-->
TNPSC Portal - Thervu Vazhikatti Current Affairs Magazine

TNPSC Current Affairs 15-17 May 2024

 தமிழ்நாடு

வேலைக்கார சுவாமிகள் காலமானார் : திருப்போரூரில்  ஆசிரமம் அமைத்து 10 ஆண்டுகளுக்கும் மேலாக வள்ளலார் கொள்கைகளை பரப்பிய மூத்த சன்மார்க்கியான  வள்ளலார் சிந்தனை சீடர் பாலசுப்ரமணி (89)  (வேலைக்கார சுவாமிகள்) காலமானார். 


கிரைய பத்திரத்தை ரத்து செய்வதற்கான கட்டணம்  ரூ.1,000 மட்டுமே  என தமிழ்நாடு அரசின் பத்திரப்பதிவு துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது. 

 • கிரைய பத்திரம் பதிவுக்கு தமிழக அரசு முத்திரைத்தாள் கட்டணம் 7 சதவீதமும், பதிவு கட்டணம் 2 சதவீதமும் என மொத்தம் 9 சதவீதம் வசூலித்து வருகிறது குறிப்பிடத்தக்கது. 

 • அந்த பத்திரத்தில் முன்பு இருந்த நடைமுறையான 'இந்த ரத்து ஆவணத்தின் மூலம் உரிமை மாற்றம் ஏற்படாது' என்ற முத்தி்ரை இனி குத்தப்படாது. இதன் மூலம் ஏற்கனவே சொத்து விற்பனை செய்தவர் பெயருக்கு மீண்டும் சொத்து சென்று விடும். இந்த புதிய நடைமுறை உடனடியாக அமலுக்கு வந்துள்ளதாக பத்திரப்பதிவு துறை தெரிவித்துள்ளது.

இந்தியா

உச்சநீதிமன்ற வழக்குரைஞா் சங்கத் தலைவராக கபில் சிபல் தோ்வு செய்யப்பட்டாா்.இதற்கு முன்பாக 1995-96, 1997-98 மற்றும் 2001-02 ஆண்டுகளில் மூன்று முறை உச்சநீதிமன்ற வழக்குரைஞா் சங்கத் தலைவராக கபில் சிபல் பதவி வகித்துள்ளாா்.


குடியுரிமை திருத்தச் சட்டத்தின் கீழ், குடியுரிமை (திருத்த) விதிகள், 2024 (Citizenship (Amendment) Rules, 2024) வெளியிடப்பட்டபின் முதல் தொகுப்பு குடியுரிமைச் சான்றிதழ்கள்  14 பேருக்கு  மத்திய உள்துறை அமைச்சகம் சார்பில் 15.5.2024 அன்று  வழங்கப்பட்டுள்ளது.சான்றிதழ்களை மத்திய உள்துறை செயலாளர் திரு அஜய்குமார் பல்லா இன்று வழங்கினார். 

 • குடியுரிமை (திருத்த) விதிகள், 2024 (Citizenship (Amendment) Rules, 2024)-ஐ மத்திய அரசு 2024 மார்ச் 11 அன்று  அறிவிக்கை செய்தது. இதன் தொடர்ச்சியாக மதரீதியான துன்புறுத்தல்கள் அல்லது அவற்றால் ஏற்பட்ட அச்சம் காரணமாக பாகிஸ்தான், பங்களாதேஷ், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளில் இருந்து 31.12.2014 வரை இந்தியாவுக்கு வந்த இந்து, சீக்கிய, சமண, புத்த, பார்சி, கிறிஸ்தவ சமூகங்களைச் சேர்ந்தவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் பெறப்பட்டன.

 • தில்லியில் உள்ள மக்கள் தொகை கணக்கெடுப்பு செயல்பாட்டு பிரிவு இயக்குநர் தலைமையிலான அதிகாரம் அளிக்கப்பட்ட குழு உரிய பரிசீலனைக்குப் பின் 14 விண்ணப்பதாரர்களுக்கு குடியுரிமை வழங்க முடிவு செய்தது.

 • குடியுரிமை திருத்தச் சட்டம்: பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்கதேசம் ஆகிய நாடுகளிலிருந்து இந்தியாவில் குடியேறிய முஸ்லிம் அல்லாத மதப் பிரிவினருக்குக் குடியுரிமை வழங்குவதற்கு வழிவகை செய்யும், குடியுரிமை சட்டத் திருத்தச் சட்டம் கடந்த 2019, டிசம்பரில் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. இதனை அடுத்து குடியரசுத் தலைவரின் ஒப்புதலும் பெறப்பட்டது.

 • இந்தச் சட்டத்தின்படி, பாகிஸ்தான், ஆப்கனிஸ்தான், வங்கதேசம் ஆகிய நாடுகளில் இருந்து 2014, டிசம்பர் 31 தேதிக்குள் இந்தியாவுக்கு வந்த இந்துக்கள், சீக்கியர்கள், சமணர்கள், பவுத்தர்கள், பார்சிக்கள், கிறிஸ்தவர்கள் ஆகியோருக்கு இந்திய குடியுரிமை வழங்கப்படும். அவர்களிடம் எவ்வித ஆவணங்களும் இல்லாவிட்டாலும் அவர்களுக்கு குடியுரிமை வழங்கப்படும்.


‘பண மோசடி புகாா் தொடா்பான வழக்கை சிறப்பு நீதிமன்றம் விசாரணைக்கு எடுத்துக்கொண்ட பிறகு, குற்றச்சாட்டுக்கு உள்ளானவரை சட்டவிரோத பணப் பரிவா்த்தனை தடுப்புச் சட்டத்தின் (Prevention of Money Laundering Act, 2002) கீழ் அமலாக்கத்துறை கைது செய்ய முடியாது’ என்று உச்சநீதிமன்றம்   தீா்ப்பளித்துள்ளது.  மேலும், ‘இந்த வழக்கில் அழைப்பாணையின் பேரில் குற்றஞ்சாட்டப்பட்டவா் நீதிமன்றத்தில் ஆஜராவதை, காவலில் எடுத்ததாகக் கருத முடியாது. மாறாக, விசாரணைக்காக அவரைக் காவலில் எடுக்க நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை உரிய மனுவை தாக்கல் செய்யவேண்டும்’ என்றும் உச்சநீதிமன்றம் குறிப்பிட்டது.உச்சநீதிமன்ற நீதிபதிகள் அபய் எஸ்.ஓகா, உஜ்ஜல் புயான் ஆகியோா் அடங்கிய அமா்வில் 16.5.2024 அன்று நடைபெற்ற சட்டவிரோத பணப் பரிவா்த்தனை தடுப்புச் சட்டத்தின் கீழான வழக்கு விசாரணையின்போது இந்த தீர்ப்பு வழங்கப்பட்டது. 


”பீஷ்ம் திட்டம்” (Bharat Health Initiative for Sahyog, Hita and Maitri (BHISHM)) என்ற பெயரில், அவசர காலங்களில், எடுத்துச் செல்லத்தக்க மருத்துமனை வசதியை முதல் முறையாக  இந்திய விமானப் படை   உத்தரபிரதேச மாநிலம் ஆக்ராவில் வெற்றிகரமாக சோதித்துள்ளது.  இந்த சோதனையில், சுமார் 720 கிலோ எடை கொண்ட சிறியமருத்துவமனை கடந்த செவ்வாய்க்கிழமை 1,500 அடி உயரத்தில் இருந்து பிரத்யேகமாக தயாரிக்கப்பட்ட பாராசூட் மூலம் உத்தர பிரதேச மாநிலம் ஆக்ராவில் முதன்முதலாக தரையிறக்கப்பட்டு வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டது.  இதற்காக, இந்திய விமானப் படைக்கு சொந்தமான சி-130 ரக விமானங்கள் பயன்படுத்தப்பட்டன. இந்த பாராசூட்களை ஆக்ராவில் உள்ள ஏர்டெலிவரி ரிசர்ச் அண்ட் டெவலப்மெண்ட் எஸ்டாபிளிஸ்மென்ட் வடிவமைத்துள்ளது.நாடு முழுவதும் பயன்படுத்தக்கூடிய கையடக்க மருத்துவமனைகளின் திறனை மதிப்பிடுவதை இந்த சோதனை நோக்கமாகக் கொண்டுள்ளது.


இந்தியா ஸ்கில்ஸ் போட்டி 2024 (IndiaSkills Competition 2024) என்ற பெயரில்  நாட்டின் மிகப்பெரிய திறன் போட்டி  15- 18 மே 2024 தினங்களில் புது தில்லியில் நடைபெறுகிறது. இந்த போட்டியில், இந்தியா முழுவதிலிருந்தும் பங்கேற்பாளர்கள் பாரம்பரிய கைவினைப் பொருட்கள் முதல் அதிநவீன தொழில்நுட்பங்கள் வரை 61 திறன்களில் தேசிய மேடையில் தங்களது மாறுபட்ட திறன்கள் மற்றும் திறமைகளை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்பு வழங்கப்படுகிறது. 

இந்தியா ஸ்கில்ஸ் போட்டியின் வெற்றியாளர்கள், சிறந்த தொழில்துறை பயிற்சியாளர்களின் உதவியுடன், வரும் செப்டம்பர் 2025 மாதத்தில்  பிரான்சின் லியோனில் நடைபெறவுள்ள உலகத் திறன்கள் போட்டிக்குத் தயாராவார்கள்.


250வது நிறுவன தினத்தை கொண்டாடும் மசாகன் கப்பல் கட்டும் நிறுவனம்   :  மகாராஷ்டிராவின் மும்பையில் அமைந்துள்ள மசாகன் டாக் ஷிப் பில்டர்ஸ் லிமிடெட் (Mazagon Dock Shipbuilders Limited (MDL)) மே 14, 2024 அன்று, தனது 250வது நிறுவன தினத்தை  கொண்டாடியது.  1774 இல் ஒரு சிறிய உலர் கப்பல்துறையாகத் தொடங்கப்பட்ட இந்நிறுவனம்  1960 இல் பாதுகாப்பு அமைச்சகத்தின் கீழ் இந்திய அரசாங்கத்தால் கையகப்படுத்தப்பட்டது. இது 2006 இல் மினி-ரத்னா-I அந்தஸ்தைப் பெற்றது.


டைம்ஸ் உயர் கல்வி யங் யுனிவர்சிட்டி தரவரிசை 2024 (Times Higher Education (THE) Young University Rankings 2024) இன் படி, கேரளாவின் கோட்டயத்தில் உள்ள மகாத்மா காந்தி பல்கலைக்கழகம் உலக அளவில்81 வது இடத்தில் உயர்ந்த தரவரிசையில் உள்ள இந்தியப் பல்கலைக்கழகமாக உருவெடுத்துள்ளது.சிங்கப்பூர் நன்யாங் தொழில்நுட்ப பல்கலைக்கழகம்  தொடர்ந்து 2வது ஆண்டாக உலக தரவரிசையில் முதலிடம் பிடித்துள்ளது.

உலகம்

சிங்கப்பூரின் நான்காவது பிரதமராக பொருளாதார நிபுணர் லாரன்ஸ் வாங் 15.5.2024 அன்று பதவியேற்றார்.


ஸ்லோவாகியா நாட்டின் பிரதமர் ராபர்ட் ஃபிகோ மீது அடையாளம் தெரியாத நபர்கள் துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளனர்.


 'பன் திருவிழா' (Cheung Chau Bun Festival)  :  ஹாங்காங்கில் பாரம்பரிய ’பன் திருவிழா’ 16.5.2024 அன்று வெகுவிமரிசையாகக் கொண்டாடப்பட்டது. இது, ஹாங்காங்கில் உள்ள Cheung Chau தீவில் புத்தர் பிறந்தநாள் கொண்டாட்டத்தின் ஒருபகுதியாக  நடைபெறும் ஒரு பாரம்பரிய சீன திருவிழா ஆகும்.   இந்த நிகழ்வில், பன்களால் அலங்கரிக்கப்பட்ட உயரமான கம்பத்தில் ஏறி போட்டியாளர்கள் பன்களைப் போட்டி போட்டுக்கொண்டு பறிக்கின்றனர். அதிக எண்ணிக்கையில் பன்களை பறித்துக் கொள்பவர் வெற்றியாளராக அறிவிக்கப்படுவார். 

வெளிநாட்டு உறவுகள்

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் மீதான தடையை மத்திய அரசு மேலும் 5 ஆண்டுகளுக்கு நீட்டித்துள்ளது

1991-ம் ஆண்டு முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலை செய்யப்பட்டதைத் தொடர்ந்து, எல்டிடிஇ அமைப்பை தீவிரவாத இயக்கம் என மத்திய அரசுஅறிவித்தது. இந்தியா முழுவதும்அந்த இயக்கத்தின் செயல்பாடுகளுக்கு தடை விதிக்கப்பட்டது. 2 ஆண்டுகளுக்கு ஒரு முறை அந்ததடை நீட்டிக்கப்பட்டு வந்தது.இந்நிலையில், 2019-ம் ஆண்டு மே மாதம் விடுதலைப் புலிகள் இயக்கத்தின் மீதான தடையை 5 ஆண்டுகளுக்கு நீட்டிப்பதாக மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்தது.இந்தத் தடை நேற்றுடன் முடிவடைய இருந்த நிலையில், மேலும்5 ஆண்டுகளுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. 


“ஐமெக்ஸ் 2024 ஃபிராங்க்பர்ட் கண்காட்சியில்”  ( IMEX, Frankfurt 2024)  மத்திய சுற்றுலா அமைச்சகம் பங்கேற்றது.  ஜெர்மனியின் ஃபிராங்க்பர்ட்டில் 2024 மே 14 தொடங்கி 16 வரை  நடைபெற்ற  ஐமெக்ஸ் 2024 கண்காட்சி,  தொழில் வல்லுநர்களுக்கு வணிகங்களை மேம்படுத்துவதற்கும், உண்மையான இணைப்புகளை வளர்ப்பதற்கும், விலைமதிப்பற்ற நுண்ணறிவுகளைப் பெறுவதற்கும் மதிப்புமிக்க மற்றும் லாபகரமான வாய்ப்பை வழங்குகிறது.


”சக்தி இராணுவப்பயிற்சி” (“Ex-SHAKTI”)  என்ற பெயரில், இந்தியா மற்றும் பிரான்ஸ் நாடுகளுக்கிடையேயான இரண்டு ஆண்டுகளுக்கொரு முறை நடைபெறும் இராணுவ பயிற்சி (biennial training exercise) 13-26 மே 2024 வரையிலான 14 நாட்கள் மேகாலயாவின்உம்ரோயில்   உள்ள நவீன வெளிநாட்டுப் பயிற்சி முனையில் (Foreign Training Node) நடைபெறுகிறது. 

 

பொருளாதாரம்

நிதி நிறுவனங்கள் தங்களின் வாடிக்கையாளர்களுக்கு ரூ. 20,000-க்கும் மேல் கடனை பணமாக வழங்கக் கூடாது என்று இந்திய ரிசர்வ் வங்கி கட்டுப்பாடு விதித்துள்ளது. இருப்பினும், நகைக் கடனாக ரூ.20,000-க்கும் மேல் தேவைப்படுபவர்கள் தங்களின் வங்கிக் கணக்கின் மூலம் பணத்தை பெற்றுக் கொள்ளலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.  ரிசர்வ் வங்கி வெளியிட்ட சுற்றறிக்கையில், “வருமான வரிச் சட்டம், 1961-ன் பிரிவு 269 எஸ்எஸ் விதியின்படி, ஒரு நபர் ரூ.20,000-க்கும் மேல் கடனை பணமாக பெற முடியாது. அதனால், வாடிக்கையாளர்களுக்கு ரூ.20,000-க்கு மேல் கடன் தொகையை ரொக்கமாக வழங்கக் கூடாது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


ஏற்றுமதி, இறக்குமதி தொடா்பான  புதிய அந்நிய செலவாணி மாற்று விகிதம்  (Exchange Rate)  மே 17, 2024  முதல் நடைமுறைக்கு வரும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. இதில் அமெரிக்க டாலா் இந்திய ரூபாயின் மதிப்புக்கு இறக்குமதிக்கு ரூ.84.35, ஏற்றுமதி ரூ.82.65 என நிா்ணயிக்கப்பட்டுள்ளது.

நாட்டின் ஏற்றுமதி, இறக்குமதி பொருள்களுக்கான அந்நிய செலவாணி விகிதத்தை மத்திய நிதியமைச்சகம் அறிவித்துள்ளது. சுங்கச்சட்டம், 1962 பிரிவு 14-இல் வழங்கப்பட்ட அதிகாரங்களைப் பயன்படுத்தி அந்நிய செலவாணி மாற்று விகிதத்தை மத்திய மறைமுக வரிகள் மற்றும் சுங்க வாரியம் தீா்மானித்துள்ளன.


தொழிலாளர் காலமுறை கணக்கெடுப்பு - காலாண்டு அறிக்கை (Periodic Labour Force Survey (PLFS) - Quarterly Bulletin)  ஜனவரி-மார்ச் 2024, 15.5.2024 அன்று தேசிய புள்ளியியல் அலுவலகத்தின் (National Statistical Office (NSO)) மூலம் வெளியிடப்பட்டுள்ளது.  அறிக்கையின் முக்கிய அம்சங்கள் வருமாறு, 

 • நகர்ப்புறங்களில் 15 வயது மற்றும் அதற்கு மேற்பட்டவர்களின்  வேலையின்மை விகிதம் 2023 ஜனவரி முதல் மார்ச் மாதம் வரை 6.8% ஆக இருந்த நிலையில் அது 2024 ஜனவரி மாதம் முதல் மார்ச் மாதம்  வரை 6.7% ஆக குறைந்துள்ளது.

 • நகர்ப்புறங்களில் மகளிரின் வேலையின்மை விகிதம் 2023 ஜனவரி மாதம் முதல்  மார்ச் மாதம் வரை 9.2% ஆக இருந்த நிலையில், 2024 ஜனவரி முதல் மார்ச் மாதம் வரை அது 8.5% ஆக குறைந்தது.

 • நகர்ப்புறங்களில் தொழிலாளர் விகிதம் 15 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட வயதினரைப் பொறுத்த வரை 2023  ஜனவரி முதல்   மார்ச் மாதம் வரை 48.5% ஆக இருந்த நிலையில், 2024 ஜனவரி் முதல் மார்ச் மாதம் வரை அது 50.2%  ஆக அதிகரித்துள்ளது.

 • நகர்ப்புறங்களில் பெண் பணியாளர் விகிதம் 2023  ஜனவரி முதல்  மார்ச் மாதம் வரை 22.7% ஆக இருந்த நிலையில், 2024 ஜனவரி  மாதம் முதல் மார்ச் மாதம் வரை அது  25.6% ஆக அதிகரித்துள்ளது. இது LFPR இன் ஒட்டுமொத்த அதிகரிப்பு போக்கை பிரதிபலிக்கிறது.

 • 15 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடைய தொழிலாளர்கள் விகிதத்தின் படி, 2023  ஜனவரி முதல்  மார்ச் மாதம் வரை 45.2% ஆக இருந்த நிலையில், 2024 ஜனவரி மாதம் முதல் மார்ச் மாதம் வரை 46.9% ஆக அதிகரித்துள்ளது.

 • நகர்ப்புறங்களில் பெண் தொழிலாளர் மக்கள் தொகை விகிதம் 2023 ஜனவரி முதல் மார்ச் மாதம் வரை 20.6% ஆக இருந்த நிலையில், 2024 ஜனவரி முதல் மார்ச் மாதம்  வரை 23.4% ஆக உயர்ந்துள்ளது.

ஆதாரம் : pib.gov.in


இந்தியா இன்டர்நேஷனல் புல்லியன் எக்ஸ்சேஞ்சில் (India International Bullion Exchange IFSC Limited (IIBX)) வர்த்தக மற்றும்  கிளியரிங் உறுப்பினராக (Trading-cum-Clearing Member (TCM)) செயல்படும் இந்தியாவின் முதல் வங்கியாக ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா ( State Bank of India (SBI) வங்கி  13 மே 2024 அன்று இணைந்துள்ளது. இதன் மூலம்,  SBIஇன் சர்வதேச நிதிச் சேவை மையம் (IFSC) வங்கிப் பிரிவு (International Financial Services Centre (IFSC) Banking Unit (IBU)) IIBX தளத்தில் வர்த்தகம் செய்ய உதவுகிறது.

கூ.தக. : இந்தியாவின் முதலாவது சர்வதேச புல்லியன் எக்ஸ்சேஞ்ச் (International Bullion Exchange)ஆன இந்தியா இன்டர்நேஷனல் புல்லியன் எக்ஸ்சேஞ்ச் IFSC லிமிடெட் (India International Bullion Exchange IFSC Limited (IIBX))  குஜராத்தின் காந்தி நகரில் உள்ள GIFT சிட்டியில் உள்ளது. 


”PIXEL” என்ற பெயரில் இந்தியாவின் முதல் மெய்நிகர் கிரெடிட் கார்டை (virtual credit card) HDFC வங்கி   14 மே 2024 அன்று அறிமுகப்படுத்தியுள்ளது.   தற்போது விசா நெட்வொர்க்கில் PIXEL Play மற்றும் PIXEL Go ஆகிய இரண்டு வகைகளில் இந்த மெய்நிகர் கிரெடிட் கார்டு கிடைக்கிறது.

 

இந்தியாவின் முதலாவது, விண்வெளி வீரர்களுக்கான  ‘Satellite In-orbit Third-party Liability Insurance’ பாலிசியை TATA AIG General Insurance Company Limited  அறிமுகப்படுத்தியுள்ளது. இது இந்திய விண்வெளித் துறையில் செயற்கைக்கோள் உற்பத்தியாளர்கள் மற்றும் ஆபரேட்டர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்ய முக்கியமான நிதிப் பாதுகாப்பை வழங்குகிறது.


இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி  2025 ஆம் நிதியாண்டில் (2024-25)  6.6% ஆகவும், 2026 ஆம் நிதியாண்டில் (2025-26)  6.2% ஆகவும் இருக்கும் என்று அமெரிக்காவின் நியூயார்க்கை தலைமையிடமாகக் கொண்ட மூடிஸ் ரேட்டிங் (Moody’s Ratings) நிறுவனம் 14 மே 2024 அன்று கணித்துள்ளது.

 

முக்கிய தினங்கள்

உலக தொலைத்தொடர்பு மற்றும் தகவல் சமூக தினம் (World Telecommunication and Information Society Day)  - மே 17 

2024 ஆம் ஆண்டிற்கான மையக்கருத்து - ’டிஜிட்டல் கண்டுபிடிப்பு உலகின் மிக அழுத்தமான சவால்களை சமாளிக்க உதவும்’ (Digital innovation can help tackle the world’s most pressing challenges) என்பதாகும். 

கூ.தக. : 

 • உலக தொலைத்தொடர்பு தினம்  1969 முதல் ஆண்டுதோறும் மே 17 அன்று கொண்டாடப்பட்டு வந்தது. இது  பன்னாட்டுத் தொலைத்தொடர்பு ஒன்றியம் (International Telecommunication Union) நிறுவப்பட்டதைக் குறிக்கும் மற்றும் 1865 இல் முதல் சர்வதேச தந்தி மாநாட்டில் கையெழுத்திட்டதைக் குறிக்கிறது.  

 • ஒவ்வொரு ஆண்டும் மே 17 உலக தகவல் சமூக தினமாக  2006 ஆம் ஆண்டு முதல் அனுசரிக்கப்பட்டு வந்தது.   

 • நவம்பர் 2006 இல், துருக்கியின் அன்டலியாவில் நடந்த பன்னாட்டுத் தொலைத்தொடர்பு ஒன்றிய மாநாடு, இரண்டு நிகழ்வுகளையும் மே 17 அன்று உலக தொலைத்தொடர்பு மற்றும் தகவல் சமூக தினமாகக் கொண்டாட முடிவு செய்தது.

 • 1865, மே 17 அன்று பாரிசில் பன்னாட்டு தந்தி ஒன்றியம் (International Telegraph Union) என நிறுவப்பட்டது. 


சர்வதேச தாவர ஆரோக்கிய தினம் (International Day of Plant Health)  - மே 12

மையக்கருத்து 2024 -  "தாவர ஆரோக்கியம், பாதுகாப்பான வர்த்தகம் மற்றும் டிஜிட்டல் தொழில்நுட்பம்" (Plant Health, Safe Trade, and Digital Technology).


சர்வதேச சூரிய தினம் (International Sun Day) - மே 3


சர்வதேச குடும்ப தினம் (International Day of Families)  - மே 15 

மையக்கருத்து - காலநிலை மாற்றமும் குடும்பங்களும் (Families and Climate Change)

 

அமைதியாக ஒன்றிணைந்து வாழ்வதற்கான சர்வதேச தினம்  (International Day of Living Together in Peace) - மே 16


சர்வதேச ஒளி தினம் (International Day of Light) - மே 16


தேசிய டெங்கு தினம் (National Dengue Day) - மே 16

2024 ஆம் ஆண்டின் கருப்பொருள் : "சமூகத்துடன் இணைவோம், டெங்குவைக் கட்டுப்படுத்துவோம்"  (Connect with Community, Control Dengue) 


நியமனங்கள் 

மத்திய தொழில் பாதுகாப்புப் படை டிஐஜியாக தமிழக காவல் துறையைச் சோ்ந்த டிஐஜி ஆா்.பொன்னி நியமனம் செய்யப்பட்டுள்ளாா்.  

தமிழக காவல் துறையைச் சோ்ந்த  மற்றுமொரு பெண் அதிகாரி ஆா்.வி.ரம்யா பாரதி விமானப் போக்குவரத்து இயக்குநரகப் பாதுகாப்புப் பிரிவு டிஜஜியாக நியமனம் செய்யப்பட்டுள்ளார். 

அறிவியல் தொழில்நுட்பம் 

சூரியனில் ஏற்பட்ட வெடிப்பால் உருவான  ‘ஏஆா்13664’ பகுதியில் உருவான சக்திவாய்ந்த சூரியப் புயலின் தாக்கம் இம்மாத தொடக்கத்தில் பூமியில் உணரப்பட்டதாகவும், இதை ஆதித்யா எல்-1 (Aditya-L1) விண்கலம் பதிவு செய்ததாகவும் இஸ்ரோ 14.5.2024 அன்று தெரிவித்துள்ளது. 

இந்தப் புயலின் தீவிரம் அதிகம் உணரப்பட்ட மே 11-ஆம் தேதியில் பூமியின் மேல் வளிமண்டலத்தில் உள்ள ‘அயன மண்டலம்’ முழுமையான வளா்ச்சியை எட்டாததால் இந்தியாவில் இதன் தாக்கம் குறைவாகவே இருந்தது.

கூ.தக. : சூரியனின் வெளிப்புறப் பகுதியை ஆராய்வதற்காக இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம்  ஆதித்யா எல்-1 விண்கலத்தை  2023 செப்டம்பர் 2-ம் தேதி PSLV-XL C57 ராக்கெட் மூலம்  விண்ணில் செலுத்தியது. பூமியிலிருந்து சுமார் 15 லட்சம் கி.மீ தொலைவில் உள்ள எல்-1 எனும் லெக்ராஞ்சியன் புள்ளியைமையமாக கொண்ட சுற்றுப்பாதை யில் விண்கலம் நிலைநிறுத்தப்பட்டது.


 ‘ஏ.ஐ. ஓவர்வியூஸ்’ (AI Overviews) : கூகுள் தேடுபொறியில், செயற்கை நுண்ணறிவு     பதில்களையும்  காட்டுவதற்ஆன  ‘ஏ.ஐ. ஓவர்வியூஸ்’  (AI Overviews) என்ற புதிய வசதியை கூகுள் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளனர். 


  "சங்கம் முன்னெடுப்பு: செயற்கை நுண்ணறிவு சார்ந்த உள்கட்டமைப்பு மாற்றத்தை நோக்கிய நடவடிக்கைக்கான"  (Sangam Initiative: A Leap Towards AI-Driven Infrastructure Transformation) முதற்கட்ட பங்கேற்பாளர்களை தொலைத்தொடர்புத் துறை அறிவித்துள்ளது. தொழில்துறை பிரபலங்கள், புதுமைக் கண்டுபிடிப்புகளுக்கான புத்தொழில் நிறுவனங்கள், முன்னணி கல்வி நிறுவனங்கள் உட்பட 112 நிறுவனங்கள் மற்றும் 32 தனிநபர்கள் இதற்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.

சங்கம் முன்னெடுப்பு (Sangam Initiative) பற்றி : 2024, பிப்ரவரி 15 அன்று தொடங்கப்பட்ட சங்கம் முன்னெடுப்பு, இயற்பியல் சூழல்களின் துல்லியமான, மாறும் மாதிரிகளை உருவாக்க டிஜிட்டல் இரட்டை தொழில்நுட்பத்தை மேம்படுத்துவதன் மூலம் உள்கட்டமைப்பு திட்டமிடல் மற்றும் வடிவமைப்பில் புரட்சியை ஏற்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இந்தப் புதுமையான அணுகுமுறை நிகழ்நேர நுண்ணறிவு மற்றும் முன்கணிப்பு பகுப்பாய்வுகளை செயல்படுத்துகிறது. உள்கட்டமைப்பு திட்டங்களின் செயல்திறன் மற்றும் துல்லியத்தை கணிசமாக மேம்படுத்துகிறது.


நிலவில் இரயில்வே நிலையம் அமைக்கும் நாசாவின் (NASA) திட்டம் : “Flexible Levitation on a Track (FLOAT)” என்ற பெயரில், நிலவின் முதலாவது இரயில்வே நிலையத்தை அமைக்கவுள்ளதாக அமெரிக்க விண்வெளி ஆய்வு மையம் அறிவித்துள்ளது. 


சுற்றுசூழல்

உலக ஹைட்ரஜன் உச்சி மாநாடு 2024 (World Hydrogen Summit 2024)-ல்  முதல் முறையாக  இந்திய அரங்கம் (India Pavilion), தேசிய பசுமை ஹைட்ரஜன் மிஷனை (National Green Hydrogen Mission) காட்சிப்படுத்தியது.  உலக ஹைட்ரஜன் உச்சி மாநாடு உலகளாவிய பசுமை ஹைட்ரஜன் சுற்றுச்சூழல் அமைப்பில் ஒரு மதிப்புமிக்க நிகழ்வாகும்.  2024 மே 13 முதல் 15 வரை நெதர்லாந்தின் ரோட்டர்டாமில் நடைபெறும் உலக ஹைட்ரஜன் உச்சி மாநாடு 2024 -ல் முதல் முறையாக இந்தியா தனது சொந்த அரங்கத்தை அமைத்துள்ளது. இந்திய அரசின் புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சகத்தால் அமைக்கப்பட்ட இந்தியாவின் அரங்கு, உச்சிமாநாட்டின் மிகப்பெரிய அரங்கங்களில் ஒன்றாகும்.   இந்த நிகழ்வில் மத்திய அரசின் புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சகத்தின் செயலாளர், திரு பூபிந்தர் சிங் பல்லா 2024, மே 15, அன்று   புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மற்றும் பசுமை ஹைட்ரஜன் உற்பத்தி துறையில் இந்தியாவின் உத்திசார்ந்த பார்வை மற்றும் திறன்களை  எடுத்துரைத்து உரையாற்றினார். 

இந்தியாவின் ஹைட்ரஜன் முன்னெடுப்புகள் : 

 • இந்தியா தனது தேசிய பசுமை ஹைட்ரஜன் மிஷனை (National Green Hydrogen Mission) 2023 ஆம் ஆண்டு ஜனவரியில் ரூ.19,744 கோடி ஒட்டுமொத்த செலவில் தொடங்கியது . 

 • 2030 ஆம் ஆண்டின் இறுதிக்குள் 5 எம்எம்டி (மில்லியன் மெட்ரிக் டன்) பசுமை ஹைட்ரஜன் உற்பத்தி திறனை அடைய இந்தியா ஒரு இலக்கை நிர்ணயித்துள்ளது. 

 • எஃகு, போக்குவரத்து, கப்பல் துறைகளில் பசுமை ஹைட்ரஜனைப் பயன்படுத்துவதற்கான திட்ட வழிகாட்டுதல்களையும் இந்தியா அறிவித்துள்ளது. அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை இந்தியாவில் புதுமைகளை வளர்ப்பதற்கும் பசுமை ஹைட்ரஜன் சுற்றுச்சூழல் அமைப்பை மேம்படுத்துவதற்கும் ஹைட்ரஜன் பள்ளத்தாக்கு கண்டுபிடிப்பு தொகுப்பு இடங்களைத் தொடங்கியுள்ளது .

 • தேசிய பசுமை ஹைட்ரஜன் மிஷனுக்கான ஒரு பிரத்யேக போர்டல் (nghm.mnre.gov.in) சமீபத்தில் தொடங்கப்பட்டது . இது மிஷன் மற்றும் இந்தியாவில் பசுமை ஹைட்ரஜன் சுற்றுச்சூழல் அமைப்பின் வளர்ச்சிக்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் பற்றிய தகவல்களுக்கான ஒரே இடமாக செயல்படுகிறது.

 

காடுகளுக்கான ஐக்கிய நாடுகள் மன்றத்தின் (United Nations Forum on Forests (UNFF19)) 19வது அமர்வு, மே 6 முதல் மே 10, 2024 வரை அமெரிக்காவின் நியூயார்க்கில் உள்ள ஐக்கிய நாடுகளின் தலைமையகத்தில் நடைபெற்றது. இதற்கு புருண்டியைச் சேர்ந்த Zéphyrin Maniratanga தலைமை தாங்கினார்.   இந்தியக் குழுவிற்கு வனத்துறை இயக்குநர் ஜெனரல் மற்றும் சுற்றுச்சூழல், வனம் மற்றும் காலநிலை மாற்றம் அமைச்சகத்தின்  சிறப்புச் செயலாளரான ஜிதேந்திர குமார் தலைமை தாங்கினார்.

2000 த்தில் தொடங்கப்பட்ட காடுகளுக்கான ஐக்கிய நாடுகள் மன்றத்தின்  தலைமையகம் நியூயார்க் நகரில் உள்ளது. 


உலக வனவிலங்கு குற்ற அறிக்கையின் (World Wildlife Crime Report) 3வது பதிப்பை  பாதுகாக்கப்பட்ட உயிரினங்களின் கடத்தல்' (World Wildlife Crime Report 2024: Trafficking in Protected Species) என்ற தலைப்பில்  போதைப்பொருள் மற்றும் குற்றங்களுக்கான ஐக்கிய நாடுகளின் அலுவலகம் (United Nations Office on Drugs and Crime (UNODC)) தனது வெளியிட்டுள்ளது, இது தாவர மற்றும் விலங்கு வனவிலங்குகளின் சட்டவிரோத கடத்தலின் தொடர்ச்சியான சிக்கலை எடுத்துக்காட்டுகிறது. அறிக்கையின் படி,  பவளப்பாறைகள் (16%), முதலைகள் (9%), மற்றும் யானைகள் (6%) ஆகியவை மிகவும் கடத்தப்பட்ட இனங்களாக உள்ளன.   இந்த அறிக்கையின் முதல் மற்றும் இரண்டாவது பதிப்புகள் முறையே 2016 மற்றும் 2020 இல் வெளியிடப்பட்டன.


விளையாட்டு

இந்தியாவிலேயே முதன்முறையாக டிஜிட்டல் முறையில் தடகள தேர்வு தமிழ்நாட்டில்  அறிமுகமாக உள்ளது. தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தால் முன்னெடுக்கப்பட்டுள்ள இந்த முயற்சியின் கீழ், விளையாட்டு வீரர்களின் தரவுகள் டிஜிட்டல் முறையில் சேமிக்கப்படுவதால் வீரர்களும் உடனுக்குடன் தங்கள் மதிப்பீட்டை அறிய உதவும்.


சூப்பர்பெட் போலந்து ரேபிட் & பிளிட்ஸ் 2024 (Superbet Poland Rapid & Blitz 2024 ) செஸ் போட்டியில், ஐந்து முறை உலக சாம்பியன் மற்றும் உலகின் நம்பர் 1 செஸ் வீரரான மேக்னஸ் கார்ல்சன் வெற்றி பெற்றுள்ளார்.  இந்த போட்டிகள்  7-12 மே 2024 தினங்களில் போலந்தின் வார்சாவில் நடைபெற்றன. இந்த போட்டியில், கிராண்ட்மாஸ்டர் ஆர்.பிரக்னாநந்தா தனது சக நாட்டு வீரர்களை விட தன்னை சிறப்பாக நிரூபித்து நான்காவது இடத்தைப் பிடித்தார். இரண்டாம் இடத்தை சீனாவின் வே யி( Wei Yi) மற்றும் மூன்றாவது இடத்தை போலந்தின் Jan-Krzysztof Duda ஆகியோர் வென்றனர்.  


இந்திய கால்பந்து அணி கேப்டன் சுனில் சேத்ரி சர்வதேசப் போட்டிகளில் இருந்து விலகுவதாக, தன் ஓய்வை அறிவித்துள்ளார்.


தேசிய இரட்டையா் ஸ்குவாஷ் சாம்பியன்ஷிப் 2024 (National Squash Championship 2024) இல் ஜோஷ்னா சின்னப்பா, அபய் சிங், வேலவன் செந்தில்குமாா் ஆகியோா்  தங்கப்பதக்கம் வென்றனா்.


ஃபெடரேஷன் கோப்பை தடகள சாம்பியன்ஷிப்பில், ஆடவா் ஈட்டி எறிதலில் நட்சத்திர வீரரான நீரஜ் சோப்ரா  தங்கப்பதக்கம் வென்றாா். ஒடிஸாவில் நடைபெற்ற இந்த போட்டியில், ஆடவா் நீளம் தாண்டுதலில் தமிழகத்தின் ஜெஸ்வின் ஆல்ட்ரின் 7.99 மீட்டருடன் தங்கம் வென்றார். 


தோஹா டயமண்ட் லீக் 2024 இல்  இந்திய ஈட்டி எறிதல் வீரர் நீரஜ் சோப்ரா இரண்டாவது இடத்தைப் பிடித்தார். இந்த போட்டிகள் 10 மே 2024 இல் கத்தாரில் நடைபெற்றன. 


இந்தியாவின் 85-ஆவது செஸ் கிராண்ட்மாஸ்டராக, தமிழகத்தைச் சோ்ந்த பி.ஷியாம்நிகில் (31) உருவெடுத்துள்ளாா். 

புத்தகங்கள் & ஆசிரியர்கள்

“At The Wheel of Research”  என்ற பெயரில், உலக சுகாதார நிறுவனத்தின் முன்னாள் முதன்மை அறிவியல் அறிஞர், இந்தியாவைச் சேர்ந்த திருமதி. சவுமியா சுவாமிநாதன் அவர்களின் வாழ்க்கை வரலாற்றை அனுராதா மஸ்கரென்கஸ் (Anuradha Mascarenhas) புத்தகமாக எழுதியுள்ளார். கருத்துரையிடுக

Respected visitors , this is your area. Ask your queries, post your suggestions. If you know correct answers for other friend's questions, kindly reply them. Motivate One another . Your comments will be posted soon with a small moderation.
Note:Please avoid sharing phone numbers, email Ids and posting abusive comments against the government and recruitment agencies.