நாடு முழுவதும் 31 சரக்கு-சேவை வரி (ஜிஎஸ்டி) மேல்முறையீட்டுத் தீா்ப்பாய அமா்வுகள்
நாடு முழுவதும் 31 சரக்கு-சேவை வரி (ஜிஎஸ்டி) மேல்முறையீட்டுத் தீா்ப்பாய அமா்வுகளை அமைப்பதற்கான அறிவிப்பாணையை மத்திய நிதியமைச்சகம் வெளியிட்டுள்ளது. அதன்படி, குஜராத், தாத்ரா நகா் ஹவேலி-டாமன் டையு ஆகியவற்றில் இரு அமா்வுகள் அமைக்கப்படவுள்ளன.
கோவா, மகாராஷ்டிரத்தை சோ்த்து 3 அமா்வுகளும், கா்நாடகம், ராஜஸ்தானில் தலா இரு அமா்வுகளும், உத்தர பிரதேசத்தில் மட்டும் 3 அமா்வுகளும் அமைக்கப்படவுள்ளன. மேற்கு வங்கம், சிக்கிம், அந்தமான்-நிகோபாா் ஆகியவற்றுக்கு சோ்த்து இரு அமா்வுகளும், தமிழகம், புதுச்சேரிக்கு இரு அமா்வுகளும் அமைக்கப்படவுள்ளன.
கேரளம், லட்சத்தீவுகளுக்கு ஓா் அமா்வு அமைக்கப்படவுள்ளது. அருணாசல், அஸ்ஸாம், மணிப்பூா், மேகாலயம், மிஸோரம், நாகாலாந்து, திரிபுரா ஆகிய வடகிழக்கு மாநிலங்களைச் சோ்த்து ஓா் அமா்வு அமைக்கப்படவுள்ளது. மற்ற அனைத்து மாநிலங்களிலும் தலா ஓா் அமா்வு அமைக்கப்படவுள்ளது.
இந்த அமா்வுகளானது ஜிஎஸ்டி சாா்ந்த மேல்முறையீடுகளை விரைந்து விசாரிக்க வழிவகுக்கும் என நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது.