Current Affairs, Latest News Updates, Online Tests for TNPSC Exams

TNPSC நடப்பு நிகழ்வுகள் 9 - 12 மே 2025

 Tamil Nadu (Unit V)  

3, 5, 8-ம் வகுப்பு மாணவர்கள் கற்றல் நிலை தேசிய சராசரியைவிட சிறப்பாக உள்ளது : மாநில திட்டக் குழு  அறிக்கை 


  • தேசிய சராசரியைவிட தமிழகத்தில் 3, 5, 8-ம் வகுப்பு மாணவர்களின் கல்வித் தரம் சிறப்பாக உள்ளதாக மாநில திட்டக் குழு மற்றும் பள்ளிக்கல்வித் துறை இணைந்து நடத்திய கற்றல் அடைவு ஆய்வில் (State-level Achievement Survey 2025 (SLAS)) தெரிவிக்கப்பட்டுள்ளது.

  • தமிழகத்தில் அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் கற்றல் திறனை அளவிடுவதற்காக அவ்வப்போது ‘ஸ்லாஸ்’ (SLAS) எனும் மாநில கற்றல் அடைவுத் தேர்வு நடத்தப்படுகிறது. இந்தத் தேர்வு மாணவர்களின் கற்றல் விளைவுகளை அறிந்து மேம்படுத்தவும், பாடத்திட்டம், கற்பித்தல் மற்றும் ஆசிரியர் பயிற்சி ஆகியவற்றில் சீர்திருத்தங்களைக் கொண்டு வருவதையும் நோக்கமாக கொண்டுள்ளது. 

  •  ‘ஸ்லாஸ்’ தேர்வு  மாநிலத் திட்டக்குழுவுடன் இணைந்து விரிவாக மாநிலம் முழுவதும் உள்ள 45,924 அரசு, அரசு உதவி பள்ளிகளிலும் நடத்தப்பட்டது.அதன்படி நடப்பாண்டு 3, 5, 8-ம் வகுப்பு பயிலும் 15.78 லட்சம் மாணவர்களில் 9 லட்சத்து 80,341 (66%) பேர்களிடம் ஸ்லாஸ் தேர்வு பிப்ரவரி 4 முதல் 6-ம் தேதி வரை நடத்தப்பட்டது. 

  • இந்த ஆய்வின் சிறப்பம்சம் அதிகளவிலான நபர்களிடம் மேற்கொள்ளப்பட்டதாகும். அதிலும் அனைத்து பள்ளிகளிலும் ஆய்வு நடத்தப்பட்டது. அதாவது, 3, 5-ம் வகுப்புகளுக்கு தலா 20 மாணவர்கள் மற்றும் 8-ம் வகுப்புக்கு 30 பேர்களிடம் ஆய்வு நடத்தப்பட்டது. அதன் முடிவுகளின்படி 3-ம் வகுப்பு மாணவர்கள் தமிழ் பாடத்தில் 67%, ஆங்கிலத்தில் 69%, கணிதத்தில் 54%, சூழ்நிலையியல் 76% அடைவை பெற்றுள்ளனர். 5-ம் வகுப்பு மாணவர்கள் தமிழ் பாடத்தில் 76%, ஆங்கிலத்தில் 51%, சூழ்நிலையியல் மற்றும் கணிதத்தில் 57% அடைவை பெற்றுள்ளனர்.

  • இதேபோல், 8-ம் வகுப்பு மாணவர்களை பொருத்தவரை தமிழ் பாடத்தில் 52%, ஆங்கிலத்தில் 39%, கணிதத்தில் 38%, அறிவியல் 37%, சமூக அறிவியல் பாடத்தில் 54% அடைவு பெற்றுள்ளனர். ஒட்டுமொத்தமாக 2021-ம் ஆண்டு மத்திய அரசின் நாஸ் ஆய்வுடன் ஒப்பிடுகையில்தமிழகத்தின் கற்றல் நிலை தேசிய சராசரியைவிட உயர்ந்துள்ளது. குறிப்பாக ‘எண்ணும் எழுத்தும்’ உட்பட சில திட்டங்களால் 3, 5-ம் வகுப்பு மாணவர்களின் கற்றல் அடைவு நிலை சிறப்பாக நிலையில் உள்ளது. அதேநேரம் 8-ம் வகுப்பு கணிதத்தில் மட்டும் மாணவர்கள் சற்று பின்தங்கியிருப்பது தெரியவந்துள்ளது.

  • மாவட்டவாரியான தரநிலையில் அனைத்து வகுப்பு மற்றும் பாடங்களிலும் கன்னியாகுமரி முதலிடத்தில் உள்ளது. தொடர்ந்து கடலூர், மதுரை, தென்காசி, சிவகங்கை அடுத்தடுத்த இடங்களில் இருக்கின்றன.

  • அதேபோல், கோவை, சென்னை, செங்கல்பட்டு, ஈரோடு, நீலகிரி ஆகிய மாவட்டங்கள் தரவரிசையில் கடைசி இடங்களில் உள்ளன.

Image Source : The Hindu 



“100 ஆண்டு திருப்பூர்" எனும் மூத்த செய்தியாளர் திரு. ஆர்.சுப்ரமணியன் அவர்கள் எழுதிய புத்தகத்தை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர்  அவர்கள் வெளியிட்டார்.


 


உலக இஸ்லாமியத் தமிழ் இலக்கிய ஒன்பதாம் மாநாடு   திருச்சிராப்பள்ளி, எம்.ஐ.இ.டி பொறியியல் கல்லூரியில் நடைபெற்றது.   



திருச்சிராப்பள்ளி மாநகர், பஞ்சப்பூரில் 408.36 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்பட்டுள்ள முத்தமிழறிஞர் கலைஞர் மு. கருணாநிதி ஒருங்கிணைந்த பேருந்து முனையம் மற்றும்  128.94 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள பேரறிஞர் அண்ணா கனரக சரக்கு வாகன முனையத்தை  மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க.ஸ்டாலின் அவர்கள் 9.5.2025 அன்று திறந்து வைத்தார்.


‘சுவடுகள்’ : தமிழ்நாடு அரசின் ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை, தமிழ்நாடு முழுவதும் உள்ள ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியின சமூகங்களின் பாரம்பரிய நிகழ்கலை வடிவங்களை ஆவணப்படுத்தி பாதுகாக்கும் நோக்கில் ‘சுவடுகள்’ என்ற பெயரில் ஒரு டிஜிட்டல் களஞ்சியத்தை உருவாக்குவதற்கான திட்டத்தை அறிவித்துள்ளது.  ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியின சமூகங்களால் நிகழ்த்தப்படும் பல கலை வடிவங்கள் இப்போது அழிவின் விளிம்பில் உள்ளன. இந்த சமூகங்களால் மாநிலம் முழுவதும் 560-க்கும் மேற்பட்ட கலை வடிவங்கள் இன்னும் நிகழ்த்தப்படுகின்றன. சில குறிப்பிடத்தக்க எடுத்துக்காட்டுகளாக திண்டுக்கல்லின் சிங்காரி மேளம் (Singari Melam), நாகப்பட்டினத்தின் ராதா காவடி (Radha Kavadi), திருநெல்வேலியின் கனியன் கூத்து (Kaniyan Koothu), திருவண்ணாமலையின் பெரிய மேளம் (Periya Melam), அந்தியூரின் பெரும் பறை (Perum Parai), மற்றும் தர்மபுரியின் மலை கூத்து (Malai Koothu) ஆகியவை உள்ளன. பூத கபால ஆட்டம் (Bootha Kabala Aatam) என்பது தர்மபுரி மாவட்டத்தில் உள்ள குறிப்பிட்ட கோயில்களில் மட்டுமே காணப்படும் ஒரு தனித்துவமான சடங்கு நிகழ்ச்சியாகும்.


“தமிழகத்தில், 'இன்னுயிர் காப்போம்' திட்டம் தனித்தே செயல்படும். மத்திய அரசு நிபந்தனைகளை தளர்த்தினால் இணைந்து செயல்படுவோம்,” என, மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் சுப்பிரமணியன் தெரிவித்தார்.

தமிழகத்தில், 'இன்னுயிர் காப்போம் - நம்மை காக்கும் 48' திட்டம் 2021ல் இருந்து செயல்பாட்டில் உள்ளது.

சாலை விபத்துகளில் சிக்கியவர்கள் உடனடியாக மீட்கப்பட்டு, அருகே உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவதுடன், முதல் 48 மணி நேரத்திற்கான மருத்துவ செலவை, அதிகபட்சம் 2 லட்சம் ரூபாய் வரை, தமிழக அரசு ஏற்கிறது.

இந்த திட்டத்தில், கடந்த மூன்று ஆண்டுகளில், 3.57 லட்சம் பேர் விபத்து காய சிகிச்சையை இலவசமாக பெற்றுள்ளனர்.

அதற்காக அரசு, 318.89 கோடி ரூபாய் செலவிட்டுள்ளது. இந்நிலையில், 'நாடு முழுதும், சாலை விபத்துகளில் சிக்குவோருக்கு, உடனடி சிகிச்சை கிடைக்க, 1.50 லட்சம் ரூபாய் வரையிலான மருத்துவ செலவு கட்டணம் ஏற்கப்படும்' என்று, மத்திய அரசு அறிவித்துள்ளது.

ஆனால், விபத்து நடந்த முதல் 3 மணி நேரத்தில், வழக்குப்பதிவு உள்ளிட்ட ஏழு விதமான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. தமிழகத்தில் செயல்படுத்தப்படும் திட்டத்தில், அவ்வாறான கட்டுப்பாடுகள் ஏதுமில்லை.

விபத்தில் எந்த மாநிலத்தவர், நாட்டினர் பாதிக்கப்பட்டாலும், உடனடியாக எவ்வித ஆவணமுமின்றி சிகிச்சை அளிக்கப்பட்டு, பெரும்பாலானோர் காப்பாற்றப்பட்டு உள்ளனர். அதற்காக, 2 லட்சம் ரூபாயை மாநில அரசு வழங்குகிறது. மத்திய அரசின் நிபந்தனைகளுடன் சேர்த்து, இத்திட்டத்தை செயல்படுத்தினால் பயனடைவோர் எண்ணிக்கை குறையும்.

அதேநேரத்தில், மத்திய அரசின் நிபந்தனைகளை தளர்த்த கோரிக்கை வைக்கப்படும். எதிர்பாராத விபத்துகளில் சிக்குவோருக்கு, மேலும் அழுத்தம் கொடுக்கும் நிபந்தனைகளை மத்திய அரசு தளர்த்தினால், அத்திட்டத்துடன் இன்னுயிர் காப்போம் திட்டம் இணைந்து செயல்படும். அதுவரை, தனித்தே செயல்படுத்தப்படும்.

நன்றி : தினமலர்

திருநெல்வேலியில் புதிதாகக் கட்டப்படவுள்ள நூலகத்துக்கு காயிதே மில்லத் பெயர் சூட்டப்படும் என தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின்  அறிவித்துள்ளார்.

தமிழ்நாடு அமைச்சர்களின் துறைகள் மாற்றம் 8 மே 2025 :  

தமிழ்நாடு அமைச்சர்கள் துரைமுருகன், எஸ்.ரகுபதி ஆகியோருக்கான துறைகள் பரஸ்பரம் மாற்றப்பட்டுள்ளன.  அதன் விவரம்: 

அமைச்சர் துரைமுருகன்: சிறுபாசனம் உள்ளிட்ட பாசனத் திட்டங் கள், சட்டப்பேரவை, ஆளுநர் மற்றும் அமைச்சரவை, தேர்தல்கள், கடவுச்சீட்டுகள் மற்றும் சட்டம்.

அமைச்சர் எஸ்.ரகுபதி: நீதிமன்றங்கள், சிறைச்சாலை, ஊழல் தடுப்புச் சட்டம், கனிமங்கள் மற்றும் சுரங்கங்கள்.



தமிழ்நாட்டில் தொழில் வளர்ச்சி: 


  • மொத்தம் 897 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் (Memoranda of Understanding) கையெழுத்தாகியுள்ளன, இவை ₹10,27,547 கோடி மதிப்பிலான முதலீட்டு திட்டங்களுக்காகவும், 32.23 லட்சம் மக்களுக்கு வேலைவாய்ப்பு உருவாக்குவதற்காகவும் உள்ளன. இதனால் தமிழ்நாடு நாட்டில் தொழில் வளர்ச்சியில் முதலிடம் பிடித்துள்ளது.  
  • மாநிலம் 9.69% பொருளாதார வளர்ச்சியை அடைந்துள்ளது.  
  • தமிழ்நாட்டிலிருந்து ஏற்றுமதி, 2020-21இல் 26.16 பில்லியன் அமெரிக்க டாலராக (USD) இருந்தது, 2024-25இல் 52.07 பில்லியன் அமெரிக்க டாலராக உயர்ந்தது.  
  • 14.65 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பிலான மின்னணு பொருட்களை (Electronic Goods) ஏற்றுமதி செய்து, தமிழ்நாடு மகாராஷ்டிரா, உத்தரப் பிரதேசம் மற்றும் கர்நாடகாவை முந்தி நாட்டில் முதலிடம் பெற்றது. 
  • தொழிலாளர்களின் எண்ணிக்கை 2020-21இல் 2.9 கோடியாக இருந்தது, 2024-25இல் 3.87 கோடியாக உயர்ந்தது.  
  • நாட்டில் பெண்களுக்கு எதிரான குற்ற விகிதம் ஒரு லட்சம் மக்களுக்கு 66.4 ஆக இருக்க, தமிழ்நாட்டில் இது ஒரு லட்சம் மக்களுக்கு 24  ஆக இருந்தது என்று அது மேலும் தெரிவித்தது. 
  • உலகளாவிய திறன் மையங்கள் (Global Skill Centres) குறித்து, சென்னை 24.5% வளர்ச்சி விகிதத்துடனும், 94,121 திறன் மையங்களுடனும், மும்பை, புனே, ஹைதராபாத், பெங்களூரு மற்றும் பிற நகரங்களை முந்தி, நாட்டில் முதலிடம் பெற்றுள்ளது .


India (Unit III) 

 


புத்த பூர்ணிமா  (Buddha Purnima)  (பௌத்த ஜெயந்தி அல்லது வேசாக்)  மே 12, 2025 அன்று கொண்டாடப்பட்டது. புத்த பூர்ணிமா  "மும்முறை ஆசீர்வதிக்கப்பட்ட திருவிழா" [thrice-blessed festival] என்று அழைக்கப்படுகிறது, ஏனெனில் இது கௌதம புத்தரின் பிறப்பு, ஞானோதயம் மற்றும் மரணம் ஆகியவற்றை குறிக்கிறது, இவை அனைத்தும் முழு  நிலா நாளில் நிகழ்ந்ததாக நம்பப்படுகிறது.


தேசிய தொழில்நுட்ப தினம் (National Technology Day) இந்தியாவில் மே 11 அன்று கொண்டாடப்பட்டது.

  • 1998 மே 11 ஆம் தேதி அன்று, பொக்ரான் (இராஜஸ்தான்) பகுதியில் நடைபெற்ற ஆபரேஷன் சக்தியின் கீழ் இந்தியா வெற்றிகரமான அணுசக்தி சோதனைகளை நடத்தியது மற்றும் உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட ஹன்சா-3 விமானத்தின் முதல் பயணம் மேற்கொள்ளப்பட்ட முக்கியமான நிகழ்வுகளை தேசிய தொழில்நுட்ப தினம் நினைவுகூர்கிறது. இந்த சாதனைகளை அங்கீகரிக்கும் விதமாக, அப்போதைய பிரதமர் திரு. அடல் பிகாரி வாஜ்பாய் மே 11 ஆம் தேதியை தேசிய தொழில்நுட்ப தினமாக அறிவித்தார்.   

  • 2025 ஆம் ஆண்டு தேசிய தொழில்நுட்ப தினத்தின் மையக்கருத்தாக — ""புதிய தொழில்நுட்பம், ஆராய்ச்சி மற்றும் முடுக்கம் ஆகியவற்றை மேம்படுத்துவதற்கான சகாப்த காலம்" (Yugantar for Advancing New Technology, Research & Acceleration)"  என்பதை தொழில்நுட்ப மேம்பாட்டு வாரியம் (Technology Development Board) அறிவித்துள்ளது.   "YANTRA" என்பது இயந்திரவியல் துறையில்  திறமை மற்றும் அமைப்புகள் மற்றும் அளவிடக்கூடிய தீர்வுகளின் சக்தியைக் குறிக்கிறது, மேலும் "யுகாந்தர்" இந்தியாவின் தொழில்நுட்ப பயணத்தில் ஒரு மாபெரும் மாற்றத்தைக் குறிக்கிறது.

  • இந்தியாவின் முதல் அணு சோதனை (பொக்ரான்-1) ராஜஸ்தானின் பொக்ரான் பாலைவனத்தில் (Pokhran desert, Rajasthan) 1974 மே 18ம் தேதி ("சுமித்ரன்" குறியீட்டுப் பெயரில்) நடைபெற்றது.

  • இரண்டாவது அணு சோதனைகள் (போக்ரான்-2) 1998 மே 11 மற்றும் 13ம் தேதிகளில் அதே இடத்தில் ("ஷக்தி" பரிசோதனைகளாக) நடத்தப்பட்டன.

பாரம்பரிய மருத்துவ நண்பர்கள் குழுவின் (GFTM - ஜிஎஃப்டிஎம்) ஆறாவது கூட்டம் 2025 மே 9 அன்று ஜெனீவாவில் உள்ள இந்திய மையத்தில் நடைபெற்றது.  பாரம்பரிய மருத்துவத்தின் பங்கை வலுப்படுத்த உறுதிபூண்டுள்ள பல்வேறு நாடுகளைச் சேர்ந்த பிரதிநிதிகள் இந்தக் கூட்டத்தில் பங்கேற்றனர். 2025 டிசம்பர் 2 முதல் 4 வரை இந்தியாவில் நடைபெறவிருக்கும் இரண்டாவது உலக சுகாதார அமைப்பின் உலகளாவிய பாரம்பரிய மருத்துவ உச்சி மாநாடு உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து இந்தக் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.


இந்தியா தாய் - சேய் சுகாதாரக் குறியீடுகளில் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தைக் கண்டுள்ளது :  

  • 2025 மே 07 அன்று இந்தியதலைமைப் பதிவாளர் வெளியிட்ட இது தொடர்பான அறிக்கையில் இது தெரிய வந்துள்ளது. தாய் - சேய் இறப்பு விகிதக் குறைப்பில் 2030-ம் ஆண்டுக்கான நீடித்த வளர்ச்சி இலக்குகளை அடைவதில் இந்தியா சிறந்த முன்னேற்றத்தை எட்டியுள்ளது.

  • இந்தியாவில் பேறுகால இறப்பு தொடர்பான அறிக்கை 2019-21-ன் படி, நாட்டில் பேறுகால இறப்பு விகிதம் குறிப்பிடத்தக்க அளவு குறைந்துள்ளது. 2014–16-ம் ஆண்டில் ஒரு லட்சம் நேரடி பிறப்புகளுக்கு 130 என இருந்த இந்த விகிதம் 2019–21-ம் ஆண்டில் 93 ஆகக் குறைந்துள்ளது.

  • இதேபோல், புள்ளிவிவர அறிக்கை 2021-ன் படி, குழந்தை இறப்பு விகிதமும் தொடர்ந்து குறைந்து வருகிறது. நாட்டின் குழந்தை இறப்பு விகிதம் 2014-ல் 1000 பிறப்புகளுக்கு 39 ஆக இருந்தது. 2021-ல் இது 1000 பிறப்புகளுக்கு 27 ஆகக் குறைந்துள்ளது. பிறந்தவுடன் குழந்தைகள் இறக்கும் விகிதம் 2014-ல் 1000 பிறப்புகளுக்கு 26 ஆக இருந்தது. 2021-ல் இது 1000 பிறப்புகளுக்கு 19 ஆகக் குறைந்துள்ளது. ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகளின் இறப்பு விகிதம் 2014-ல் 1000 பேருக்கு 45 ஆக இருந்தது, 2021-ல் இது 1000 பேருக்கு 31 ஆகக் குறைந்துள்ளது.  பாலின விகிதம் 2014-ல் 899 ஆக இருந்தது. 2021-ல் இது 913 ஆக உயர்ந்துள்ளது.

  • தாய்-  சேய் இறப்பு விகிதங்களைக் குறைப்பதில் இந்தியாவின் முன்னேற்றம் உலகளாவிய சராசரியை விட அதிகமாக உள்ளது.  1990 முதல் 2023 வரையிலான 33 ஆண்டுகளில், ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகளின் இறப்பு விகிதத்தில் இந்தியா 78% வீழ்ச்சியை அடைந்துள்ளது. இது உலகளாவிய வீழ்ச்சியான 61% என்பதை விட சிறந்த செயல்பாடாக உள்ளது. பிறந்த குழந்தைகளின் இறப்பு விகித வீழ்ச்சியில் உலக அளவில் 54% வீழ்ச்சி என்பதை ஒப்பிடும்போது இந்தியாவில் 70% வீழ்ச்சி உள்ளது.

சர்வதேச நாணய நிதியம் (IMF [International Monetary Fund]) பாகிஸ்தானின் நீட்டிக்கப்பட்ட நிதி வசதி ( Extended Fund Facility) கடன் திட்டத்தின் கீழ் 1 பில்லியன் அமெரிக்க டாலர்களை வழங்கியதற்கு  இந்தியா  கடுமையான  எதிர்ப்பு தெரிவித்தது.  


‘அர்னாலா’ – உள்நாட்டில் வடிவமைக்கப்பட்ட முதல் நீர்மூழ்கி எதிர்ப்பு போர் கப்பல் நாட்டிற்கு அர்ப்பணிப்பு : 

  • கொல்கத்தாவின் கார்டன் ரீச் ஷிப் பில்டர்ஸ் அண்ட் இன்ஜினியர்ஸ்  நிறுவனம் உள்நாட்டிலேயே வடிவமைக்கும் எட்டு நீர்மூழ்கி எதிர்ப்பு போர் கப்பல்களில் முதலாவது கப்பல் மே 08, 2025 அன்று காட்டுப்பள்ளியில் உள்ள எல் அண்ட் டி கப்பல் கட்டும் தளத்தில் இந்திய கடற்படையிடம் வழங்கப்பட்டது.

  • இந்தப் போர்க்கப்பல் எல் அண்ட் டி, ஜிஆர்எஸ்இ பொதுத்துறை, தனியார் துறை ஒத்துழைப்பு திட்டத்தின் கீழ் வடிவமைக்கப்பட்டு கட்டப்பட்டுள்ளது. இது பாதுகாப்பு உற்பத்தியில் தனியார், பொதுத்துறை கூட்டு செயல்பாட்டின் வெற்றியை நிரூபிக்கிறது.

  • இந்தியாவின் வளமான கடல்சார் பாரம்பரியத்தின் பிரதிபலிப்பாக மகாராஷ்டிராவின் வசாய் அருகே அமைந்துள்ள வரலாற்று சிறப்புமிக்க கோட்டையான ‘அர்னாலா’வின் பெயர் இந்தக் கப்பலுக்கு சூட்டப்பட்டுள்ளது. 77 மீ நீளமுள்ள இந்தப் போர்க்கப்பல், டீசல் இஞ்ஜின்-வாட்டர்ஜெட் ஆகிய இரண்டின் அடிப்படையில் இயக்கப்படும் மிகப்பெரிய கடற்படை போர்க்கப்பலாகும். இந்தக் கப்பல் நீருக்கடியில் கண்காணிப்பு, தேடல், மீட்பு நடவடிக்கைகள், குறைந்த தீவிரம் கொண்ட கடல்சார் நடவடிக்கைகள் ஆகியவற்றிற்காக வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த கப்பல் இணைவது இந்திய கடற்படையின் நீர்மூழ்கி எதிர்ப்பு போர் திறன்களை கணிசமாக அதிகரிக்கும்.

  • 80%-க்கும் அதிகமான உள்நாட்டு உள்ளடக்கத்துடன் கட்டப்பட்டுள்ள இந்தக் கப்பல் தற்சார்பு இந்தியா என்ற அரசின் தொலைநோக்குப் பார்வையை நிலைநிறுத்துகிறது.

10 ஆண்டுகள் நிறைவு செய்த மூன்று ஜனசுரக்ஷா திட்டங்கள் : 

பிரதம மந்திரி ஜீவன் ஜோதி பிமா யோஜனா (PMJJBY), பிரதம மந்திரி சுரக்ஷா பிமா யோஜனா (PMSBY), மற்றும் அடல் பென்ஷன் யோஜனா (APY) ஆகிய இந்த மூன்று திட்டங்களும் பிரதமர் திரு. நரேந்திர மோடியால் 9 மே 2015 அன்று தொடங்கப்பட்டன. இந்த திட்டங்கள் அனைவருக்கும், குறிப்பாக பாதுகாப்பற்ற மற்றும் பொருளாதாரத்தில் பிரிவினருக்கு மலிவு விலையில் நிதி பாதுகாப்பை வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளன. இந்த முக்கிய திட்டங்கள் காப்பீடு மற்றும் ஓய்வூதியத் துறையை விரிவுபடுத்தி, வாழ்க்கையின் நிச்சயமற்ற தன்மைகளுக்கு எதிராக குடிமக்களைப் பாதுகாக்கவும், நீண்டகால நிதி ஸ்திரத்தன்மையை ஊக்குவிக்கவும் உதவுகின்றன.

1. பிரதம மந்திரி ஜீவன் ஜோதி பிமா யோஜனா (Pradhan Mantri Suraksha Bima Yojana (PMSBY))

பிரதம மந்திரி ஜீவன் ஜோதி பிமா யோஜனா (PMJJBY) என்பது எந்தக் காரணத்தாலும் ஏற்படும் மரணத்திற்கு ₹2 லட்சம் வரை வாழ்க்கைக் காப்பீட்டு உத்தரவாதத்தை தினசரி ₹2-க்கும் குறைவான பிரீமியத்தில் வழங்கும் திட்டமாகும்.

முக்கிய அம்சங்கள்:

  • PMJJBY ஒரு வருட கால அளவிற்கான காப்பீடு ஆகும், இது ஒவ்வொரு ஆண்டும் புதுப்பிக்கப்படும்.

  • இந்த திட்டம் LIC மற்றும் பிற காப்பீட்டு நிறுவனங்களால் வங்கிகள்/தபால் நிலையங்களுடன் இணைந்து நிர்வகிக்கப்படுகிறது.

  • பங்கேற்கும் வங்கிகள்/தபால் நிலையங்கள் தங்கள் வாடிக்கையாளர்களுக்கு இத்திட்டத்தை செயல்படுத்த எந்த காப்பீட்டு நிறுவனத்தையும் தேர்ந்தெடுக்கலாம்.

தகுதி நிபந்தனைகள்:

  • பங்கேற்கும் வங்கி/தபால் நிலையத்தில் கணக்கு வைத்திருக்கும் 18 முதல் 50 வயது வரையிலான எந்தவொரு தனிநபரும் இத்திட்டத்தில் சேரலாம்.

  • ஒருவருக்கு ஒன்றுக்கு மேற்பட்ட கணக்குகள் இருந்தால், ஒரு கணக்கு மூலம் மட்டுமே இத்திட்டத்தில் சேர முடியும்.

சேரும் காலம்:

  • காப்பீடு ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 1 முதல் மே 31 வரை நீடிக்கும்.

  • ஒவ்வொரு ஆண்டும் மே 31க்குள் பிரீமியம் தானாக வசூலிக்க (auto-debit) ஒப்புதல் அளிக்க வேண்டும்.

பிரீமியம்:

  • ஆண்டுக்கு ₹436 (ஒரு முறை தானாக வங்கிக் கணக்கில் இருந்து வசூலிக்கப்படும்).

பயன்கள்:

  • சந்தாதாரரின் மரணத்திற்கு ₹2 லட்சம் வழங்கப்படும்.

  • சேர்ந்த தேதியிலிருந்து 30 நாட்கள் கால அவகாசம் (lien period) உண்டு.

சாதனைகள்:

  • 23.04.2025 நிலவரப்படி, PMJJBYயில் 23.63 கோடிக்கும் மேற்பட்டோர் பதிவு செய்துள்ளனர்.

2. பிரதம மந்திரி சுரக்ஷா பிமா யோஜனா (Pradhan Mantri Jeevan Jyoti Bima Yojana (PMJJBY))

பிரதம மந்திரி சுரக்ஷா பிமா யோஜனா (PMSBY) என்பது 18 முதல் 70 வயது வரையிலான நபர்களுக்கு விபத்து காரணமான மரணம் அல்லது ஊனமாக்கத்திற்கு ₹2 லட்சம் வரை காப்பீட்டு உத்தரவாதத்தை மாதத்திற்கு ₹2-க்கும் குறைவான பிரீமியத்தில் வழங்கும் திட்டமாகும்.

முக்கிய அம்சங்கள்:

  • PMSBY ஒரு வருட கால அளவிற்கான காப்பீடு ஆகும், இது ஒவ்வொரு ஆண்டும் புதுப்பிக்கப்படும்.

  • பொதுத்துறை பொது காப்பீட்டு நிறுவனங்கள் (Public Sector General Insurance Companies (PSGICs)) மற்றும் பிற பொது காப்பீட்டு நிறுவனங்கள் இத்திட்டத்தை நிர்வகிக்கின்றன.

தகுதி நிபந்தனைகள்:

  • 18 முதல் 70 வயது வரையிலான வங்கி/தபால் கணக்கு வைத்திருப்பவர்கள் சேரலாம்.

  • ஒருவருக்கு ஒன்றுக்கு மேற்பட்ட கணக்குகள் இருந்தால், ஒரு கணக்கு மூலம் மட்டுமே சேர முடியும்.

பிரீமியம்:

  • ஆண்டுக்கு ₹20 (ஒரு முறை தானாக வங்கிக் கணக்கில் இருந்து வசூலிக்கப்படும்).

பெனிபிட்கள்:

நிலை

காப்பீடு தொகை

a) மரணம்

₹2 லட்சம்

b) இரு கண்களின் பார்வை முழுமையாக இழப்பு / இரு கைகள் அல்லது கால்கள் பயன்படுத்த முடியாமல் போதல்

₹2 லட்சம்

c) ஒரு கண் பார்வை இழப்பு அல்லது ஒரு கை/கால் பயன்படுத்த முடியாமல் போதல்

₹1 லட்சம்

சாதனைகள்:

  • 23.04.2025 நிலவரப்படி, PMSBYயில் 51.06 கோடிக்கும் மேற்பட்டோர் பதிவு செய்துள்ளனர்.

3. அடல் பென்ஷன் யோஜனா (Atal Pension Yojana (APY))

அடல் பென்ஷன் யோஜனா (APY) என்பது அனைத்து இந்தியர்களுக்கும், குறிப்பாக ஏழைகள், பாதுகாப்பற்றவர்கள் மற்றும் ஒழுங்கற்ற துறையில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு ஓய்வூதிய பாதுகாப்பை வழங்குவதற்காக தொடங்கப்பட்டது. இது தேசிய ஓய்வூதிய முறைமையின் (National Pension System (NPS)) கீழ் ஓய்வூதிய ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையத்தினால் ( Pension Fund Regulatory and Development Authority (PFRDA)) மூலம் நிர்வகிக்கப்படுகிறது.

தகுதி:

  • 18 முதல் 40 வயது வரையிலான வங்கிக் கணக்கு வைத்திருப்பவர்கள் (வருமான வரி செலுத்தாதவர்கள்) சேரலாம்.

பயன்கள்:

  • சந்தாதாரர் தேர்ந்தெடுக்கும் ஓய்வூதியத் தொகையைப் பொறுத்து மாதம் ₹1000, ₹2000, ₹3000, ₹4000 அல்லது ₹5000 வரை பெறலாம்.

பணம் செலுத்தும் முறை:

  • மாதம் / காலாண்டு / அரை ஆண்டு அடிப்படையில் பங்களிப்புகளைச் செய்யலாம்.

ஓய்வூதியம் வழங்கும் முறை:

  • சந்தாதாரருக்கு மாத ஓய்வூதியம் வழங்கப்படும். அவரது மரணத்திற்குப் பிறகு, அவரது துணைவருக்கும், பின்னர் அவர்களின் மரணத்திற்குப் பிறகு, சந்தாதாரரின் நாமினிக்கும் தொகை வழங்கப்படும்.

  • 60 வயதுக்கு முன் சந்தாதாரர் இறந்தால், அவரது துணைவர் தொடர்ந்து பங்களிப்பைச் செய்யலாம்.


மத்திய அரசு இராணுவத் தலைமைத் தளபதிக்கு பிராந்திய இராணுவப் பணியாளர்களை அழைக்கும் அதிகாரம் வழங்கியது

மத்திய அரசு, இராணுவத் தலைமைத் தளபதிக்கு (Chief of the Army Staff) பிராந்திய இராணுவத்தின் (Territorial Army) ஒவ்வொரு அதிகாரி மற்றும் பணியாளரையும் அத்தியாவசிய பாதுகாப்பு அல்லது வழக்கமான இராணுவத்தை ஆதரிக்கவும் நிரப்பவும் அழைக்கும் அதிகாரத்தை வழங்கியது. இந்த அதிகாரங்கள் 1948ஆம் ஆண்டு பிராந்திய இராணுவ விதிகளின் (Territorial Army Rule 1948) கீழ் இராணுவத் தலைவருக்கு வழங்கப்பட்டன. பாதுகாப்பு அமைச்சகத்தின் (Ministry of Defence) அரசிதழ் அறிவிப்பில், பிராந்திய இராணுவத்தின் (Territorial Army) தற்போதைய 32 காலாட்படை பட்டாலியன்களில் (Infantry Battalions) 14 காலாட்படை பட்டாலியன்கள் தெற்கு கட்டளைப் பிரிவு (Southern Command), கிழக்கு கட்டளைப் பிரிவு (Eastern Command), மேற்கு கட்டளைப் பிரிவு (Western Command), மத்திய கட்டளைப் பிரிவு (Central Command), வடக்கு கட்டளைப் பிரிவு (Northern Command), தென்மேற்கு கட்டளைப் பிரிவு (South Western Command), அந்தமான் மற்றும் நிக்கோபார் கட்டளைப் பிரிவு (Andaman and Nicobar Command) மற்றும் இராணுவ பயிற்சி கட்டளைப் பிரிவு (Army Training Command - ARTRAC) ஆகிய பகுதிகளில் உள்ளடக்கப்பட்டன. இந்த உத்தரவு மூன்று ஆண்டுகளுக்கு, அதாவது 2028 பிப்ரவரி 9 வரை நடைமுறையில் இருக்கும்.


ஜெனு குருபா சமூகம் (Jenu Kuruba tribe) தங்கள் பாரம்பரிய கிராமத்திற்கு நாகர்ஹொலே புலிகள் சரணாலயத்தில் திரும்பி வந்துள்ளது. இது இந்தியாவில் ஆதி வாசிகளின் உரிமைகளை உறுதிப்படுத்தும் நிகழ்வாகும். 40 ஆண்டுகளுக்கு முன் வெளியேற்றப்பட்ட பிறகு, 50 க்கும் மேற்பட்ட குடும்பங்கள் தங்கள் வீடுகளை மீண்டும் கட்ட ஆரம்பித்துள்ளன. ஜெனு குருபா சமூகம் மிகவும் பாதிக்கப்படக்கூடிய பழங்குடியினர் (Particularly Vulnerable Tribal Group (PVTG)) என்று அங்கீகரிக்கப்பட்டுள்ளது, இவர்கள் முக்கிய அளவில் கர்நாடகாவின் கொடகு மற்றும் மைசூர் மாவட்டங்களில் வாழ்கின்றனர். "ஜெனு குருபா" என்ற பெயர் கன்னடத்தில் இருந்து வந்தது, அங்கு "ஜெனு" என்பதன் பொருள் தேன் ஆகும்.

ஜெனு குருபா சமூகம் பட்டியலிடப்பட்ட பழங்குடியினர் மற்றும் பிற பாரம்பரிய காட்டு குடிவாசிகள் (வன உரிமைகள் அங்கீகாரம்) சட்டம்(Scheduled Tribes and Other Traditional Forest Dwellers (Recognition of Forest Rights) Act), 2006 கீழ் தங்கள் உரிமைகளை உறுதிப்படுத்திக் கொண்டுள்ளனர்.


பாகிஸ்தானின் வான்வழித்  தாக்குதல்களை வெற்றிகரமாக முறியடித்த இந்தியாவின் வான்பாதுகாப்பு அமைப்பு (ADS - Air Defence System)
இந்தியாவின் வான்பாதுகாப்பு அமைப்பு (ADS - Air Defence System), அதன் ஒருங்கிணைந்த பறவை எதிர்ப்பு கட்டமைப்பு (Integrated Counter UAS Grid) மூலம், மேற்கு எல்லையில் உள்ள அச்சுறுத்தல்களை திறம்பட நடுநிலையாக்கியது. இதற்கு மேம்பட்ட புவி-வான் ஏவுகணை அமைப்புகளான எஸ்-400 ட்ரையம்ஃப் (S-400 Triumf), பராக் 8 (Barak 8), மற்றும் ஆகாஷ் (Akash) பயன்படுத்தப்பட்டன. இவை ட்ரோன்கள், விமானங்கள் மற்றும் ஏவுகணைகளுக்கு எதிராக பல அடுக்கு பாதுகாப்பை வழங்குகின்றன.

S-400 Triumf
எஸ்-400 ட்ரையம்ஃப் (S-400 Triumf), இந்தியாவில் சுதர்ஷன் சக்ரா (Sudarshan Chakra) என்று அழைக்கப்படுகிறது. இது ரஷ்யாவிடமிருந்து பெறப்பட்ட மேம்பட்ட நீண்ட தூர புவி-வான் ஏவுகணை அமைப்பு (SAM - Surface-to-Air Missile) ஆகும். இதில் கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு அமைப்பு, கட்ட அணிவகுப்பு ரேடார்கள் (phased array radars), மின்னணு போர் எதிர் நடவடிக்கைகள் (electronic warfare countermeasures), 360-டிகிரி ரேடார் மற்றும் ஏவுகணை கவரேஜ், பல அடுக்கு பாதுகாப்பிற்கு பல ஏவுகணை இணக்கத்தன்மை ஆகியவை உள்ளன. இது 600 கி.மீ. வரை கண்காணிக்கவும், 400 கி.மீ. வரை தாக்கவும், 30 மீட்டர் முதல் 30 கி.மீ. உயரம் வரை பாதுகாக்கவும் முடியும். இது குறைந்த உயரத்தில் பறக்கும் ட்ரோன்கள் முதல் உயரமான விமானங்கள் மற்றும் ஏவுகணைகள் வரை திறம்பட தாக்க முடியும்.

Barak 8
பராக் 8 (Barak 8), இந்தியா மற்றும் இஸ்ரேல் இணைந்து உருவாக்கிய நடுத்தர முதல் நீண்ட தூர புவி-வான் ஏவுகணை அமைப்பு (SAM - Surface-to-Air Missile) ஆகும். இது மேக் 2 வேகத்தில் (Mach 2) பயணிக்கும் திறன் கொண்டது. இது 100 கி.மீ. வரை ஒரே நேரத்தில் பல வான இலக்குகளை தாக்க முடியும். இது கடல் மற்றும் நிலம் ஆகிய இரு வகைகளிலும் (maritime and land-based variants) கிடைக்கிறது, இதனால் பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கு ஏற்றது.


Akash Weapon System
உள்நாட்டில் உருவாக்கப்பட்ட ஆகாஷ் (Akash) ஒரு குறுகிய தூர புவி-வான் ஏவுகணை அமைப்பு (SAM - Surface-to-Air Missile) ஆகும். இது 4.5–25 கி.மீ. தூரம், 100 மீட்டர் முதல் 20 கி.மீ. உயரம் வரை பாதுகாக்க முடியும். இதில் உள்ள மின்னணு எதிர்-எதிர் நடவடிக்கைகள் (ECCM - Electronic Counter Counter Measures) செயலில் மற்றும் செயலற்ற தடுப்பு (active and passive jamming) எதிராக உயர் எதிர்ப்பு திறனை வழங்குகிறது. இது முழுமையாக தானியங்கி செயல்பாட்டுடன், கண்டறிதல் முதல் அழித்தல் வரை விரைவாக பதிலளிக்கிறது. இது கட்டளை வழிகாட்டுதல் (command guidance) மற்றும் குழு அல்லது தன்னாட்சி முறையில் (group or autonomous mode) பல இலக்குகளை தாக்கும் திறன் கொண்டது.



அமெரிக்காவின் சிகோகா நகரில் அமைந்த இலினாய்ஸ் தொழில்நுட்பப் பல்கலைக்கழகம், மும்பையில் தனது வளாகத்தை அமைக்க பல்கலைக்கழக மானியக் குழு ஒப்புதல் அளித்துள்ளது. அடுத்தாண்டு செப்டம்பா் முதல் நவம்பா் வரையிலான காலகட்டத்தில் திறக்க திட்டமிடப்பட்டுள்ள இந்திய வளாகத்தில் கணினி அறிவியல், பொறியியல் மற்றும் வணிகம் போன்ற முக்கிய துறைகளில் இளநிலை மற்றும் முதுநிலை பட்டப்படிப்புகளுக்கு மாணவா்கள் அனுமதிக்கப்படுவா் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சாலை விபத்து பாதிக்கப்பட்டவர்களுக்கு காசற்ற சிகிச்சை திட்டம் 2025 (Cashless Treatment of Road Accident Victims Scheme, 2025)

  • நாடு முழுவதும் சாலை விபத்து பாதிக்கப்பட்டவர்களுக்கு காசற்ற சிகிச்சை திட்டத்தை ஒன்றிய அரசு அறிவித்துள்ளது. இதன்படி, ஒவ்வொரு விபத்திலும் பாதிக்கப்பட்ட ஒவ்வொரு நபருக்கும் அதிகபட்சமாக ரூ. 1.5 லட்சம் வழங்கப்படும். இந்தத் திட்டம் மே 5, 2025 முதல் நடைமுறைக்கு வந்துள்ளது.

  • மோட்டார் வாகனம் பயன்படுத்துவதால் எந்த சாலையிலும் ஏற்படும் சாலை விபத்தில் பாதிக்கப்பட்ட எந்த நபரும், இந்தத் திட்டத்தின் விதிகளின்படி காசற்ற சிகிச்சைக்கு உரிமை பெறுவார்.

  • தேசிய சுகாதார ஆணையம் (National Health Authority - NHA) காவல்துறை, மருத்துவமனைகள் மற்றும் மாநில சுகாதார நிறுவனங்கள் போன்றவற்றுடன் ஒருங்கிணைந்து இந்த திட்டத்தை செயல்படுத்தும் நிறுவனமாக இருக்கும்.

  • பாதிக்கப்பட்டவர் எந்த ஒரு நியமிக்கப்பட்ட மருத்துவமனையிலும் அத்தகைய விபத்து நடந்த தேதியிலிருந்து அதிகபட்சம் ஏழு நாட்களுக்கு ஒரு லட்சத்து ஐம்பதாயிரம் ரூபாய் வரை காசற்ற சிகிச்சைக்கு உரிமை பெறுவார்.

  • இந்தத் திட்டத்தின் கீழ் (காசற்ற சாலை விபத்து பாதிக்கப்பட்டோர் சிகிச்சை திட்டம், 2025) (Cashless Treatment of Road Accident Victims Scheme, 2025) நியமிக்கப்பட்ட மருத்துவமனை அல்லாத மருத்துவமனையில் வழங்கப்படும் சிகிச்சை நிலைப்படுத்தும் நோக்கத்திற்காக மட்டுமே இருக்கும் மற்றும் அது வழிகாட்டுதல்களில் குறிப்பிடப்பட்டுள்ளபடி இருக்கும்.

  • அறிவிப்பின்படி, மாநில சாலை பாதுகாப்பு கவுன்சில் (State Road Safety Council) அந்த மாநிலம் அல்லது யூனியன் பிரதேசத்திற்கான திட்டத்தை செயல்படுத்துவதற்கான முக்கிய நிறுவனமாக இருக்கும். மேலும் நியமிக்கப்பட்ட மருத்துவமனைகளை இணைப்பதற்கும், பாதிக்கப்பட்டவர்களின் சிகிச்சைக்கும், சிகிச்சைக்காக நியமிக்கப்பட்ட மருத்துவமனைக்கு கட்டணம் செலுத்துவதற்கும் மற்றும் தொடர்புடைய விஷயங்களுக்கும் போர்டலைப் பயன்படுத்துவதற்கும் தேசிய சுகாதார ஆணையத்துடன் ஒருங்கிணைப்பதற்கு பொறுப்பாக இருக்கும்.

  • முன்னதாக, மார்ச் 14, 2024 அன்று, சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சகம் (Ministry of Road Transport and Highways - MoRTH) சாலை விபத்து பாதிக்கப்பட்டவர்களுக்கு காசற்ற சிகிச்சை வழங்குவதற்கான முன்னோடித் திட்டத்தை தொடங்கியது.

World 

போப் 14 ஆம் லியோ (Leo XIV) : கத்தோலிக்கத் திருச்சபை தலைமை மதகுருவாக அமெரிக்காவைச் சேர்ந்த ராபர்ட் பிரான்சிஸ் ப்ரெவோஸ்ட் (Robert Francis Prevost) தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

போப் பதவிக்கு அமெரிக்கர் ஒருவர் தேர்வு செய்யப்படுவது இதுவே முதல்முறையாகும். புதிய போப் இனி 14 ஆம் லியோ என்ற பெயரால் அழைக்கப்படுவார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவர், 2006 அக்டோபரில், பொள்ளாச்சியிலுள்ள செண்பகம் மெட்ரிகுலேஷன் பள்ளிக்கு வருகை தந்துள்ளார்.  

உடல்நலக் குறைவு காரணமாக கத்தோலிக்க திருச்சபையின் 266-வது தலைவா் போப் பிரான்சிஸ் கடந்த 21 ஏப்ரல் 2025  ஆம் தேதி காலமானார்.

 

Economy (Unit V)


உலகளவில் மதிப்புமிக்க கடன் மதிப்பீட்டு முகாமையான மார்னிங்ஸ்டார்-டிபிஆர்எஸ் நிறுவனத்தால் நிலையான பொருளாதார சூழலை அடிப்படையாகக் கொண்டு மதிப்பீடு செய்யப்பட்டு 'பிபிபி' நிலையான போக்கு என்ற மேம்பட்ட தரநிலையை இந்தியா பெற்றுள்ளது.

உலகளவில் மதிப்புமிக்க கடன் மதிப்பீட்டு முகமையான மார்னிங்ஸ்டார் - டிபிஆர்எஸ் நிறுவனமானது இந்தியாவின் நீண்டகால வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு நாணய   வழங்குநர் தரநிலை மதிப்பீட்டை  பிபிபி (குறைந்தது) என்ற நிலையிலிருந்து பிபிபி நிலையான போக்கு என்ற மேம்பட்ட தரநிலையை வழங்கியுள்ளது.

இந்தியாவின் குறுகிய கால வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு நாணய  மதிப்பீடுகளும் நிலையான சூழலை அடிப்படையாகக் கொண்டு ஆர்-2 (நடுத்தரம்) என்ற நிலையிலிருந்து ஆர்-2 (உயர்) என்ற மேம்பட்ட தரநிலையை வழங்கியுள்ளது.

இத்தகைய மேம்பட்ட தரநிலைகளைப் பெறுவதற்கு முக்கிய காரணிகளாக உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்கான முதலீடுகள், டிஜிட்டல் மயமாக்கல் போன்ற நடவடிக்கைகள் வாயிலாக மேற்கொள்ளப்பட்டு வரும் நாட்டைக் கட்டமைப்பதற்கான  சீர்திருத்தங்கள் உள்ளன. இவை அனைத்தும் நிதிசார் ஒருங்கிணைப்பை (கடன் மற்றும் நிதிப் பற்றாக்குறையைக் குறைத்தல்) எளிதாக்கியதுடன், நீடித்த உயர் வளர்ச்சியை (22-25 -ம் நிதியாண்டுகளில் சராசரியாக 8.2%  மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சியைக் கண்டுள்ளது) விரிவான பொருளாதார நிலைத்தன்மையுடன் (நிலைப்படுத்தப்பட்ட பணவீக்கம், வரம்புக்குட்பட்ட மாற்று விகிதம் மற்றும் சிறப்பான வெளிப்புற சமநிலை) எளிதாக்கியுள்ளது. அதிக மூலதன விகிதம், 13 ஆண்டுகளில் முன்னெப்போதும் இல்லாத வகையில்  குறைந்த அளவிலான வராக் கடன்களுடன், வலுவான மூலதனத்துடன் கூடிய வங்கிகளைக் கொண்ட மீள்தன்மையுடனான வங்கி அமைப்பு, மேம்பட்ட தரநிலையைப் பெறுவதற்கு  மற்றொரு குறிப்பிடத்தக்க உந்து சக்தியாக இருந்தது.

உலகளாவிய பொருளாதார மந்தநிலைக்கு மத்தியில், இந்தியா 2024-25 நிதியாண்டில் அதிகபட்ச ஏற்றுமதியை அடைந்துள்ளது

இந்திய ரிசர்வ் வங்கியின் (RBI) தகவலின்படி, இந்தியாவின் மொத்த ஏற்றுமதி (பொருட்கள் + சேவைகள்) 2024-25ல் $824.9 பில்லியன் அமெரிக்க டாலர்களை எட்டியுள்ளது. இது 2023-24ல் இருந்த $778.1 பில்லியன் அமெரிக்க டாலர்களிலிருந்து 6.01% அதிகரித்துள்ளது.

  • பொருட்கள் ஏற்றுமதி (Merchandise Exports): 2023-24ல் இருந்த US$437.1 பில்லியன் அமெரிக்க டாலர்களிலிருந்து சிறிதளவு அதிகரித்து US$437.4 பில்லியன் அமெரிக்க டாலர்களை எட்டியுள்ளது.

  • சேவைகள் ஏற்றுமதி (Services Exports): 2024-25ல் வரலாற்று சாதனையாக US$387.5 பில்லியன் அமெரிக்க டாலர்களை எட்டியுள்ளது. இது 2023-24ல் இருந்த US$341.1 பில்லியன் அமெரிக்க டாலர்களிலிருந்து 13.6% அதிகரித்துள்ளது.

மாதிரி பதிவு அமைப்பு (SRS - Sample Registration System) 2021 அறிக்கை:
  • 2021-ல் மொத்த பிறப்பு விகிதம் (TFR - Total Fertility Rate) 2020-ஐப் போலவே  2.0 ஆகவே உள்ளது, 
  • பீகார் அதிகபட்ச பிறப்பு விகிதம் (TFR) 3.0; மிகக் குறைவாக 1.4.- டெல்லி, மேற்கு வங்கம் 
  • 0-14 வயது மக்கள் தொகை 1971-ல் 41.2% இல் இருந்து 2021-ல் 24.8% ஆகக் குறைந்தது; 15-59 வயது மக்கள் 53.4% இல் இருந்து 66.2% ஆக உயர்ந்தது.
  • முதியோர் மக்கள் தொகை: 65+ வயது 5.3% இல் இருந்து 5.9% ஆகவும், 60+ வயது 6% இல் இருந்து 9% ஆகவும் 2021-ல் உயர்ந்தது.
  • மக்கள்தொகை கணக்கெடுப்பு (Census) 2011-க்கு பின் 2021-ல் நடக்கவில்லை; SRS 84 லட்சம் மக்களை 8,842 இடங்களில் ஆய்வு செய்தது.
  • முதியோர் மக்கள் தொகை அதிகம்: கேரளா 14.4%, தமிழ்நாடு 12.9%, இமாச்சல பிரதேசம் 12.3%; குறைவாக: பீகார் 6.9%, அசாம் 7%, டெல்லி 7.1%.
  • பெண்களின் திருமண வயது 1990-ல் 19.3 ஆண்டுகளில் இருந்து 2021-ல் 22.5 ஆண்டுகளாக உயர்ந்தது.
  • மாற்று பிறப்பு விகிதம் (Replacement TFR) 2.1 தேசிய அளவில் எட்டப்பட்டது; 2.1-க்கு கீழே: டெல்லி 1.4, மேற்கு வங்கம் 1.4, தமிழ்நாடு 1.5, ஆந்திரப் பிரதேசம் 1.5, ஜம்மு மற்றும் காஷ்மீர் 1.5, கேரளா 1.5, மகாராஷ்டிரா 1.5, பஞ்சாப் 1.5, இமாச்சல பிரதேசம் 1.6, தெலங்கானா 1.6, கர்நாடகா 1.6, ஒடிசா 1.8, உத்தராகண்ட் 1.8, குஜராத் 2.0, ஹரியானா 2.0, அசாம் 2.1.

Science  & Technology (Unit I)

மேம்பட்ட அறிவியல் ஆய்வு மையம் (Advanced Study in Science and Technology (IASST)), கெளகாத்தியின் ஆய்வாளர்கள்  ஒரு புதிய லூப்ரிகண்ட் (lubricant)  வகையை கண்டுபிடித்துள்ளனர். இந்த எண்ணெய்  சிறப்பு கார்பன் நைட்ரைட் தகடுகளால் (graphitic carbon nitride (g-C3N4)) செய்யப்பட்டுள்ளது.

  • இந்த ஆய்வு சுற்றுச்சூழலுக்கு நல்ல மாற்று எண்ணெய்யை உருவாக்கியுள்ளது. இது பழைய வகை எண்ணெய்க்கு மாற்றாக வருகிறது.

  • சிறப்பு இரசாயன மாற்றம் மூலம் எண்ணெய் தன்மையை மேம்படுத்தியுள்ளனர்.

  • பேராசிரியர் தேவசிஷ் சௌதுரி தலைமையிலான குழு இந்த ஆய்வை நடத்தியுள்ளது.

  • இந்த கண்டுபிடிப்பு சுற்றுச்சூழலுக்கு நல்ல தொழில்நுட்ப வழிமுறையை காட்டியுள்ளது. இது எந்திரங்கள் சிறப்பாக இயங்கவும் சுற்றுச்சூழலை பாதுகாக்கவும் உதவும்.

பாசல், ரோட்டர்டாம், மற்றும் ஸ்டாக்ஹோம் ஒப்பந்தங்களின் கூட்டங்கள் (Conferences of the Parties (CoPs) to the Basel, Rotterdam, and Stockholm Conventions (BRS COPs))
பாசல், ரோட்டர்டாம், மற்றும் ஸ்டாக்ஹோம் ஒப்பந்தங்களின் கூட்டங்கள் (Conferences of the Parties - CoPs) சுவிட்சர்லாந்தின் ஜெனீவாவில் ஏப்ரல் 28 முதல் மே 9 வரை நடைபெற்றது. இந்த மாநாட்டின் கருப்பொருள் "புலப்படாதவற்றை புலப்படுத்து: இரசாயனங்கள் மற்றும் கழிவுகளின் சரியான மேலாண்மை" (Make visible the invisible: sound management of chemicals and wastes) ஆகும். இந்த மாநாடு இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடத்தப்படுகிறது, இதன் நோக்கம் ஆபத்தான பொருட்களின் மேலாண்மையில் உலகளாவிய நடவடிக்கைகளை மேம்படுத்துவதாகும்.

மூன்று ஒப்பந்தங்கள்: ஒரு சுருக்கமான கண்ணோட்டம்

ஆபத்தான கழிவுகளின் எல்லை தாண்டிய இயக்கங்கள் மற்றும் அவற்றின் அகற்றலை கட்டுப்படுத்தும் பாசல் ஒப்பந்தம் (Basel Convention)

1989இல் சுவிட்சர்லாந்தில் ஏற்றுக்கொள்ளப்பட்ட பாசல் ஒப்பந்தம் (Basel Convention) 1992இல் நடைமுறைக்கு வந்தது. இதன் முதன்மை நோக்கம் ஆபத்தான கழிவுகளின் உற்பத்தியைக் குறைப்பது மற்றும் சுற்றுச்சூழலுக்கு பாதுகாப்பான கழிவு மேலாண்மையை உறுதி செய்வது ஆகும். இந்த ஒப்பந்தம் எல்லை தாண்டிய கழிவு இயக்கங்களுக்கு ஒரு ஒழுங்குமுறை அமைப்பை உருவாக்குகிறது, சுற்றுச்சூழல் பாதுகாப்பு தரங்களுக்கு இணங்கும் இயக்கங்களை மட்டுமே அனுமதிக்கிறது மற்றும் பொறுப்பற்ற கழிவு கொட்டுதலை தடுக்கிறது.

சில ஆபத்தான இரசாயனங்கள் மற்றும் பூச்சிக்கொல்லிகளின் சர்வதேச வர்த்தகத்தில் முன்அறிவிப்பு ஒப்புதல் நடைமுறைக்கான ரோட்டர்டாம் ஒப்பந்தம் (Rotterdam Convention)

1998இல் நெதர்லாந்தின் ரோட்டர்டாமில் ஏற்றுக்கொள்ளப்பட்ட இந்த ஒப்பந்தம் (Rotterdam Convention) 2004இல் நடைமுறைக்கு வந்தது. இது ஆபத்தான இரசாயனங்களின் வர்த்தகத்தில் பகிரப்பட்ட பொறுப்பையும் சர்வதேச ஒத்துழைப்பையும் ஊக்குவிக்கிறது, மனித ஆரோக்கியத்தையும் சுற்றுச்சூழலையும் பாதுகாக்கிறது. இந்த ஒப்பந்தம், ஆபத்தான பொருட்கள் இறக்குமதி செய்யப்படுவதற்கு முன் நாடுகள் முழுமையாக அறிந்திருப்பதை உறுதி செய்கிறது, இதனால் அவர்கள் பாதுகாப்பான முடிவுகளை எடுக்க முடியும்.

நீடித்த கரிம மாசுபடுத்திகள் குறித்த ஸ்டாக்ஹோம் ஒப்பந்தம் (Stockholm Convention on Persistent Organic Pollutants - POPs)
2001இல் ஸ்வீடனின் ஸ்டாக்ஹோமில் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஸ்டாக்ஹோம் ஒப்பந்தம் (Stockholm Convention) 2004இல் நடைமுறைக்கு வந்தது. இந்த உலகளாவிய ஒப்பந்தம் மனித ஆரோக்கியத்தையும் சுற்றுச்சூழலையும் தீங்கு விளைவிக்கும் நீடித்த கரிம மாசுபடுத்திகளிடமிருந்து (Persistent Organic Pollutants - POPs) பாதுகாப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.  

புல்புல்-வி2 (Bulbul-V2) :  பெங்களூருவைச் சேர்ந்த இந்திய ஸ்டார்ட்அப் நிறுவனமான சர்வம் (Sarvam) தனது புதிய செயற்கை நுண்ணறிவு மாதிரியான புல்புல்-வி2 (Bulbul-V2) ஐ அறிமுகப்படுத்தியுள்ளது. இது 11 இந்திய மொழிகளில்  உரையிலிருந்து பேச்சு (Text-to-Speech - TTS) மாதிரியாகும்.  , இது இந்திய மொழிகள் மற்றும் உச்சரிப்புகளுக்காக பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த செயற்கை நுண்ணறிவு மாதிரி மனிதர்களைப் போன்ற இயல்பான பேச்சுடன், மனித உணர்வுகளைப் பிரதிபலிக்கும் தொனியைக் கொண்டுள்ளது மற்றும் பல்வேறு குரல் ஆளுமைகளை உருவாக்கும் திறன் கொண்டது.  




2025 மே 5 முதல் 9 வரை நியூயார்க்கில் உள்ள ஐக்கிய நாடுகள் சபையின் தலைமையகத்தில் நடைபெற்ற ஐக்கிய நாடுகள் சபை வன கவுன்சிலின் 20வது அமர்வில் இந்தியா பங்கேற்றது.

2017–2030க்கான ஐக்கிய நாடுகள் சபையின் வனங்களுக்கான உத்திசார்  திட்டத்தின் கீழ் தன்னார்வ தேசிய பங்களிப்புகளை அடைவதற்கான தனது கடப்பாட்டை மீண்டும் உறுதிப்படுத்திய இந்தியா, வனப் பாதுகாப்பு மற்றும் நிலையான வன மேலாண்மையில் ஏற்பட்டுள்ள குறிப்பிடத்தக்க முன்னேற்றங்களை எடுத்துரைத்தது. ஆரவல்லி பசுமைச் சுவரின் கீழ் நிலத்தை மீட்டெடுப்பது, கடந்த பத்தாண்டுகளில் சதுப்புநிலப் பரப்பில் 7.86% அதிகரிப்பு, பசுமை இந்தியா இயக்கத்தின் கீழ் 1.55 லட்சம் ஹெக்டேர்களுக்கு மேல் காடு வளர்ப்பு மற்றும் தாயின் பெயரில் ஒரு மரக்கன்று பிரச்சாரத்தின் கீழ் 1.4 பில்லியன் மரக் கன்றகளை நடுதல் போன்ற முக்கியமான தேசிய முயற்சிகளின் விளைவாக, அண்மையில் இந்திய வன நிலை அறிக்கையின்படி, இந்தியாவில் காடுகள் மற்றும் மரங்களின் பரப்பளவு தொடர்ச்சியாக அதிகரித்துள்ளதாக இந்தக் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.



அன்னையர் தினம் - மே 11 



மகளிர் முத்தரப்பு ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இலங்கையை 97 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி அபார வெற்றியுடன் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது இந்தியா. இந்தியா, இலங்கை, தென்னாப்பிரிக்க மகளிர் கிரிக்கெட் அணிகள் பங்கேற்ற முத்தரப்பு ஒருநாள் போட்டி இலங்கையில் நடைபெற்றது. நிகழாண்டு இறுதியில் இந்தியாவில் நடைபெறவுள்ள மகளிர் ஒருநாள் உலகக் கோப்பை போட்டிக்கு தயாராகும் வகையில் இந்த  முத்தரப்பு தொடர் நடைபெற்றது.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Respected visitors , this is your area. Ask your queries, post your suggestions. If you know correct answers for other friend's questions, kindly reply them. Motivate One another . Your comments will be posted soon with a small moderation.
Note:Please avoid sharing phone numbers, email Ids and posting abusive comments against the government and recruitment agencies.

Post Bottom ads

Your Ad Spot