-->
TNPSC Portal - Thervu Vazhikatti Current Affairs Magazine

TNPSC Current Affairs 27 February 2019

நடப்பு நிகழ்வுகள் 27 பிப்ரவரி 2019

தமிழ்நாடு

  • பிரதான் மந்திரி கிஸான் சம்மான் நிதி திட்டம் தமிழகத்தில் 24.02.2019 அன்று தொடங்கி வைக்கப்பட்டது. விவசாயிகள், பயிர் சாகுபடிக்கு தேவையான இடுபொருட்களை குறித்த நேரத்தில் கொள்முதல் செய்து, அதிக விளைச்சல் பெற்று, பண்ணை வருவாயை உயர்த்த உதவியாக ஒரு தவணைக்கு ரூ. 2000 வீதம் மூன்று தவணைகளாக நான்கு மாதங்களுக்கு ஒருமுறை  5 ஐந்து ஏக்கர் (2 ஹெக்டேர்) வரையிலான சாகுபடி நிலங்களை உடைய தகுதி வாய்ந்த விவசாய குடும்பங்களுக்கு மொத்தம் ரூ.6000 இத்திட்டத்தின் கீழ் வழங்கப்படவுள்ளது குறிப்பிடத்தக்கது. இத்திட்டத்தின் முதல் தவணையான ரூ.2000  24-2-2019 அன்று முதல் வழங்கப்பட்டுவருகிறது.
கூ.தக. : ’பிரதான் மந்திரி கிஸான் சம்மான் நிதி’ திட்டத்தை பிரதமர் மோடி அவர்கள் 24 பிப்ரவரி 2019 அன்று உத்தரப்பிரதேச மாநிலத்திலுள்ள கோரக்பூரில் தொடங்கி வைத்தார்.
  • தமிழ்நாடு சொத்து உரிமையாளர்கள் மற்றும் வாடகைதாரர்களின் உரிமைகள் மற்றும் பொறுப்புகள் முறைப்படுத்துதல் சட்டம், 2017 , 22-2-2019 அன்று முதல் அமலுக்கு வந்துள்ளது.  இந்த சட்டத்தினை சிறந்த முறையில் நடைமுறைப்படுத்துவதற்காக www.tenancy.tn.gov.in  எனும் இணையதள சேவையும் தொடங்கப்பட்டுள்ளது. 
 மேலும் விவரங்களுக்கு :   http://www.tndipr.gov.in/DIPRImages/News_Attach/11521PDIPR-P.R.NO150-                Hon_bleCMpressrelease-Housingdept-22.2.2019.pdf
  • tamilnaducareerservices.gov.in எனும் போட்டித்தேர்வுக்கு தயாராகும் கிராமப்புற மாணவர்களுக்கு இணையதளம் மூலம் பயிற்சி வழங்கும் சேவையை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் தொடங்கி வைத்துள்ளார்.   மாநில வேலைவாய்ய்பு வழிகாட்டி மையம்  (State Career Guidance Centre) எனும் அமைப்பும் சென்னை கிண்டியில் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.

இந்தியா

  • இந்திய இராணுவத்தின் இரண்டாவது துல்லிய தாக்குதல் (சர்ஜிக்கல் ஸ்டிரைக் 2.0) ( 26 பிப்ரவரி 2019)   : புல்வாமா  பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வண்ணம்,   இந்திய விமானப்படையின்   மிராஜ் 2000 ரக போர் விமானங்கள்   புல்வாமா தாக்குதலில் தொடர்புடைய ஜெய்ஷ்-ஏ-முகமது அமைப்புக்கு சொந்தமாக பாகிஸ்தானின் பாலாகோட், முசாஃபராபாத், சகோட்டி ஆகிய இடங்களில் இருந்த பயங்கரவாத முகாம்கள் மீது  26-2-2019 அன்று அதிகாலை 1000 கிலோ எடையுடைய ஏராளமான குண்டுகளை வீசி அதிரடித் தாக்குதல் நடத்தி  அவற்றை முற்றிலுமாக அழித்தன. இதில் ஜெய்ஷ்-ஏ-முகமது பயங்கரவாதிகள், மூத்த தளபதிகள், அவர்களுக்கு பயங்கரவாத பயிற்சி அளிக்கும் நபர்கள் என சுமார் 350 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாக தெரிகிறது. 1971ஆம் ஆண்டு இந்தியா-பாகிஸ்தான் போருக்குப் பிறகு, பாகிஸ்தானுக்குள் புகுந்து முதல்முறையாக இத்தாக்குதல் நடத்தப்பட்டது.
    • இந்தத் தாக்குதலுக்கு இந்திய விமானப்படை, பிரான்ஸ் நாட்டின் டஸால்ட் ஏவியேஷன் நிறுவனத் தயாரிப்பான மிராஜ் 2000 ரக விமானங்களை பயன்படுத்தியது. மத்திய பிரதேச மாநிலம், குவாலியரில் இருக்கும் அதன் தளத்தில் இருந்து பறந்து சென்று, அந்த விமானங்கள் தாக்குதல் நடத்தியுள்ளன. இஸ்ரேல் நாட்டிடம் இருந்து பெறப்பட்ட பிஜிஎம் எனப்படும் நவீன குண்டு பயன்படுத்தப்பட்டுள்ளது. இதில் இலக்கை முன்கூட்டியே பதிவு செய்து துல்லியமாக தாக்க முடியும்.மிராஜ் 2000 ரக போர் விமானம், நீண்ட தூரத்தில் உள்ள இலக்குகளையும் மிகவும் துல்லியமாக தாக்கி அழிக்கும் வல்லமை  கொண்டது. இதேபோல், பல்வேறு வகையிலான வெடிகுண்டுகள், ஏவுகணைகள் ஆகியவற்றையும் வீசும் திறன் கொண்டது. மிராஜ் 2000 ரக போர் விமானம், இந்தியாவால் கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்பு தனது படையில் இணைக்கப்பட்டது. இதை ரூ.20,000 கோடி செலவில் இந்தியா அண்மையில் மேம்படுத்தியது.
    • இந்தியாவிடம் நவீன சுகோய் ரக போர் விமானம் உள்ள நிலையில், மிராஜ் ரக விமானத்தை தாக்குதலுக்கு தேர்வு செய்ததற்கு, அதன் தாக்குதல் திறனே காரணமாகும். மிராஜ் என்றால் தமிழில் கானல்நீர். அதாவது பொய்த் தோற்றம். இருக்கிற மாதிரி இருக்கும். பக்கத்தில் சென்றால் மாயமாகிவிடும் என்பது மிராஜ் போர்விமானத்தின் சிறப்பாகும். இதன் இன்னொரு சிறப்பு, துல்லிய கேமரா. மிக உயரத்தில் இருந்து லேசர் நுட்பத்தில் குண்டு போடும் தொழில்நுட்பமாகும். சுகோய் விமானம் மணிக்கு 2,120 கிலோ மீட்டர் வேகம் அல்லது ஒலியை விட இருமடங்கு வேகமாக பறக்கக்கூடியது. மிராஜ் 2000 விமானமோ, ஒலியை விட 2.2 மடங்கு அதிக வேகமாக பறக்கக் கூடியது. சுகோயுடன் ஒப்பிடுகையில் மிராஜ் 2000 ரக விமானம் எடை குறைவானது. ஒரு என்ஜின் மட்டுமே கொண்டது. ராடார் கருவிகளாலும் மிராஜ் விமானத்தின் நடமாட்டத்தை கண்காணிக்க முடியாது.
    • மிராஜ் 2000 ரக விமானத்தில் கூடுதலாக 3 எரிபொருள் சேமிப்பு வசதிகள் உள்ளன. இதனால் நடுவானில் அந்த விமானத்தில் எரிபொருளை நிரப்ப வேண்டியதில்லை. பாலாகோட் வரையிலும் பறந்து சென்று, மீண்டும் இந்தியாவுக்கு அந்த விமானத்தால் திரும்ப முடியும். 59,000 அடி உயரம் வரை அந்த விமானத்தால் பறக்க முடியும். பயணிகள் விமானத்தால், 35,000 முதல் 40,000 அடி உயரத்தில் மட்டுமே பறக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த விமானத்தின் தாக்குதல் வெற்றி விகிதம் 100 சதவீதம் ஆகும். இதை பரிசீலித்தே, மிராஜ் 2000 ரக விமானத்தை தாக்குதலுக்கு விமானப்படை தேர்வு செய்தது. இந்தியாவிடம் மிராஜ் 2000 ரக விமானங்களை கொண்ட 3 படைப்பிரிவு உள்ளது குறிப்பிடத்தக்கது.
    • 48 ஆண்டுகளுக்கு பின்னர் இந்திய விமானப்படையின் சாதனை : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா - பாகிஸ்தான் இடையே போர்கள் நடைபெற்றுள்ளது. இதில் பல போர்களில் பொதுவாகவே தரைப்படையே தனது திறமையை வெளிப்படுத்தும் வாய்ப்பு இந்தியாவிற்கு கிடைத்துள்ளது. கார்கில் போர் வரையில் பெரிய அளவில் தரைப்படைக்கே பெரும் பங்கு இருந்தது.  கார்கில் போரில், இந்திய விமானப்படையின் விமானங்கள் எல்லையைத் தாண்டக்கூடாது என வாஜ்பாய் உத்தரவிட்டிருந்தார்.   பாகிஸ்தானில் இருந்து வங்காளதேசம் பிரிந்து தனிநாடான 1971-ம் ஆண்டு நடந்தபோரில் விமானப்படை அதிரடியான சேவையை மேற்கொண்டது. இப்போது 48 ஆண்டுகளுக்கு பிறகு எல்லைக்கட்டுப்பாட்டு கோட்டை தாண்டிச் சென்று பாகிஸ்தானின் உட்பகுதிக்குள் நுழைந்து பயங்கரவாத முகாம்களை அழித்து அதிரடி தாக்குதலை நடத்தி சாதனைப்படைத்துள்ளது.
பின்னணி : ஜம்மு-காஷ்மீர் மாநிலம், புல்வாமாவில் கடந்த 14-02-2019 அன்று  ஆர்பிஎஃப்  வீரர்கள் சென்ற பேருந்து மீது பயங்கரவாதி ஒருவர், சுமார் 300 கிலோ வெடிபொருள்கள் நிரப்பப்பட்ட  காருடன் வந்து மோதி வெடிக்க செய்தார். இதில்  40 பேர் உடல் சிதறி பலியாகினர்.   இந்த கொடூரத் தாக்குதல் சம்பவத்துக்கு, பாகிஸ்தானை தளமாகக் கொண்டு செயல்படும் ஜெய்ஷ்-ஏ-முகமது பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றது. இதற்கு பதிலடி கொடுக்கும் வண்ணமே இந்த துல்லிய தாக்குதலை இந்தியா நடத்தியுள்ளது.
  • முக்கியமான இந்திய, பாகிஸ்தானியப் போர்கள் - ஒரு பார்வை (நன்றி : தினமணி) :  இந்தியா, பாகிஸ்தானிடையே இதுவரை 4 முறை அறிவிக்கப்பட்ட போர்களும் ஒருமுறை அறிவிக்கப்படாத போரும், பலமுறை எல்லைச் சண்டைகளும், சிலமுறை ராணுவ விலக்கங்களும் நிகழ்ந்துள்ளன. இந்தியா, பாகிஸ்தானுக்கிடையிலான போர்களுக்கும், சச்சரவுகளுக்கும் நேரடியாகவோ, மறைமுகமாகவோ காஷ்மீர் பிரச்னையே பிரதான காரணமாக இருந்து வந்திருக்கிறது. ஆனால் மேற்கண்ட போர்களில் 1971 ஆம் ஆண்டு போருக்கு மட்டும் காஷ்மீர் பிரச்னை ஒரு காரணமாகக் கருதப்படவில்லை.
  1. இந்தியா பாகிஸ்தான் போர் 1947
பிரிட்டிஷ் இந்தியாவில் இருந்து விடுதலை பெற்று பிரிந்த  போது காஷ்மீரை ஆண்டு வந்தவர் இந்து மன்னரான ஹரிசிங். ஹரிசிங்கின் கட்டுப்பாட்டில் இருந்த ஜம்மு காஷ்மீர் பகுதிகளை ஆக்ரமிக்க பாகிஸ்தான் தொடர்ந்து முயன்றது.  விரும்பியதோடு நில்லாமல் காஷ்மீரின் எல்லைப்புறத்தில் சில பகுதிகளை ஆக்ரமித்து ஆஸாத் காஷ்மீர் என்று பெயரிட்டு தன்னுடைய கட்டுப்பாட்டிலும் வைத்துக் கொண்டது. இதற்காக நடந்த இந்தியா, பாகிஸ்தான் யுத்தம் 1947 ஆம் ஆண்டு அக்டோபர் 22 ஆம் நாள் தொடங்கி 1948 டிசம்பர் 31 வரை நடைபெற்றது.. இதுவே பிரிவினைக்குப்பின் நிகழ்ந்த முதல் இந்திய, பாகிஸ்தான் போர். இப்போரில் பாகிஸ்தான்   இராணுவம் வடக்கு காஷ்மீர் (ஆசாத் காஷ்மீர்) முழுவதையும் மேலும் மேற்குப் பகுதிகளில் சிலவற்றையும் கைப்பற்றியது. எஞ்சிய ஜம்மு, காஷ்மீர் பள்ளத்தாக்கு மற்றும் லடாக் பகுதிகளை பாகிஸ்தானுடன் போரிட்டு இந்தியா தன்னுடன் இணைத்துக் கொண்டது. இந்தப் போரின் இறுதிக்கட்டத்தில் ஐக்கிய நாடுகள் சபை தலையிட்டு இந்திய- பாகிஸ்தான் போரை 1948 ஜனவரி 1 ஆம் தேதி முடிவுக்குக் கொண்டு வந்தது.
போரின் முடிவுகள்...
  • மன்னர் ஹரி சிங் தலைமையிலான ஜம்மு & காஷ்மீர் முடியாட்சி நாடு கலைக்கப்பட்டது.
  • 1949ஆம் ஆண்டு ஐ. நா.சபை, இந்திய-பாகிஸ்தான் நாடுகளுக்கிடையே எல்லையாக போர் நிறுத்தக் கோடு வரையறை செய்தது. 1972ஆம் ஆண்டில் சிம்லா ஒப்பந்தப்படி போர்நிறுத்தக் கோடே எல்லை கட்டுப்பாட்டு கோடாக மாறியது.
  1. இந்தியா பாகிஸ்தான் போர், 1965
இந்திய-பாகிஸ்தான் போர், 1965 ஆம் ஆண்டு ஏப்ரல் முதல் செப்டம்பர் 1965 வரை பாகிஸ்தானுக்கும் இந்தியாவுக்கும் இடையில் இடம்பெற்ற போரைக் குறிக்கும். இது இருநாடுகளுக்கும் இடையில் சர்ச்சைக்குரிய பகுதியான காஷ்மீர் குறித்து உருவான இரண்டாவது காஷ்மீர் போர் என அழைக்கப்படுகிறது.  ஜம்மு காஷ்மீர் பகுதிக்குள் ‘ஜிப்ரால்ட்டர் நடவடிக்கை’ என்ற பெயரில் கிட்டத்தட்ட 600 பாகிஸ்தானியப் படைகள் இந்திய எல்லைப் பகுதிக்குள் ஊடுருவினர். இந்நடவடிக்கை தோல்வியில் முடிவடைந்ததை அடுத்து ஆகஸ்ட் 15 ஆம் நாள் இந்தியா, பாகிஸ்தான் மீது தாக்குதலை அறிவித்தது. மொத்தம் ஐந்து வாரங்கள் நடந்த போரில் இரு தரப்பிலும் ஆயிரக்கணக்கான உயிரிழப்புகள் நிகழ்ந்தன. ஐக்கிய நாடுகளின் அமைதி முயற்சிகளை அடுத்து போர் நிறுத்தம் ஏற்பட்டு அதன் பின்னர் சோவியத் ஒன்றியத்தில் தாஷ்கண்ட் நகரில் இரு நாடுகளுக்கும் இடையில் அமைதி ஒப்பந்தம் கையெழுத்தானது. 1965  செப்டம்பர் 22 ஆம் நாள் ஐக்கிய நாடுகள் இரு நாடுகளையும் நிபந்தனையற்ற போர் நிறுத்த ஒப்பந்தத்திற்கு வருமாறு கேட்டுக் கொண்டது. அதனை அடுத்து சோவியத்தின் தாஷ்கண்ட் நகரில் இந்தியப் பிரதமர் லால் பகதூர் சாஸ்திரியும் பாகிஸ்தான் தலைவர் அயூப் கானும் அமைதி ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர். இதன்படி இருநாடுகளும் தங்கள் படையினரை தங்கள் எல்லைப் பகுதிக்குத் திரும்ப அழைக்க முடிவு செய்தனர்.
  1. 1971 இந்தியா-பாகிஸ்தான் போர்
1971 இந்தியா - பாகிஸ்தான் போர் என்பது 1971 இல் வங்கதேச விடுதலைப் போர் காலத்தில் இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் நடைபெற்ற நேரடிச் சண்டையைக் குறிக்கின்றது. 1971 ஆம் ஆண்டு டிசம்பர் 3 ஆம் தேதியன்று 11 இந்திய வான்படை முகாம்களின் மீது பாகிஸ்தான் வலிந்த தாக்குதலை மேற்கொண்டதும் இந்தியா கிழக்கு பாக்கிஸ்தான் விடுதலைப் போருக்குள் நுழைந்தது. இப்போர் 13 நாட்கள் நீடித்து, வரலாற்றில் மிகவும் குறுகிய காலம் நடைபெற்ற போராக இடம்பிடித்துள்ளது.
போரின் விளைவுகள்...
  • இந்திய வெற்றி பெற்றது. கிழக்குப் பகுதியில் பாகிஸ்தான் படைகள் சரணடைந்தன.
  • கிழக்கு பாகிஸ்தானிலிருந்து வங்காளதேசம் விடுதலை அடைந்தது.
  • இந்தியப்படைகள் கிட்டத்தட்ட 5,795 சதுர மைல்கள் (15,010 km2) நிலத்தை மேற்கு பாகிஸ்தானில் கைப்பற்றி பின்னர் சிம்லா ஒப்பந்தத்தின் பேரில் நல்லெண்ண அடிப்படையில் திருப்பிக் கொடுத்தனர்.
  1. 1999 இந்திய பாகிஸ்தான் போர் (அ) கார்கில் போர்...
  • 1971 ஆம் ஆண்டு நடந்த இந்திய - பாகிஸ்தான் போருக்குப் பின் இரு நாடுகளுக்கிடையே பெரும்பாலும் அமைதியே நிலவியது. ஆனால் சியாசென் பனிமலையைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதற்கு இரு நாடுகளும் செய்த முயற்சிகளும் அதன் காரணமாக அமைக்கப்பட்ட இராணுவ கண்காணிப்பு நிலைகளும், சிறிய அளவில் மோதல்கள் ஏற்பட காரணமாக அமைந்தது. காஷ்மீரில் 1990 களில் பாகிஸ்தான் ஆதரவுடன் நடந்த பிரிவினைவாத மோதல்களும், இரு நாடுகளும் 1998 இல் மேற்கொண்ட அணு ஆயுத சோதனைகளும், பதற்றம் அதிகரிக்கக் காரணமாயின. பதற்றத்தைத் தணிக்கவும்,
  • காஷ்மீர் மோதல்களை அமைதியான முறையில் தீர்த்துக் கொள்ளவும் இரு நாடுகளும் பிப்ரவரி 1999 இல், லாகூர் உடன்படிக்கையில் கையெழுத்திட்டன.
  • பாகிஸ்தான் பாதுகாப்புப் படைகளைச் சேர்ந்த பாகிஸ்தான் இராணுவத்தின் சில பிரிவுகளும் பாகிஸ்தான் துணை இராணுவப் படையினரும் முஜாஹிதீன் போராளிகளைப்போல இந்தியக் கட்டுப்பாட்டில் உள்ள காஷ்மீர் பகுதிக்குள் 1998-1999 களில் ஊடுருவத் தொடங்கினர். இந்த ஊடுருவல் ”பத்ர் நடவடிக்கை” என்ற குறியீட்டுப் பெயரால் அறியப்பட்டது. காஷ்மீருக்கும் லடாக்குக்கும் உள்ள இணைப்பைத் துண்டிப்பதும்; சியாசென் பனிமலையில் இருக்கும் இந்தியப் படையினரைப் பின் வாங்க வைத்து காஷ்மீர் எல்லைப் பிரச்சனைக்குத் தீர்வு காண இந்தியாவை நிர்பந்திப்பதும் இதன் முக்கிய நோக்கங்களாகக் கருதப்படுகின்றன.
  • காஷ்மீர் பகுதியில் பதற்றம் அதிகரித்தால் சர்வதேச நாடுகள் தலையிடும் என்றும் அதன் மூலம் காஷ்மீர் பிரச்சனைக்கு விரைவில் முடிவு காண முடியும் என்றும் பாகிஸ்தான் நம்பியது. பர்வேஸ் முஷாரஃப் பாகிஸ்தான் இராணுவத்தின் தளபதியாக நியமிக்கப்பட்டதும் தாக்குதலுக்கானத் திட்டங்கள் மீண்டும் வகுக்கப்பட்டன. போருக்குப் பின் அப்போதைய பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீஃப், தனக்குத் தாக்குதல் திட்டங்கள் குறித்து எவ்விதத் தகவல்களும் தெரியாது என்றும் இந்தியப் பிரதமராக விளங்கிய அடல் பிகாரி வாஜ்பாய் தொலைப்பேசியில் அழைத்து எல்லை நிலவரம் குறித்துப் பேசிய பின்னர்தான் தனக்குத் தாக்குதல் பற்றித் தெரியும் என்றும் கூறியுள்ளார்.
  • 'ஆபரேஷன் விஜய்' என்ற பெயரில் இந்தியா 1999 மே 26ம் தேதி ராணுவ நடவடிக்கையை தொடங்கியது.
  • ஜூன் 13 அன்று இந்திய இராணுவம், திரஸிலுள்ள தோலோலிங் பகுதி மற்றும் இரண்டு முக்கிய நிலைகளான புள்ளி 5060 மற்றும் புள்ளி 5100 ஆகியவற்றைக் கைப்பற்றியது. ஜூலை 2  அன்று  இந்திய இராணுவம் கார்கிலில் மும்முனைத் தாக்குதலைத் தொடங்கியது
  • ஜூலை 5 அன்று அமெரிக்க அதிபர்  பில் கிளின்டனுடனான சந்திப்பைத் தொடர்ந்து பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீஃப், பாகிஸ்தான் படைகளைத் திரும்பப்பெற ஒப்புக்கொண்டார் 
  • ஜூலை 14 அன்று  இந்திய பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாய், விஜய் நடவடிக்கை வெற்றி அடைந்ததாக அறிவித்தார்.
கார்கில் ஆய்வுக்குழு...
போரின் முடிவில் அடல் பிகாரி வாஜ்பாயின் அரசாங்கம், போருக்கான காரணங்களையும் இந்திய உளவுத்துறையின் தோல்விக்கான காரணங்களையும் விசாரிக்க உத்தரவிட்டது. உயர் அதிகாரம் கொண்ட குழு ஒன்று, கே. சுப்பிரமண்யம் தலைமையில் உருவாக்கப்பட்டு, முன்னாள் பிரதமர்கள் மற்றும் பாதுகாப்புத்துறையுடன் சம்பந்தப்பட்ட எவரையும் விசாரிக்கும் அதிகாரம் வழங்கப்பட்டது. சுப்பிரமண்யம் அறிக்கை என்று அறியப்படும் அக்குழுவின் அறிக்கையில் செய்யப்பட்டிருந்த பரிந்துரைகள் காரணமாக இந்திய உளவுத்துறையில் பெரிய அளவில் மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டன. 
  • இந்தியா- பாகிஸ்தான் ஆயுதங்கள் மற்றும் ராணுவ பலம் - ஒப்பீடு : (நன்றி : தினத்தந்தி) இந்தியா- பாகிஸ்தான் ஆயுதங்கள் மற்றும் ராணுவ பலம் குறித்து வாஷிங்டனில் உள்ள சர்வதேச ஆய்வுகள் மையம்  (CSIS)  தகவல்களை வெளியிட்டுள்ளது. அதன் விவரம் வருமாறு,
    • ஏவுகணைகள் : இந்தியாவில் 9,000 கிமீ (1,864 மைல்கள்) முதல் 5,000 கிமீ (3,106 மைல்கள்) வரை  பாயும் அக்னி -3 உள்ளிட்ட ஒன்பது வகை ஏவுகணைகள் உள்ளன.
    • பாகிஸ்தானின் ஏவுகணைகள் சீன உதவியுடன் கட்டமைக்கப்பட்டது, இந்தியாவின் எந்தப் பகுதியையும் அடையக்கூடிய மொபைல், குறுகிய மற்றும் நடுத்தர அளவிலான ஆயுதங்களை உள்ளடக்கியதாக உள்ளது என CSIS தெரிவித்துள்ளது.2,000 கிமீ (1,242 மைல்கள்) வரை, ஷாஹீன் 2 மிக நீண்ட தூரம் ஏவுகணை உள்ளது.
    • அணு ஆயுதங்கள் : இந்தியாவின் 130-140 அணு ஆயுதங்களை ஒப்பிடும்போது, பாகிஸ்தான் 140 முதல் 150 அணு ஆயுதங்களைக் கொண்டுள்ளது என SIPRI தெரிவித்துள்ளது.
    • இராணுவ வீரர்களின் எண்ணிக்கை : இந்தியாவில் 1.2 மில்லியன் ராணுவ வீரர்கள் உள்ளனர். 3565 போர் டாங்கிகள் உள்ளன. 3,100 காலாட்படை போர் வாகனங்கள், 336 கவச வாகனங்கள் மற்றும் 9,719 பீரங்கிகள் உள்ளன. பாகிஸ்தானிடம்  5,60,000 போர்வீரர்கள், 2496 டாங்கிகள், 1605 கவச வாகனங்கள், 4472 பீரங்கிகள், 375  தானியங்கி  பீரங்கிகள் உள்ளன.
    • விமானப்படை பலம் : 127,200 பணியாளர்களும், 814 போர் விமானங்களுடன் இந்தியாவின் விமானப்படை கணிசமாக பெரியது. பாகிஸ்தான் 425 போர் விமானங்களைக் கொண்டுள்ளது, இதில் சீன-எஃப்என்ஜி 7 மற்றும் அமெரிக்கன் எப் -16 சபோர் ஃபால்கோன் விமானங்கள் உள்ளன. இது ஏழு வான்வழி எச்சரிக்கை மற்றும் கட்டுப்பாட்டு விமானங்கள் இந்தியாவை விட மூன்று அதிகமாக உள்ளது.
    • கடற்படை பலம் : இந்தியாவின் கடற்படை ஒரு விமானம் தாங்கி கப்பலை கொண்டுள்ளது. 16 நீர்மூழ்கிக் கப்பல்கள், 14 அழிக்கும் கப்பல்கள் , 13 போர்க்கப்பல்கள், 106 ரோந்து மற்றும் கடற்கரை போர் கப்பல்கள், 75 போர் திறன் கொண்ட விமானம், 67,700 கடற்படை வீரர்கள் உள்ளனர். குறிப்பிடத்தக்க வகையில் சிறிய கடலோரப்பகுதி கொண்ட பாகிஸ்தான், 9 போர் கப்பல்கள், 8 நீர்மூழ்கிக் கப்பல்கள், 17 ரோந்து மற்றும் கடலோரக் கப்பல்கள் மற்றும் 8 போர் திறன் கொண்ட விமானங்களைக் கொண்டுள்ளது.
    • உலகளவில், இந்தியாவை விட பாகிஸ்தான் ராணுவ பலம் குறைவுதான். இந்தியா ராணுவ பலத்தில் 4-வது ரேங்கிலும், பாகிஸ்தான் 17-வது ரேங்கிலும் உள்ளது.


  • கேரள மாநிலம், பாலக்காடு மாவட்டத்தில் உள்ள வடவனூரில் புனரமைக்கப்பட்ட எம்.ஜி.ஆர். இல்லத்தை  கேரள ஆளுநர் சதாசிவம் அவர்கள் 26-2-2019 அன்று  திறந்துவைத்தார்.  சிறு வயதில் இங்கு எம்.ஜி.ஆர். தனது குடும்பத்துடன் வசித்து வந்துள்ளார். அவர் வசித்த வீடு தற்போது அங்கன்வாடி மையமாகச் செயல்பட்டு வருகிறது.  சென்னை முன்னாள் மேயரும், எம்.ஜி.ஆர். பேரவைத் தலைவருமான சைதை துரைசாமி அந்த வீட்டைப் ரூ.50 லட்சம் செலவில் புனரமைப்பு செய்துள்ளார்.
  • 4 வது, ’உலக டிஜிட்டல் சுகாதார ஒத்துழைப்புக் கூடுகை (4th Global Digital Health Partnership Summit) மத்திய சுகாதாரம் மற்றும் குடும்பநலத்துறை, உலக சுகாதார நிறுவனம் மற்றும் உலக டிஜிட்டல் சுகாதார ஒத்துழைப்பு அமைப்பு (Global Digital Health Partnership (GDHP)) ஆகியவற்றால் 25-26 பிப்ரவரி 2019 தினங்களில் புது தில்லியில் நடத்தப்பட்டது.
  • Quick Reaction Surface-to-Air Missile (QRSAM)” என்று பெயரிடப்பட்டுள்ள, நிலத்திலிருந்து வான் இலக்கை தாக்கும் இரண்டு ஏவுகணைகளை இந்தியா வெற்றிகரமாக சோதனை செய்துள்ளது.  25கி.மீ முதல் 30கி.மீ தொலைவிலான இலக்குகளைத் தாக்கும் வலிமைகொண்ட இந்த ஏவுகணையை  பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் (Defence Research and Development Organisation (DRDO)) தயாரித்துள்ளது.  இந்த புதிய ஏவுகணைகள் ஏற்கனவே இருந்து வரும்  ‘ ஆகாஸ் ‘ ( ‘Akash’ ) ஏவுகணைகளுக்கு மாற்றாக உருவாக்கப்படவுள்ளன.
  • விமானப் போக்குவரத்து கூடுகை 2019’ (Aviation Conclave 2019) மத்திய உள்நாட்டு விமானப்போக்குவரத்து அமைச்சகம்,  இந்திய விமானநிலையங்கள் ஆணையம் ஆகியவற்றினால்,  27-2-2019  அன்று ‘அனைவருக்கும் விமானப் பயணம்’ (Flying for All) என்னும்  மையக்கருத்தில் புது தில்லியில் நடைபெறுகிறது.
  • சம்பிரிதி 2019” (Sampriti - 2019) என்ற பெயரில் இந்தியா மற்றும் வங்காளதேச நாடுகளுக்கிடையேயான கூட்டு இராணுவ ஒத்திகை 2 - 15 மார்ச் 2019 தினங்களில்  வங்காளதேசத்திலுள்ள  ‘ தாங்கைல்’ (Tangail) எனுமிடத்தில் நடைபெறவுள்ளது.
  • உலகின் மிகப்பெரிய பகவத் கீதையை பிரதமர் மோடி அவர்கள் புது தில்லியிலுள்ள ‘ISKCON கோயில் மற்றும் கலாச்சார மையத்தில்   (ISKCON Temple and Cultural Centre)  26-2-2019 அன்று திறந்து வைத்தார்.  இதுவே,  உலகளவில் மிகப்பெரிய  (in size)  புனித நூல் எனும் பெருமையையும் பெற்றுள்ளது.
கூ.தக. : ’ISKCON’ என்பதன் விரிவாக்கம் -  International Society for Krishna Consciousness 
  • 12 வது, ‘ஏரோ இந்தியா 2019’ (Aero-India 2019) என்ற பெயரில் இரு ஆண்டுகளுக்கொரு முறை நடைபெறும்  விமானப்படை கண்காட்சி  24 பிப்ரவரி 2019  அன்று பெங்களூருவிலுள்ள யேலஹங்கா (Yelahanka) விமானப்படை நிலையத்தில் (பில்லியன் வாய்ப்புகளை நோக்கிய ஓட்டம்’ (‘Runway to a Billion Opportunities’)  எனும் மையக்கருத்தில் நடைபெற்றது.
  • முழுவதும் இந்தியாவில் தயாரிக்கப்பட்டுல்ள ‘தேஜாஸ் (Tejas) ரக போர் விமானத்தில் இணைந்து பயணித்துள்ள ( co-piloted ) முதல் பெண் எனும் பெருமையை பேட்மிண்டன் வீராங்கனை பி.வி.சிந்து பெற்றுள்ளார்.
  • முக்கியமந்திரி யுவ ஸ்வாபிமான் யோஜனா (Mukhyamantri Yuva Swabhiman Yojana’) என்ற பெயரில் பொருளாதாரத்தில் நலிவடைந்த நகர்புற இளைஞர்களுக்கு ஆண்டுதோறும் 100 நாள் வேலைவாய்ப்பு வழங்குவதற்கான திட்டத்தை மத்திய பிரதேச மாநிலம் தொடங்கியுள்ளது.
  • பாஸ்போர்ட் பட்டியல் 2019 (Passport Index 2019) ல் இந்தியா 67 வது இடத்தைப் பெற்றுள்ளது. 199 நாடுகளைக்கொண்ட இந்தப் பட்டியலில் முதல் மூன்று இடங்களை முறையே  யுனைட்டட் அரபு எமிரேட்டு, ஜெர்மனி மற்றும் டென்மார்க் நாடுகள் பெற்றுள்ளன.

விளையாட்டுக்கள்  

  • தென் ஆப்பிரிக்கா கிரிக்கெட் அணியை அவர்களது நாட்டிலேயே தோற்கடித்துள்ள முதல் ஆசிய நாட்டு கிரிக்கட் அணி எனும் பெருமையை ஸ்ரீலங்கா கிரிக்கெட் அணி பெற்றுள்ளது.

அறிவியல் & தொழில்நுட்பம்

  • ஹாட் எர்த் (‘hot Earth’) என்று பெயரிடப்பட்டுள்ள புதிய கோளை அமெரிக்காவின் ஹார்வர்டு-ஸ்மித்சோனியான் மைய ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

கருத்துரையிடுக

Respected visitors , this is your area. Ask your queries, post your suggestions. If you know correct answers for other friend's questions, kindly reply them. Motivate One another . Your comments will be posted soon with a small moderation.
Note:Please avoid sharing phone numbers, email Ids and posting abusive comments against the government and recruitment agencies.