள வாடகை சட்டங்களில், பொருத்தமான முறையில் திருத்தங்கள்  கொண்டு வரவும்,  மாதிரி வாடகை சட்டம்  (Model Tenancy Act) உருவாக்கப்பட்டது. இதை மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு அனுப்ப பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை 2-6-2021 அன்று ஒப்புதல் அளித்தது. 
இந்த, மாதிரி வாடகைகுத்தகை சட்டம், நாட்டில் துடிப்பான , நிலையான, அனைத்தும் உள்ளடக்கிய வாடகை வீடு சந்தையை உருவாக்கும் நோக்கில் கொண்டுவரப்பட்டுள்ளது.  இது அனைத்து வகையான வருவாய் பிரிவினருக்கும், போதிய அளவிலான வாடகை வீடுகளை உருவாக்கும். இதன் மூலம் வீடுகள் இல்லாத நிலை தீர்க்கப்படும்.   இந்த மாதிரி வாடகை சட்டத்தால்,  வாடகை வீடுகள் படிப்படியாக முறையான சந்தையாக மாறுவதன் மூலம் நிறுவனமயமாக்க முடியும். 
👉 இந்தியாவில் கண்டறியப்பட்ட புதிய கொரோனா வைரஸ்களுக்கு ‘காப்பா(Kappa) - B.1.617.1’ மற்றும் ‘டெல்டா (Delta) -B.1.617.2’ என  நான்கெழுத்து கிரேக்க எழுத்துகளின் பெயரை   உலக சுகாதார நிறுவனம்  சூட்டி உள்ளது.    மேலும், இந்தியாவில் கண்டறியப்பட்ட உருமாறிய கொரோனா வைரஸின் மூன்று உப ரகங்களில், டெல்டா ரகம் (பி.1.617.2 )  மட்டும் கவலையளிக்கும் வைரஸ் என்று உலக சுகாதார நிறுவனம் வகைப்படுத்தியுள்ளது.கப்பா (பி.1.617.1 ) உப ரக வைரஸின் பரவல் மிகக் குறைவாக உள்ளதால் அதனை கவனிக்கப்பட வேண்டிய ரகமாக உலக சுகாதார நிறுவனம் வகைப்படுத்தியுள்ளது.பி.1617.3 என்ற பெயரிடப்படாத மூன்றாவது உப ரக வைரஸ் மிக மிக குறைவாகவே கண்டறியப்பட்டுள்ளதால், அது எந்த பிரிவிலும் சேர்க்கப்படவில்லை.
கூ.தக. : கடந்த ஆண்டு 2020 அக்டோபர் மாதத்தில் மராட்டிய மாநிலத்தில் பி.1.617 என்ற உருமாறிய கொரோனா வைரஸ் தொற்றுதல் முதன் முறையாக கண்டறியப்பட்டது. பின்னர் மூன்ற உப ரகங்களாக இது பிரிந்தது. இவற்றில் பி.1.617.2  என்ற ரகத்திற்கு உலக சுகாதார நிறுவனம் டெல்டா என்று பெயர் சூட்டியது. பி.1.617.1 ரகத்திற்கு கப்பா என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது. 
இங்கிலாந்து நாட்டில் கண்டுபிடிக்கப்பட்ட புதிய வகை கொரோனா வைரஸ் (‘UK variant’) -க்கு ‘ஆல்ஃபா’ (‘Alpha’)(B.1.1.7)  என்று பெயரிடப்பட்டுள்ளது. 
👉 இந்திய ராணுவக் கல்விப்பிரிவின்  ( Army Educational Corps (AEC)) 100-வது ஆண்டை இந்திய ராணுவம் 1 ஜீன் 2021 அன்று  கொண்டாடியது.  புது தில்லியை தலைமையிடமாகக் கொண்ட இந்திய ராணுவக் கல்விப்பிரிவு 24  ஏப்ரல் 1921 ல் தொடங்கப்பட்டதாகும். 
👉 பயாலாஜிக்கல்-இ நிறுவனம் டிசம்பர் 2021 மாதத்திற்குள் 30 கோடி கொரோனா தடுப்பூசிகளை உற்பத்தி செய்ய்யும் என மத்திய சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகம் தகவல் தெரிவித்து உள்ளது. பயோலாஜிகல்-இ  உருவாக்கிய தடுப்பூசி  ஒரு ஆர்.பி.டி புரத துணை அலகு தடுப்பூசி  ஆகும் இது  அடுத்த சில மாதங்களில் கிடைக்க வாய்ப்புள்ளது. 2021 ஆகஸ்ட் முதல் டிசம்பர் வரை பயோலாஜிகல்-இ  மூலமாக தடுப்பூசிகள்  தயாரிக்கப்பட்டு சேமிக்கப்படும் என்று அமைச்சகம் தெரிவித்துள்ளது.
பையோலாஜிக்கல் -இ என்ற நிறுவனத்தின் தடுப்பூசிகளைத் தயாரிக்க ரூ.1,500 கோடியை முன்பணமாக மத்திய அரசு வழங்குகிறது.
 👉 மத்திய அரசு இலவசமாக கொரோனா தடுப்பூசிகளை வழங்க வலியுறுத்தி கேரள சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
👉 வெளிநாடுகளில் இருந்த இறக்குமதியாகும் தடுப்பூசிகளின் ஒவ்வொரு தொகுப்பையும் கசெளலியில் உள்ள மத்திய மருந்துகள் ஆய்வகத்தில் ஆய்வுக்கு உள்படுத்த வேண்டும் என்ற நிபந்தனையை இந்திய மருந்து கட்டுப்பாட்டு ஆணையம்   தளா்த்தியுள்ளது.
👉 கொரோனா இல்லாத கிராமமாக மாற்றிக் காட்டினால் ரூ.50 லட்சம் பரிசுத்தொகை அளிக்கப்படும் என்று மகாராஷ்டிர   அரசு அறிவித்துள்ளது. கொரோனா ஒழிப்பில்  பொதுமக்களின் ஒத்துழைப்பைப் பெறும் வகையில் மாநில அரசு இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
👉 கரோனா பரவல் காரணமாக  சிபிஎஸ்இ பிளஸ் 2 பொதுத் தேர்வு 2021  ரத்து செய்யப்படுவதாக பிரதமர் நரேந்திர மோடி  அறிவித்துள்ளார். 
வெளிநாட்டு உறவுகள் 

👉 பிரிக்ஸ் அமைப்பின்  வெளியுறவுத் துறை அமைச்சர்களின் கூடுகை (BRICS (Brazil, Russia, India, China and South Africa) Foreign Affairs Minister Meeting)   1-6-2021 அன்று இந்தியாவின்  தலைமையில்  மெய்நிகர் வாயிலாக நடைபெற்றது.  இந்த கூடுகைக்கு இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் அவர்கள் தலைமையேற்று நடத்தினார். 

👉 நகர்ப்புற வளர்ச்சி துறையில் இந்தியா மற்றும் ஜப்பான் இடையேயான  ஒத்துழைப்பு ஒப்பந்தத்தில் கையெழுத்திட  மத்திய அமைச்சரவை  2-6-2021 அன்று ஒப்புதல் வழங்கியது. இந்த ஒத்துழைப்பு ஒப்பந்தம்,  இந்தியா-ஜப்பான் இடையே நிலையான நகர்ப்புற வளர்ச்சியில் நீண்டகால ஒத்துழைப்பை மேம்படுத்தும். இந்த ஒப்பந்தம் ஸ்மார்ட் நகரங்கள் உருவாக்குதல் உட்பட நகர்ப்புற வளர்ச்சி திட்டங்களில் வேலை வாய்ப்புகளை உருவாக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

👉 நிலையான நகர்ப்புற வளர்ச்சி துறையில், மத்திய வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற விவகாரத்துறை அமைச்சகம் மற்றும் மாலத்தீவு வீட்டு வசதி  அமைச்சகம் இடையே கடந்த பிப்ரவரி மாதம் செய்து கொண்ட ஒப்பந்தம் குறித்து பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை குழுவில்  3-6-2021 அன்று விளக்கம் அளிக்கப்பட்டது. 

👉 ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பில் உள்ள உறுப்பு நாடுகள் இடையே ஊடகத்துறையில் ஒத்துழைப்புடன் செயல்படுவதற்கான ஒப்பந்தத்துக்கு  மத்திய அமைச்சரவை  2-6-2021 அன்று பின்ஏற்பு ஒப்புதல்  வழங்கியுள்ளது. 

ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பில் உள்ள உறுப்பு நாடுகள் இடையே ஊடகத்துறையில் ஒத்துழைப்புடன் செயல்படுவதற்கான ஒப்பந்தம் கடந்த 2019 ஆம் ஆண்டு கையெழுத்திடப்பட்டது. இதற்கு பிரதமர் திரு. நரேந்திரமோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை இன்று பின்ஏற்பு ஒப்புதல் வழங்கியது.

இந்த ஒப்பந்தம் ஊடகத்துறையில் பரஸ்பர ஒத்துழைப்பை மேம்படுத்தும். சிறந்த நடைமுறைகள், ஊடகத்துறையில் உள்ள புதுமைகள், தகவல்கள் மற்றும் செய்திகள் ஆகியவற்றை  உறுப்பு நாடுகள் இடையே பகிர்ந்து கொள்ளவும் இந்த ஒப்பந்தம் வாய்ப்பளிக்கும். 

👉 கனிம வளத்துறையில் இந்தியா- அர்ஜென்டினா ஆகியவை ஒத்துழைப்புடன் செயல்பட  புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ள  மத்திய அமைச்சரவை 3-6-2021 அன்று ஒப்புதல் அளித்தது. இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் இத்துறையில் நிறுவன வழிமுறையை ஏற்படுத்தும். லித்தியம் எடுப்பது உள்பட கனிமவள ஆராய்ச்சி மற்றும்  மேம்பாட்டை ஊக்குவிப்பதுதான் இதன் நோக்கம்.

👉 ஜப்பானுடன் நகா்ப்புற மேம்பாட்டுத் துறையில் ஒத்துழைப்புடன் செயல்படுவதற்கு புரிந்துணா்வு ஒப்பந்தம் மேற்கொள்ள மத்திய அமைச்சரவை  2-6-2021 அன்று ஒப்புதல் அளித்துள்ளது.

உலகம்

👉 இஸ்ரேல் நாட்டில் 12 ஆண்டு கால பெஞ்சமின் நேட்டன்யாஹூ ஆட்சி முடிவுக்கு வருகிறது. அங்கு எதிர்க்கட்சிகள் கூட்டணி அரசு அமைக்க உடன்பாடு எட்டப்பட்டுள்ளது. நப்தாலி பென்னட் பிரதமர் ஆகிறார். 

👉 உலக சுகாதார நிறுவனத்தின்  74 வது  உலக சுகாதார சபை மெய்நிகர் வாயிலாக 24-31 மே 2021 தினங்களில்  ‘இந்த தொற்றுநோயை முடிவுக்குக் கொண்டுவருதல், அடுத்ததைத் தடுக்கும்: ஆரோக்கியமான, பாதுகாப்பான மற்றும் சிறந்த உலகத்தை ஒன்றாக உருவாக்குதல்’ (Ending this pandemic, preventing the next: building together a healthier, safer and fairer world) எனும் மையக்கருத்தில்  நடைபெற்றது. 
இந்த கூடுகையின்போது,  74 வது உலக சுகாதார சபையின் (World Health Assembly (WHA)  தலைவராக  பூட்டான் நாட்டின் சுகாதாரத்துறை அமைச்சர்  திருமதி. டெச்சன் வாங்க்மோ (Mrs.Dechen Wangmo) தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். 
மேலும், 2021 செப்டம்பர் மாதத்திற்குள் அனைத்து நாடுகளின் மக்கள்தொகையில் குறைந்தது 10% மற்றும் 2021 ஆம் ஆண்டின் இறுதியில் குறைந்தது 30% தடுப்பூசி போடுவது இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 
👉 2022 ஆம் ஆண்டில் உலக வேலைவாய்ப்பின்மை சதவீதம் 5.7% ஆக இருக்கும் என சர்வதேச தொழிலாளர் நிறுவனம் (International Labour Organisation) கணித்துள்ளது. 
👉 சீனாவின் சினோவேக் கொரோனா தடுப்பூசியை அவசர கால பயன்பாட்டிற்கு பயன்படுத்த உலக சுகாதார அமைப்பு ஒப்புதல் கொடுத்துள்ளது. உலக சுகாதார அமைப்பின் ஒப்புதலை பெறும்  சீனாவின்  2-வது கொரோனா தடுப்பூசி இதுவாகும். ஏற்கனவே, சீனாவின் சினோபார்ம் தடுப்பூசிக்கு உலக சுகாதார அமைப்பு ஒப்புதல் கொடுத்துள்ளது. 
பைசர், மாடர்னா, ஜான்சன் & ஜான்சன், அஸ்ட்ரா ஜெனாகா ஆகிய தடுப்பூசிகளுக்கு ஏற்கனவே  உலக சுகாதார அமைப்பு ஒப்புதல் அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.   
👉 ‘பாக்வேக்’ தடுப்பூசி : சீனா வழங்கிய மூலப்பொருட்களின் உதவியோடு பாகிஸ்தான் உருவாக்கியுள்ள ‘பாக்வேக்’ தடுப்பூசியின் விநியோகம் தொடங்கப்பட்டுள்ளது. சீன அரசுக்கு சொந்தமான கான்சினோ நிறுவனம் தயாரித்துள்ள கொரோனா தடுப்பூசியின் மூலப்பொருட்கள் செறிவூட்டப்பட்டு மிக அடர்த்தியான நிலையில் பாகிஸ்தானுக்கு அனுப்பப்பட்டு இந்த தடுப்பூசி தயாரிக்கப்பட்டுள்ளது. 
👉 இஸ்ரேலின் புதிய அதிபராக மூத்த அரசியல்வாதி ஐசக் ஹெர்ஸாக் தேர்வு செய்யப்பட்டார். 
👉 சீனாவின் ஜியாங்சு மாகாணத்தில் 41 வயதான நபர் ஒருவருக்கு "எச் 10 என் 3  (H10N3 bird flu) என்ற புதிய வகை பறவைக் காய்ச்சல் (ஏவியன் இன்ஃப்ளூயன்ஸா) வைரஸ்  பறவைக்காய்ச்சல் பாதிப்பு உறுதியாகியுள்ளது.உலகிலேயே இந்த வைரஸ் பாதித்த முதல் நபராக அவர் கருதப்படுகிறார்.
👉 சீனாவில் பெற்றோர் 3 குழந்தைகள் பெற்றுக்கொள்ள அந்நாட்டு அரசு அனுமதித்துள்ளது.  முன்னதாக, மக்கள் தொகை பெருக்கத்தை குறைக்க பல ஆண்டுகளுக்கு முன் வீட்டுக்கு ஒரு குழந்தை என்ற திட்டத்தை சீனா அமல்படுத்தியது குறிப்பிடத்தக்கது. சுமார் 40 ஆண்டுகள் நீடித்த அந்த கட்டுப்பாட்டால் மில்லியன் கணக்கான கட்டாய கருக்கலைப்புகளும், குடும்ப கட்டுப்பாட்டு அறுவை சிகிச்சைகளும் செய்யப்பட்டன. இதையடுத்து, ஒரு குழந்தை திட்டத்தை அடுத்து மக்கள் தொகை கட்டுக்குள் வந்ததால் 2016ல் சீனா கொள்கையை தளர்த்தியது.  அதன்படி குடும்பத்துக்கு 2 குழந்தைகள் பெற்றுக்கொள்ளலாம் என 2016ல் தளர்வை சீன அரசு அறிவித்தது.

பொருளாதாரம்

👉 இந்தியாவில் பிட்காயின் (கிரிப்டோ கரன்சி) வர்த்தகம் தடை செய்யப்படவில்லை என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. இது தொடர்பாக 2018-ம் ஆண்டுவங்கிகளுக்கு அனுப்பிய சுற்றறிக்கையை நீக்கி உத்தர விட்டுள்ளது. இதன் மூலம் கிரிப்டோ கரன்சி வர்த்தகத்தை வங்கிகள் மூலமாக மேற்கொள்ளவும் வழியேற்பட்டுள்ளது.

👉 தேசிய அளவில் குறைந்தபட்ச ஊதியத்தை நிா்ணயம் செய்வது பற்றி தொழில்நுட்ப தகவல், பரிந்துரைகளை வழங்குவதற்கான உத்தரவையும், இதற்கான குழுவையும் மத்திய தொழிலாளா் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம் அமைத்துள்ளது. இந்தக் குழு, 3 ஆண்டுகளுக்கு செயல்படும். இந்த நிபுணா் குழுவுக்கு பொருளாதார வளா்ச்சி மைய இயக்குநா் பேராசிரியா் அஜீத் மிஸ்ரா தலைமை வகிக்கிறாா். கொல்கத்தா ஐஐஎம் பேராசிரியா் தாரிகா சக்ரவா்த்தி, பொருளாதார ஆராய்ச்சி தேசிய கவுன்சில் அமைப்பைச் சோ்ந்த அனுஸ்ரீ சின்ஹா, விபா பல்லா, இணை செயலாளா் வி.வி.கிரி, தேசிய தொழிலாளா் மையத்தின் தலைமை இயக்குநா் ஹெச்.ஸ்ரீநிவாஸ் ஆகியோா் இந்த குழுவின் நிபுணா்களாக உள்ளனா். தொழிலாளா் மற்றும் வேலைவாய்ப்பு மூத்த ஆலோசகா் டி.பி.எஸ்.நேகி இந்த குழுவின் உறுப்பினா் செயலாளராக உள்ளனா்.
👉 2020-21 நிதியாண்டில்  (2020 ஏப்ரல் முதல் 2021 மாா்ச் வரையிலான காலகட்டத்தில் ) இந்திய பொருளதாரம் -7.3 சதவீத சரிவைச் சந்தித்துள்ளது என மத்திய அரசு 31-5-2021 அன்று தெரிவித்துள்ளது.  முந்தைய 2019-20-ஆம் நிதியாண்டில் மொத்த உள்நாட்டு உற்பத்தி வளா்ச்சி விகிதம் 4 சதவீதமாக காணப்பட்டது என என்எஸ்ஓ தெரிவித்துள்ளது.
கூ.தக. : இந்திய பொருளாதாரம் 2020-2021 ஆம் நிதியாண்டின்,  ஜனவரி முதல் மார்ச் வரையிலான கடைசி காலாண்டில் 1.6 சதவீதம் வளர்ச்சி அடைந்துள்ளது என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.

விருதுகள் 

👉 புகையிலை கட்டுப்பாட்டை சிறந்த முறையில் அமல்படுத்தியதற்கான,  உலக சுகாதார அமைப்பின் இயக்குநர் - ஜெனரல் சிறப்பு விருது இந்திய சுகாதார அமைச்சர் (WHO Director-General Special Award) ஹர்ஸ்வர்த்தனுக்கு வழங்கப்பட்டுள்ளது. 

நியமனங்கள்

👉 மத்திய நேரடி வரிகள் வாரியத்தின் ( Central Board of Direct Taxes (CBDT)) இடைக்காலத் தலைவராக ஜகநாத் பித்யாதார் மொஹபத்ரா (Jagannath Bidyadhar Mohapatra (J B Mohapatra))  31-5-2021 அன்று நியமிக்கப்பட்டுள்ளார். 

👉 சர்வதேச போதைப்பொருள் கட்டுப்பாட்டு வாரியத்தின் (International Narcotics Control Board) தலைவராக இந்தியாவைச் சேர்ந்த ஜக்ஜித் பவாடியா (Jagjit Pavadia) நியமிக்கப்பட்டுள்ளார். 

கூ.தக. : 1968  ல் தொடங்கப்பட்ட சர்வதேச போதைப்பொருள் கட்டுப்பாட்டு வாரியத்தின் தலைமையிடம் ஆஸ்திரியா நாட்டின் வியன்னா நகரில் அமைந்துள்ளது. 

👉 இந்திய தொழிற்சாலைகள் கூட்டமைப்பின் (Confederation of Indian Industry (CII)) 2021-2022 ஆம் ஆண்டிற்கான  தலைவராக டாடா ஸ்டீல் நிறுவனத்தின் முதன்மை செயல் அதிகாரி   மற்றும் மேலாண் இயக்குநர்  T.V. நரேந்திரன் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். 

👉 மேற்கு வங்காள தேர்தலில் போட்டியிட்டு தோற்ற  முன்னாள் பத்திரிக்கையாளர் ஸ்வபன்தாஸ் குப்தாவின் ராஜினாமாவால் காலியான இடத்தில் மீதமுள்ள பதவிக் காலத்துக்கு அவரை ஜனாதிபதி மறுநியமனம் செய்துள்ளார்.  ரகுநாத் மொகபத்ராவின் மறைவால் மாநிலங்களவையில் காலியான இடத்தில் மீதமுள்ள காலத்துக்கு வக்கீல் மகேஷ் ஜெத்மலானியை ஜனாதிபதி நியமித்துள்ளார்.
👉  தேசிய மனித உரிமை கமிஷன் புதிய தலைவராக சுப்ரீம் கோர்ட்டு முன்னாள் நீதிபதி அருண் மிஸ்ரா நியமிக்கப்பட்ர். அவர் 2-6-2021 அன்று  பொறுப்பேற்றுக்கொண்டார்.

அறிவியல், தொழில்நுட்பம்

👉 வெள்ளி கிரகத்தை ஆய்வு செய்ய 2 முக்‍கிய திட்டங்களை மேற்கொள்ளவுள்ளதாக   அமெரிக்‍க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசா அறிவித்துள்ளது. நாசாவின் கண்டுபிடிப்பு திட்டத்தின் கீழ் வரும் 2028 முதல் 2030-ம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில், சுமார் 500 மில்லியன் டாலர் (சுமார் ரூ.3,650 கோடி) செலவில் இந்த இரு திட்டங்களையும் மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டுள்ளதாக நாசா ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.  இந்த திட்டங்களுக்கு டாவின்சி, வெரிட்டாஸ் என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் மூலம் வெள்ளி கிரகம் எப்படி தோன்றியது? அங்கு கடல் இருந்ததா?, கிரகத்தின் புவியியல் வரலாறு குறித்தெல்லாம் டாவின்சி திட்டத்தில் ஆய்வு மேற்கொள்ளப்படும் என்று தெரிவிக்‍கப்பட்டுள்ளது. வெள்ளி கிரகத்தின் புவியியல் வளர்ச்சியையும், பூமிக்‍கும் அதற்குமான வேறுபாடுகளையும் வெரிட்டாஸ் திட்டம் ஆராய உள்ளது.

👉 ”ஸ்வஸ்திக்” (SWASTIIK) என்ற பெயரில்   இயற்கை எண்ணைய்களை பயன்படுத்தி தண்ணீரைச் சுத்திகரிக்கும் தொழில்நுட்பத்தை  பூனேவிலுள்ள சி.எஸ்.ஐ.ஆர். - தேசிய வேதியல் ஆய்வகம்  (CSIR-National Chemical Laboratory (CSIR-NCL)) கண்டுபிடித்துள்ளது. 

👉 “ஆசியா பசிபிக் பொதுத்துறை இணைய பாதுகாப்பு நிர்வாக கவுண்சில்” (Asia Pacific Public Sector Cyber Security Executive Council)  என்ற அமைப்பை முதல்முறையாக மைக்ரோசாப்ட் (Microsoft) நிறுவனம் உருவாக்கியுள்ளது. இணைய அச்சுறுத்தல்களை நிவர்த்தி செய்வதற்கும், பங்கேற்கும் நாடுகளிடையே சிறந்த நடைமுறைகளைப் பகிர்ந்து கொள்வதற்கும் வலுவான தகவல் தொடர்பு சேனலை உருவாக்கும் நோக்கத்துடன் இது தொடங்கப்பட்டுள்ளது. இந்த  கவுன்சிலானது, இந்தோனேசியா, கொரியா, புருனே, மலேசியா, சிங்கப்பூர், பிலிப்பைன்ஸ் மற்றும் தாய்லாந்து போன்ற நாடுகளைச் சேர்ந்த கொள்கை வகுப்பாளர்கள் மற்றும் வல்லுநர்களை உறுப்பினர்களாகக்  கொண்டுள்ளது.  
👉 சிவப்பு நட்சத்திர கூட்டங்களில் உள்ள லித்தியம் உற்பத்திக்கு பின்னணியில் உள்ள செயல்முறையை, இந்திய வான் இயற்பியல் மையத்தின் விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். சிவப்பு நட்சத்திரங்களில் லித்தியம் அதிகமாக காணப்படுவது பொதுவானதுதான் என்பதை கண்டுபிடித்து,  நட்சத்திரத்தின் பரிணாமத்தில் லித்தியம்  (lithium) உற்பத்தி அதிகரிக்கும் இடமாக ஹீலியம் ஒளிரும் கட்டத்தை இந்திய விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.
இந்த மாற்றம் ஏற்படும் காலக்கட்டம் 2 மில்லியன் ஆண்டுகளுக்கு நீடிக்கிறது. அப்போது சிவப்பு நட்சத்திரத்தின் மையத்தில் உள்ள ஹீலியம் எரிந்து சிவப்பாக காட்சியளிக்கிறது.
சமீபத்தில் பெங்களூரில் உள்ள இந்திய வான்இயற்பியல் மையத்தின் ( Indian Institute of astrophysics) விஞ்ஞானிகள், சிவப்பு நட்சத்திரங்களில் ஹீலியம் ஒளிரும்  2 மில்லியன் ஆண்டு கால கட்டத்தில், லித்தியம் அளவுக்கு அதிகமாக இருப்பதையும், அதன்பின் அதன் அளவு குறைவதற்கான  ஆதாரங்களையும் கண்டறிந்தனர்.  இவர்களின் ஆய்வுப்படி, நட்சத்திரங்களில் லித்தியம் அதிகரிப்பது, நிலையற்ற நிகழ்வு போல் தோன்றுகிறது.
இந்த ஆராய்ச்சி இந்திய வான் இயற்பியல் மையத்தின் பேராசிரியர்கள் திரு.ரகுபர் சிங் மற்றும் ஈஸ்வர் ரெட்டி ஆகியோர் தலைமையில் நடந்தது.
👉 கூகுள் நிறுவன மென்பொருளான கூகுள் போட்டோஸ் இனி வரம்பற்ற சேமிப்பை வழங்காது என்று அறிவித்துள்ளது.ஜீன் 1-ம் தேதி முதல் வரம்பற்ற சேமிப்புத் திறனுக்கு கட்டுப்பாடுகளை கூகுள் அறிவித்துள்ளது. அதற்கு முன்பு சேமித்து வைத்திருக்கும் புகைப்படங்களுக்கு இந்த கட்டுப்பாடுகளிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. 
கூகுள் டிரைவ் சேமிப்புத் திறனின் அடிப்படையில் மட்டுமே இனி புகைப்படங்கள் சேமிக்கப்படும் என்றும், அதிகமாக நினைவகம் தேவைப்படுவோர் மாதம் 2 டாலர்களை செலுத்தி 100GB நினைவக திறனைப் பெற்றுக்கொள்ளலாம் என்றும் தெரிவித்துள்ளது. அதிகபட்சமாக 10 டாலருக்கு 2TB நினைவகம் வழங்கப்படுகிறது.
மேலும், கூகுள் மின்னஞ்சலிலிருந்து கூகுள் போட்டோஸ்  நினைவகத்திற்கு  புகைப்படங்களை  நேரடியாக சேமித்து வைக்கும் அம்சத்தை கூகுள் நீக்கியுள்ளது. 

முக்கிய தினங்கள்

👉  உலக பால் தினம் (World Milk Day) - ஜீன் 1  |  மையக்கருத்து 2021 -  ஊட்டச்சத்து பற்றிய செய்திகளுடன் பால்வளத் துறையில் நிலைத்தன்மை (sustainability in the dairy sector with messages on nutrition) 

👉 உலக மிதிவண்டி தினம் (World Bicycle Day) -   ஜூன் 3

👉 சர்வதேச பாலியல் தொழிலாளர் தினம் (International Sex Workers Day)  - ஜீன் 2 
👉 உலக பெற்றோர்கள் தினம் (Global Day of Parents) -  ஜீன் 1 
👉  உலக இரத்த புற்றுநோய் தினம்  (World Blood Cancer Day) - மே 28 
👉 இந்தியாவில் காமன்வெல்த் தினம்  (Commonwealth day in India) - மே 24 

புத்தகங்கள்

👉 “Languages of Truth: Essays 2003-2020” என்ற நூலின் ஆசிரியர் - சல்மான் ருஷ்டி 

👉 ’Transformation In Times Of Crisis’ என்ற புத்தகத்தின் ஆசிரியர்கள் நிதின் ராகேஷ் மற்றும் ஜெரி விண்ட் ஆகியோருக்கு 2021 ஆம் ஆண்டிற்கான சிறந்த  சர்வதேச தொழில் புத்தகத்திற்கான விருது (International Business Book of the Year Award 2021 )  அறிவிக்கப்பட்டுள்ளது. 

விளையாட்டுகள்

👉 எவரெஸ்ட் சிகரத்தை  மிக வேகமாக எட்டிய  பெண் என்ற பெருமையை ஹாங்காங்கைச் சேர்ந்த சாங் யின்-ஹங் பெற்றுள்ளார், அவர் 25 மணி 50 நிமிடங்களில் எவரெஸ்ட் சிகர உச்சியை எட்டினார்,  

👉 துபையில் நடைபெற்ற ஆசிய குத்துச்சண்டை போட்டியில்   91 கிலோ பிரிவில் இந்தியாவின் சஞ்சீத் தங்கம் வென்றுள்ளார். 
👉 துபையில் நடைபெற்ற ஆசிய குத்துச்சண்டை போட்டியில் இந்தியாவின் பூஜா ராணி  75 கிலோ பிரிவில் தங்கம் வென்றுள்ளார். 



Announcement !
உரையாடலில் சேர் (1)
1 கருத்து உள்ளது
  1. Unknown
    Unknown
    Profile
    Unknown
    Unknown
    Said: May month daily current affairs podalingala
    May month daily current affairs podalingala
கிளிப்போர்டுக்கு இணைப்பு நகலெடுக்கப்பட்டது!