திருநெல்வேலி மாவட்டத்தில் ரூ.15 கோடியில் நவீன வசதிகளுடன் ''பொருநை'' தொல்லியல் அருங்காட்சியகம் அமைக்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
முக்கிய தகவல்கள் :
- ஆதிச்சநல்லூர் – கொற்கை – சிவகளை ஆகிய பகுதிகள் உள்ளடங்கிய ‘பொருநை ஆற்றங்கரை நாகரிகம்’ 3200 ஆண்டுகள் பழமை வாய்ந்தவை என்பதை அமெரிக்க நாட்டின் Beta Analytical Laboratory ஆய்வு முடிவுகள் உறுதிபடுத்தியுள்ளன.
- கேரள மாநிலம் பட்டணம் ஆந்திரா வேங்கி, ஒடிசாவின் பாலூர், கர்நாடகாவில் தலைக்காடு உள்ளிட்ட வரலாற்று சிறப்புமிக்க பகுதிகளிலும். இந்தோனேஷியா, தாய்லாந்து மலேஷியா, வியட்நாம் நாடுகளில் வரலாற்று சிறப்புமிக்க இடங்களிலும் அனுமதி பெற்று ஆய்வு மேற்கொள்ளப்படும்.
- கீழடியில் சூரியன், நிலவு மற்றும் வடிவியல் குறியீடுகள் கொண்ட முத்திரைகளுடன் கூடிய வெள்ளிக் காசு ஒன்று கண்டெடுக்கப்பட்டது. அதை ஆய்வுசெய்த தலைசிறந்த நாணயவியல் அறிஞரும், கொல்கத்தா பல்கலைக்கழகப் பேராசிரியருமான சுஷ்மிதா பாசு மசும்தார், இந்த வெள்ளிமுத்திரைக் காசு, கி.மு. நான்காம் நூற்றாண்டுக்கு, மவுரிய பேரரசர் அசோகர் காலத்திற்கும் முற்பட்டது என்று கருத்துத் தெரிவித்திருக்கிறார்கள்.
- இரண்டு கரிம மாதிரிகளின் பகுப்பாய்வு முடிவுகளிலும், கீழடி நாகரிகம் கி.மு. ஆறாம் நூற்றாண்டைச் சார்ந்தது எனத் தெரியவந்துள்ளது.
- முந்தைய அகழாய்வுகளில் கிடைக்கப்பெற்ற கரிமப் பகுப்பாய்வுகளின் காலக் கணக்கீட்டு முடிவுகளின்படி, கி.மு. எட்டாம் நூற்றாண்டிற்கு முன்பாகவே, கொற்கை ஒரு துறைமுகமாகச் செயல்பட்டு வந்தது என்பது ஏற்கனவே உறுதி செய்யப்பட்டுள்ளது.
- தற்போது கொற்கையில் நடைபெற்று வரும் அகழாய்வில் கருப்பு வண்ணப்பூச்சு பெற்ற கங்கைச் சமவெளியைச் சார்ந்த பானை ஓடுகள் கிடைத்துள்ளன. இவற்றை கவனமாக ஆய்வுசெய்த இந்தியத் தொல்லியல் துறையின் முன்னாள் தலைமை இயக்குனர் ராகேஷ் திவாரி மற்றும் பனாரஸ் இந்து பல்கலைக்கழகப் பேராசிரியர் ரவீந்திரநாத் சிங் ஆகியோர் கொற்கை துறைமுகமானது கி.மு. ஆறாம் நூற்றாண்டுக்கு முன்னரே வெளிநாடுகளுடனும், இந்தியாவின் பல்வேறு பகுதிகளுடனும் வணிகத் தொடர்பு கொண்டிருந்தது என்பதை உறுதிப்படுத்தியிருக்கிறார்கள்.
- தமிழ்நாடு தொல்லியல் துறையால் தற்போது மேற்கொள்ளப்பட்டு வரும் அகழாய்வின்போது ஆதிச்சநல்லூருக்கு அருகே, சிவகளை பறம்புப் பகுதியில் வெளிப்பட்ட முதுமக்கள் தாழி ஒன்றில் கண்டெடுக்கப்பட்ட நெல்மணிகள் அமெரிக்க நாட்டின் மயாமி நகரத்தில் அமைந்திருக்கும் உலகப்புகழ் பெற்ற பீட்டா ஆய்வு மைய பரிசோதனைக்காக அனுப்பப்பட்டன. அதன் ஆய்வு முடிவுகள் சமீபத்தில் கிடைத்துள்ளன. ஆய்வு செய்ததில், முதுமக்கள் தாழியில் கண்டெடுக்கப்பட்ட நெல்மணிகளின் காலம் கி.மு. 1155 எனக் கண்டறியப்பட்டுள்ளது.
- எனவே, ‘தண்பொருநை’ என்று அழைக்கப்பட்ட தாமிரபரணி ஆற்றங்கரை நாகரிகம் 3200 ஆண்டுகளுக்கு முற்பட்டது என்பதை அறிவியல் ஆய்வுகளின் அடிப்படையில் உறுதிசெய்ய முடிகிறது.
- பண்டைய தமிழர்களின் செழுமையான பண்பாடு, கடல்வழி வணிகம், நீர் மேலாண்மை, இரும்பு உருக்குதல், அரிய மணிகள் தயாரித்தல், முத்துக் குளித்தல் போன்ற தொழில்நுட்பங்களை உலகம் அறிந்துகொள்ளத் தேவையான சான்றுகளைச் சேகரிக்கும் வகையில், இந்தியாவில் வேறெந்த மாநிலத்தை விடவும் அதிக அளவு நிதியாக 5 கோடி ரூபாய் நடப்பு நிதியாண்டில் அகழ்வாராய்ச்சிப் பணிக்காகவும், ஆழ்கடல் அகழாய்வுக்காகவும் இந்த நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்டுள்ளது.
- தமிழ்ப் பண்பாட்டின் வேர்களைத் தேடி, இந்தியத் துணைக்கண்டமெங்கும்; அதேபோல் கடல்கடந்து பயணம் செய்து தமிழர்கள் வெற்றித்தடம் பதித்த வெளிநாடுகளிலும்; தமிழ்நாடு தொல்லியல் துறை உரிய அனுமதிகள் பெற்று இனி ஆய்வுப் பணிகளை மேற்கொள்ளும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் அறிவித்துள்ளார். முதற்கட்டமாக, சங்ககாலத் துறைமுகமான முசிறியில் (தற்போது பட்டணம் என்ற பெயரில் கேரள மாநிலத்தில் அமைந்துள்ளது) சேரநாட்டின் தொன்மையினையும், பண்பாட்டினையும் அறிந்துகொள்ளும் வகையில், கேரள மாநிலத் தொல்லியல் வல்லுநர்களுடன் இணைந்து அங்கு ஆய்வுப் பணி மேற்கொள்ளப்படும். அதேபோல், ஆந்திர மாநிலத்திலுள்ள வேங்கி, கர்நாடக மாநிலத்தின் தலைக்காடு மற்றும் ஒடிசா மாநிலத்திலுள்ள பாலூர் ஆகிய வரலாற்றுச் சிறப்புடைய இடங்களில் ஆய்வுகள் மேற்கொள்ள உரிய முயற்சிகள் மேற்கொள்ளப்படும்.
அயல்நாடுகளில் தொல்லியல் ஆய்வுகள்
- ரோமப் பேரரசின் ஒருபகுதியாக விளங்கிய எகிப்து நாட்டிலுள்ள குசிர்-அல்-காதிம் மற்றும் பெர்னிகா, ஓமான் நாட்டின் கோர் ரோரி ஆகிய இடங்களில் பழந்தமிழகத்தோடு இருந்த வணிகத் தொடர்பை உறுதிசெய்யும் வகையில், தமிழி எழுத்து பொறிக்கப்பட்ட பானை ஓடுகள் கிடைத்துள்ளன. அந்தப் பகுதிகளில், அந்தந்த நாட்டின் தொல்லியல் வல்லுனர்களோடு இணைந்து ஆய்வுகள் மேற்கொள்ளப்படும்.
- மாமன்னர் ராஜந்திர சோழன் வெற்றித் தடம் பதித்த தென்கிழக்காசிய நாடுகளான இந்தோனேசியா, தாய்லாந்து, மலேசியா, வியட்நாம் ஆகிய நாடுகளில் அமைந்துள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க இடங்களில் அந்தந்த நாட்டுத் தொல்லியல் வல்லுனர்கள் துணையோடு, உரிய அனுமதி பெற்று ஆய்வுகள் மேற்கொள்ளப்படும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
Respected visitors , this is your area. Ask your queries, post your suggestions. If you know correct answers for other friend's questions, kindly reply them. Motivate One another . Your comments will be posted soon with a small moderation.
Note:Please avoid sharing phone numbers, email Ids and posting abusive comments against the government and recruitment agencies.