நடப்பு நிகழ்வுகள்
Notifications
Notifications
Welcome to TNPSC Portal !
Search this website

கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம் - முழு தகவல்கள்

  • 1 கோடியே 6 இலட்சத்து 50 ஆயிரம் மகளிருக்கு மாதந்தோறும் ரூ.1000/- வழங்கிடும் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தை    மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க.ஸ்டாலின் அவர்கள் பேரறிஞர் அண்ணா அவர்களின் பிறந்தநாளான  15.9.2023 அன்று காஞ்சிபுரம், பச்சையப்பன் ஆடவர் கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற விழாவில் தொடங்கி வைத்தார். 
  •  தமிழ்நாடு அரசின் 2023-24ஆம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையில்,    தகுதிவாய்ந்த குடும்பங்களின் குடும்பத் தலைவிகளுக்கு வரும் நிதியாண்டில் மாதம் 1,000 ரூபாய் உரிமைத் தொகையாக வழங்கப்படும். வரலாற்றுச் சிறப்புமிக்க இந்தத் திட்டம் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டான இந்த ஆண்டில்,   அறிஞர் அண்ணா அவர்களின் பிறந்தநாளான செப்டம்பர் மாதம் 15 ஆம் நாள் மாண்புமிகு முதலமைச்சர் அவர்களால் தொடங்கி வைக்கப்படும்” என்று அறிவிக்கப்பட்டது. 
  • இந்த திட்டத்திற்காக 2023- 2024 ஆம் நிதி ஆண்டுக்கு 7 ஆயிரம் கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.  
  • இத்திட்டத்தை செயல்படுத்துவது குறித்து முதலமைச்சர் அவர்கள் சட்டமன்றத்தில் அளித்த விளக்கத்தில், “மகளிர் உரிமைத் தொகைத் திட்டம்” இரண்டு நோக்கங்களைக் கொண்டது. பிரதிபலன் பாராமல் வாழ்நாளெல்லாம் ஓயாமல் உழைத்துக்கொண்டிருக்கும் பெண்களின் உழைப்புக்குக் கொடுக்கும் அங்கீகாரம் முதன்மையானது. அடுத்து, ஆண்டுக்கு 12 ஆயிரம் ரூபாய் உரிமைத் தொகை என்பது, பெண்களின் வாழ்வாதாரத்திற்கு உறுதுணையாக இருந்து, வறுமையை ஒழித்து, வாழ்க்கைத் தரத்தை உயர்த்தி, சுயமரியாதையோடு சமூகத்தில் அவர்கள் வாழ்வதற்கு உறுதுணையாக இருக்க வேண்டும் என்பதாகும். 
  • கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்ட அதிகாரியாக இளம்பகவத் ஐ.ஏ.எஸ். அவர்களை தமிழ்நாடு அரசு நியமனம் செய்தது. 
  •  மகளிரின் சமூகப் பங்களிப்பை அங்கீகரிக்கும் அறிவிக்கப்பட்டிருக்கும் மாதம் ஆயிரம் ரூபாய் என்பது, குடும்பத் தலைவிகளுக்கு அவரவர் வங்கிக் கணக்கில் நேரடியாகச் செலுத்தப்படும். 
  • நடைபாதையில் வணிகம் செய்திடும் மகளிர், அதிகாலையில் கடற்கரை நோக்கி விரைந்திடும் மீனவ மகளிர், கட்டுமானத் தொழிலில் பணிபுரியும் மகளிர், சிறிய கடைகள், வணிகம் மற்றும் சிறுதொழில் நிறுவனங்களில் சொற்ப ஊதியத்தில் பணிபுரியும் மகளிர், ஒரே நாளில் ஒன்றுக்கு மேற்பட்ட இல்லங்களில் பணிபுரியக்கூடிய பெண்கள் என பல்வேறு வகைகளில் தங்கள் விலைமதிப்பில்லா உழைப்பைத் தொடர்ந்து வழங்கி வரும் பெண்கள் இந்தத் திட்டத்தால் பயன்பெறுவார்கள் என்றும், இந்த மகத்தான ‘கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம்' ஏறத்தாழ ஒரு கோடி குடும்பத் தலைவிகளுக்கு, மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கிடும் வகையில் அமைந்திடும். 
  • கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தில் இணைந்து கொள்ள 1 கோடியே 63 லட்சம் விண்ணப்பங்கள் அரசிற்கு வந்துள்ளது. அவற்றில் தகுதியுள்ள 1 கோடியே 6 லட்சத்து 50 ஆயிரம் விண்ணப்பங்கள் தேர்வு செய்யப்பட்டு, அவர்களுக்கு கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தின் கீழ் மாதந்தோறும் ரூ.1000/- அவர்களது வங்கிக் கணக்கில் நேரடியாக செலுத்தப்படும்.  

கூ.தக. :  தருமபுரி மாவட்டம், தொப்பூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டப் பயனாளிகளின் விண்ணப்பங்களைப் பதிவு செய்யும் முகாமினை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் 24.7.2023 அன்று தொடங்கி வைத்தார்.  இந்தத் திட்டத்தில் மாநிலம் முழுவதும் விண்ணப்பங்கள் பெற 24.07.2023 முதல் 4.08.2023 வரை முதல் கட்டமாகவும், 5.08.2023 முதல் 14.08.2023 வரை இரண்டாவது கட்டமாகவும், மேற்சொன்ன இரண்டு கட்டங்களிலும், விடுபட்டவர்களுக்கு 18.08.2023 முதல் 20.08.2023 வரை சிறப்பு முகாம் வழியாகவும் விண்ணப்பங்கள் பெறப்பட்டு பதிவு செய்யப்பட்டன. Announcement !
Join the conversation
Post a Comment
Link copied to clipboard