தமிழ்ப் பரப்புரைக் கழகத் திட்டத்தின் கீழ், தமிழ் கற்பிக்கும் தன்னார்வலர்களுக்கான ஆசிரியர் பட்டயப் பயிற்சி பதிவு செய்வதற்கான http://tva.reg.payil.app என்ற இணையதளத்தை முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள் 26.09.2023 அன்று தொடங்கி வைத்தார்.
தமிழ்ப் பரப்புரைக் கழகம் பற்றி …
அயலக மாணவர்களின் தமிழ்க்கற்றல் கற்பித்தலுக்காக தமிழ்ப் பரப்புரைக் கழகத்தை செப்டம்பர் 2022-இல் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தொடங்கி வைத்தார்.
இத்திட்டத்தின் பணிகளைத் தமிழ் இணையக் கல்விக்கழகம் செயல்படுத்தி வருகிறது. இதில் திறன்கள் அடிப்படையிலான பாடப்புத்தகங்கள், கற்றல் துணைக்கருவிகள், கட்டணமில்லா இணையவழி வகுப்புகள் முதலான பல வசதிகள் 34 நாடுகளிலும் 16 இந்திய மாநிலங்களிலும் தமிழ் இணையக் கல்விக் கழகத்தின் 160 தொடர்பு மையங்கள் வாயிலாக வழங்கப்பட்டு வருகின்றன.
இந்தத் தொடர்பு மையங்களில், மாணவர்களுக்குத் தன்னார்வலர்கள் தமிழ் பயிற்றுவித்து வருகின்றனர்.
இணையவழி ஆசிரியர் பட்டயப் பயிற்சி பற்றி…
தமிழ் மொழியின் அடிப்படைகளையும் முறையான கற்பித்தல் பயிற்சியையும் இவர்களுக்கு வழங்கினால் தமிழ் மொழிக் கற்பித்தலை இன்னும் மேம்படுத்த முடியும் எனப் பல அயலகத் தமிழ்ச்சங்கங்களும் பள்ளிகளும் விடுத்த கோரிக்கையின் அடிப்படையில், தமிழ் பரப்புரைக்கழகத்தின் மற்றொரு முக்கியமான முன்னெடுப்பாகத் தமிழ் கற்பிக்கும் தன்னார்வலர்களுக்கான இணையவழி ஓராண்டு ஆசிரியர் பட்டயப்பயிற்சி வழங்கத் திட்டமிடப்பட்டது.
இந்தப் பட்டயப்பயிற்சியைத் தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகத்துடன் இணைந்து வழங்க 12.01.2023 அன்று நடைபெற்ற அயலகத் தமிழர் தினவிழாவில் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.
தற்போது இந்தப் பட்டயப்பயிற்சியைத் தொடங்குவதற்கான பணிகள் முடிவடைந்து, இந்தக் கல்வித்திட்டத்தில் பதிவு செய்வதற்கான இணைய இணைப்பை (http://tva.reg.payil.app/) தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் தொடங்கி வைத்துள்ளார்.
கருத்துரையிடுக
Note:Please avoid sharing phone numbers, email Ids and posting abusive comments against the government and recruitment agencies.