நடப்பு நிகழ்வுகள்
Notifications
Notifications
Welcome to TNPSC Portal !
Search this website

“ஒளிரும் தமிழ்நாடு - மிளிரும் தமிழர்கள்” சாதனை படைத்த தமிழ்நாட்டு விண்வெளி விஞ்ஞானிகளுக்குப் பாராட்டு விழா

  “ஒளிரும் தமிழ்நாடு - மிளிரும் தமிழர்கள்” சாதனை படைத்த தமிழ்நாட்டு விண்வெளி விஞ்ஞானிகளுக்குப் பாராட்டு விழா 2.10.2023 அன்று சென்னை அண்ணா நூற்றாண்டு நூலக கலையரங்கில் நடைபெற்றது.  இந்நிகழ்வில், இந்திய விண்வெளி துறையில் சாதனை படைத்த விஞ்ஞானிகள்- இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனத்தின் முன்னாள் தலைவர்கள் முனைவர் கே. சிவன், முனைவர் மயில்சாமி அண்ணாதுரை, திருவனந்தபுரம் – திரவ உந்து அமைப்பு மையத்தின் இயக்குநர் முனைவர் வி.நாராயணன், ஸ்ரீஹரிகோட்டா - சதீஷ் தவான் விண்வெளி ஆராய்ச்சி மையத்தின் இயக்குநர் திரு. ஏ. இராஜராஜன், பெங்களுரு - யு.ஆர். ராவ் செயற்கைகோள் மையத்தின் இயக்குநர் திரு. எம். சங்கரன், மகேந்திரகிரி - உந்துவிசை வளாக இயக்குநர் திரு. ஜெ. ஆசிர் பாக்கியராஜ், சந்திராயன்- 2 திட்ட இயக்குநர் திருமதி மு. வனிதா, ஆதித்யா L1 திட்ட இயக்குநர் திருமதி நிகார் ஷாஜி, சந்திராயன்- 3 திட்ட இயக்குநர் திரு. ப. வீரமுத்துவேல் ஆகியோரை பாராட்டி, அவர்களுக்கு சால்வை அணிவித்து,  தலா 25 லட்சம் ரூபாய் , பாராட்டு சான்றிதழ் மற்றும் நினைவுப் பரிசுகளை வழங்கி சிறப்பித்தார்.  

சாதனை விஞ்ஞானிகள் பெயரில் ஸ்காலர்ஷிப்  :  

 பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்படும் 7.5 விழுக்காடு ஒதுக்கீட்டின் கீழ், அரசின் கல்வி உதவித்தொகை பெற்று இளநிலை பொறியியல் படிப்பை முடித்து, முதுநிலை பொறியியல் படிப்பை தொடர்கின்ற 9 மாணவர்களுக்கு சாதனை விஞ்ஞானிகள் பெயரில் ஸ்காலர்ஷிப் வழங்கப்படும் என முதலமைச்சர் அறிவித்துள்ளார். இந்தக் கல்வி உதவித்தொகைக்காக, பத்து கோடி ரூபாயில் தொகுப்பு நிதியம் ஒன்று உருவாக்கப்படும். 

விழா நாயகர்கள் பற்றி ...

டாக்டர் வீரமுத்துவேல் அவர்கள் – விழுப்புரத்தில் பிறந்தவர். கடந்த ஆகஸ்ட் 23-ஆம் நாள் ஏவப்பட்ட சந்திரயான்-3 திட்டத்தின் வெற்றிகரமான இயக்குநர் .நிலாவை தொட்ட நான்காவது நாடு என்ற பெருமையை இந்தியா பெற்றிருக்கிறது. 1959-ஆம் ஆண்டு சோவியத் ஒன்றியமும், 1964-ஆம் ஆண்டு அமெரிக்காவும், 2013-ஆம் ஆண்டு சீனாவும்தான் இந்தச் சாதனையை செய்திருக்கிறார்கள். 2008-ஆம் ஆண்டு நிலாவை நோக்கிய பயணத்தை இந்தியா தொடங்கியது. 2023-ஆம் ஆண்டில் அந்த சாதனையின் எல்லையை அடைந்திருக்கிறது.  இதுவரை அறியப்படாத நிலவின் தென்துருவப் பகுதியை சந்திரயான்-3 தரையிறங்கி ஆராயத் தொடங்கியிருக்கிறது. அந்த சந்திரயான்-3 திட்டத்தின் இயக்குநராக  தமிழ்நாட்டைச் சேர்ந்த திரு. ப. வீரமுத்துவேல்  செயல்பட்டுள்ளார். 

சந்திரயான் 1 திட்ட இயக்குநராக இருந்தவர் மயில்சாமி அண்ணாதுரை அவர்கள். 2008 அக்டோபர் 28-ஆம் நாள் அது நிலவை சுற்றத் தொடங்கியது. நிலவில் நீர்க்கூறுகள் இருப்பதை அதுதான் கண்டறிந்து சொன்னது. சந்திரயான்- 2, 2019 ஜூலை 15-ஆம் நாள் ஏவப்பட்டது. இதனுடைய திட்ட இயக்குநராக வனிதா செயல்பட்டார். அந்தக் காலக்கட்டத்தில்தான் இஸ்ரோ தலைவராக டாக்டர் சிவன் அவர்கள் இருந்தார். இப்போது ஏவப்பட்டது சந்திரயான் - 3. இதனுடைய திட்ட இயக்குநர் வீரமுத்துவேல். இதுதான் தமிழ்நாட்டிற்கு கிடைத்த மிகப்பெரிய பெருமை.

 ஏ.ராஜராஜன் அவர்கள் – காஞ்சிபுரம் மாவட்டத்தில் பிறந்தவர். இஸ்ரோவில் வெளியீட்டு அங்கீகார வாரியத் தலைவராக இருக்கிறார். ககன்யான், எஸ்.எஸ்.எல்.வி. போன்ற இஸ்ரோவுடைய விரிவடைகின்ற தேவைகளுக்கு திடமான மோட்டார்கள் தயாரிப்பதில் இவருடைய பங்கு அளப்பரியது. இஸ்ரோ மெரிட் விருதை 2015-ஆம் ஆண்டு பெற்றவர் இவர்.

எம்.சங்கரன் அவர்கள் திருச்சியில் பிறந்தவர். யு.ஆர்.ராவ் விண்வெளி மையத்தின் இயக்குநராக பணியாற்றியவர். சந்திரயான் 1,2,3 – ஆகிய மூன்று திட்டங்களிலும் அவர் தன்னை ஒப்படைத்துக் கொண்டு பணியாற்றி இருக்கக்கூடியவர். சூரியனை பற்றி ஆய்வு செய்ய இந்தியா அனுப்பிய ஆதித்தியா எல்-1 என்ற விண்வெளித் திட்டத்திலும் பணியாற்றியவர். தொழில்நுட்பக் கருவிகள் உள்நாட்டிலேயே உற்பத்தி செய்ய முடியும் என்று நிரூபித்துக் காட்டியவர்களில் ஒருவர் நம்முடைய எம்.சங்கரன் அவர்கள். 

 ஆசீர் பாக்கியராஜ் அவர்கள் - தூத்துக்குடியில் பிறந்தவர். ராக்கெட் எஞ்சின் விண்கல இயந்திரங்களின் உயர்சோதனைத் துறையில் பெரும் ஈடுபாடு கொண்டவர். ராக்கெட் நிலை ஒருங்கிணைப்புகளில் நவீன வசதிகளை நிறுவியவர். G.S.L.V.-யை இவருடைய குழுதான் ஒருங்கிணைத்தது. உயர் தொழில்நுட்பங்களை இணைப்பதில், இவருடைய பங்களிப்பு முக்கியமானது. 

டாக்டர் எம்.வனிதா அவர்கள் சென்னையைச் சேர்ந்தவர். சந்திரயான்-2 திட்டத்தின் இயக்குநராக இருந்த பெருமைக்குரியவர். மங்கல்யான் வடிவமைப்பிலேயும் முக்கியப் பங்காற்றியவர். இஸ்ரோவில் திட்ட இயக்குநராக பணியாற்றிய முதல் பெண் விஞ்ஞானி என்ற பெருமைக்குரியவர். சிறந்த பெண் விஞ்ஞானி விருதையும் பெற்றவர்.  

 டாக்டர் நிகார் ஷாஜி அவர்கள் - தென்காசி மாவட்டம் செங்கோட்டையைச் சேர்ந்தவர். 1987 முதல் இஸ்ரோவில் பணியாற்றி வருகிறார். இஸ்ரோவின் சூரியன் ஆய்வுத் திட்டமான ஆதித்தியா எல் ONE திட்டத்தினுடைய திட்ட இயக்குநராக செயலாற்றினார். 

வி.நாராயணன் அவர்கள் குமரி மாவட்டத்தில் பிறந்தவர். திருவனந்தபுரம் திரவ உந்துசக்தி மையத்தின் இயக்குநராக இருக்கிறார். இஸ்ரோ தயாரித்த பெரும்பாலான ராக்கெட் தயாரிப்புகளில் இவருடைய பங்கு அளப்பரியது. சந்திரயான்-3 விண்ணில் செலுத்தப் பயன்படுத்திய மார்க்-3 ராக்கெட் உருவாக்கத்தில் முக்கியப் பங்காற்றியவர். இஸ்ரோவின் சிறந்த விஞ்ஞானி விருதை இரண்டு முறை பெற்றவர் திரு. நாராயணன் அவர்கள். 

டாக்டர் சிவன் அவர்கள் கன்னியாகுமரி மாவட்டம் சரக்கல்விளை என்ற ஊரில் பிறந்தவர். 1982-ஆம் ஆண்டு இஸ்ரோவில் சேர்ந்து 2018-ஆம் ஆண்டு இஸ்ரோ தலைவராக உயர்ந்த ஆற்றலுக்குரியவர். பி.எஸ்.எல்.வி. மூலம் 104 விண்கலங்களுக்கான திட்ட ஒருங்கிணைப்பாளராக இருந்தார். ராக்கெட் அமைப்பு தொடர்பாக சித்தாரா-என்ற மென்பொருளை உருவாக்கியவர்.  

 மயில்சாமி அண்ணாதுரை அவர்கள் பொள்ளாச்சி அருகில் கோத்தவாடி என்கின்ற கிராமத்தில் பிறந்தவர். 36 ஆண்டுகள் இஸ்ரோவில் பணியாற்றியவர். மூன்றாண்டு காலம் இஸ்ரோ விண்வெளி ஆய்வு மையத்தில் திட்ட இயக்குநராக இருந்தவர். பல்வேறு விண்கலங்களை செலுத்துவதில் முக்கியப் பங்காற்றியவர். சந்திரயான்-1 வடிவமைப்பில் இந்தியக் கொடியை பொருத்தியவர் இவர்.

Announcement !
உரையாடலில் சேர்
கருத்துரையிடுக
கிளிப்போர்டுக்கு இணைப்பு நகலெடுக்கப்பட்டது!