-->
TNPSC Portal - Thervu Vazhikatti Current Affairs Magazine

TNPSC Current Affairs 18 May 2024

 தமிழ்நாடு

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் ஊதியம் வழங்குவதற்காக 2024-2025 நிதி ஆண்டுக்கு ரூ.1229.04 கோடி நிதி ஒதுக்கி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. மேலும், நபர் ஒருவருக்கு நாள் ஒன்றுக்கு ரூ.319 ஊதியம் வழங்கவும் ஒப்புதல் அளித்தது. இதன் மூலம் 20 கோடி மனித நாட்களுக்கு ஊதியம் வழங்க முடியும்.


சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.வி.கங்காபுர்வாலா மே 23-ம் தேதி பணி ஓய்வு பெறுகிறார்.  அவர் சென்னை உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக கடந்த 29.05.23 அன்று பொறுப்பேற்றுக் கொண்டார்.


தமிழ்நாட்டில் வாட்ஸ்ஆப் மூலம் மின்கட்டணம் செலுத்தும்  வசதி அறிமுகம் : வாட்ஸ்ஆப் மூலம் மின்கட்டணம் செலுத்தும் புதிய வசதியை தமிழ்நாடு மின்வாரியம் அறிமுகம் செய்துள்ளது.இதன்படி, 500 யூனிட்டுக்கு மேல் மின் பயன்பாடு உள்ள நுகா்வோா் ‘வாட்ஸ்ஆப்’ மூலம் மின்கட்டணம் செலுத்தலாம். இதற்கு, நுகா்வோா் தங்களுடைய மின் இணைப்புடன் வாட்ஸ்-ஆப் வசதியுடன் கூடிய தொலைபேசி எண்ணை இணைத்திருக்க வேண்டும். இவ்வாறு இணைக்கப்பட்டுள்ள தொலைபேசி எண்ணுக்கு ‘வாட்ஸ் ஆப்’ மூலம் மின்கட்டணம் விவரம் அனுப்பி வைக்கப்படும் நிலையில், நுகா்வோா் ‘யுபிஐ’ மூலம் மின்கட்டணத்தைச் செலுத்தலாம். 


இந்தியா

ஆக்ராவில் 102 ஆண்டுகளாக கட்டுப்பட்டு வந்த சோமி பாக் மணிமண்டபம் முழுமை பெற்று தற்போது திறக்கப்பட்டுள்ளது. உலக அதிசயமான தாஜ்மகால் போன்றே வெள்ளை பளிங்குக்கற்களால் அற்புத கலைநயத்துடன்சோமி பாக் கட்டியெழுப்பப்பட் டிருக் கிறது. தாஜ்மகால் வீற்றிருக்கும் பகுதியிலிருந்து 12 கி.மீ. தொலைவில் இது உள்ளது. ‘இறைவனின் தோட்டம்’ என்ற பொருள்படும் சோமி பாக் மணிமண்டபம் ராதாசோமி எனும் சமய மார்க்கத்தைத் தோற்றுவித்த தானி சுவாமிஜி மகராஜ் என்பவருக்கு வடிக்கப்பட்ட பிரம்மாண்டமான கல்லறை மாடமாகும். 1922-ம் ஆண்டில் கட்டப்படத் தொடங்கிய இந்த மணிமண்டபத்தின் கட்டிடப் பணியில் கடந்த 102 ஆண்டுகளில் தலைமுறை தலைமுறையாகப் பலர் ஈடுபட்டுவந்துள்ளனர். உத்தர பிரதேசம், பஞ்சாப், கர்நாடகா மற்றும் அயல் நாடுகளிலும் ராதாசோமி பற்றாளர்கள் இருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.


இந்தியாவின் மிக உயரமான சுரங்கப்பாதையாக அருணாச்சலப் பிரதேசத்தின் சேலா சுரங்கப்பாதை (Sela Tunnel)  இங்கிலாந்திலுள்ள இன்டர்நேஷனல் புக் ஆஃப் ஹானர் (International Book of Honour (IBH)) அமைப்பினால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது.  அருணாச்சலப் பிரதேசத்தின் மேற்கு கமெங் மாவட்டத்தில் அஸ்ஸாமின் தேஜ்பூரையும் தவாங்கையும் இணைக்கும் சாலையில் கட்டப்பட்ட உலகின் மிக நீளமான இருவழிச் சுரங்கப்பாதை சேலா சுரங்கப்பாதை ஆகும்.  எல்லை சாலை அமைப்பின் (Border Road Organisation (BRO)) கீழ்,  படேல் இன்ஜினியரிங் லிமிடெட் மூலம் VARTAK திட்டத்தின் மூலம் இந்த சுரங்கப்பாதை   13,000 அடி உயரத்தில் அமைக்கப்பட்டுள்ளது.   


"Fatah-II" என்ற பெயரில் பாகிஸ்தான் தனது வழிகாட்டப்பட்ட பல-ஏவுகணை ராக்கெட் (Precision-Guided Rocket) அமைப்பை வெற்றிகரமாக சோதனை செய்தது.Fatah-II ராக்கெட் அமைப்பு 400 கிலோமீட்டர் தொலைவில் உள்ள இலக்குகளை மிகத் துல்லியமாகத் தாக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.

உலகம்

உலகப் புகழ்பெற்ற பருவ இதழான ரீடர்ஸ் டைஜெஸ்ட் (Reader's Digest) - பிரிட்டிஷ் பதிப்பு, நிதிநெருக்கடியினால் தன் பதிப்பினை முடித்துக் கொள்வதாக, அதன் தலைமை ஆசிரியர் இவா மெக்கெவிக் தெரிவித்துள்ளார்.

ரீடர்ஸ் டைஜஸ்ட் 1922-ஆம் ஆண்டில் அமெரிக்காவில் டெவிட் வாலஸ் மற்றும் அவரது மனைவி லிலா பெல் வாலஸ் ஆகியோரால் தொடங்கப்பட்டது.  பிரிட்டிஷில் முதல் வெளியீட்டை 1938-இல் தொடங்கியது.


 குரோஷியா நாட்டின் பிரதம மந்திரியாக   Andrej Plenkovic  தொடர்ந்து 3வது முறையாக  தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். 

கூ.தக. :  குரோஷியாவின் ஜனாதிபதி - ஜோரன் மிலானோவிக், தலைநகரம் - ஜாக்ரெப், நாணயம்- யூரோ (EUR).


சுத்தமான சமையல் குறித்த முதல் உச்சி மாநாடு (Summit on Clean Cooking) மே 14, 2024 அன்று பாரிஸில் நடந்தது.  


வெளிநாட்டு உறவுகள்

“இந்தியா - ஆஸ்திரேலியா - இந்தோனேசியா முத்தரப்பு கடல்சார் பாதுகாப்புப் பட்டறை” (India – Australia – Indonesia Trilateral Maritime Security Workshop (TMSW)) இன் இரண்டாவது பதிப்பு, 15 - 17 மே 2024 வரை, ‘இந்தியப் பெருங்கடல் பகுதி: பிராந்திய கடல்சார் பாதுகாப்பை மேம்படுத்துவதற்கான கூட்டு முயற்சிகள்’ என்ற கருப்பொருளுடன்,   கொச்சியில் உள்ள INS துரோணாச்சார்யாவில் (INS Dronacharya) நடத்தப்பட்டது.  


இந்தியா-மங்கோலியா இடையே இருதரப்பு பாதுகாப்பு உறவுகளை மேம்படுத்துவது தொடர்பான 12-வது கூட்டுப் பணிக்குழுக் கூட்டம் (India-Mongolia Joint Working Group meeting)  உலன்பட்டாரில் (Ulaanbaatar) 16.05.2024 அன்று நடைபெற்றது.  இந்தக் கூட்டத்திற்குப் பாதுகாப்பு அமைச்சகத்தின் இணைச் செயலாளர் திரு அமிதாப் பிரசாத்,  மங்கோலிய பாதுகாப்பு அமைச்சகத்தின்  செயலாளர் பிரிகேடியர் ஜெனரல் கன்குயக் தவக்டோர்ஜ் ஆகியோர் கூட்டாகத் தலைமை வகித்தனர். மங்கோலியாவுக்கான இந்திய தூதர் அதுல் மல்ஹாரி கோட்சுர்வே இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டார்.

 

விருதுகள்

2024 ஆம் ஆண்டுக்கான புவிசார் உலக தலைமைத்துவ விருது (Geospatial World Leadership Award 2024) "பொதுக் கொள்கையை செயல்படுத்துதல்" பிரிவின் கீழ், இந்திய அரசாங்கத்தின் விண்வெளித் துறையின் கீழ் உள்ள இந்திய தேசிய விண்வெளி ஊக்குவிப்பு மற்றும் அங்கீகார மையத்திற்கு (IN-SPAce)  மே 14, 2024 அன்று நெதர்லாந்தின் ரோட்டர்டாமில் நடைபெற்ற ஜியோஸ்பேஷியல் வேர்ல்ட் ஃபோரம் 2024 (Geospatial World Forum (GWF) 2024) இன் போது வழங்கப்பட்டுள்ளது. 


முக்கிய தினங்கள்

உலக உயா் ரத்த அழுத்த தினம் ( World Hypertension Day)  - மே 17 

கருப்பொருள் 2024 :  "உங்கள் இரத்த அழுத்தத்தை துல்லியமாக அளவிடுங்கள், கட்டுப்படுத்துங்கள், நீண்ட காலம் வாழுங்கள்." (Measure Your Blood Pressure Accurately, Control It, Live Longer)


அழிந்து வரும் உயிரினங்கள் தினம் (Endangered Species Day ) 2024 - மே 17 (மே மாதம் 3வது வெள்ளிக்கிழமை)

 கருப்பொருள் 2024 :  " அழிந்து வரும் உயிரினங்களை இனங்களை பாதுகாத்து கொண்டாடுவோம்"  (Celebrate Saving Species)  

இயற்கை பாதுகாப்புக்கான சர்வதேச ஒன்றியம் (International Union for Conservation of Nature (IUCN)) விலங்குகளின் ஆபத்தான நிலையை (endangered status) அறிவிக்கிறது. தற்போது, IUCN சிவப்பு பட்டியலில் 157,100 க்கும் மேற்பட்ட இனங்கள் உள்ளன.

 

அறிவியல் தொழில்நுட்பம்
 

குலசேகரன்பட்டினத்தில்  விண்வெளி தொழில் பூங்கா : இஸ்ரோவின் ‘இன்ஸ்பேஸ்’ (Indian National Space Promotion and Authorisation Centre (IN-SPACe)) நிறுவனத்துடன் இணைந்து குலசேகரன்பட்டினத்தில் 1,500 ஏக்கரில் விண்வெளி தொழில் பூங்கா (Space Industrial and Propellant Park) அமைப்பதற்கான நில எடுப்பு பணிகள் நடைபெற்று வருவதாக தமிழ்நாடு தொழில் வளர்ச்சி நிறுவனம் (Tamil Nadu Industrial Development Corporation (TIDCO)) தெரிவித்துள்ளது. இந்த பூங்கா, விண்வெளி தொடர்பான தொழில் நிறுவனங்கள் செயற்கைக் கோள் ஏவுதளத்துக்கு அருகில் அமைவதற்கு வழிவகை செய்கிறது. தொழில் துறையில் பின்தங்கியுள்ள இப்பகுதியில், தொழில் வளர்ச்சி ஏற்படவும், புதியதொழில் வாய்ப்புகள் உருவாகவும் வகை செய்கிறது. விண்வெளி திட்ட முயற்சிகளில் உலக முதலீட்டாளர்கள் அதிக அளவில் பங்கேற்கவும் வாய்ப்பு அளிக்கும்.

கூ.தக. :  இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) தனது 2-வது ஏவுதளத்தை தமிழகத்தின் குலசேகரன்பட்டினத்தில் உருவாக்கி வருகிறது. இந்த ஏவுதளத்துக்கு பிரதமர்மோடி கடந்த பிப்.28-ம் தேதி அடிக்கல் நாட்டினார். குறிப்பாக, படுக்கப்பத்து, பள்ளக்குறிச்சி, மாதவன்குறிச்சி ஆகியகிராமங்களில், 2,233 ஏக்கர் பரப்பில், ரூ.950 கோடி செலவில் இந்தஏவுதளம் பிரம்மாண்டமாக அமைகிறது. இந்த ஏவுதளம் அமைக்கப்படுவதன் மூலம்,ராக்கெட் ஏவுவதற்கான எரிபொருள்சேமிக்கப்படுவதுடன், செயற்கைக் கோள் ஏவுதிறனும் மேம்படும். இதன் மூலம், நாட்டின் விண்வெளி ஆற்றல் மேம்படுவதுடன், அதிகஎண்ணிக்கையிலான செயற்கைக் கோள்களை ஏவவும் முடியும். இந்த பணிகளை அடுத்த 2 ஆண்டுகளில் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.


கைப்பேசிக்கான கையடக்க சூரியஒளி மின்னூட்ட கருவியை திருச்சி தேசிய தொழில்நுட்பக் கழகம் (என்.ஐ.டி.), திருவனந்தபுரம் கணினி மேம்பாட்டு மையத்துடன் (சிடிஏசி) இணைந்து கண்டுபிடித்துள்ளது.

திருச்சி என்ஐடியின் இஇஇ துறை பேராசிரியா் சி. நாகமணியின் மேற்பாா்வையில், பகுதி நேர முனைவா் பட்டம் பெற்ற சிடிஏசியின் மூத்த இயக்குநா் வி. சந்திரசேகா் இந்த மின்னூட்ட கருவியை கண்டுபிடித்துள்ளாா். மேலும், தெரு விளக்கு பயன்பாட்டுக்கான சூரியஒளி தகடு (சோலாா் பேனல்), மின்சார வாகனங்களின் உபயோகத்துக்கான தீவிர மின்தேக்கி (அல்ட்ரா கேப்பாசிட்டா்) ஆகியவற்றையும் கண்டுபிடித்தாா். இதற்காக 3 காப்புரிமைகள் மற்றும் 3 பதிப்புரிமைகள் பெறப்பட்டுள்ளன. 


புதிய கரோனா வைரஸின் ஒமிக்ரான் துணை வகை கேபி2 வைரஸால்  (FLiRT variant of the Covid virus) கிட்டத்தட்ட 100 பேருக்கு நோய்த் தொற்று பாதிப்புகள் ஏற்பட்டுள்ளதாக மகாராஷ்டிரத்தில் கண்டறியப்பட்டுள்ளன. இவை கடந்த ஆண்டு உலகளவில் பரவிய ஒமிக்ரான் ஜெஎன்1-ன் வழித்தோன்றல்கள் ஆகும்.


2023 ஆம் ஆண்டில் உலகில் எங்கும் இல்லாத அளவுக்கு அதிகமான இணையத் தடைகள் இந்தியாவில் பதிவாகியுள்ளன.


”GPT-4o”  (GPT-4 omni) அறிமுகம் : செயற்கை நுண்ணறிவு ஆய்வுத் துறையில் முக்கிய பங்கு வகிக்கும் OpenAI, சமீபத்தில் GPT-4o  என்ற புதிய செயற்கை நுண்ணறிவு மாதிரியை வெளியிட்டுள்ளது.  இதனை கட்டணமின்றி பயனர்கள் பயன்படுத்தலாம். 

 GPT-4o (GPT-4 omni), பல மொழிகள் மற்றும் உள்ளீடு வகைகளுடன் வேலை செய்யக்கூடிய ஒரு முன்-பயிற்சி பெற்ற செயற்கை நுண்ணறிவு மாதிரியாகும்.  இது ஒலி பேச்சு அங்கீகாரம் மற்றும் மொழிபெயர்ப்பில் (audio speech recognition and translation) புதிய சாதனையாக உள்ளது. GPT-4 MMLU அளவுகோலில் 86.5 ஐப் பெறுகிறது, அதே நேரத்தில் GPT-4o 88.7 மதிப்பெண்களைப் பெறுகிறது. இது 50 க்கும் மேற்பட்ட மொழிகளில் வேலை செய்கிறது, இது அனைத்து பேசும் மொழிகளில் 97% க்கும் அதிகமாகும். 


சுற்றுசூழல்

அனைத்து பனிப்பாறைகளையும் இழந்த முதல் நவீன நாடாக வெனிசுலா உருவாகியுள்ளது.  இது காலநிலைமாற்றத்தினால் சுற்றுச்சூழலில் ஏற்பட்டுள்ள  மிகப்பெரிய மாற்றமாகும்.


விளையாட்டு

பாரீஸ் ஒலிம்பிக் போட்டியில் டேபிள் டென்னிஸ் விளையாட்டில் அணிகள் பிரிவில் பங்கேற்கும் இந்திய அணிகளுக்கு சரத் கமல், மனிகா பத்ரா தலைமை தாங்குகின்றனா். பாரிஸ் ஒலிம்பிக் போட்டிகள் 26 ஜீலை 2024 முதல் 11 ஆகஸ்டு 2024 வரையில் நடைபெறவுள்ளன.  


ஃபோர்ப்ஸ் 2024  உலக அளவில் அதிக சம்பளம் வாங்கும் முதல் 50 விளையாட்டு வீரர்களின் பட்டியலில்  கால்பந்து வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ (போர்ச்சுகல்) மொத்த வருவாயுடன் 260 மில்லியன் அமெரிக்க டாலர்களுடன் பட்டியலில் முதலிடத்தைப் பிடித்தார்,  இரண்டாமிடத்தில், ஜான் ரஹ்ம் (ஸ்பெயின்) கோல்ஃப், மூன்றாம் இடத்தில் லியோனல் மெஸ்ஸி (அர்ஜென்டினா) கால்பந்து, நான்காமிடத்தில் லெப்ரான் ஜேம்ஸ் (அமெரிக்கா) கூடைப்பந்து மற்றும் ஐந்தாம் இடத்தில் கியானிஸ் அன்டெட்டோகவுன்போ (கிரீஸ்) கூடைப்பந்து  ஆகியோர் உள்ளனர்.




கருத்துரையிடுக

Respected visitors , this is your area. Ask your queries, post your suggestions. If you know correct answers for other friend's questions, kindly reply them. Motivate One another . Your comments will be posted soon with a small moderation.
Note:Please avoid sharing phone numbers, email Ids and posting abusive comments against the government and recruitment agencies.