தமிழ்நாடு தொல்லியல் துறையால் மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகள் மற்றும் அறிவியல்வழி ஆய்வுகளில் கிடைத்த முடிவுகள் தொடர்பாக தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள், தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் விதி 110-ன்கீழ் 9.5.2022 அன்று அளித்த அறிக்கை வருமாறு.
v பூம்புகார், கொற்கை, அழகன்குளம் உள்ளிட்ட சங்ககாலத்
துறைமுக நகரங்களில் மேற்கொள்ளப்பட்ட அகழாய்வுகளில் கிடைத்த ரோமானிய நாணயங்கள்,
மெருகூட்டப்பட்ட மட்பாண்டங்கள், அரேபியத்
தீபகற்பத்தைச் சார்ந்த அயலகப் பொருட்களை முன்னிறுத்தி, இந்தத்
துறைமுகங்கள் வழியே சங்க காலத் தமிழர்கள் கடல்வழி வணிகத்தில் சிறந்து விளங்கினர்
என்பதைச் சான்றுகளின் அடிப்படையில் நம்மால் நிறுவ முடிந்தது.
v அதேபோல், அங்கே கிடைத்த அரியவகை சூதுபவள மணிகள், ஒளிர்மிகு
நீலமணிகள் கொண்டு கங்கைச் சமவெளி மற்றும் வடமேற்கு இந்தியப் பகுதிகளுடன் தமிழர்கள்
உள்நாட்டு வணிகம் மேற்கொண்டிருந்தது உறுதி செய்யப்பட்டது. கீழடி அகழாய்வில்
வெளிப்பட்ட கட்டுமானங்கள், தொல்பொருட்களின் செய்நேர்த்தி,
தொழில்நுட்பத் திறன், பொறியியல்
நுணுக்கம் ஆகியவற்றை ஆராய்ந்து பார்த்ததில் சங்ககாலத் தமிழகத்தில் நன்கு
முதிர்ச்சியடைந்த நகரப் பண்பாடு செழித்து வளர்ந்திருந்தது என்பதை உலகுக்கு நம்மால்
அறிவிக்க முடிந்தது.
v அதுமட்டுமல்ல; கீழடி, கொடுமணல் மற்றும் பொருந்தல் போன்ற
இடங்களில் மேற்கொள்ளப்பட்ட அகழாய்வுகள் மூலம் தமிழி எழுத்துக்களின் காலம் கி.மு.
ஆறாம் நூற்றாண்டு என்று அறிவியல் அடிப்படையில் உறுதிசெய்யப்பட்டது. மேலும், 2600
ஆண்டுகளுக்கு முன்னரே, தமிழ்க் குடிமக்கள் பரவலான
எழுத்தறிவு பெற்ற சமூகமாக விளங்கினர் என்ற உண்மையை அறிவுலகம் ஏற்றுக் கொண்டது
நமக்கெல்லாம் பெருமையளிக்கக்கூடிய செய்தியாகும்.
v அதைத்
தொடர்ந்து, 2021 ஆம் ஆண்டு சிவகளை பகுதியில் அகழாய்வு செய்தபோது கிடைத்த நெல்மணிகளை
பகுப்பாய்வு செய்து, பொருநை ஆற்றங்கரை நாகரிகம், 3200 ஆண்டுகளுக்கு முற்பட்டது என்று அறிவிக்கப்பட்டது.
v கீழடிக்கு
அருகே அகரம் அகழாய்வுத் தளத்தில் சேகரிக்கப்பட்ட மண்மாதிரிகளை மகரந்தம் மற்றும்
பைட்டோலித் முறையில் பகுப்பாய்வு செய்ததில், அங்கே
நெற்பயிர்கள் பயிரிடப்பட்டிருப்பதற்கான சான்றுகள் கிடைத்துள்ளன.
v சிவகளை
வாழ்விடப் பகுதியில் சேகரிக்கப்பட்ட மண் மாதிரிகளை ஆய்வு செய்ததில், அங்கே நீர் செல்லும் செங்கல் வடிகாலில் நன்னீர் சென்றுள்ளதாகவும்,
தேக்கிவைக்கப்பட்ட நீர்நிலையிலிருந்து இந்நீர் கொண்டு
வரப்பட்டதாகவும் ஆய்வில் தெரிய வருகிறது.
v கடந்த
2021 ஆம் ஆண்டு, தமிழ்நாடு தொல்லியல் துறையால் கிருஷ்ணகிரி
மாவட்டத்தில் மயிலாடும்பாறை என்ற இடத்தில் ஈமச்சின்னங்கள் மற்றும் வாழ்விடப்
பகுதியில் அகழாய்வுகள் மேற்கொள்ளப்பட்டன.
பாறை ஓவியங்கள், புதிய கற்காலக் கருவிகள் என
அரியவகை தொல்லியல் அடையாளங்களைக் கொண்ட மயிலாடும்பாறையின் வாழ்விடப் பகுதியில் 104 செ.மீ. மற்றும் 130 செ.மீ. ஆழத்தில்
சேகரிக்கப்பட்ட இரண்டு கரிம மாதிரிகள், அமெரிக்காவிலுள்ள
ப்ளோரிடா மாநிலத்தின் பீட்டா பகுப்பாய்வுக் கூடத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டன.
அந்தப் பகுப்பாய்வின் AMS (Accelerator Mass Spectrometry) காலக் கணக்கீடு முடிவுகள் தற்போது பெறப்பட்டுள்ளன. அவற்றின் சராசரி மைய அளவீட்டுக் காலம் முறையே
கி.மு. 1615 மற்றும் கி.மு. 2172
என்று காலக் கணக்கீடு செய்யப்பட்டுள்ளன.
இதன்மூலம், தமிழ்நாட்டில் இரும்பின் பயன்பாடு 4200 ஆண்டுகளுக்கு முன்னரே நிலவி வந்தது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. மனித இனம் இரும்பின் பயனை உணரத் தொடங்கிய
பின்புதான், அடர்ந்த வனங்களை அழித்து வேளாண்மை செய்திடும்
போக்கு உருவாகியுள்ளது. அந்தவகையில்,
தமிழ்நாட்டில் வேளாண்மைச் சமூகம் தொடங்கிய காலம் குறித்தான
கேள்விகளுக்கு ஒரு தெளிவான விடை இன்று கிடைத்திருக்கிறது.
v மேலும், இந்தியாவில் இரும்புக்காலப் பண்பாடு நிலவிய கங்கைச் சமவெளி, கர்நாடகம் உள்ளிட்ட 28 இடங்களில் இதுவரை AMS
(Accelerator Mass Spectrometry) காலக் கணக்கீடுகள்
செய்யப்பட்டுள்ளன. அவற்றில் தற்போது கிடைத்துள்ள மயிலாடும்பாறை ஆய்வு முடிவுகளான,
4200 ஆண்டுகளுக்கு என்பதே, காலத்தால்
முந்தியது என்பது குறிப்பிடத்தக்கது.
v அதேபோன்று, கருப்பு-சிவப்பு பானை வகைகள் 4200 ஆண்டுகளுக்கு முன்னரே அதுவும் புதிய கற்காலத்தின் பிற்பகுதியில்
அறிமுகப்படுத்தப்பட்டது என்பதையும் அறியமுடிகிறது. இந்த இரும்புக்காலம் குறித்த முக்கியமான கண்டுபிடிப்பை கேம்பிரிட்ஜ்
பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் பத்மஸ்ரீ திலீப் சக்ரபர்த்தி, புனே டெக்கான் கல்லூரியின் முன்னாள் இயக்குநர் பத்மஸ்ரீ பேராசிரியர்
பத்தையா, ஒன்றிய அரசின் தொல்லியல் துறையின் முன்னாள்
இயக்குநர் பேராசிரியர் ராகேஷ் திவாரி, பனாரஸ் இந்து
பல்கலைக்கழகத்தின் முன்னாள் பேராசிரியர் விபா திரிபாதி, கர்நாடக
பல்கலைக்கழகப் பேராசிரியர் ரவி செட்டார் ஆகிய தலைசிறந்த வல்லுநர்கள்
பாராட்டியுள்ளார்கள்.
v 2022
ஆம் ஆண்டு, கேரளாவின் பட்டணம், கர்நாடக மாநிலத்திலுள்ள தலைக்காடு, ஆந்திர
மாநிலத்தின் வேங்கி, ஒடிசாவிலுள்ள பாலூர் பகுதிகளில்
அகழாய்வு மேற்கொள்ளப்படும். அதேபோன்று, சங்ககாலத் துறைமுகமான கொற்கையில் ஆழ்கடலாய்வின் முதற்கட்டமாக முன்கள
ஆய்வு தொடங்கப்பட உள்ளது. மேலும், தமிழ்நாட்டில்
மேற்கொள்ளப்பட்ட அகழாய்வுகளின்போது கண்டெடுக்கப்பட்ட ஏராளமான பானை ஓடுகளில்
காணப்படும் குறியீடுகளுக்கும், சிந்துவெளி நாகரிக
முத்திரை எழுத்துகளுக்குமான உறவை ஒப்பீடு செய்து, ஆய்வு
செய்திடும் திட்டத்தை தமிழ்நாடு தொல்லியல் துறை இந்தாண்டு முதல் மேற்கொள்ளும்
. இந்தியத் துணைக்கண்டத்தின் வரலாறு,
இனி தமிழ் நிலப்பரப்பில் இருந்துதான் தொடங்கி எழுதப்பட
வேண்டும் எனவும், இதற்கு முத்தாய்ப்பாக தமிழகத்தில் இரும்பின் பயன்பாடு 4200 ஆண்டுகளுக்கு முற்பட்டது என்பதை மயிலாடும்பாறை ஆய்வு முடிவுகள் இன்று நிலை
நிறுத்தியுள்ளது எனவும் முதலமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
நன்றி : செய்தி மக்கள் தொடர்புத்துறை
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
Respected visitors , this is your area. Ask your queries, post your suggestions. If you know correct answers for other friend's questions, kindly reply them. Motivate One another . Your comments will be posted soon with a small moderation.
Note:Please avoid sharing phone numbers, email Ids and posting abusive comments against the government and recruitment agencies.