நடப்பு நிகழ்வுகள்
Notifications
Notifications
Welcome to TNPSC Portal !
Search this website

கிராம சபைக் கூட்டங்கள் தமிழ்நாடு முழுவதும் 2.10.2023 , காந்தி ஜெயந்தி அன்று நடைபெற்றன.

  அண்ணல் காந்தியடிகள்   "இந்தியா- கிராமங்களில் வாழ்கிறது” என்று சொல்லி, 'கிராம சுயராஜ்ஜியம்' எனும் கிராம தற்சார்பு நிலையை எல்லா கிராமங்களும் அடைய வேண்டும் என்று விரும்பினார்.  

தமிழ்நாட்டில் கிராமசபை வரலாறு : 

மக்களாட்சி முதலில் மலர்ந்த இடம் கிராமங்கள் தான். காஞ்சிபுரம் பக்கம் இருக்கிற உத்தரமேரூர் வட்டாரம் தான் ஜனநாயகத் தேர்தல் அமைப்பு முறை பிறந்த தொட்டிலாக வரலாற்று ஆசிரியர்களால் சொல்லப்படுகிறது. உத்திரமேரூர் கல்வெட்டு இதை சொல்கிறது. யாரெல்லாம் தேர்தலில் போட்டியிட இருக்கிறார்களோ அவர்கள் எல்லோருடைய பெயரையும் ஓலைச்சுவடியில் எழுதிக் குடத்தில் போடுவார்கள். அந்தக் குடத்தை குலுக்கி ஒரு ஓலையை எடுப்பார்கள். அப்படி எடுக்கப்பட்ட பெயரில் யாருடைய பெயர் பொறிக்கப்பட்டு இருக்கிறதோ அவர் தேர்ந்தெடுக்கப்பட்டதாக அறிவிக்கப்படுவார். இதுதான் குடவோலை முறை. இப்படித்தான் தமிழ்நாட்டில் மக்களாட்சி என்ற அமைப்பே மலர்ந்தது. அந்த வகையில் பார்த்தால் கிராமங்களில்தான் மக்களாட்சி முறையானது முதலில் தோன்றியிருக்கிறது. அதிலும் குறிப்பாக, ‘கிராம சபை’ என்ற அமைப்பு தமிழ்நாட்டை பொறுத்தவரையில், சோழர் காலந்தொட்டே பழக்கத்தில் இருந்து வருகிறது. சோழப் பேரரசில் 'ஊர் மற்றும் மகாசபை' என்கிற இரு வேறு அவைகள் இருந்தது. இதில் மகாசபையை போன்றதுதான் தற்போதைய கிராமசபை என்று அறியமுடிகிறது. 

கிராம சபைகளின் முக்கியத்துவம் 

மக்களாட்சியின் ஆணிவேராக இருக்கிற கிராம சபைக் கூட்டங்களில் மக்களே நேரடியாக விவாதித்து, தங்களுடைய தேவைகளையும், பயனாளிகளையும் தேர்வு செய்வதிலும், வளர்ச்சிக்கான திட்டங்களை தீட்டுவதிலும் முக்கியப் பங்காற்றி வருகிறார்கள். இது இந்திய அளவில் நாடாளுமன்றம், மாநில அளவில் சட்டமன்றம் இருப்பதைப் போல, கிராம அளவில் கிராம சபையானது மக்கள் குரலை எதிரொலிக்கிற மன்றமாக அமைந்திருக்கிறது. 

கிராம சபைகள் குறைந்தது ஆண்டுக்கு இரண்டு முறை நடைபெற வேண்டும் என்று தமிழ்நாடு ஊராட்சிகள் சட்டம் 1994 குறிப்பிட்டிருந்தாலும், அதை ஆண்டுக்கு நான்கு முறை என்று முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் அவர்கள் மாற்றி  அமைத்தார். தற்போதைய  அரசானது, இதை ஆண்டுக்கு 6 முறை கிராம சபைக் கூட்டங்கள் நடைபெற வேண்டும் என்று அதிகரித்திருக்கிறது.

அதன்படி, ஆண்டொன்றுக்கு முறையே *குடியரசு நாள், *உலக தண்ணீர் நாள், *தொழிலாளர் நாள், *விடுதலை நாள், *காந்தியடிகள் பிறந்தநாள் *உள்ளாட்சிகள் நாள் ஆகிய 6 நாட்களில் கிராமசபை நடைபெற்று வருகிறது. 

ஒரு அமைப்பை வலுப்படுத்த வேண்டும் என்றால் அதற்கு அதிகாரம் வழங்க வேண்டும். நிதி ஆதாரங்களையும் ஏற்படுத்தித் தர வேண்டும். கிராம சபைகளுக்கு அதிக அதிகாரங்கள் வழங்கப்பட்டிருக்கிறது. *கிராம ஊராட்சி வளர்ச்சித் திட்டத்தை அங்கீகரித்தல், *ஊராட்சிகளில் மேற்கொள்ளப்படும் பணிகளின் முன்னேற்றத்தினைக் கண்காணித்தல், *ஊராட்சிகளின் வரவு, செலவினங்களை ஆய்வு செய்தல், *பயனாளிகளைத் தேர்வு செய்தல், திட்டக் கண்காணிப்பு செய்தல் ஆகிய அதிகாரங்கள் வழங்கப்பட்டிருக்கிறது. 

கிராம சபை ஒன்றுக்கு கிராம ஊராட்சிகள் மேற்கொள்ளும் செலவினம் ஆயிரம் ரூபாயில் இருந்து ஐந்தாயிரம் ரூபாயாக உயர்த்தப்பட்டிருக்கிறது.  


Announcement !
உரையாடலில் சேர்
கருத்துரையிடுக
கிளிப்போர்டுக்கு இணைப்பு நகலெடுக்கப்பட்டது!