Current Affairs, Latest News Updates, Online Tests for TNPSC Exams

TNPSC நடப்பு நிகழ்வுகள் 22-25 மே 2025

 Tamil Nadu (Unit V)  

காவிரி நதிநீர் மேலாண்மை ஆணையத்தின் 40 வது கூட்டம், காவிரி நதிநீர் மேலாண்மை ஆணையத்தின் தலைவர் திரு.எஸ்.கே.ஹல்தார் அவர்கள் தலைமையில் புதுதில்லியில் 22.5.2025 அன்று நடைபெற்றது.  இக்கூட்டத்தில் தமிழ்நாடு அரசு சார்பாக தமிழ்நாடு அரசின் நீர்வளத் துறை செயலாளர் திரு.ஜெ.ஜெயகாந்தன்,இ.ஆ.ப., காவேரி தொழில்நுட்பக் குழு தலைவர் திரு.ஆர். சுப்பிரமணியம், உறுப்பினர் திரு.எல்.பட்டாபி ராமன், காவிரி தொழில்நுட்பக் குழு உதவி செயற்பொறியாளர் திரு .கொளஞ்சிநாதன், உதவி பொறியாளர் திருமதி நிஷா ஆகியோர் நேரிலும், கேரளா, கர்நாடகா, பாண்டிச்சேரி ஆகிய பிற மாநிலங்களில் இருந்து உறுப்பினர்கள் நேரடியாகவும் மற்றும் காணொளி வாயிலாகவும் கலந்து கொண்டனர்.



சிப்காட் தொழில் புத்தாக்க மையம் (SIPCOT Industrial Innovation Centres (SIIC)) : 

 24.06.2022 அன்று, ரூ.33.46 கோடி முதலீட்டில்  தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் நான்காம் தலைமுறை (4.0) தொழில் புரட்சியை ஊக்குவிக்கவும், உற்பத்தித் துறையில் உற்பத்தித்திறன் (ம) போட்டித்தன்மையை மேலும் அதிகரிக்கவும், ஓசூர் (ம) திருப்பெரும்புதூரில் சிப்காட் தொழில் புத்தாக்க மையங்கள் திறந்து வைக்கப்பட்ட்டது.  தற்போது, ஓசூர் மையத்தில் 34 புத்தொழில் நிறுவனங்களும், திருப்பெரும்புதூர் மையத்தில் 23 புத்தொழில் நிறுவனங்களும் இந்த வசதிகளை பயன்படுத்தி வருகின்றன.


SIPCOT  பற்றி : தமிழ்நாட்டில் தொழில்துறை வளர்ச்சியைத் திட்டமிடுதல், மேம்படுத்துதல், செயல்படுத்துதல் மற்றும் ஊக்குவித்தல் என்ற நோக்கத்துடன், தமிழ்நாடு மாநில தொழில் மேம்பாட்டுக் கழகம் (Tamil Nadu, State Industries Promotion Corporation of Tamil Nadu Limited (SIPCOT)) 1971 ஆம் ஆண்டு நிறுவப்பட்டது.  தற்போது  SIPCOT 8 சிறப்பு பொருளாதார மண்டலங்கள் (SEZ) உட்பட 50 தொழில்துறை பூங்காக்களின் வளர்ச்சியை வளர்த்துள்ளது.

 

 மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் திரு. மா.சுப்பிரமணியன் அவர்கள்  20.05.2025 அன்று  அமெரிக்கா- கலிபோர்னியா மாகாணம், லாஸ் ஏஞ்சல்ஸில் நடைபெற்ற மனநல சர்வதேச மாநாட்டில் 'நாள்தோறும் மேற்கொள்ளப்படும் நடைபயிற்சியால், உடல் மற்றும் மனநலத்தில் ஏற்படும் தாக்கம்' குறித்த தலைப்பில் உரையாற்றினார்கள்.  


சர் ஜான் ஹூபர்ட் மார்ஷலுக்கு சிலை திறப்பு : சிந்துவெளி நாகரிகத்தை முதன்முதலில் வெளிப்படுத்தி திராவிட நாகரிகம் எனும் கருது கோளுக்கு வழிவகுத்த பிரிட்டிஷ் இந்தியாவின் தொல்லியல் துறை தலைமை இயக்குனர் சர் ஜான் ஹூபர்ட் மார்ஷலுக்கு பெருமை சேர்க் கும் வகையில் சென்னை எழும் பூர் அருங்காட்சியக வளாகத்தில் அமைக்கப்பட் டுள்ள அவரது திருவுருவச் சிலையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.  

சர் ஜான் ஹூபர்ட் மார்ஷல் 1924-ஆம் ஆண்டு செப்டம்பர் 20-ஆம் நாள் வரலாற்று சிறப்புமிகுந்த சிந்துவெளிப் பண்பாட் டின் கண்டுபிடிப்பை உலகுக்கு அறிவித்தார். சர் ஜான் ஹூபர்ட் மார்ஷல் இந்தியத் தொல்லியல் கழகத்தின் தலைமைப் பொறுப்பு வகித்த காலத்திலேயே இங்கிலாந்து நாட்டின் தொல்லி யல் அறிஞர் அலெக்ஸாண்ட மூலம் ஆதிச்சநல் லூர் அகழாய்வுகள் (1903-04) நடைபெற்றன.

தமிழ் மண்ணின் தொன்மையை உலகம் அறி வதற்கு வித்திட்ட சர் ஜான் ஹூபர்ட் மார்ஷல் 17.8.1958 அன்று மறைந்தார்.


திருவொற்றியூரில் ரூ. 272 கோடி செலவில் அமைக்கப்பட்டுள்ள ஆழ்கடல் சூரை மீன்பிடித் துறைமுகத்தை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மே 28-ஆம் தேதி திறந்து வைக்கிறார்.

 


24.5.2025 அன்று  பிரதமர் திரு.நரேந்திர மோடி அவர்கள் தலைமையில் நடைபெற்ற நிதி ஆயோக்கின் 10 வது ஆட்சிக்குழுக் கூட்டத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் ஆற்றிய உரையின் முக்கிய அம்சங்கள். 

  • 2030-ஆம் ஆண்டுக்குள் தமிழ்நாட்டில் ஒரு டிரில்லியன் டாலர் பொருளாதார வளர்ச்சியை எட்ட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 

  • தமிழ்நாடு கடந்த நிதியாண்டில்  நாட்டிலேயே அதிகமாக 9.69 விழுக்காடு வளர்ச்சியைக் கண்டுள்ளது. 

  • இந்திய விடுதலையின் நூற்றாண்டில் (2047-இல்), 4.5 டிரில்லியன் டாலர் பொருளாதாரத்தை அடைய வேண்டும் என்ற சவாலை  முன் வைத்துக்கொண்டு தமிழ்நாடு அரசு உழைத்து வருகிறது. 

  • 2047-இல் இந்தியாவின் இலக்கான 30 டிரில்லியன் டாலர் பொருளாதாரத்தில், தமிழ்நாட்டின் பங்களிப்பு வலுவாக இருக்கும்.

  • இந்தியாவில் தொழிற்சாலைகளில் பணிபுரியும் பெண்களில் 41 விழுக்காட்டு பெண் பணியாளர்கள் தமிழ்நாட்டில் உள்ளனர்.

  • 18 லட்சம் குழந்தைகளுக்குப் பயனளிக்கும் காலை உணவுத் திட்டம், ஒரு கோடியே 14 லட்சம் பெண்களுக்கு மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் வழங்கும் 'கலைஞர் மகளிர் உரிமைத்திட்டம், பெண்கள் இதுவரை 694 கோடி இலவசப் பயணங்களை மேற்கொண்டுள்ள விடியல் பயணம் திட்டம், பணிபுரியும் மகளிர் தங்குவதற்கு தோழி விடுதிகள், 40 லட்சம் இளைஞர்களுக்கும் மேலாக திறன் மேம்பாட்டு பயிற்சி வழங்கியுள்ள 'நான் முதல்வன்', உயர்கல்வியை ஊக்குவிக்கும்  ’தமிழ்ப்புதல்வன்', 'புதுமைப்பெண்' திட்டங்கள் குறித்து தெரிவிக்கப்பட்டது. 

  • கடந்த நான்காண்டுகளில் 30 புதிய தொழிற்பூங்காக்கள், தகவல் புரட்சிக்கு அடித்தளமாக 16 புதிய சிறிய டைடல் பூங்காக்கள் உருவாக்கப்பட்டுள்ளன. 

  • நாட்டிலுள்ள நகர்ப்புறங்களின் மேம்பாட்டிற்கு பெருமளவிலான நிதியைக் கொண்ட ஒரு பெரிய திட்டம் அவசியம். 'அம்ருத் 2.0' திட்டம் நிறைவடையும் தருவாயில் உள்ளது. இந்நிலையில், சிறந்த உட்கட்டமைப்பு, இயக்கம் மற்றும் சுகாதாரத்தை மையமாகக் கொண்ட ஒரு புதிய நகர்ப்புற மறுமலர்ச்சித் திட்டத்தை உருவாக்குவது அவசரத்தேவையாகும்.

  • "சுத்தமான கங்கை" திட்டம்  போன்று,  தமிழ்நாட்டில் உள்ள காவிரி, வைகை, தாமிரபரணி உள்ளிட்ட முக்கியமான ஆறுகளையும், நாட்டிலுள்ள பிற முக்கியமான ஆறுகளையும் சுத்தம் செய்து மீட்டெடுக்க இதேபோன்ற திட்டம் தேவை.  

  • 'P.M.ஸ்ரீ' திட்டம் தொடர்பான கல்வி அமைச்சகத்துடனான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில், சில மாநிலங்கள் கையெழுத்து போடாததால், S.S.A. நிதி மறுக்கப்பட்டுள்ளது.   2024-2025- ஆம் ஆண்டில் கிட்டத்தட்ட 2,200 கோடி ரூபாய் ஒன்றிய நிதி தமிழ்நாட்டுக்கு மறுக்கப்பட்டுள்ளது. ,இது அரசுப் பள்ளிகளில் பயிலும் குழந்தைகள் மற்றும் R.T.E.கீழ் (கல்வி உரிமைச் சட்டத்தின்கீழ்) படிக்கும் குழந்தைகளின் கல்வியைப் பாதிக்கிறது. எனவே, தாமதமின்றி, ஒருதலைப்பட்ச நிபந்தனைகளை வலியுறுத்தாமல் இந்த நிதியை விடுவிக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டது. 

  • கடந்த 15-ஆவது நிதிக்குழுவின் பரிந்துரைகளின்படி மாநிலங்களுக்கு பகிர்ந்தளிக்ககூடிய வரி வருவாய்ப் பங்கினை 41 விழுக்காடாக உயர்த்தினார்கள். ஆனால் இந்தப் பரிந்துரைக்கு மாறாக கடந்த 4 ஆண்டுகளில் ஒன்றிய அரசின் மொத்த வரி வருவாயில் 33.16 விழுக்காடு மட்டுமே மாநிலங்களுக்குப் பகிர்ந்து அளிக்கப்பட்டிருக்கிறது. ஒன்றிய வருவாயில் மாநிலங்களுக்கான வரிப் பகிர்வின் பங்கு 50 விழுக்காடு உயர்த்தப்படுவதுதான் முறையானதாக இருக்கும்.

  • சென்னை பறக்கும் ரயில் திட்டத்தை சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தோடு ஒப்படைக்க வேண்டும். 

  • மேலும், செங்கல்பட்டு - திண்டிவனம் தேசிய நெடுஞ்சாலையை 8 வழிச் சாலையாக மாற்றுவது, கோவையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பது போன்ற கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டது. ஆதிதிராவிடா், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் சாதி பட்டியலில் சில சமூகங்களின் பெயர்களில் மாற்றம் (“N” மற்றும் “A” என முடிவடையும் பெயர்களை “R’’ என மாற்றக் கோருதல்), கிறிஸ்தவராக மதம் மாறிய ஆதிதிராவிடா்களை ஆதிதிராவிடா் பட்டியலில் தொடரவைப்பது, இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்ட தமிழக மீனவா்களையும் அவா்களது படகுகளையும் மீட்பது போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தப்பட்டது. 


தமிழ்நாடு அரசின் தலைமை காஜி முப்தி சலாவுதீன் முகமது அயூப் (84) 24.5.2025 அன்று காலமானார். 

 

தேசிய கல்விக் கொள்கைக்கு மாற்றாக மக்கள் கல்விக் கொள்கை 2025 வரைவு அறிக்கையை அகில இந்திய கல்விப் பாதுகாப்பு கமிட்டி (ஏஐஎஸ்இசி) சென்னையில் 22.5.2025 அன்று வெளியிட்டது. கல்விக்கு மத்திய நிதி நிலை அறிக்கையில் 10 சதவீதமும் மாநில நிதி நிலை அறிக்கையில் 20 முதல் 25 சதவீதமும் நிதி ஒதுக்குவது அவசியம். கல்வியை மாநிலப் பட்டியலில் சோ்க்க வேண்டும். 3 முதல் 17 வயதுக்கு உள்பட்ட அனைவருக்கும் இலவசக்கல்வியை உறுதி செய்ய வேண்டும், தற்போதைய செமஸ்டா் தோ்வு முறைக்கு பதிலாக முடிந்தவரை வருடாந்திர முறையை அறிமுகப்படுத்துதல், தேசிய கல்விக் கொள்கையால் அறிமுகப்படுத்தப்பட்ட இணையவழி மற்றும் ஹைபிரிட் கற்பித்தல் முறைக்கு மாற்றாக, காலத்தால் சோதிக்கப்பட்ட முறையான வகுப்பறை கற்பித்தல்-கற்றல் செயல்முறையின் தொடா்ச்சியை உறுதி செய்தல், க்யூட் மற்றும் நீட் போன்ற மையப்படுத்தப்பட்ட தேசிய அளவிலான நுழைவுத் தோ்வுகளை இரத்து செய்தல்  ஆகிய கருத்துக்கள் இந்த கொள்கையில் உள்ளன. 


தமிழ்நாடு அரசின் இந்து சமய அறநிலையத்துறைத் துறையின்  திட்டங்கள் மற்றும் சாதனைகள்  - ஒரு பார்வை : 

அன்னைத் தமிழில் வழிபாடு 

திருக்கோயில்களில் அன்னைத் தமிழில் அர்ச்சனை செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டு, முதற்கட்டமாக 48 திருக்கோயில்களில் செயல்படுத்தப்பட்டது. அன்னைத் தமிழில் வழிபாடு செய்வதை ஊக்குவிக்கும் பொருட்டு அர்ச்சனை செய்யும் அர்ச்சகர்களுக்கு அர்ச்சனை கட்டணத்தில் 60 சதவிகிதத் தொகை பங்குத் தொகையாக வழங்கப்படுகிறது. மேலும் 14 போற்றி நூல்களை அச்சிட்டு வழங்கி திராவிட மாடல் அரசு இத்திட்டத்திற்கு மேலும் வலு சேர்த்துள்ளது.

யுனெஸ்கோ விருது   

தஞ்சை மாவட்டம், கும்பகோணம், துக்காச்சி அருள்மிகு ஆபத்சகாயேஸ்வரர் திருக்கோயிலுக்கு மரபு சார்ந்த கட்டடக் கலையினை பாதுகாக்கும் பொருட்டு நவீன அறிவியல் உதவியுடன் பாரம்பரியம் மாறாமல் திருக்கோயிலை புனரமைத்தற்காக கலாச்சார பாரம்பரிய புனெஸ்கோ ஆசிய, பசிபிக் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

ஸ்கோச் விருது  

புதுதில்லியில் செயல்பட்டு வரும் ஸ்கோச் குரூப் நிறுவனமானது (SKOCH GROUP) மக்களின் மேம்பாட்டிற்கு பயனளிக்கும் வகையில் 2025 ஆம் ஆண்டிற்கான அரசுத்துறை நிறுவனங்களுக்கான ஸ்கோச் தங்க விருதினை இந்து சமய அறநிலையத்துறையின் மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் இணையதள சேவையான ஒருங்கிணைந்த திருக்கோயில் மேலாண்மை திட்டத்திற்கு 29.03.2025 அன்று புதுதில்லியில் நடைபெற்ற விழாவில் வழங்கியது.

உணவுத்தரச்சான்று

ஒன்றிய அரசால் திருக்கோயில்களில் தயாரிக்கப்படும் பிரசாதம் மற்றும் அன்னதானம் தரத்துடனும், சுகாதாரமான முறையிலும் தயாரிக்கப்படுவதை உறுதி செய்திட இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தரப்படுத்துதல் ஆணையத்தால் தரச்சான்றிதழ் திருக்கோயில்களுக்கு வழங்கப்பட்டுள்ளன. இந்தியாவிலேயே அதிக எண்ணிக்கையில் தரச்சான்றிதழ் பெற்ற மாநிலம் தமிழ்நாடு என்பது குறிப்பிடத்தக்கது.

ஆன்மிகப் பயணம் 

மானசரோவர் முக்திநாத் ஆன்மிகப் பயணம் இறையன்பர்களுக்கு ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வந்த அரசு மானியம் தற்போது உயர்த்தி வழங்கப்படுகிறது. அதேபோல, 60 முதல் 70 வயது வரையுள்ள மூத்தகுடிமக்கள் பயன்பெறும் வகையில் 2,000 பக்தர்கள் அறுபடை வீடுகளுக்கும், 920 பக்தர்கள் இராமேசுரம் காசி ஆன்மிக பயணத்திற்கும் அரசு செலவில் அழைத்துச் செல்லப்பட்டனர். 

நாள் முழுவதும் பிரசாதம்

நாள் முழுவதும் பிரசாதம் வழங்கும் திட்டம் 25 திருக்கோயில்களில் செயல்படுத்தப்பட்டுள்ளது.

ஆன்மிக நூல்கள் மறுபதிப்பு செய்து வெளியிடுதல்

இந்து சமய அறநிலையத்துறை பதிப்பகப் பிரிவின் மூலம் திருக்கோயில்களின் தலவரலாறு, தலபுராணம், கட்டடக்கலை, கல்வெட்டுகள் குறித்த 516 தொன்மையான அரிய நூல்கள் புதுப்பொலிவுடன் மறுபதிப்பு செய்யப்பட்டு  வெளியிடப்பட்டுள்ளன.

வள்ளலார் முப்பெரும் விழா

 அருள்பிரகாச வள்ளலாரின் 200 ஆம் ஆண்டு பிறந்த நாள், தர்மசாலை தொடங்கப்பட்ட 156 வது ஆண்டு, ஜோதி தரிசனத்தின் 152 வது ஆண்டு ஆகிய வரலாற்று நிகழ்வுகளை நினைவுபடுத்திப் போற்றும் முப்பெரும் விழா 2022 அக்டோபர் மாதம் முதல் தொடங்கி 52 வாரங்கள் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது.  தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் முதல் வார விழாவில் பங்கேற்று வள்ளலார் 200 இலச்சினை, அஞ்சல் உறை, சிறப்பு மலர் ஆகியவற்றை வெளியிட்டார்கள். 

திருவள்ளுவருக்கு கற்கோயில் 

27.4.1973 அன்று முத்தமிறிஞர் கலைஞர் அவர்களால் தொடங்கி, முடிவுற்ற மயிலாப்பூர் திருவள்ளுவர் கோயில் திருப்பணி தற்போது  தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களின் நடவடிக்கையின் ரூ.19.17 கோடியில் கற்கோயிலாக கட்டப்பட்டு வருகிறது.

தமிழ் மூதாட்டி அவ்வையாருக்கு மணிமண்டபம்  

நாகை மாவட்டம், வேதாரண்யம் வட்டம், துளசியாப்பட்டினத்தில் அருள்மிகு ஔவையார் திருக்கோயிலில் ரூ.18.95 கோடி மதிப்பீட்டில் தமிழ் மூதாட்டி அவ்வையாருக்கு மணிமண்டபம் அமைக்கப்பட்டு வருகிறது.

ஆயிரம் ஆண்டுகள் பழமையான திருக்கோயில்களில் திருப்பணி

ஆயிரம் ஆண்டுகள் பழமையான திருக்கோயில்களை புனரமைத்து பாதுகாத்திடும் வகையில் 2022-2023 ஆம் நிதியாண்டு முதல் 2024-

அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு

தமிழ் கடவுளாம் முருகப்பெருமானின் பெருமைகளை பறைசாற்றும் வகையில் அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு திண்டுக்கல் மாவட்டம் பழனியில் 2024 ஆகஸ்ட் 24 மற்றும் 25 ஆகிய தேதிகளில் வெகு சிறப்பாக நடைபெற்றது. 

அனைத்துச் சாதியினருக்கும் அர்ச்சகர் பணி

சாதி வேறுபாடுகளை அகற்றும் வழிகளில் ஒன்றாக இறைத் தொண்டு புரியும் பணி அனைத்துச் சாதியினருக்கும் வழங்கப்பட வேண்டும் என்னும் நோக்கத்துடன் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் அனைத்துச் சாதியினரும் அர்ச்சகர் ஆகும் சட்டத்தினை 1972 ஆம் ஆண்டில் நிறைவேற்றினார்கள். அச்சட்டம்  இந்த ஆட்சியில் நடைமுறைப்படுத்தப்படுகின்றது.



மாநில அரசுப் பணியாளர் தேர்வாணைய தலைவர்களின் நிலைக் குழுக் கூட்டம் ஒன்றிய அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் தலைவர் மாண்புமிகு டாக்டர். அஜய் குமார், இ.ஆ.ப. அவர்கள்  தலைமையில் சென்னையில் 24.05.2025 மற்றும் 25.05.2025 ஆகிய இரண்டு நாட்கள் நடைபெற்றது. இக்கூட்டத்தில், தேர்வாணையத்தின் நிலைக் குழுத் தலைவர் திரு. அலோக் வர்மா, தமிழ்நாடு மாநில அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் தலைவர் திரு. எஸ். கே. பிரபாகர், இ.ஆ.ப. மற்றும் ஆந்திரப் பிரதேசம், அருணாசலப் பிரதேசம், அஸ்ஸாம், பீகார், ஹிமாசலப் பிரதேசம், கர்நாடகா, மகாராஷ்டிரா, நாகலாந்து, ராஜஸ்தான், உத்தரப் பிரதேசம் ஆகிய மாநில அரசுப் பணியாளர் தேர்வாணையங்களின் தலைவர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்


வருடாந்திர ஒருங்கிணைந்த பறவைகள் கணக்கெடுப்பு 2025 :   தமிழ்நாடு அரசு மாநிலம் முழுவதும் 2000-க்கும் மேற்பட்ட இடங்களில் (ஈர நிலங்கள் மற்றும் நிலப்பகுதிகள்) மிகப்பெரிய அளவில் ஒருங்கிணைந்த பறவைகள் கணக்கெடுப்பு 2023 ஆம் ஆண்டு முதல் தொடர்ந்து நடத்தி வருகிறது. தமிழ்நாட்டின் பறவைகளை கண்காணிப்பதன் நோக்கம் பறவைகளின் இருப்பை பதிவு செய்வதோடு மட்டுமல்லாமல், அவற்றின் வாழ்விடங்கள் தொடர்பான அச்சுறுத்தல் காரணிகள் உள்ளிட்ட பிற முக்கிய சூழல் அம்சங்களையும் பதிவு செய்து, பறவைகளின் வாழ்விடப் பாதுகாப்புக்கான சிறந்த நீண்டகாலத் திட்டங்கள் வடிவமைக்க உதவுகிறது. இவை பறவை இனங்களின் செயல்பாடுகள், பரவல் மற்றும் செறிவு பற்றிய உள்நோக்கை வழங்கி பறவைகள் பாதுகாப்பு முயற்சிகளுக்கு உதவுகிறது.

தமிழ்நாட்டில் இடம்பெயரும் பறவைகள் பருவம், வழக்கமாக ஒவ்வொரு ஆண்டும் வடகிழக்கு பருவமழை காலமான அக்டோபரில் தொடங்கி ஏப்ரல் மாதம் வரை தொடர்கிறது. பறவைகள் சரணாலயம் மற்றும் பாதுகாப்பு சரணாலயங்களில் உள்ள பறவைகளை கண்காணிப்பது ஒரு தொடர்ச்சியான பயிற்சியாக இருந்தாலும், பறவைகளின் பல்வேறு வாழ்விடங்களில் மாநில அளவிலான கண்காணிப்பு பயிற்சியும் ஒவ்வொரு ஆண்டும் தமிழ்நாடு வனத்துறையால் நடத்தப்படுகிறது. 2025 ஆம் ஆண்டிற்கான ஒருங்கிணைந்த கணக்கெடுப்பு மார்ச் 2025 மாதத்தில்  இரண்டு கட்டங்களாக நடத்தப்பட்டுள்ளது.  இந்த ஆண்டு பறவைகள் கணக்கெடுப்பு, அழிந்து வரும் பறவைகள் மற்றும் இரவு நேர பறவைகளை ஆவணப்படுத்துவதற்கு சிறப்பு முக்கியத்துவம் அளித்தது. இந்த கணக்கெடுப்பில், தமிழ்நாட்டில் அழிந்து வரும் 37 பறவை இனங்களில், 26 இனங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. மேலும் 17 இரவு நேரப் பறவை இனங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

சின்னக்கொக்கு/கள்ளவாயன் (Little egret), சிறிய நீர்க்காகம் (Little cormorant), நத்தைகுத்தி நாரை (Asian open bill), கருந்தலை அரிவாள்மூக்கன் (Black headed Ibis), அன்றில் (Glossy Ibis) மற்றும் குளக்கொக்கு (Indian pond Heron) ஆகியவை வசிக்கும் பறவைகளில் மிகவும் பொதுவான பறவைகளாக காணப்பட்டன. சாம்பல்நிற வாத்து (Greylag Goose), பெரும் பூநாரை (Greater Flamingo), பெரியகோட்டான் (Eurasian Curlew), கோணமூக்கு உள்ளான் (Pied Avocet), சிறிய கொண்டை ஆலா (Lesser Crested Tern) மற்றும் கரண்டிவாயன் (Eurasian Spoon bill) ஆகியவை புலம்பெயர்ந்த பறவைகளில் மிகவும் பொதுவான பறவைகளாக காணப்பட்டன.

எழுத்தாளர் திரு.கி.ராஜநாராயணன் அவர்களுக்கு தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியில் நினைவகம் கட்டப்பட்டுள்ளது. 


தொல்குடி புத்தாய்வுத் திட்டம் :  பழங்குடியினர் தொடர்பான ஆராய்ச்சி மற்றும் ஆய்வு மேற்கொள்ளும் இளங்கலை, முதுகலை, முனைவர் பட்டம், முனைவர் பட்ட மேலாய்வாளர் படிப்பினை மேற்கொள்ளும் இளம் வல்லுநர்களை ஊக்குவிக்கும் பொருட்டு ரூ.1.50 கோடியில்  தமிழ்நாடு அரசு இத்திட்டத்தை செயல்படுத்தி வருகிறது.


தமிழ் புதல்வன் திட்டம் - முக்கிய தகவல்கள் : 

  • தமிழ்நாடு அரசு சட்டமன்றத்தின் நிதிநிலை அறிக்கை உரையின் போது 19.02.2024 அன்று மாண்புமிகு நிதி மற்றும் மனிதவள மேலாண்மை துறை அமைச்சர் அவர்களால், தமிழ்ப்புதல்வன் திட்டம் அறிவிக்கப்பட்டது.

  • மாண்புமிகு தமிழ்நாடு முதல்வர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்களால், 2024 ஆகஸ்ட் 9 ஆம் நாள் அன்று கோயம்புத்தூரில் தமிழ்ப்புதல்வன் திட்டம் தொடங்கி வைக்கப்பட்டது.

  • இந்த திட்டத்திற்காக நடப்பு நிதியாண்டில் ரூ.360 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மேலும் தமிழ்ப்புதல்வன் திட்டத்தின் கீழ் உயர் கல்வியைத் தொடரும் 3.28 லட்சம் மாணவர்களுக்கு மாதந்தோறும் ரூ.1,000 உதவித்தொகை வழங்கப்படுகிறது.

  • “அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் (தமிழ் வழியில்) பயின்று உயர்கல்வில் மாணவர்களின் சேர்க்கை விகிதம் மிகவும் குறைவாக இருப்பதை உணர்ந்து, பொருளாதாரத்தில் பின்தங்கிய குடும்பத்தைச் சேர்ந்த மாணவர்களின் உயர்கல்வியை மேம்படுத்துவதற்காக, மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் திருமண உதவித் திட்டம், மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் உயர்கல்வி உறுதி திட்டமாக மாற்றப்பட்டது. அரசுப் பள்ளிகள் மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் (தமிழ் வழியில்) 6 முதல் 12 ஆம் வகுப்பு வரை படித்த அனைத்து மாணவர்களுக்கும் இளங்கலைப் பட்டப்படிப்பு, டிப்ளமோ மற்றும் ஐடிஐ படிப்புகள் தடையின்றி முடிக்கும் வரை மாதந்தோறும் ரூ.1,000/- அவர்களின் வங்கிக் கணக்கில் நேரடியாகச் செலுத்தப்படும். வேறு ஏதேனும் உதவித் தொகை பெற்று வருபவராக இருப்பினும். இத்திட்டத்தில் பயன்பெற தகுதி உடையவராவர் ”.

  • இத்திட்டம் ஆண்களுக்கு சமூக-பொருளாதார வலுவூட்டலை உறுதி செய்கிறது.மேல்நிலைப் கல்விக்குப் பிறகு உயர்கல்வியில் இடைநிறத்தலைத் தடுக்கிறது மற்றும் உயர்கல்வியில் தக்கவைப்பு விகிதத்தை அதிகரிக்கிறது.

இத்திட்டத்தின் கீழ்:

  • அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் (தமிழ் வழியில்) 6 முதல் 12 ஆம் வகுப்பு வரை படித்த மாணவர்களுக்கு அவர்களின் முதல் உயர்கல்வி படிப்பை முடிக்கும் வரை மாதந்தோறும் ரூ.1000 நேரடி பணபலன் பரிமாற்றம் (DBT) மூலமாக வழங்கப்படும்.

  • பிற உதவித்தொகைகளைப் பெறும் மாணவர்களும் இந்தத் திட்டத்தில் சேர தகுதியுடையவர்கள்.

  • அங்கீகரிக்கப்பட்ட நிறுவனங்கள் /கல்லூரிகள் /பல்கலைக்கழகங்களில் உயர்கல்வி பயிலும் ஒரே குடும்பத்தை சார்ந்த அனைத்து மாணவர்களும் தகுதி பெற்றிருப்பினும், இத்திட்டத்தின் கீழ் ஊக்கத்தொகை பெற இயலும்.

  • தமிழ்ப் புதல்வன் திட்டச் செயல்பாடு 'UMIS' இணையதளத்தின் மூலம் செயல்படுத்தப்படுகிறது மற்றும் மாணவர்கள் UMIS இணையதளத்தின் மூலம் தங்களே விண்ணப்பிக்கலாம்.

  • தமிழ்நாடு மின் ஆளுமை முகமை இத்திட்டத்திற்கான இணையதள முகப்பினை பராமரித்து வருகிறது மற்றும் திட்டத்தின் தொடக்கம் முதல் இறுதி வரையிலான ஆளுமை முறை செயல்படுத்துவதில் துறைக்கு துணை புரிகிறது.

  • மாணவர்கள் 'பூஜ்ஜியம் இருப்பு' வங்கிக் கணக்கைத் தொடங்கவும், ஒவ்வொரு ஆறு மாதங்களுக்கு ஒருமுறை, ஜூன் 30 மற்றும் டிசம்பர் 31 ஆம் தேதிகளில் திட்ட பயன்பெறும் மாணவர்களின் வருகை நிலையை உறுதிப்படுத்தவும் உதவுகிறது.

  • இத்திட்டத்தைத் திறம்பட செயல்படுத்துவதைக் கண்காணிக்க மாநில திட்ட மேலாண்மை அலகு (SPMU) அமைக்கப்பட்டுள்ளது.

  • எந்தவொரு வங்கியிலிருந்தும் ஆதார் இணைக்கப்பட்ட வங்கிக் கணக்கைத் திறப்பது, தேவைப்படும் மாணவர்களுக்கு பற்றட்டைகள் வழங்கப்படுகிறது.

  • மாணவர்கள் தங்களின் முதல் உயர் கல்விப் படிப்பை அங்கீகரிக்கப்பட்ட கல்லூரிகள் அல்லது பல்கலைக்கழகங்களில் மட்டுமே தொடர வேண்டும்.


அண்ணல் அம்பேத்கர் தொழில் முன்னோடிகள் திட்டம் (Annal Ambedkar Business Champions Scheme (AABCS)) : 

பட்டியலினத்தவர் மற்றும் பழங்குடியினர் விவசாயம், அரசு வேலை, தனியார் நிறுவனங்களில் வேலை செய்தல் என்ற அளவிலேயே இருப்பதை மாற்றி தொழில்முனைவோர்களாக உருவாகவும், பலருக்கு வேலை வாய்ப்பை அளிக்கவும், அச்சமுதாய மக்கள் ஒருங்கிணைந்து முன்னேற்ற பாதையில் செல்லவும் இந்திய அளவில் முதன்மையான திட்டமாக அண்ணல் அம்பேத்கர் தொழில் முன்னோடிகள் திட்டம் தமிழ்நாடு அரசின் சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் துறையால் (Department of Micro, Small and Medium Enterprises) கடந்த 2023-24 நிதியாண்டில் தொடங்கப்பட்டது.

திட்டத்தின் சிறப்பம்சங்கள் : 

  • தகுதியுள்ள திட்டத்தொகையில் 35 % மூலதன மானியம் (உச்சவரம்பு ரூ. 1.5 கோடி)

  • திட்டத்தொகை நிலம், கட்டடம், இயந்திர தளவாடங்கள் மற்றும் கருவிகள், ஆய்வு மற்றும் மதிப்பீட்டுக் கருவிகள், கணினி ஆகியவற்றின் விலை மதிப்பை உள்ளடக்கியது. நிலமதிப்பு மொத்த திட்டத் தொகையில் 20% ஐ மிகலாகாது. கட்டிட மதிப்பு மொத்த திட்டத்தொகையில் 25 %க்குள் இருக்க வேண்டும். ஒரு செயல்பாட்டுச் சுழற்சிக்குத் (One Operating cycle) தேவைப்படும் நடைமுறை மூலதனமும், மொத்த இயந்திர தளவாடங்கள் / கருவிகள் மதிப்பில் 25% என்ற வரம்புக்குட்பட்டு திட்டத் தொகையாகக் கணக்கில் கொள்ளப்படும். திட்டச் செயல்பாடுகளுடன் ஒருங்கிணைந்த பகுதியாக அமையும் வாகனங்களின் மதிப்பும் கணக்கில் கொள்ளப்படும்.

  • இயந்திர தளவாடங்கள் / கருவிகள் வாங்கப் பெறப்பட்ட பருவக் கடனுக்கு, கடனைத் திரும்பச் செலுத்தும் காலம் முழுதும் (அதிகபட்சம் 10 ஆண்டுகள்) 6% வட்டி மானியம். வட்டி மானியம் முன்கூட்டியே வங்கிகளுக்கு பட்டுவாடா செய்யப்படும்.

  • நடைமுறை மூலதனத்துக்காகப் பெறப்பட்ட கடனுக்கு அதிகபட்சம் 2 ஆண்டுகள் வரை வட்டி மானியம்.

  • இத்திட்டத்தின் கீழ் பயன்பெற்றவர்கள் தமிழ்நாடு அரசின் கட்டுப்பாட்டின் கீழ் இல்லாத பிற அரசு / அரசல்லாத நிறுவனங்களில் மானியம் பெறத் தடையில்லை.

  • பட்டியல் வகுப்பு / பட்டியல் பழங்குடி இனத் தனிநபர்கள், முழுமையாகப் பட்டியல் வகுப்பு / பட்டியல் பழங்குடி இனத்தைச் சேர்ந்தவர்களால் உடைமை கொண்ட நிறுவனங்கள் மட்டுமே பயன்பெற இயலும்.

  • புதிய நிறுவனங்கள் மற்றும் இயங்கும் நிறுவனங்களின் விரிவாக்க முனைப்புகளுக்கு உதவி கோரலாம்.

  • வேலைவாய்ப்பற்ற இளைஞர் வேலைவாய்ப்பு உருவாக்கத் திட்டத்தின் கீழான திட்டத்தொகை வரம்புக்கு மேற்பட்ட வாணிக / விற்பனைத் தொழில் திட்டங்கள் பயன்பெறலாம்.

  • பயனாளிகளுக்கான உச்ச வயது வரம்பு 55

  • குறைந்தபட்ச கல்வித் தகுதி ஏதுமில்லை.


புதிய தொழில்முனைவோர் மற்றும் நிறுவன மேம்பாட்டுத் திட்டம் (New Entrepreneur Cum Enterprise Development Scheme -NEEDS) : முதல் தலைமுறை தொழில்முனைவோர் சொந்தத் தொழில்களைத் தொடங்க ஊக்குவிப்பதற்கு தமிழ்நாடு அரசால் புதிய தொழில்முனைவோர் மற்றும் நிறுவன மேம்பாட்டுத் திட்டம் (NEEDS) செயல்படுத்தப்படுகிறது. இந்தத் திட்டத்தின் கீழ், மூலதன மானியம் மற்றும் கடன்களுக்கான வட்டி மானியம் வழங்கப்படுகிறது.

சிறப்பம்சங்கள் : 

  • முதல் தலைமுறை தொழில் முனைவோரின் முதல் தொழில் முயற்சிக்குக் கை கொடுக்கவும் ஊக்கமளிக்கவும் எனத் தனித்துவமாக வடிவமைக்கப்பட்டு சிறப்புற செயல்படுத்தப்படுகிறது

  • பயனுற விழைவோர் வயது பொதுவாக 21-45 க்குள் இருக்க வேண்டும். பெண்கள்/ பிற்படுத்தப்பட்டோர்/ மிகப் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர் மரபினர்/ பட்டியல் வகுப்பினர் / பட்டியல் பழங்குடியினர் / முன்னாள் ராணுவத்தினர் / மாற்றுத் திறனாளிகள் / மாற்றுப் பாலினத்தவர் ஆகிய சிறப்புப் பிரிவினருக்கு 55 வயது வரை தளர்வு உண்டு

  • ரூ.10.00 இலட்சம் முதல் ரூ.500.00 இலட்சம் வரையிலான திட்டத் தொகையில் உற்பத்தி அல்லது சேவைத் தொழில் நிறுவனங்கள்

  • தொழில் முனைவோர் பங்களிப்பு பொதுப் பிரிவினருக்கு திட்டத்தொகையில் 10% சிறப்புப் பிரிவினருக்கு 5%

  • தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகம் / வணிக வங்கிகள்/ தாய்கோ வங்கி மூலமாக கடனுதவி

  • தனி நபர் முதலீட்டு மானியம் திட்டத்தொகையில் 25% (உச்ச வரம்பு ரூ.75.00 இலட்சம்)

  • கடன் திரும்பச் செலுத்தும் காலம் முழுமையும் 3% பின்முனை வட்டி மானியம்


 

கீழடி அகழ்வாராய்ச்சி அறிக்கை குறித்து தொல்லியல் அறிஞர் அமர்நாத் விளக்கம்

தமிழ்நாட்டின் சிவகங்கை மாவட்டத்தில் உள்ள கீழடி தொல்லியல் தளத்தில் அகழ்வாராய்ச்சி நடத்திய தொல்லியல் அறிஞர் கே. அமர்நாத் ராமகிருஷ்ணா,  இந்திய தொல்லியல் ஆய்வுத்துறை ((Archaeological Survey of India - ASI) ) அவரது அறிக்கையில் குறிப்பிடப்பட்ட மூன்று காலகட்டங்களின் காலவரிசை மற்றும் பெயரிடல் குறித்து கேள்வி எழுப்பி, அறிக்கையை மீண்டும் எழுதுமாறு கோரியது. அதற்கு  கே. அமர்நாத் அவர்கள் தனது ஆய்வு அறிக்கையில் மாற்றம் ஏதும் இல்லை என பதில் அளித்தார். 2023 ஜனவரியில் சமர்ப்பித்த தனது கண்டுபிடிப்புகள் முழுமையானவை என்றும், அவை அடுக்கு வரிசைகள், கலாச்சார படிவுகள், பொருள் பகுப்பாய்வு மற்றும் முடுக்கி நிறை நிறமாலை ( (Accelerator Mass Spectrometry - AMS)) போன்ற நிலையான தொல்லியல் முறைகளை அடிப்படையாகக் கொண்டவை என்றும் விளக்கினார். 

ASI-ன் ஆய்வு இயக்குநர் ஹேமசாகர் ஏ. நாயக்கிற்கு எழுதிய கடிதத்தில், ASI, இரண்டு நிபுணர்களை மேற்கோள் காட்டி, குறிப்பாக முதல் காலகட்டத்தின் (கி.மு. 8-ஆம் நூற்றாண்டு முதல் கி.மு. 5-ஆம் நூற்றாண்டு) கால எல்லை குறித்து கேள்வி எழுப்பி, அதற்கு வலுவான ஆதாரங்களையும் மறுசீரமைப்பையும் கோரியது. ஆனால், ராமகிருஷ்ணா தனது காலகட்ட பிரிவு சரியானது மற்றும் ஏற்கப்பட்ட தொல்லியல் முறைகளுக்கு உட்பட்டது என்று உறுதியாகக் கூறினார்.


தி ஹிந்து குழுமத்தின் முதன்மை முயற்சியான Made of Chennai (MoC), மதிப்புமிக்க சர்வதேச செய்தி ஊடக சங்கத்தின் (International News Media Association - INMA) உலகளாவிய ஊடக விருதுகளில் பல பிரிவுகளில் முதல் கௌரவங்களைப் பெற்று ஈர்க்கும் அடையாளத்தை ஏற்படுத்தியது. சென்னையின் 385வது பிறந்தநாளைக் குறிக்கும் MoC பிரச்சாரம், நகரின் வளமான பாரம்பரியம் மற்றும் சமகால துடிப்பின் சுறுசுறுப்பான 40-நாள் கொண்டாட்டமாக கருதப்பட்டது.

உலக விலங்கு சுகாதார நிறுவனத்தால் (World Organisation for Animal Health - WOAH) உலகின் விலங்குகளின் சுகாதாரம் குறித்த முதல் அறிக்கை வெளியிடப்பட்டது. WOAH-ன் தலைமையகம் பாரிஸில் உள்ளது. இது 1924-ல் Office International des Epizooties என நிறுவப்பட்டது (2003-ல் WOAH என மறுபெயரிடப்பட்டது).

அறிக்கையின் முக்கிய கண்டுபிடிப்புகள்:

விலங்கு நோய்கள் முன்பு பாதிக்கப்படாத பகுதிகளுக்கு இடம்பெயர்ந்து கொண்டிருக்கின்றன, இவற்றில் பாதி (47%) ஜூனோடிக் - அல்லது விலங்கிலிருந்து மனிதனுக்கு பரவும் - சாத்தியம் உள்ளது. பாலூட்டிகளில் பறவைக் காய்ச்சல் வெடிப்புகள் 2023-ஐ விட கடந்த ஆண்டு இருமடங்காக அதிகரித்து, மேலும் பரவல் மற்றும் மனித பரிமாற்றத்தின் ஆபத்தை அதிகரித்துள்ளது. கால்நடை தடுப்பூசிகளுக்கான அணுகல் உலகம் முழுவதும் சமமாக இல்லை, நோய் ஒழிப்பு முயற்சிகள் நிதி மற்றும் அரசியல் சவால்களை எதிர்கொள்கின்றன. விலங்குகளில் ஆன்டிபயாடிக் பயன்பாடு 2020 மற்றும் 2022 க்கு இடையில் 5% குறைந்தது மற்றும் உலகளவில் கால்நடை தடுப்பூசி விரிவாக்கம் ஆன்டிபயாடிக் எதிர்ப்பின் ஆபத்தை குறைக்கும்.

மகப்பேறு விடுப்பு பெண்களின் இனப்பெருக்க உரிமைகளின் முக்கிய பகுதி - உச்ச நீதிமன்றம்:

இரண்டாவது திருமணத்தில் குழந்தை பிறந்த பின்னர் மகப்பேறு விடுப்பு மறுக்கப்பட்ட தமிழ்நாடு அரசு ஆசிரியை ஒருவர் தாக்கல் செய்த மனுவின் பேரில் இந்த முக்கியமான உத்தரவு வழங்கப்பட்டது. இரண்டு குழந்தைகளை மட்டுமே கொண்ட பெண்களுக்கு மட்டுமே நன்மைகளை வழங்கும் மாநில கொள்கையின் அடிப்படையில், மூன்றாவது குழந்தை பிறப்பில் ஒரு பெண்ணிற்கு மகப்பேறு விடுப்பு மறுத்த சென்னை உயர் நீதிமன்ற உத்தரவை நீதிமன்றம் ரத்து செய்தது. 

தமிழ்நாடு அரசு தனது பெண் ஊழியர்களை மாநில சேவை விதிகள் மற்றும் தேசிய மகப்பேறு நலன் சட்டம், 1961 (2017-ல் திருத்தப்பட்டது) இரண்டின்படியும் மகப்பேறு விடுப்பு வழங்குகிறது. பொதுவாக தமிழ்நாட்டின் சேவை விதிகள் இரண்டு உயிருள்ள குழந்தைகளுக்கும் குறைவான பெண் ஊழியர்களுக்கு மகப்பேறு விடுப்பை மட்டுப்படுத்தியது, இது மக்கள்தொகை கட்டுப்பாட்டு கொள்கையுடன் ஒத்திருந்தது. எனினும், சமீபத்திய உச்ச நீதிமன்ற தீர்ப்புகள் மகப்பேறு விடுப்பு மகப்பேறு நன்மைகளின் ஒருங்கிணைந்த பகுதி மற்றும் பெண்களின் இனப்பெருக்க உரிமைகளின் முக்கிய கூறு என்று தெளிவுபடுத்தியுள்ளன. இரண்டு உயிருள்ள குழந்தைகளுக்கும் குறைவான பெண்களுக்கு 26 வாரங்கள் ஊதியத்துடன் கூடிய மகப்பேறு விடுப்பையும், இரண்டு அல்லது அதற்கு மேற்பட்டவர்களுக்கு 12 வாரங்களையும் வழங்கும் மகப்பேறு நலன் சட்டத்தால் வழங்கப்படும் பரந்த பாதுகாப்புகளை மாநிலத்தின் இரண்டு குழந்தை நெறிமுறை மீறக்கூடாது என்று நீதிமன்றம் கூறியது.  

டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு நிதி உதவித் திட்டம்

டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு நிதி உதவித் திட்டம் கர்ப்பிணி மற்றும் பாலூட்டும் பெண்கள், குறிப்பாக பொருளாதாரத்தில் பின்தங்கிய பின்னணியைச் சேர்ந்தவர்களின் நலனுக்காக செயல்படுத்தப்படுகிறது. இத்திட்டத்தின் முக்கிய நோக்கங்கள் தாய் மற்றும் குழந்தை இறப்பு விகிதங்களை குறைப்பது மற்றும் தாய்மார்கள் மற்றும் குழந்தைகளிடையே ஊட்டச்சத்தை மேம்படுத்துவது ஆகும். 

இந்த திட்டத்தின் கீழ், தகுதியுள்ள பெண்கள் கர்ப்பம் மற்றும் பிரசவத்திற்குப் பின்னர் பல்வேறு நிலைகளில் பல தவணைகளில் வழங்கப்படும் ரூ. 18,000 வரை நிதி உதவியைப் பெறுகின்றனர். 

நன்மைகள் பணம் மற்றும் பொருள் இரண்டிலும் வழங்கப்படுகின்றன, சிறந்த தாய் மற்றும் குழந்தை சுகாதாரத்தை உறுதிப்படுத்த ரூ. 4,000 மதிப்புள்ள இரண்டு ஊட்டச்சத்து தொகுப்புகள் வழங்கப்படுகின்றன.   

இத்திட்டத்தில் தகுதிபெற பெண்கள் குறைந்தபட்சம் 19 வயது இருக்க வேண்டும்.

 இந்த திட்டம் மாநிலத்தின் சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறையால் நிர்வகிக்கப்படுகிறது.

பின்னணி

டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு நிதியுதவி  திட்டம் 1987-ல் தமிழ்நாடு அரசால் முதன்முதலில் அறிமுகப்படுத்தப்பட்டது, இது ஏழை கர்ப்பிணிப் பெண்களை, குறிப்பாக அமைப்புசாரா துறையில் உள்ளவர்களை ஆதரிக்கும் நோக்கத்துடன் ஒரு எளிய மகப்பேறு நிதி உதவி திட்டமாக இருந்தது. ஆரம்பத்தில்,   மகப்பேறு செலவுகளை ஈடுகட்ட ரூ. 300 ஒருமுறை பணம் வழங்கப்பட்டது. ஆண்டுகளாக, இந்த திட்டம் பல முறை விரிவாக்கப்பட்டு மேம்படுத்தப்பட்டுள்ளது: இது முறையாக டாக்டர் முத்துலட்சுமி ரெட்டியின் பெயரால் பெயரிடப்பட்டது, மேலும் நிதி உதவித் தொகை அவ்வப்போது அதிகரிக்கப்பட்டு, 2006-ல் ரூ. 6,000, 2012-ல் ரூ. 12,000, மற்றும் 2018-ல் ரூ. 18,000 ஆக உயர்ந்தது. இந்த திட்டம் தமிழ்நாட்டில் தாய் மற்றும் குழந்தை சுகாதாரத்திற்கான முக்கிய நலன் முயற்சியாக தொடர்ந்து சேவை செய்கிறது.

மகப்பேறு நன்மைகள் சட்டம், 1961

2017-ல் திருத்தப்பட்ட மகப்பேறு நன்மை சட்டம், 1961, பிரசவத்திற்கு முன்னும் பின்னும் பெண் ஊழியர்களுக்கு ஊதியத்துடன் கூடிய மகப்பேறு விடுப்பு மற்றும் தொடர்புடைய நன்மைகளை வழங்குகிறது. இது 10 அல்லது அதற்கு மேற்பட்ட ஊழியர்களைக் கொண்ட தொழிற்சாலைகள், சுரங்கங்கள், தோட்டங்கள், அரசு நிறுவனங்கள், கடைகள் மற்றும் பிற பணியிடங்களுக்கு பொருந்தும். ஊழியர் மாநில காப்பீட்டுச் சட்டம், 1948 (Employees' State Insurance - ESI) கீழ் வரும் பெண்கள் ESI சட்டத்தின் கீழ் மகப்பேறு நன்மைகளைப் பெறுகின்றனர். இந்த சட்டம் இரண்டு உயிருள்ள குழந்தைகளுக்கும் குறைவான பெண்களுக்கு 26 வாரங்கள் ஊதியத்துடன் கூடிய மகப்பேறு விடுப்பையும், இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட உயிருள்ள குழந்தைகளைக் கொண்ட பெண்களுக்கு 12 வாரங்கள் விடுப்பையும் வழங்குகிறது. கருச்சிதைவு, மருத்துவ கர்ப்ப நிறுத்தம் அல்லது குழாய் அறுவை சிகிச்சைக்கான ஊதியத்துடன் கூடிய விடுப்பு, மற்றும் தாய்ப்பால் கொடுக்கும் இடைவேளைகள் மற்றும் மகப்பேறு விடுப்பின் போது பணிநீக்கத்திலிருந்து பாதுகாப்பு ஆகியவற்றையும் இந்த சட்டம் வழங்குகிறது.  


India (Unit III) 

பிரேசிலின் பிரேசிலியா (Brasília, Brazil) நகரில் இந்தியா 2025 மே 26 அன்று நடைபெறும் BRICS கலாச்சார அமைச்சர்கள் கூட்டத்தில் பங்கேற்கிறது. மத்திய கலாச்சாரம் மற்றும் சுற்றுலாத் துறை அமைச்சர் திரு. கஜேந்திர சிங் ஷேகாவத் (Shri Gajendra Singh Shekhawat) இந்தியப் பிரதிநிதிகள் குழுவிற்கு தலைமை தாங்குவார். BRICS கலாச்சார அமைச்சர்கள் கூட்டம் உறுப்பு நாடுகளான பிரேசில் (Brazil), ரஷ்யா (Russia), இந்தியா (India), சீனா (China), மற்றும் தென்னாப்பிரிக்கா (South Africa) ஆகியவற்றிடையே பரஸ்பர புரிதல், கலாச்சார பரிமாற்றம் மற்றும் ஒத்துழைப்பு முயற்சிகளை ஊக்குவிப்பதற்கான ஒரு முக்கியமான தளமாகும்.


ஊராட்சிகள் முன்னேற்ற குறியீடு 2.0 (Panchayat Advancement Index (PAI) Version 2.0) 

பஞ்சாயத்து ராஜ் நிறுவனங்கள் மூலம் கிராமப்புறங்களில் முழுமையான, உள்ளடக்கிய, நிலையான வளர்ச்சியை அடைவதை நோக்கமாகக் கொண்டு கிராம பஞ்சாயத்து நிலையில் தரவு அடிப்படையிலான கண்காணிப்புக்கும் திட்டமிடலுக்குமான திறன்களை உருவாக்குவதை இது நோக்கமாகக் கொண்டுள்ளது.

உள்ளூர்மயமாக்கப்பட்ட நிலையான வளர்ச்சி இலக்குகளுடன் (Localized Sustainable Development Goals (LSDGs)) இணைந்த ஒன்பது கருப்பொருள்களில் கிராம பஞ்சாயத்துகளின் முன்னேற்றத்தை மதிப்பிடுவதற்கும் கண்காணிப்பதற்கும் ஊராட்சிகள் (பஞ்சாயத்து) முன்னேற்ற குறியீடு ஒரு வலுவான, பல பரிமாண கருவியாக உருவாக்கப்பட்டுள்ளது. இந்த கருப்பொருள்கள் வறுமை ஒழிப்பு, சுகாதாரம், கல்வி, நீர் மேலாண்மை, தூய சுற்றுச்சூழல், உள்கட்டமைப்பு, நிர்வாகம், சமூக நீதி, பெண்களுக்கு அதிகாரமளித்தல் போன்ற பகுதிகளை உள்ளடக்கியது.

பஞ்சாயத்து முன்னேற்ற குறியீடு (Panchayat Advancement Index - PAI) 1.0 (நிதியாண்டு 2022–23) ஒரு அடிப்படை மதிப்பீட்டு கருவியாக செயல்பட்ட அதே வேளையில், PAI 2.0 விரிவான களப்பணி அனுபவம் மற்றும் பங்குதாரர்களின் கருத்துக்களின் அடிப்படையில் முக்கிய மேம்பாடுகளை உள்ளடக்கியுள்ளது. PAI 2.0 குறிகாட்டிகளின் எண்ணிக்கையை 516 இலிருந்து 147 ஆக பகுத்தறிவுப்படுத்துவதன் மூலம் மிகவும் கூர்மையான மற்றும் மையமான கட்டமைப்பை அறிமுகப்படுத்துகிறது. PAI 2.0 இல் உள்ள முக்கிய மேம்பாடுகள் பின்வருமாறு:


  • PAI 1.0 இலிருந்து 516 குறிகாட்டிகளின் எண்ணிக்கையை PAI 2.0 இல் 147 ஆக குறைத்து பயன்பாட்டை மேம்படுத்துதல் மற்றும் அறிக்கையிடல் சுமையை குறைத்தல்;

  • பகுத்தறிவு படுத்தப்பட்ட தரவு புள்ளிகள் மற்றும் கருப்பொருள்கள், அளவை விட தரத்தில் கவனம் செலுத்துதல்;

  • மத்திய அரசு அமைச்சகங்கள் மற்றும் துறைகளின் தேசிய வலைப்பதிவுகளிலிருந்து தரவின் தானியங்கி ஒருங்கிணைப்பு;

  • மேம்படுத்தப்பட்ட டேஷ்போர்டுகள் (dashboards) மற்றும் பயனர் அணுகல் தன்மையுடன் நெறிப்படுத்தப்பட்ட மற்றும் மொபைல் (mobile) நட்பு வலைப்பதிவு இடைமுகம்;

  • துல்லியமான தரவு நுழைவு மற்றும் கண்காணிப்பை உறுதிசெய்வதற்கான உள்ளமைக்கப்பட்ட சரிபார்ப்பு மற்றும் முரண்பாடு கண்டறிதல் வழிமுறைகள்;

  • பஞ்சாயத்துகள் வளர்ச்சி இடைவெளிகளை அடையாளம் காணவும் வளம் ஒதுக்கீட்டிற்கு முன்னுரிமை அளிக்கவும் உதவும் முடிவு ஆதரவு அமைப்பு (Decision Support System).

எழுச்சி பெறும் வடகிழக்கு முதலீட்டாளர்கள் உச்சி மாநாடு 2025 (Rising North East Investors Summit 2025)-ஐ  பிரதமர் திரு. நரேந்திர மோடி 23.5.2025 அன்று புது தில்லியில் தொடங்கி வைத்தார். 

நாட்டின் தென் பகுதியில் உள்ள மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்களுக்கான கருத்தரங்கம் (Regional Power Conference with Southern States/ UTs) பெங்களூருவில் மத்திய மின்சாரம், வீட்டுவசதி, நகர்ப்புற விவகாரங்கள் துறை அமைச்சர் திரு மனோகர் லால் தலைமையில் 23.5.2025 அன்று நடைபெற்றது.


இந்தியா போஸ்ட் பேமென்ட்ஸ் வங்கி (India Post Payments Bank) மற்றும்  நிதி சேவை நிறுவனமான ஆதித்யா பிர்லா கேபிடல் நிறுவனம் (Aditya Birla Capital Limited), நாடு முழுவதும் கடன் வசதிக்கான அணுகலை விரிவுபடுத்துவதற்கான உத்தி சார் கூட்டாண்மையை அறிவித்துள்ளது.

  • நாடு முழுவதும் ஐபிபிபி வாடிக்கையாளர்களுக்கு தடையற்ற கடன் அணுகலை வழங்குவதை நோக்கமாகக் கொண்டு, ஆதித்யா பிர்லா கேபிடலின் பல்வேறு கடன் தயாரிப்புகளை ஐபிபிபியின் விரிவான வலைப்பின்னல் மற்றும் டிஜிட்டல் உள்கட்டமைப்புடன் இந்தக் கூட்டாண்மை ஒருங்கிணைக்கிறது. இந்த ஒத்துழைப்பின் மூலம், தனிநபர் கடன்கள், வணிகக் கடன்கள் மற்றும் சொத்து மீதான கடன் உள்ளிட்ட ஆதித்யா பிர்லா கேபிடலின் பரந்த அளவிலான கடன் தீர்வுகளுக்கான பரிந்துரை சேவையை ஐபிபிபி அதன் தற்போதைய வாடிக்கையாளர் தளத்திற்கு வழங்கும்.

  • விரைவான ஒப்புதல்கள், குறைந்தபட்ச ஆவணங்கள் மற்றும் இன்னலற்ற விநியோகத்திற்கான நெறிப்படுத்தப்பட்ட செயல்முறையை உறுதி செய்யும் ஆதித்யா பிர்லா கேபிடலின் அதிநவீன டிஜிட்டல் தளங்கள் மூலம் ஐபிபிபி வாடிக்கையாளர்கள் கடன் வசதிகளைப் பெற முடியும்.

இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கி பற்றி : இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கி (India Post Payments Bank - IPPB) தகவல் தொடர்பு அமைச்சகத்தின் கீழுள்ள அஞ்சல் துறையின் (Department of Posts, Ministry of Communication) கீழ் இந்திய அரசின் 100% பங்குடைமையுடன் நிறுவப்பட்டுள்ளது. IPPB செப்டம்பர் 1, 2018 அன்று தொடங்கப்பட்டது. இந்தியாவில் பொதுமக்களுக்கு மிகவும் அணுகக்கூடிய, மலிவு விலை மற்றும் நம்பகமான வங்கியை உருவாக்கும் நோக்கத்துடன் இந்த வங்கி நிறுவப்பட்டுள்ளது. இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கியின் அடிப்படை ஆணை வங்கி சேவை இல்லாதவர்கள் மற்றும் குறைந்த வங்கி சேவை பெறுபவர்களுக்கான தடைகளை நீக்கி, சுமார் 1,65,000 அஞ்சல் அலுவலகங்கள் (கிராமப்புறங்களில் சுமார் 140,000) மற்றும் சுமார் 3,00,000 அஞ்சல் ஊழியர்களை உள்ளடக்கிய அஞ்சல் வலையமைப்பை (Postal network) பயன்படுத்தி கடைசி மைல் வரை சென்றடைவதாகும்.


இந்தோனேசியாவின் ஜகார்த்தாவில் மே 20–22, 2025 அன்று நடைபெற்ற ஆசிய உற்பத்தித்திறன் அமைப்பின் (Asian Productivity Organization (APO) நிர்வாகக் குழுவின் பொதுக்குழுக் கூட்டத்தின் 67வது அமர்வின் போது, 2025–26 காலத்திற்கான ஆசிய உற்பத்தித்திறன் அமைப்பின்  தலைமைப் பொறுப்பை இந்தியா முறையாக ஏற்றுக்கொண்டது.


தடைசெய்யப்பட்ட CPI (மாவோயிஸ்ட்) பொதுச் செயலாளர் நம்பாலா கேசவ ராவ் (மாற்றுப்பெயர் பசவராஜு), மத்திய ரிசர்வ் போலீஸ் படை (Central Reserve Police Force - CRPF) மற்றும் மாவட்ட ரிசர்வ் காவலர் (District Reserve Guard - DRG) ஆகியவற்றின் கூட்டுப் படையான பாதுகாப்புப் படைகளால் 21.5.2025 அன்று சத்தீஸ்கரில் கொல்லப்பட்டார்.

மிசோரம் மே 20, 2025 அன்று முழு செயல்பாட்டு கல்வியறிவை (full functional literacy) அடைந்த இந்தியாவின் முதல் மாநிலமாக ஆனது. காலக்கட்ட தொழிலாளர் ஆய்வு (Periodic Labour Force Survey - PLFS) 2023-24-ன் படி மாநிலம் 98.2% கல்வியறிவு விகிதத்தை அடைந்துள்ளது, இது முழு கல்வியறிவு நிலைக்கு தேவையான கல்வி அமைச்சகத்தின் 95% அளவுகோலை தாண்டியுள்ளது. இந்த மைல்கல் 2022-2027-க்கான கல்வி அமைச்சகத்தால் தொடங்கப்பட்ட மத்திய அரசு ஆதரவு திட்டமான ULLAS (Understanding of Lifelong Learning for All in Society) திட்டத்தின் பலனாக ஏற்பட்டுள்ளது.  ULLAS முறையான கல்வியைத் தவறவிட்ட 15 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட பெரியவர்களை இலக்காகக் கொண்டு, அடிப்படை கல்வியறிவு, எண்ணறிவு, முக்கியமான வாழ்க்கை திறன்கள், தொழில்சார் திறன்கள் மற்றும் தொடர்ச்சியான கல்வியில் கவனம் செலுத்துகிறது, தன்னார்வ சேவை மற்றும் சமூக ஈடுபாட்டின் மூலம் செயல்படுத்தப்படுகிறது.


பீகாரில் உள்ள நாலந்தா பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக சச்சின் சதுர்வேதி 21.5.2025 அன்று பொறுப்பேற்றார்.


தடைசெய்யப்பட்ட CPI (மாவோயிஸ்ட்) பொதுச் செயலாளர் நம்பாலா கேசவ ராவ், மாற்றுப்பெயர் பசவராஜு, மத்திய ரிசர்வ் போலீஸ் படை (Central Reserve Police Force - CRPF) மற்றும் மாவட்ட ரிசர்வ் காவலர் (District Reserve Guard - DRG) ஆகியவற்றின் கூட்டுப் படையான பாதுகாப்புப் படைகளால் 21.5.2025 அன்று சத்தீஸ்கரில் கொல்லப்பட்டார்.


Economy (Unit V)

சைபர் மோசடி தடுப்பு நடைமுறைகளை வலுப்படுத்த "நிதி மோசடி இடர்பாட்டுக் குறிகாட்டி" (Financial Fraud Risk Indicator (FRI)) -யைத் தொலைத்தொடர்புத் துறை அறிமுகப்படுத்துகிறது இது சைபர் மோசடி தடுப்பு நடைமுறைகளில் மேம்பட்ட செயல்பாடுகளுடன் கூடிய  நுண்ணறிவுடன் நிதி நிறுவனங்களை மேம்படுத்துவதற்காக டிஜிட்டல் புலனாய்வு தளத்தின் ஒரு அங்கமாக உருவாக்கப்பட்ட பன்முகப்  பரிமாண பகுப்பாய்வு கருவியின் வெளியீடாகும். டிஜிட்டல் பணப் பரிவர்த்தனைகள் மூலம் பணம் செலுத்துவதற்கான முன்மொழிவின் போது, இந்த கருவியின் துணையுடன் மொபைல் எண்கள் குறிக்கப்பட்டிருந்தால், அது சைபர் பாதுகாப்பு மற்றும் சரிபார்ப்பு சோதனைகளை மேம்படுத்த உதவிடும்.

"நிதி மோசடி இடர்பாட்டுக் குறிகாட்டி" என்றால் என்ன?

இது ஒரு ஆபத்து அடிப்படையிலான அளவீடு ஆகும். இது ஒரு மொபைல் எண்ணை நடுத்தர, உயர் அல்லது மிக அதிக நிதி மோசடி அபாயத்துடன் தொடர்புடையதாக வகைப்படுத்துகிறது. இந்த வகைப்பாடானது இந்திய சைபர் குற்ற ஒருங்கிணைப்பு மையம், தேசிய சைபர் குற்ற அறிக்கையிடல் தளம், தொலைத்தொடர்புத் துறையின் சாக்ஷு தளம்,வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களால் பகிரப்பட்ட உளவுத் தகவல்கள் உள்ளிட்ட பல்வேறு பங்குதாரர்களிடமிருந்து பெறப்பட்ட உள்ளீடுகளின் விளைவாகும். ஒரு மொபைல் எண்ணுக்கு அதிக அளவிலான ஆபத்து இருந்தால் இந்தச் செயலியின் செயல்பாட்டிற்கு முன்னுரிமை அளிக்கவும் கூடுதல் வாடிக்கையாளர் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளவும்  பங்குதாரர்களுக்கு - குறிப்பாக வங்கிகள், வங்கி சாரா நிதி நிறுவனங்கள் மற்றும் யுபிஐ சேவை வழங்குநர்களுக்கு இது அதிகாரம் அளிக்கிறது.

அத்தகைய முன்கூட்டிய அறிவிப்பு எவ்வாறு உதவுகிறது?

தொலைத்தொடர்ப்புத் துறையின் டிஜிட்டல் புலனாய்வு பிரிவால் சைபர் குற்றத்தில் ஈடுபட்டுள்ளது, மறு சரிபார்ப்பு தோல்வியடைந்துள்ளது, பரிந்துரைக்கப்பட்ட வரம்புகளை மீறுயுள்ளது போன்ற காரணங்களுக்காக சேவை துண்டிக்கப்பட்ட மொபைல் எண்களின் பட்டியலை (மொபைல் எண் ரத்து பட்டியல்) பங்குதாரர்களுடன் தொடர்ந்து பகிர்ந்து கொள்கிறது.  இந்த எண்கள் பொதுவாக நிதி மோசடிகளுக்கும் பயன்படுத்தப்படுகின்றன.


2024-25 நிதியாண்டிற்கான ஊழியர் சேம நிதி (Employees' Provident Fund - EPF) வட்டி வீதத்தை 8.25% என அரசாங்கம் உறுதிப்படுத்தியுள்ளது. இது ஓய்வூதிய நிதி அமைப்பான EPFO (Employees' Provident Fund Organisation) ஏழு கோடிக்கும் மேற்பட்ட சந்தாதாரர்களின் ஓய்வுக்கால நிதிகளில் வருடாந்திர வட்டி திரட்சியை வைப்பு செய்ய வழிவகுக்கும்.


இந்திய ரிசர்வ் வங்கி (Reserve Bank of India - RBI)   2024-25 நிதியாண்டிற்கு மத்திய அரசுக்கு ரூ. 2.69 லட்சம் கோடி  உபரி நிதி பரிமாற்றத்தை (surplus transfer) அங்கீகரித்துள்ளது. மே 15, 2025 அன்று RBI-ன் மத்திய வாரியத்தால் புதுப்பிக்கப்பட்டு அங்கீகரிக்கப்பட்ட திருத்தப்பட்ட பொருளாதார மூலதன கட்டமைப்பின் (Economic Capital Framework - ECF) அடிப்படையில் உபரித் தொகை நிர்ணயிக்கப்பட்டது. உபரி பரிமாற்ற நடைமுறை RBI சட்டம், 1934-ன் பிரிவு 47 ஆல் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

பிமல் ஜாலன் குழுவின் பரிந்துரைகளின் அடிப்படையில் RBI ஆல் 2019-ல் பொருளாதார மூலதன கட்டமைப்பு ((Economic Capital Framework - ECF) ) ஏற்றுக்கொள்ளப்பட்டது.


இந்தியாவிற்கான நிகர நேரடி வெளிநாட்டு முதலீடு (Net Foreign Direct Investment - FDI) 2024-25-ல் முந்தைய ஆண்டை விட 96%-க்கும் மேல் வீழ்ச்சியுற்றது, 2023-24-ல் $10 பில்லியனில் இருந்து கடுமையாக குறைந்து $353 மில்லியன் என்ற  குறைவை அடைந்தது.  இருந்தபோதிலும், இந்தியாவிற்கான மொத்த FDI வரவுகள் உண்மையில் 2024-25-ல் 13.7% அதிகரித்து $81 பில்லியனை எட்டியது, இந்த முதலீடுகளில் 60%-க்கும் மேல் உற்பத்தி, நிதி சேவைகள், ஆற்றல் மற்றும் தகவல் தொடர்பு போன்ற துறைகளுக்கு செல்கின்றன.


2024-25 நிதியாண்டிற்கான பணியாளர் சேம நிதி (Employees' Provident Fund - EPF) வட்டி வீதத்தை 8.25% என அரசாங்கம் உறுதிப்படுத்தியுள்ளது. இது ஓய்வூதிய நிதி அமைப்பான EPFO (Employees' Provident Fund Organisation) ஏழு கோடிக்கும் மேற்பட்ட சந்தாதாரர்களின் ஓய்வுக்கால நிதிகளில் வருடாந்திர வட்டி திரட்சியை வைப்பு செய்ய வழிவகுக்கும்.



Science  & Technology (Unit I)

கோவாவின் "துருவ மற்றும் பெருங்கடல் ஆராய்ச்சி" ("National Centre of Polar and Ocean Research" (NCPOR)) யில் இந்தியாவில் முதன்முறையாகக் கட்டப்பட்ட "சாகர் பவன்" (Sagar Bhavan) மற்றும் "துருவ பவன்" (Polar Bhavan)ஆகியவற்றை புவி அறிவியல் துறை அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் திறந்து வைத்தார். பூமி அமைப்புகள் மற்றும் காலநிலை தொடர்பான தரவுகளைக் காண்பிப்பதற்கான 3D காட்சிப்படுத்தல் தளமான “சயின்ஸ் ஆன் ஸ்பியர் ” முயற்சியையும் அவர் தொடங்கி வைத்தார்.

போலார் பவன் துருவ மற்றும் கடல் ஆராய்ச்சிக்கான ஆய்வகங்கள், அறிவியல் பணியாளர்களுக்கான 55 அறைகள், ஒரு மாநாட்டு அறை, கருத்தரங்கு மண்டபம், நூலகம் மற்றும் கேண்டீன் ஆகியவை அடங்கும்.

சாகர் பவனில் இரண்டு -30°C பனிக்கட்டி மைய ஆய்வகங்கள் மற்றும் வண்டல் மற்றும் உயிரியல் மாதிரிகளை காப்பகப்படுத்துவதற்கான +4°C சேமிப்பு அலகுகள் உள்ளன.


PM E-DRIVE திட்டம்:  பிரதமரின் புதுமையான வாகன மேம்பாட்டில் மின்சார இயக்க புரட்சி (PM Electric Drive Revolution in Innovative Vehicle Enhancement)  திட்டமானது மின்சார வாகனங்களின் (Electric Vehicles - EVs) பயன்பாட்டை விரைவுபடுத்துவதற்கும் நாடு முழுவதும் துணை உள்கட்டமைப்பை உருவாக்குவதற்கும் இந்திய அரசின் ஒரு முக்கிய முன்னெடுப்பு ஆகும். இந்த திட்டம் கனரக தொழில்துறை அமைச்சகத்தால் (Ministry of Heavy Industry) செப்டம்பர் 11, 2024 அன்று தொடங்கப்பட்டது.

ரூ 2,000 கோடி நிதி ஒதுக்கீட்டில், இத்திட்டம் நாடு முழுவதும் சுமார் 72,000 மின்சார வாகனங்களுக்கான பொது மின்னேற்ற நிலையங்களை அமைக்க வகை செய்கிறது. இவை தேசிய நெடுஞ்சாலை வழித்தடங்களில் உள்ள பெருநகரங்கள், சுங்கச்சாவடிகள், ரயில் நிலையங்கள், விமான நிலையங்கள், எரிபொருள் விற்பனை நிலையங்கள் மற்றும் மாநில நெடுஞ்சாலைகள் போன்ற அதிக போக்குவரத்து கொண்ட  50 நெடுஞ்சாலை வழித்தடங்களில் உத்திசார் ரீதியாக அமைக்கப்படும்.


உலக விலங்கு சுகாதார நிறுவனத்தால் (World Organisation for Animal Health - WOAH) உலகின் விலங்குகளின் சுகாதாரம் குறித்த முதல் அறிக்கை வெளியிடப்பட்டது. WOAH-ன் தலைமையகம் பாரிஸில் உள்ளது. இது 1924-ல் Office International des Epizooties என நிறுவப்பட்டது (2003-ல் WOAH என மறுபெயரிடப்பட்டது).

அறிக்கையின் முக்கிய கண்டுபிடிப்புகள்:

விலங்கு நோய்கள் முன்பு பாதிக்கப்படாத பகுதிகளுக்கு இடம்பெயர்ந்து கொண்டிருக்கின்றன, இவற்றில் பாதி (47%) ஜூனோடிக் - அல்லது விலங்கிலிருந்து மனிதனுக்கு பரவும் - சாத்தியம் உள்ளது. பாலூட்டிகளில் பறவைக் காய்ச்சல் வெடிப்புகள் 2023-ஐ விட கடந்த ஆண்டு இருமடங்காக அதிகரித்து, மேலும் பரவல் மற்றும் மனித பரிமாற்றத்தின் ஆபத்தை அதிகரித்துள்ளது. கால்நடை தடுப்பூசிகளுக்கான அணுகல் உலகம் முழுவதும் சமமாக இல்லை, நோய் ஒழிப்பு முயற்சிகள் நிதி மற்றும் அரசியல் சவால்களை எதிர்கொள்கின்றன. விலங்குகளில் ஆன்டிபயாடிக் பயன்பாடு 2020 மற்றும் 2022 க்கு இடையில் 5% குறைந்தது மற்றும் உலகளவில் கால்நடை தடுப்பூசி விரிவாக்கம் ஆன்டிபயாடிக் எதிர்ப்பின் ஆபத்தை குறைக்கும்.

 

World 

புதிய வளர்ச்சி வங்கியின் (New Development Bank - NDB) 9வது உறுப்பினராக  அல்ஜீரியா மே 19, 2025 அன்று  அதிகாரப்பூர்வமாக இணைந்தது. 

புதிய வளர்ச்சி வங்கி (NDB) 2015-ல் BRICS நாடுகளான பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா மற்றும் தென்னாப்பிரிக்காவால் நிறுவப்பட்ட பலதரப்பு வளர்ச்சி வங்கியாகும், இதன் தலைமையகம் சீனாவின் ஷாங்காயில் உள்ளது. 

NDB-க்கான யோசனை முதலில் 2012-ல் புது தில்லியில் நடந்த BRICS உச்சிமாநாட்டில் இந்தியாவால் முன்மொழியப்பட்டது, மேலும் வங்கியை நிறுவுவதற்கான ஒப்பந்தம் 2014-ல் பிரேசிலின் ஃபோர்டலேசாவில் நடந்த BRICS உச்சிமாநாட்டின் போது கையெழுத்தானது. 

NDB-ன் நோக்கம் வளர்ந்து வரும் சந்தைகள் மற்றும் வளரும் நாடுகளில் உள்கட்டமைப்பு மற்றும் நிலையான வளர்ச்சி திட்டங்களுக்கு வளங்களை திரட்டுவது, மற்ற பலதரப்பு மற்றும் பிராந்திய நிதி நிறுவனங்களின் தற்போதைய முயற்சிகளை நிரப்புவது ஆகும். 

உறுப்பினர் தகுதி அனைத்து ஐக்கிய நாடுகள் உறுப்பு நாடுகளுக்கும் திறந்திருக்கிறது, மேலும் வங்கி படிப்படியாக அதன் உறுப்பினர் தகுதியை அசல் BRICS நிறுவனர்களுக்கு அப்பால் விரிவாக்கியுள்ளது. 

தற்போது, NDB-ன் உறுப்பினர்களில் பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா, தென்னாப்பிரிக்கா, பங்களாதேஷ், ஐக்கிய அரபு அமீரகம், எகிப்து மற்றும் அல்ஜீரியா ஆகியவை அடங்கும், உருகுவே வருங்கால உறுப்பினராக பட்டியலிடப்பட்டுள்ளது.


உலக சுகாதார நிறுவனத்தின் (World Health Organization - WHO) 78வது உலக சுகாதார சபை (World Health Assembly - WHA) மே 19 முதல் 27, 2025 வரை ஜெனீவா, சுவிட்சர்லாந்தில் நடைபெற்றது. இந்த கூடுகையானது உலகின் முதல் தொற்றுநோய் ஒப்பந்தத்தை (Pandemic Agreement)  முறையாக ஏற்றுக்கொண்டு வரலாறு படைத்தது.  


”கோல்டன் டோம்" என்ற புதிய வான் ஏவுகணை பாதுகாப்பு அமைப்பை  அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் மே 20, 2025 அன்று

அறிவித்தார். இது அமெரிக்காவை பாலிஸ்டிக், கிரூஸ், ஹைப்பர்சானிக் ஏவுகணைகள் மற்றும் விண்வெளியில் இருந்து வரும் அச்சுறுத்தல்களில் இருந்து பாதுகாக்கும் ஒரு பெரிய திட்டமாகும். இஸ்ரேலின் "அயர்ன் டோம்" அமைப்பை முன்மாதிரியாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. இந்த அமைப்பு நிலம், கடல், விண்வெளியை உள்ளடக்கிய பல அடுக்கு பாதுகாப்பு கேடயத்தை உருவாக்கும். ஆயிரக்கணக்கான செயற்கைக்கோள்களை விண்ணில் செலுத்தி, எதிரி ஏவுகணைகளை விரைவாகக் கண்டறிந்து, கண்காணித்து, அவை ஏவப்பட்ட சில நிமிடங்களில் அழிக்கும்.


அமைப்பின் பெயர்

நாடு

விவரக்குறிப்புகள்

அயர்ன் டோம் (Iron Dome)

இஸ்ரேல்

குறுகிய தூரம் (4-70 கி.மீ.), ராக்கெட்டுகள், பீரங்கி குண்டுகள், ட்ரோன்களைத் தடுக்கிறது.

டேவிட்ஸ் ஸ்லிங் (David’s Sling)

இஸ்ரேல்

நடுத்தர-நீண்ட தூரம் (40-300 கி.மீ.), விமானங்கள், ட்ரோன்கள், ஏவுகணைகளைத் தடுக்கிறது.

அரோ-2, அரோ-3 (Arrow-2, Arrow-3)

இஸ்ரேல்

நீண்ட தூரம், பாலிஸ்டிக் ஏவுகணைகள், வளிமண்டலத்திற்கு வெளியே ICBM-களைத் தடுக்கிறது.

எஸ்-400 ட்ரையம்ப் (S-400 Triumph)

ரஷ்யா

நீண்ட தூரம், விமானங்கள், கிரூஸ், பாலிஸ்டிக் ஏவுகணைகளைத் தடுக்கிறது.

தாட் (THAAD)

அமெரிக்கா

உயர் உயரத்தில் பாலிஸ்டிக் ஏவுகணைகளைத் தடுக்கிறது.

எச்எ-9 (HQ-9)

சீனா

125 கி.மீ. தூரம், விமானங்கள், ஏவுகணைகளைத் தடுக்கிறது.



Others - Sports, Dates, Books

சர்வதேச தேயிலை தினம் - மே 21 


சர்வதேச உயிரியல் பன்முகத்தன்மை தினம் - மே 22 


 

ஈரானிய திரைப்பட இயக்குநர் ஜாபர் பனாஹியின் பழிவாங்கல் த்ரில்லர் திரைப்படம் "It Was Just an Accident" 2025 கேன்ஸ் திரைப்பட விழாவில் பாம் டி'ஓர் (Palme d'Or) விருதை வென்றது.

"Heart Lamp" புத்தகத்திற்கு சர்வதேச புக்கர் பரிசு 2025  : கர்நாடகாவைச் சேர்ந்த பானு முஷ்தாக்கின் 12 சிறுகதைகளின் தொகுப்பான "Heart Lamp", 1990 முதல் 2023 வரை எழுதப்பட்டு தீபா பாஸ்தியால் மொழிபெயர்க்கப்பட்டது, பிரெஞ்சு, இத்தாலிய, டேனிஷ் மற்றும் ஜப்பானிய மொழிகளில் உள்ள புத்தகங்கள் அடங்கிய குறுகிய பட்டியலில் இருந்து 2025 சர்வதேச புக்கர் பரிசை வென்றது. கன்னட மொழிக்கு இது முதல் வெற்றியாகும், மேலும் விருதின் வரலாற்றில் முதல் முறையாக சிறுகதைகளின் தொகுப்பு கௌரவிக்கப்பட்டது. ஒரு இந்திய எழுத்தாளருக்கான இந்த விருது, டெய்சி ராக்வெல் மொழிபெயர்ப்பில் ஹிந்தியில் இருந்து மொழிபெயர்க்கப்பட்ட "Tomb of Sand" நூலுக்காக கீதாஞ்சலி ஸ்ரீ மதிப்புமிக்க இலக்கிய பரிசை வென்ற மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு வருகிறது.

தாதாசாகேப் பால்கே சிறப்பு விருது:

மூத்த பரதநாட்டிய கலைஞர், நடன இயக்குநர் மற்றும் ஆராய்ச்சி அறிஞர் பத்மா சுப்ரஹ்மண்யம் (கலை நிகழ்ச்சிகளில் சிறப்பிற்காக); சென்னை கேந்திராவின் பாரதீய வித்யா பவன் இயக்குநர் கே.என். இராமசாமி (கலை நிகழ்ச்சிகளை மேம்படுத்துவதற்காக); மற்றும் NKM அறக்கட்டளையின் நிறுவனர் எம். முரளி (கலை நிகழ்ச்சிகளை மேம்படுவதற்காக) ஆகியோர் பாரதீய வித்யா பவனில் ALBE அறக்கட்டளையால் ஏற்பாடு செய்யப்பட்ட 'பாரதத்தின் கலாச்சார சங்கமம்' நிறைவு விழாவில் விருது பெற்றனர். (ஆதாரம்: தி ஹிந்து, 22.5.25)


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Respected visitors , this is your area. Ask your queries, post your suggestions. If you know correct answers for other friend's questions, kindly reply them. Motivate One another . Your comments will be posted soon with a small moderation.
Note:Please avoid sharing phone numbers, email Ids and posting abusive comments against the government and recruitment agencies.

Post Bottom ads

Your Ad Spot