பிரதமரின் விஸ்வகா்மா திட்டத்திலுள்ள வழிகாட்டு நெறிமுறைகளை ஆய்வு செய்ய தமிழக அரசின் சாா்பில் குழு அமைப்பு
பிரதமரின் விஸ்வகா்மா திட்டத்திலுள்ள வழிகாட்டு நெறிமுறைகளை ஆய்வு செய்ய தமிழக அரசின் சாா்பில் மாநில திட்டக் குழு துணைத் தலைவா் ஜெ.ஜெயரஞ்சன் தலைமையில் 5 போ் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்தக் குழுவில், ஆயிரம் விளக்கு தொகுதி சட்டப் பேரவை உறுப்பினா் என்.எழிலன், நகராட்சி நிா்வாகம், குடிநீா் வழங்கல் துறை முதன்மைச் செயலா் டி.காா்த்திகேயன், பிற்படுத்தப்பட்டோா், மிகவும் பிற்படுத்தப்பட்டோா் நலத் துறைச் செயலா் ரீட்டா ஹரீஸ் தாக்கா் ஆகியோா் இடம்பெற்றுள்ளனா். குழுவின் உறுப்பினா், ஒருங்கிணைப்பாளராக குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில்கள் துறைச் செயலா் வி.அருண் ராய் செயல்படுவாா்.
பிரதம மந்திரியின் விஸ்வகா்மா திட்டம் பொருளாதார ரீதியில் ஏதேனும் தாக்கத்தையோ அல்லது முன்னேற்றத்தையோ ஏற்படுத்துமா என்பது குறித்தும், மத்திய அரசின் வழிகாட்டு நெறிமுறைகளில் நமது மாநிலத்துக்கு ஏற்றாற்போன்று திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமா என்பது பற்றியும் குழு ஆய்வு செய்யவுள்ளது.