Current Affairs, Latest News Updates, Online Tests for TNPSC Exams

TNPSC நடப்பு நிகழ்வுகள் 13-14 மே 2025

 Tamil Nadu (Unit V)  

'நமக்கு நாமே' திட்டத்தை 2025-26ஆம் ஆண்டில் செயல்படுத்துவதற்காக  தமிழ்நாடு அரசு  ரூ.150 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது. 

  • 1997-98 ஆண்டு நிதிநிலை அறிக்கையில் அப்போதைய முதலமைச்சர் கலைஞர். மு.கருணாநிதி அவர்களால் மக்கள் பங்களிப்புடன் செயல்படுத்தக்கூடிய ”நமக்கு நாமே திட்டம்” அறிமுகப்படுத்தப்பட்டது. 

  • இத்திட்டம் 2000-2001ம் ஆண்டுவரை செயல்படுத்தப்பட்டது. இத்திட்டத்தின் அடிப்படை கோட்பாடுகளில் மாற்றம் ஏதும் இல்லை எனினும் 2001-02ஆம் ஆண்டிலிருந்து இத்திட்டத்தின் பெயர் 'கிராம தன்னிறைவுத் திட்டம்' என்று மாற்றப்பட்டு செயல்படுத்தப்பட்டது. பின்னர் 17.7.02ல் மீண்டும் இத்திட்டத்தின் பெயர் “தன்னிறைவுத் திட்டம்” என்று மாற்றப்பட்டு 2005-06 ஆம் ஆண்டுவரை செயல்படுத்தப்பட்டது. 

  • 30.7.07 மற்றும் 31.7.07 அன்று நடைபெற்ற மாவட்ட ஆட்சித் தலைவர்கள் மாநாட்டில் 'நமக்கு நாமே திட்டம்' மீண்டும் செயல்படுத்தப்படும் என்று தமிழ்நாடு அரசு அறிவித்தது.  

  • மக்களின் சுய உதவி மற்றும் சுய சார்பு தன்மையை ஊக்குவிக்கவும், பலப்படுத்தவும் மக்களுக்கு தேவையான திட்டங்களை அவர்களது பங்களிப்புடன் செயல்படுத்தி பொதுச் சொத்துக்கள் உருவாக்கி பராமரித்து வருவதே நமக்கு நாமே திட்டத்தின் நோக்கமாகும். 

  • அரசு, திட்டங்களை தீட்டி அதில் மக்கள் பங்கு கொள்வதற்கு பதிலாக, மக்கள் தாமே கண்டறிந்து, செயல்படுத்தும் திட்டங்களில் அரசு பங்கு கொள்வது நமக்கு நாமே திட்டத்தின் சிறப்பு அம்சம் ஆகும். இந்த வகையில் நமக்கு நாமே திட்டம், நகரம் மற்றும் கிராமம் ஆகிய அனைத்து பகுதியிலும் செயல்படுத்தப்படும்.   


நீலகிரி மாவட்டம், தெப்பக்காடு யானைகள்  முகாமில் ரூ.5.06 கோடி செலவில் யானை பாகன்களுக்காக அரசு குடியிருப்புகளுடன் கட்டப்பட்ட 44 வீடுகள் அடங்கிய மாவூத் கிராமத்தை முதல்வர் 13.5.2025 அன்று திறந்து வைத்தார்.



தமிழ்நாடு அரசின் மகளிர் நலத் திட்டங்கள் ( 2021 முதல்) : 

1.  விடியல் பயணத்திட்டம்  

  • தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் முதலமைச்சராகப் பொறுப்பேற்றவுடன் முதன் முதல் ஆணை பிறப்பித்த 5 திட்டங்களில் ஒன்று விடியல் பயணத்திட்டம். 

  • பெண்கள், மாற்றுத் திறனாளிகள், திருநங்கையர்கள் ஆகியோர்க்கான கட்டணமில்லா விடியல் பயணம் திட்டத்தில் இது வரையில் 682.02கோடி முறை பயணம் செய்துள்ளனர். திருநங்கைகள் 36.89 இலட்சம் முறையும், மாற்றுத்திறனாளிகள் 3.78 கோடி முறையும் பயணம் செய்து பயனடைந்துள்ளனர்.  

  • இத்திட்டத்தின் பயனாக மகளிர் மாதம் ஒன்றுக்கு 888 ரூபாய் வரை சேமிக்கும் வாய்ப்பைப் மகிழ்கின்றனர். 

2.  கலைஞர் மகளிர் உரிமைத் தொகை 

  பெண்களின் உழைப்பை முறையாக அங்கீகரிக்கும் நோக்கில் கலைஞர் மகளிர் உரிமைத் தொகைத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.  

இத்திட்டத்தில் இதுவரை 1 கோடியே 15 இலட்சம் மகளிர் மாதந்தோறும் ரூ1,000/- தொகையாக அவரவர் வங்கிக் கணக்குகளில் பெற்று வருகிறார்கள். 

3. புதுமைப் பெண் திட்டம்  

6– ஆம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்புவரை அரசுப் பள்ளிகளிலும், அரசு உதவிபெறும் பள்ளிகளிலும் பயின்ற மாணவியர், தடையின்றி உயர் கல்வி பயில வேண்டும் என்ற நோக்கத்தோடு, தமிழ்நாட்டில் உள்ள மாநில அரசு / ஒன்றிய அரசு சார்ந்த, மருத்துவக் கல்லூரி உட்பட உயர் கல்வி நிறுவனங்களில், இளநிலைப் பட்டப் படிப்பில் சேரும் மாணவியருக்கு மாதந்தோறும் ரூ.1,000/- வழங்கப்பட்டு வருகின்றது. நேரடிப் பணப் பரிமாற்ற முறைப்படி, இந்த உதவித்தொகையை இதுவரை 4.95,000, மாணவியர் நேரடியாகத் தம் வங்கிக் கணக்குகளில் பெற்று  வருகின்றனர். 

பள்ளிப்படிப்பை முடித்துக் இத்திட்டத்தின் காரணமாகப் கல்லூரிகளில் சேரும் மாணவியர் எண்ணிக்கை 34 சதவீதம் அதிகரித்துள்ளது என மாநில திட்டக் குழுவின் ஆய்வறிக்கை தெரிவித்துள்ளது. 

4. பணிபுரியும் மகளிருக்கு "தோழி விடுதிகள்" 

மகளிர் படித்து முடித்துச் சொந்த ஊரை விட்டுவந்து வெளியூரில் தங்கிப் பணிபுரிவதில் பல இடர்ப்பாடுகள் ஏற்படுகின்றன. இதைக் களையும் நோக்கில்  தமிழ்நாடு அரசு  பணிபுரியும் மகளிர்க்காக தோழி விடுதிகள் எனும் திட்டத்தை அறிமுகப்படுத்தி ஆங்காங்கே தோழி விடுதிகளை ஏற்படுத்தி வருகிறது. 13 தோழி விடுதிகள் 1303 படுக்கை வசதிகளுடன் செயல்பட்டு வருகின்றன. மேலும் 14 இடங்களில் தோழி விடுதிகள் அமைக்கப்பட்டு வருகின்றன.  

5. மகளிர் சுய உதவிக்குழு கடன்கள் ரத்து 

கூட்டுறவு நிறுவனங்கள் மூலம் வழங்கப்பட்ட மகளிர் சுயஉதவிக் குழுக் கடன்களில் 31.3.2021 அன்றைய தேதியில் நிலுவையில் இருந்த கடன் தொகை ரூ.2,755.99 கோடி தள்ளுபடி செய்யப்பட்டது. 1,17,617 மகளிர் சுய உதவிக் குழுக்களைச் சார்ந்த 15,88,309 மகளிர் பயன்பெற்றுள்ளனர்.

6. மகளிர் இடஒதுக்கீடு 40 சதவீதம் 

அரசுப் பணிகளில் மகளிர்க்கான இடஒதுக்கீடு 30 சதவீதம் என முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் 1989ஆம் ஆண்டில் சட்டமியற்றி நடைமுறைப் படுத்தினார்கள். மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திராவிட நாயகர் அவர்கள் இந்த இடஒதுக்கீடு 30 சதவீதம் என்பதை 40 சதவீதமாக உயர்த்தி மகளிர் அதிக அளவில் வேலைவாய்ப்புகளைப் பெற வழிவகுத்துள்ளார்கள். 

7. மகப்பேறு விடுப்பு உயர்வு

மகப்பேறு அரசுப் அலுவகங்களில் பணி புரியும் மகளிர் ஆசிரியைகளின் விடுப்பு 9 மாதம் என்பது 12 மாதங்களாக 2021ஆம் ஆண்டு முதல் உயர்த்தி வழங்கப்படுகிறது. 

8. மகளிர் சுய உதவிக்குழு கடன் உச்சவரம்பு அதிகரிப்பு

  மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு வழங்கிடும் கடன் உச்ச வரம்பை ரூ.12 இலட்சம் என்பதில் இருந்து ரூ.20 இலட்சமாக உயர்த்தி வழங்கப்படுகிறது. 

2016 முதல் 2020 வரை நான்கு ஆண்டுகளில் சுய உதவிக் குழுக்களுக்கு வழங்கப்பட்ட கடன் ரூ.39,468.88 கோடி. ஆனால் 2021 -முதல் 2025 வரை வழங்கப்பட்டுள்ள கடன் ரூ. 1,12,299 கோடி 

9.  சத்துணவு மையங்களில் பணிபுரியும் சமையலர் மற்றும் சமையல் உதவியாளர்க்கான ஓய்வு வயதினை 58லிருந்து 60 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. 

10. பெண் தொழில் முனைவோர் ஊக்குவிப்பு : 

தொழில் முனைவோராக மகளிர் பெண்கள் கல்வியோடு நின்றிடாமல் அவர்களுக்குத் தாமே சுயமாகத் தொழில் தொடங்கும்  Start Up எனப்படும் புத்தொழிலை ஊக்குவிப்பதற்காக தமிழ்நாடு அரசாங்கம் மானிய நிதி அளிக்கும் TANSEED (Tamil Nadu Startup Seed Grand Fund) என்கிற திட்டத்தைச் செயல்படுத்தி வருகிறது. இத்திட்டத்தின் வாயிலாக, பெண் தொழில் முனைவோரை ஊக்குவிக்கும் வகையில் சிறப்புத் தொகுப்புகளும் அளிக்கப் படுகின்றன. பெண் தொழில் முனைவோரின் புத்தொழில்களுக்கு 15 இலட்சம் ரூபாய் வரை மானிய நிதி வழங்கி ஊக்கமளிக்க படுகிறது. இந்திய அளவில் பணிபுரியும் மகளிரில் 41% மகளிர் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. 

11. காவல்துறையில் பெண்கள்

தமிழ்நாடு நிறைவு பெண்களுக்கு எதிரான குற்றங்களைத் தடுக்க 39 புதிய மகளிர் காவல் நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், பெண் காவலர்கள், முக்கியப் பிரமுகர்களின் வருகையின்போது வீதிகளில் நீண்ட நேரம் நிற்கவைப்பதைத் தடுத்து, அவர்களுக்கு இலகுவான பணிகள் வழங்க ஆணையிடப்பட்டுள்ளது. 

தமிழ்நாடு  மகளிர் காவலர்கள் இணைந்து 50 ஆண்டுகள் பெற்றதையடுத்து, நடைபெற்ற பொன்விழா நிகழ்ச்சியில் சிறப்புத் தபால் உறை வெளியிடப்பட்டு, பெண்கள் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் அவள் (AVAL Avoid Violence Through Awareness and Learning) திட்டம் அறிமும் செய்யப்பட்டுள்ளது.

12. கலைத்துறை, பத்திரிகை துறைகளில் சிறந்த மகளிர்க்கு கலைத்துறை வித்தகர் விருதுகள்

 மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டினை முன்னிட்டு 2024 ஆம் ஆண்டில் மட்டும் மகளிர்க்கான கலைத்துறை வித்தகர் சிறப்பு விருது வழங்கப்படும் என அறிவித்தார்கள், அதன்படி இந்த விருது பழம்பெரும் திரையுலகப் பின்னணிப் பாடகி திருமதி.பி.சுசீலா அவர்களுக்கு வழங்கப்பட்டது. அதேபோல சிறந்த மகளிர் பத்திரிகையாளர்க்கு கலைஞர் நூற்றாண்டு சிறப்பு விருதாக கலைஞர் எழுதுகோல் விருது அறிவிக்கப்பட்டு திருமதி. சுகிர்தா சாரங்கராஜ் அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.

13. அறநிலையத் துறையில் பெண் ஓதுவார்கள்

 அறநிலையத் துறையில் பெண் ஓதுவார்கள் திருக்கோவில்களில் அனைத்துச் சாதியாரும் அர்ச்சகர் திட்டத்தின்கீழ் ஓதுவார் பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன. ஓதுவார் பயிற்சி பெற்றவர்களில் 42 பேர் ஓதுவார்களாக நியமிக்கப்பட்டனர். அவர்களில் 11 பேர் பெண் ஓதுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. 

14. உள்ளாட்சி அமைப்புகளில் மகளிர்க்கு இடஒதுக்கீடு

உள்ளாட்சி அமைப்புகளில் பெண்களுக்கு 33 சதவீத இட ஒதுக்கீடு 1996இல் வழங்கப்பட்டது . பின்னர் 50 சதவீதமாக உயர்த்தப்பட்டு, இலட்சக் கணக்கான மகளிர் உள்ளாட்சி நிறுவனங்களில் பதவிப் பொறுப்புகள் பெற்றுத் தமிழ்நாட்டு முன்னேற்றத்திற்குப் பாடுபடுகின்றனர். இன்று 21 மாநகராட்சிகளின் மேயர்களில் 11 மகளிர் பெண் மேயர்களாக விளங்குவது தமிழ்நாட்டிற்குரிய தனிச் சிறப்பாகும்.

15. சிப்காட் தொழில் வளாகங்களில் குழந்தைகள் காப்பகங்கள்

 தொழிற்சாலைகளில் வேலைக்குச் செல்லும் பெண்கள் முன்னேற்றத்திற்காக, தமிழ்நாட்டில் பல்வேறு பகுதிகளிலும் உள்ள 17 சிப்காட் தொழில் பூங்காக்களில் குழந்தைகள் காப்பகங்களை தொடங்கப்பட்டுள்ளன.  . இந்தக் குழந்தைகள் காப்பகங்கள், பணிபுரியும் பெற்றோரின், குறிப்பாகப் பெண்களின் மன அழுத்தத்தைக் குறைக்கவும், பெண் தொழிலாளர்கள் அதிகளவில் பணியாற்றக்கூடிய சூழலை உருவாக்கவும் உதவுகின்றன. 


பொள்ளாச்சி பாலியல் வழக்கில் 9 பேருக்கும் சாகும் வரை ஆயுள் தண்டனை விதித்து கோவை கூடுதல் மகளிர் நீதிமன்ற நீதிபதி நந்தினி தேவி தீர்ப்பளித்துள்ளார். இழப்பீடு தொகையாக ரூ.85 லட்சம் பாதிக்கப்பட்ட 8 பெண்களில் சாட்சி சொல்ல வராத ஒரு பெண்ணைத் தவிர்த்து மற்ற 7 பெண்களுக்கு பிரித்து அறிவிக்கப்பட்டுள்ளது.  கடந்த 2019ம் ஆண்டு நடைபெற்ற பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை சம்பவம் தமிழ்நாட்டையே உலுக்கிய நிகழ்வாகும். 

 

டாக்டர் அகர்வால்ஸ் கண் மருத்துவமனையின் தலைவர் அமர் அகர்வாலுக்கு அமெரிக்காவின் கண்புரை மற்றும் ஒளிவிலகல் அறுவை சிகிச்சை அமைப்பின்  சார்பில் சிறப்பு விருது வழங்கப்பட்டுள்ளது. கண் சிகிச்சைத் துறையில் அளப்பரிய பங்களிப்பை அளித்ததற்காக அவருக்கு இந்த கெளரவம் வழங்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.



தனியார்கள் நடத்தும் பொருட்காட்சிக்கு வருவாய்த் துறையின் தடையின்மை சான்றிதழ் கட்டாயம் என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.  அதன்படி, தனியாா்கள் பொருட்காட்சிகளை நடத்த வேண்டுமெனில் 5 வகையான தடையின்மைச் சான்றிதழ்களை மாவட்டங்களில் இருந்து பெற்று, அதை ஆட்சியா்கள் மூலமாக மாநில அரசின் செய்தி மக்கள் தொடா்புத் துறைக்கு அனுப்ப வேண்டும். அதாவது, பொருட்காட்சி நடத்தப்படும் இடத்துக்கான தடையின்மை சான்று, காவல் துறை, தீயணைப்புத் துறை, மாநகராட்சி அல்லது நகராட்சியின் சுகாதாரத் துறை ஆகியவற்றில் இருந்து தடையின்மைகளைச் சான்றுகளைப் பெற்று அளிக்க வேண்டும். அத்துடன், கடந்த 3 ஆண்டுகள் வருமானவரி செலுத்தியதற்கான வருமானவரித் துறை சான்றிதழ்களை அனுப்ப வேண்டும்.


தமிழ்நாடு அரசு மற்றும் சமூக துறை செலவினம் (Social sector expenditure):

தமிழ்நாடு அரசு தனது சமூக துறை செலவினத்தை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இது 2019-20ல் 79,859 கோடியிலிருந்து 2023-24ல் 1.16 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது. முக்கிய திட்டங்களில் பள்ளி வருகை மற்றும் ஊட்டச்சத்தை மேம்படுத்த முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் (Chief Minister's Breakfast Scheme) மற்றும் பெண்களை மேம்படுத்தும் பல்வேறு திட்டங்கள், அதாவது கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம் (Kalaignar Mahalir Urimai Thittam) மற்றும் மகளிர் விடியல் பயணம் திட்டம் (Mahalir Vidiyal Payanam Thittam) ஆகியவை அடங்கும்.

மூலம்: தமிழ்நாடு பொருளாதார ஆய்வறிக்கை 2024-25 



India (Unit III) 

2025-2026 நிதியாண்டில்  தமிழகத்தில் புதிய ரயில் பாதை அமைக்கும் திட்டத்துக்காக ரூ. 617.8 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு ரூ. 222.4 கோடி ஒதுக்கப்பட்ட நிலையில், நிகழாண்டு ரூ. 395 கோடி கூடுதலாக ஒதுக்கப்பட்டுள்ளது.

புதிய ரயில் பாதை நிதி ஒதுக்கீடு (2025-26)

  • திண்டிவனம்-திருவண்ணாமலை ரூ. 42.7 கோடி

  • ஸ்ரீபெரும்புதூா்-கூடுவாஞ்சேரி ரூ. 4.26 லட்சம்

  • திண்டிவனம்-நகரி ரூ. 347.7 கோடி

  • மதுரை-தூத்துக்குடி ரூ. 55.2 கோடி

  • மற்றவை ரூ. 171. 8 கோடி.

ஒரே மாதிரி வாக்காளர் அடையாள எண் பல வாக்காளா்களுக்கு வழங்கப்பட்ட விவகாரம் பெரும் சர்ச்சையான நிலையில், இப் பிரச்னைக்குத் தீர்வு எட்டப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் தரப்பில் 13.5.2025 அன்று தெரிவிக்கப்பட்டுள்ளது.  இது தொடா்பாக, நாடு முழுவதும் உள்ள 99 கோடிக்கும் அதிகமான வாக்காளா்களின் தரவுகளை நாடு முழுவதும் 4,123 சட்டப்பேரவைத் தொகுதிகளில் உள்ள தோ்தல் பதிவு அதிகாரிகள் ஆராய்ந்தனா். மிகச் சிறிய எண்ணிக்கையிலேயே பலருக்கு ஒரே மாதிரி வாக்காளா் அடையாள எண் வழங்கப்பட்டிருப்பது தெரியவந்தது. குறிப்பாக, 4 வாக்குச் சாவடிகளுக்கு ஒருவா் என்ற விகிதத்தில்தான் இந்தக் குளறுபடி நிகழ்ந்திருந்தது.


உச்சநீதிமன்றத்தின் 52-ஆவது தலைமை நீதிபதியாக பி.ஆர்.கவாய் 14.5.2025 அன்று பதவியேற்க உள்ளாா். உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னா 13.5.2025 அன்று  ஓய்வுபெற்றாா். 

இந்தியாவின் 100 நாள் காசநோய் ஒழிப்பு பிரச்சாரம்

  • டிசம்பர் 7, 2024 அன்று, மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் ஸ்ரீ ஜகத் பிரகாஷ் நட்டா, ஹரியானாவின் பஞ்ச்குலாவில் 100 நாள் காசநோய் ஒழிப்பு பிரச்சாரத்தை தொடங்கினார். இந்த பிரச்சாரம், குறிப்பாக பாதிக்கப்படக்கூடிய மக்களுக்கு, நோய் கண்டறிதலை மேம்படுத்துதல், நோயறிதல் தாமதங்களைக் குறைத்தல் மற்றும் சிகிச்சை விளைவுகளை மேம்படுத்துவதன் மூலம் காசநோய்க்கு எதிரான போராட்டத்தை விரைவுபடுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. 33 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் 347 மாவட்டங்களை உள்ளடக்கிய இந்த பிரச்சாரம், காசநோயை ஒழித்து காசநோய் இல்லாத தேசத்தை உருவாக்குவதற்கான இந்தியாவின் இலக்கின் ஒரு முக்கிய அங்கமாகும்.

  • இந்த 100 நாள் பிரச்சாரம், தேசிய காசநோய் ஒழிப்புத் திட்டத்தின் (National TB Elimination Programme (NTEP)) பரந்த கட்டமைப்பின் ஒரு பகுதியாகும், இது தேசிய சுகாதார இயக்கத்தின் (National Health Mission) கீழ் செயல்படுகிறது, இது 2017–2025 காசநோய் ஒழிப்புக்கான தேசிய திட்டத்துடன் (National Strategic Plan (NSP) for TB Elimination 2017–2025) இணைக்கப்பட்டுள்ளது. காசநோய் ஒழிப்புக்கான தேசிய திட்டமானது, காசநோய் நிகழ்வைக் குறைத்தல், நோயறிதல் மற்றும் சிகிச்சை திறன்களை மேம்படுத்துதல் மற்றும் நோயின் சமூக-பொருளாதார தாக்கத்தை நிவர்த்தி செய்தல் ஆகியவற்றில் கவனம் செலுத்துகிறது. இந்த லட்சிய முயற்சி, 2018 காசநோய் ஒழிப்பு உச்சி மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி நிர்ணயித்த தொலைநோக்குப் பார்வையை பிரதிபலிக்கிறது, அங்கு அவர் 2025 ஆம் ஆண்டுக்குள் காசநோய் இல்லாத இந்தியாவை அடைவதாக உறுதியளித்தார்.

  • இந்தியாவில் காசநோயைக் குறைப்பதற்கான தேசிய காசநோய் ஒழிப்புத் திட்டத்தின்  கீழ் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. காசநோய் பாதிப்பு விகிதம் 2015 இல் 100,000 பேருக்கு 237 ஆக இருந்தது, 2023 இல் 100,000 பேருக்கு 195 ஆக 17.7% குறைந்துள்ளது. இதேபோல், காசநோய் தொடர்பான இறப்புகள் 21.4% குறைந்துள்ளன, 2015 இல் ஒரு லட்சம் மக்கள்தொகைக்கு 28 ஆக இருந்தது, 2023 இல் ஒரு லட்சம் மக்கள்தொகைக்கு 22 ஆக குறைந்துள்ளது. 

காசநோய் ஒழிப்புக்கான இந்தியாவின் சர்வதேச உறுதிப்பாடு

  • காசநோயை ஒழிப்பதற்கான இந்தியாவின் அணுகுமுறை வெறும் தேசிய முயற்சி மட்டுமல்ல; அது உலகளாவிய இலக்குகளுடனும் ஒத்துப்போகிறது. ஐக்கிய நாடுகளின் நிலையான வளர்ச்சி இலக்குகளில் (SDGs) கையெழுத்திட்ட நாடாக, 2030 ஆம் ஆண்டுக்கான SDG காலக்கெடுவிற்கு ஐந்து ஆண்டுகளுக்கு முன்னதாக, 2025 ஆம் ஆண்டுக்குள் காசநோயை ஒழிக்கும் இலக்கை அடைய இந்தியா உறுதிபூண்டுள்ளது.

  • காசநோய் ஒழிப்புக்கான இந்தியாவின் உறுதிப்பாடு, ஆகஸ்ட் 2023 இல் WHO தென்கிழக்கு ஆசிய பிராந்தியத்தின் சுகாதார அமைச்சர்களால் கையெழுத்திடப்பட்ட காந்திநகர் பிரகடனம் போன்ற சர்வதேச பிரகடனங்களுக்கான அதன் ஆதரவிலும் தெளிவாகத் தெரிகிறது. இந்தப் பிராந்திய உறுதிமொழி, 2030 ஆம் ஆண்டுக்குள் இந்தப் பிராந்தியத்தில் காசநோய்க்கு எதிரான போராட்டத்தைத் தக்கவைத்து, விரைவுபடுத்தி, புதுமைப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.


இந்திய சூரிய எரிசக்திக் கழகத்தின் தலைவர் மற்றும் தலைமை இயக்குநராகப் பதவி வகித்துவந்த ரமேஷ்வர் பிரசாத் குப்தா மத்திய அரசால் திடீரென நீக்கப்பட்டார்.



இந்தியாவின் முதல் 3 நானோமீட்டர் சிப் வடிவமைப்பு மையங்களை (3nm Chip Design Centres)  நொய்டா மற்றும் பெங்களூருவில் அமைந்துள்ள ரெனேசாஸ் எலக்ட்ரானிக்ஸ் இந்தியா பிரைவேட் லிமிடெட்டில் மத்திய அமைச்சர் திரு அஸ்வினி வைஷ்ணவ் 13.5.2025 அன்று திறந்து வைத்தார்.


ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் உள்நாட்டு நீர் போக்குவரத்து துறையை வலுப்படுத்தும் நோக்கில், துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் நீர்வழிகள் அமைச்சகத்தின் கீழ் உள்ள இந்திய உள்நாட்டு நீர்வழிகள் ஆணையம் (Inland Waterways Authority of India (IWAI)), ஸ்ரீநகரில் தனது புதிய கிளையைத் திறந்துள்ளது.  

இந்த யூனியன் பிரதேசத்தில் உள்ள மூன்று தேசிய நீர்வழிகளில் உள்கட்டமைப்பை உருவாக்க ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேச அரசுடன் இந்திய உள்நாட்டு நீர்வழிகள் ஆணையம்  புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது. செனாப் நதி, ஜீலம் நதி, ராவி நதியில் மேற்கொள்ளப்படும் மேம்பாட்டுப் பணிகளை இந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் கீழ், ஆணையம் செயல்படுத்தும்.


 

Economy (Unit V)

ஏப்ரல், 2025 மாதத்திற்கான கிராமப்புற, நகர்ப்புற மற்றும் ஒருங்கிணைந்த நுகர்வோர் விலை குறியீட்டு எண் (2012-ம் ஆண்டின் 100 என்ற அடிப்படையில்)

முக்கிய சிறப்பம்சங்கள்:

  • 2024 ஏப்ரல் மாதத்துடன் ஒப்பிடும் போது, 2025 ஏப்ரல் மாத பணவீக்க விகிதம் ஆண்டுக்கு ஆண்டு என்ற முறையில் (Year-on-year inflation rate) அகில இந்திய நுகர்வோர் விலைக் குறியீட்டின் அடிப்படையில் 3.16% ஆக உள்ளது. 2025 மார்ச் மாதத்துடன் ஒப்பிடும்போது 2025 ஏப்ரல் மாதத்தில் பணவீக்கம் 18 அடிப்படை புள்ளிகள் குறைந்துள்ளது. 2019 ஜூலை மாதத்திற்கு பிறகு இது மிகக் குறைந்த பணவீக்க விகிதமாகும்.

  • 2024 ஏப்ரல் மாதத்துடன் ஒப்பிடும்போது, 2025 ஏப்ரல் மாதத்திற்கான உணவு பணவீக்க விகிதம் (Food Inflation)  1.78%-ஆக இருந்தது. 2025 மார்ச் மாதத்துடன் ஒப்பிடும்போது 2025 ஏப்ரல் மாதத்தில் உணவுப் பணவீக்க விகிதம் 91 அடிப்படைப் புள்ளிகள் சரிவுடன் காணப்படுகிறது.

  • 2025 ஏப்ரலில் பணவீக்கம் மற்றும் உணவுப் பணவீக்கத்தில் ஏற்பட்ட குறிப்பிடத்தக்க சரிவுக்கு காய்கறிகள், பருப்பு வகைகள், பொருட்கள், பழங்கள், இறைச்சி, மீன், தானியங்கள் மற்றும் தயாரிப்புகளின் பணவீக்கம் குறைந்ததே முக்கியக் காரணமாகும்.

  • 2025 ஏப்ரல் மாதம் கிராமப்புற உணவுப் பணவீக்கத்தில் (Rural Inflation) குறிப்பிடத்தக்க சரிவு காணப்பட்டது. 2025 மார்ச் மாதத்தில் 2.82% ஆக இருந்த கிராமப்புற உணவுப் பணவீக்கம் 2025 ஏப்ரல்-இல் 1.85% ஆகக் காணப்படுகிறது.

  • 2025 மார்ச் இல் நகர்ப்புற பணவீக்கம் 3.43%-லிருந்த நிலையில், 2025 ஏப்ரலில் அது 3.36%-ஆக குறைந்து காணப்பட்டது. உணவுப் பணவீக்கம் 2025 மார்ச் மாதத்தில்  2.48%-லிருந்து 2025 ஏப்ரலில் 1.64% ஆக குறைந்துள்ளது.

  • 2025 ஏப்ரல் மாதத்தில் வீட்டுவசதி பணவீக்க விகிதம் (Housing Inflation)  3.00% ஆக இருந்தது. இது 2025 மார்ச் மாதத்தில் விகிதம் 3.03% ஆக இருந்தது.

  • 2025 ஏப்ரல் மாதத்திற்கான நகர்ப்புற மற்றும் கிராமப்புற கல்வி பணவீக்க விகிதம் (Education Inflation)  4.13%-மாகும்.  இது 2025 மார்ச் மாதத்தில் 3.98%-ஆக இருந்தது.

  • 2025 ஏப்ரல் மாதத்திற்கான கிராமப்புற மற்றும் நகர்ப்புற சுகாதார பணவீக்க விகிதம் 4.25%-ஆகும். இது 2025 மார்ச் மாதத்தில் 4.26%-ஆக இருந்தது.

  • 2025 ஏப்ரல் மாதத்திற்கான கிராமப்புற மற்றும் நகர்ப்புற போக்குவரத்து மற்றும் தொடர்பு பணவீக்க விகிதம் 3.73%-ஆகும். இது 2025 மார்ச் மாதத்தில் விகிதம் 3.36%-ஆக இருந்தது.

  • 2025 ஏப்ரல் மாதத்திற்கான கிராமப்புற மற்றும் நகர்ப்புற எரிபொருள் மற்றும் மின் கட்டண பணவீக்க விகிதம் 2.92%-ஆகும். இது 2025 மார்ச் மாதத்தில் 1.42%-மாக இருந்தது.

  • ஏப்ரல் 2025 மாதத்திற்கான ஆண்டுக்கு ஆண்டு பணவீக்கம் அதிகமாக உள்ள முதல் ஐந்து முக்கிய மாநிலங்கள் - கேரளா (5.94), கர்நாடகா, ஜம்மு காஷ்மீர், பஞ்சாப் மற்றும் உத்தரக்காண்ட். 


Other Topics - Sports, Dates, Books


விராட் கோலி, சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக 12.5.2025  அன்று அறிவித்துள்ளார். 

விராட் கோலியின் சாதனைகள்: 

  • 2011-ம் ஆண்டு ஜூன் 20-ம் தேதி ஜமைக்காவில் மேற்கு இந்தியத் தீவுகளுக்கு எதிராக நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் அறிமுகமானார் விராட் கோலி.

  • 2012-ம் ஆண்டு ஜனவரியில் அடிலெய்டில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் தனது முதல் சதத்தை எடுத்தார் விராட் கோலி.

  • டெஸ்ட் கிரிக்கெட்டில் 7 முறை இரட்டை சதங்கள் அடித்துள்ளார். இதன் மூலம் இந்திய வீரர்களில் அதிக முறை இரட்டை சதங்கள் அடித்த வீரர் என்ற சாதனையை படைத்திருந்தார்.

  • 2014-ம் ஆண்டு ஆஸ்திரேலியாவுக்கு எதிரான அடிலெய்டு டெஸ்ட் போட்டியின் போது கேப்டனாக பொறுப்பேற்றார் விராட் கோலி. அந்த போட்டியில் அவர் முதல் இன்னிங்ஸில் 115 ரன்களும், 2-வது இன்னிங்ஸில் 141 ரன்களும் விளாசினார். இதன் மூலம் டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் இரு இன்னிங்ஸிலும் சதம் அடித்த 4-வது இந்திய வீரர் என்ற சாதனையை நிகழ்த்தியிருந்தார்.

  • ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் 2019-21-ம் ஆண்டு சுழற்சியில் விராட் கோலி தலைமையிலான இந்திய அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறி 2-வது இடத்தை பிடித்திருந்தது.

  • விராட் கோலி தலைமையில் இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணி ஐசிசி தரவரிசையில் தொடர்ச்சியாக 42 மாதங்கள் முதலிடத்தில் ஆதிக்கம் செலுத்தியது.

  • உள்நாட்டில் நடைபெற்ற டெஸ்ட் தொடர்களில் விராட் கோலி தலைமையில் இந்திய அணி 11 தொடர்களில் 10-ஐ வென்று அசத்தியது.

  • விராட் கோலி சாதனைகளில் மணிமகுடமாக 2018–19–ம் ஆண்டு ஆஸ்திரேலியா சுற்றுப்பணத்தில் இந்திய அணி டெஸ்ட் தொடரை 2–1 என வென்றது. ஆஸ்திரேலிய மண்ணில் இந்தியா முதன்முறையாக டெஸ்ட் தொடரை வென்றது அப்போதுதான். இதன் மூலம் 71 வருட காத்திருப்புக்கு முடிவு கிடைத்திருந்தது.

  • அதிக டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணியை வழிநடத்திய சாதனை விராட் கோலி வசம் உள்ளது. அவரது தலைமையில் இந்திய அணி 68 போட்டிகளில் விளையாடி 40 வெற்றிகளை குவித்துள்ளது. இதன் மூலம் இந்திய கேப்டன்களில் அதிக வெற்றியை தேடிக்கொடுத்தவர் என்ற சாதனையும் விராட் கோலி வசமே உள்ளது.

  • இந்திய அணியின் கேப்டனாக அதிக ரன்கள் குவித்த வீரர் என்ற சாதனையும் விராட் கோலியின் வசம் உள்ளது. அவர், 68 போட்டிகளில் கேப்டனாக இருந்து 54.80 சராசரியுடன் 5,864 ரன்கள் குவித்துள்ளார். இதில் 20 சதங்கள், 18 அரை சதங்கள் அடங்கும்.

  • 2019-ம் ஆண்டு தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் விராட் கோலி 254* ரன்கள் விளாசினார். டெஸ்ட் கிரிக்கெட்டில் அவரது அதிகபட்ச ஸ்கோர் இதுவாகும்.

நன்றி : இந்து தமிழ்திசை 


சர்வதேச செவிலியர் தினம் (International Nurses Day)  - மே 12

2025 ஆம் ஆண்டின் சர்வதேச செவிலியர் தினத்தின் கருப்பொருள் 'நம் செவிலியர்கள். நம் எதிர்காலம். செவிலியர்களைப் பராமரிப்பது பொருளாதாரங்களை வலுப்படுத்துகிறது.' (Our Nurses. Our Future. Caring for nurses strengthens economies.)


ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 23-ம் தேதி ஆயுர்வேத தினமாகக் கொண்டாடப்படும் என மத்திய அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

தேர்ந்தெடுக்கப்பட்ட தேதி, செப்டம்பர் 23, இலையுதிர்கால சம இரவு நாளுடன் (Autumnal equinox) ஒத்துப்போகிறது. இந்த நாளில் பகல் மற்றும் இரவு நேரங்கள் சமமாக இருக்கும். இந்த வானியல் நிகழ்வு, இயற்கையில் உள்ள சமநிலையைக் குறிக்கிறது. இது ஆயுர்வேத மருத்துவத்தின் முக்கிய கோட்பாடான மனம், உடல் மற்றும் ஆத்மா ஆகியவற்றுக்கு இடையேயான சமநிலைக்கு ஒத்துப்போகிறது. சம இரவு நாள், பிரபஞ்சத்தின் இசைவைக் குறிக்கிறது. இயற்கையுடன் சமநிலையாக வாழ்வதே ஆயுர்வேதத்தின் சாரம் என்பதை இது வலியுறுத்துகிறது.



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Respected visitors , this is your area. Ask your queries, post your suggestions. If you know correct answers for other friend's questions, kindly reply them. Motivate One another . Your comments will be posted soon with a small moderation.
Note:Please avoid sharing phone numbers, email Ids and posting abusive comments against the government and recruitment agencies.

Post Bottom ads

Your Ad Spot