Current Affairs, Latest News Updates, Online Tests for TNPSC Exams

TNPSC Current Affairs 7 May 2024

இந்தியா

இந்தியாவில் ஒரு நபருக்கு மருத்துவ சேவைக்கான அரசு செலவினம் : 

இந்தியாவில் ஒரு நபருக்கு மருத்துவ சேவைக்கான அரசு செலவினம் படிப்படியாக அதிகரித்து வருகிறது. உதாரணமாக, 2014-15 மற்றும் 2019-20 க்கு இடையில், ஒரு நபருக்கு ரூ.1,108 லிருந்து ரூ.2,014 ஆக உயர்ந்தது. 2020-21ல் ஒரு நபருக்கு அரசு செலவினம் ரூ.2,322 ஆகவும், 2021-22ல் ரூ.3,156 ஆகவும் உயர்ந்து கொண்டு இருக்கிறது. இது 2014-15 ஆம் ஆண்டை ஒப்பிடுகையில் அரசு செலவினம்  மூன்று மடங்கு  உயர்ந்துள்ளது .

ஒன்றிய பட்ஜெட்டில் அதிகரித்துள்ள சுகாதாரத்திற்கான செலவின விகிதம் 

2017 ஆம் ஆண்டின் தேசிய சுகாதாரக் கொள்கையானது (National Health Policy (NHP)) நியாயமான விலையில் நல்ல சுகாதாரத்தை அனைவரும் எளிதாகப் பெறுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.  2014-15 மற்றும் 2021-22 க்கு இடையில், நாட்டின் மொத்த செல்வத்தின் ஒரு பகுதியாக சுகாதார சேவைக்கான அரசாங்கச் செலவு 63% அதிகரித்துள்ளது. இது 2014-15 இல் 1.13% ஆக இருந்தது. 2019-20 இல் 1.35% ஆகவும், பின்னர் 2020-21 இல் 1.60% ஆகவும், இறுதியாக 2021-22 இல் 1.84% ஆகவும் உயர்ந்தது.


உலகின் அதிக வயதான மூதாட்டி குஞ்சீரம்மா தனது 121 வது வயதில் காலமானார்.  கேரள மாநிலத்தைச் சேர்ந்த இவர், உலகிலேயே அதிக வயதுடைய பெண் என உலக கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பெற்றுள்ளார். சுதந்திர போராட்டத்திலும் குஞ்சீரம்மா பங்கேற்று இருந்தது குறிப்பிடத்தக்கது.


உலக பத்திரிகை சுதந்திரக் குறியீட்டின் 22வது பதிப்பில் (World Press Freedom Index (WPFI 2024)), இந்தியா 180 நாடுகளில் 31.28 மதிப்பெண்களுடன் 159வது இடத்தில் உள்ளது. 

  • ரிப்போர்ட்டர்ஸ் வித்தவுட் பார்டர்ஸ் (Reporters Without Borders) அமைப்பு வெளியிட்டுள்ள இந்த பட்டியலில்,  நார்வே தொடர்ந்து 8வது ஆண்டாக முதலிடத்தில் உள்ளது அதைத் தொடர்ந்து டென்மார்க் (2வது) மற்றும் ஸ்வீடன் (3வது).  

  • கடைசி 3 இடங்களில் எரித்திரியா (180வது); சிரியா (179வது), மற்றும் ஆப்கானிஸ்தான் (178வது) ஆகிய நாடுகள் உள்ளன. 

  • துருக்கி, பாகிஸ்தான் மற்றும் இலங்கையை விட இந்தியா பின்தங்கியுள்ளது.


பத்திரிகை சுதந்திரம் குறித்த ஐ.நா. அறிக்கை :  

உலக பத்திரிகை சுதந்திர தினம் 2024 (3 மே 2024)ஐ ஒட்டி, ஐக்கிய நாடுகளின் கல்வி, அறிவியல் மற்றும் கலாச்சார அமைப்பு (United Nations Educational, Scientific and Cultural Organization (UNESCO)) "ஆபத்தில் உள்ள பத்திரிகை மற்றும் கிரகம்: சுற்றுச்சூழல் பத்திரிகையாளர்களின் பாதுகாப்பு; போக்குகள், சவால்கள் மற்றும் பரிந்துரைகள்." (Press and Planet in Danger:safety of environmental journalists; trends, challenges and recommendations) என்ற அறிக்கையை வெளியிட்டுள்ளது, அந்த அறிக்கையில், 2009 மற்றும் 2023 க்கு இடையில் 15 வெவ்வேறு நாடுகளில் சுற்றுச்சூழல் பிரச்சினைகள் குறித்து அறிக்கை செய்த மொத்தம் 44 ஊடகவியலாளர்கள் கொல்லப்பட்டதாக கூறப்பட்டுள்ளது. 


புராஜெக்ட் சீட்டாவின் (Project Cheetah) அடுத்த கட்டத்திற்காக கென்யாவிலிருந்து சிறுத்தைகளை பெறுவதற்கு இந்தியா விருப்பம் தெரிவித்துள்ளது. 

மத்திய பிரதேசத்தில் உள்ள காந்தி சாகர் வனவிலங்கு சரணாலயம் (Gandhi Sagar wildlife sanctuary) இந்த திட்டத்திற்கான இடமாக தேர்வு செய்யப்பட்டுள்ளது. ப்ராஜெக்ட் சீட்டாவின் கீழ் உள்ள திட்டம், கிடைக்கும் தன்மையைப் பொறுத்து, ஐந்து ஆண்டுகளில் ஆண்டுக்கு 8 முதல் 14 சிறுத்தைகளை அறிமுகப்படுத்துவதாகும்.  

புராஜெக்ட் சீட்டா (Project Cheetah) பற்றி : 

  • புராஜெக்ட் சீட்டா என்பது இந்திய துணைக்கண்டத்தில் சிறுத்தைகளை மீண்டும் அறிமுகப்படுத்துவதில் கவனம் செலுத்தும் இந்திய அரசின் ஒரு லட்சிய முயற்சியாகும்.  

  • இந்த திட்டமானது கணிசமான சிறுத்தைகள் வாழும் நமீபியா மற்றும் தென்னாப்பிரிக்கா நாடுகளுடன் ஒத்துழைப்பை உள்ளடக்கியது. முதல் தொகுதி சிறுத்தைகள் 2022 இல் நமீபியாவில் இருந்து இந்தியாவிற்கு இடமாற்றம் செய்யப்பட்டன, அதைத் தொடர்ந்து 2023 இல் தென்னாப்பிரிக்காவிலிருந்து கூடுதலாக வந்தன.  பொருத்தமான வாழ்விடம் மற்றும் தற்போதைய பாதுகாப்பு முயற்சிகள் காரணமாக, சிறுத்தைகளை மீண்டும் அறிமுகப்படுத்தப்படுவதற்கான முதன்மையான இடமாக மத்தியப் பிரதேசத்தில் உள்ள குனோ தேசியப் பூங்கா தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.  


இரண்டாவது C-295 போக்குவரத்து விமானத்தை ஏர்பஸ் டிஃபென்ஸ் மற்றும் ஸ்பேஸ் எஸ்.ஏ., ஸ்பெயினில் (Airbus Defence and Space S.A., Spain) இருந்து இந்திய விமானப்படை பெற்றுள்ளது.  இந்த C-295 விமானங்கள் 1960 முதல் இந்திய விமானப்படையின் சேவையில் இருக்கும் Avro Hawker Siddeley HS-748 விமானங்களை மாற்றும்.

பின்னணி : 

  • 2021 செப்டம்பரில், இந்திய பாதுகாப்பு அமைச்சகம்  இந்திய விமானப்படையின் சேவையில் இருக்கும் Avro Hawker Siddeley HS-748 வை மாற்றுவதற்காக 56 C-295 போக்குவரத்து விமானங்களை வாங்குவதற்காக ஸ்பெயினின் Airbus Defense மற்றும் Space S.A. உடன் ரூ.21,935 கோடி மதிப்பிலான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது.  

  • ஒப்பந்தத்தின்படி, ஸ்பெயினின் செவில்லில் உள்ள ஏர்பஸ் வசதியில் 16 விமானங்கள் தயாரிக்கப்படும்.

  • டாடா அட்வான்ஸ்டு சிஸ்டம்ஸ் லிமிடெட் (Tata Advanced Systems Limited (TASL)), டாடா குழுமத்தின் strategic Aerospace and Defence மற்றும் Airbus Defence and Space இணைந்து  மீதமுள்ள 40 C-295 விமானங்களை குஜராத்தின் வதோதராவில் உள்ள C-295 ஃபைன் அசெம்பிளி லைனில் (Fine Assembly Line(FAL)) தயாரிக்கும்.

  • இந்தியாவில் தயாரிக்கப்பட்ட முதல் விமானம் 2026 இல் இந்திய விமானப்படையில் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்படும். 


உலகம்

அணு ஆயுத போருக்கான ஒத்திகையை அறிவித்துள்ள ரஷியா : உக்ரைன் போரில் தங்களது ஈடுபாட்டை மேலும் அதிகரிக்கப்போவதாக மேற்கத்திய நாடுகள் கூறிவருவதற்குப் பதிலடியாக, அணு ஆயுத போா் ஒத்திகையை நடத்தவிருப்பதாக ரஷியா அறிவித்துள்ளது.


இஸ்ரேலில் செயல்பட்டுவரும் அல் ஜெசீரா செய்தி நிறுவனத்திற்கு அந்நாட்டு அரசு தடை விதித்துள்ளது. கத்தார் அரசின் நிதியில் செயல்பட்டுவரும் அல் ஜெசீரா செய்தி நிறுவனம் உலகின் பல்வேறு நாடுகளில் அலுவலகம் அமைத்து செய்தி ஒளிபரப்பி வருகிறது குறிப்பிடத்தக்கது.


பனாமா குடியரசின் புதிய அதிபராக ஜோஸ் ரவுல் முலினோ (64 வயது) தேர்ந்தெடுக்கப்பட்டார்.

கூ.தக. : பனாமா குடியரசின் தலைநகரம் - பனாமா நகரம் (Panama City) மற்றும் நாணயம் - பனாமேனியன் பல்போவா(Panamanian Balboa(PAB)) ஆகும். 


பொருளாதாரம்

2023-24-ஆம் நிதியாண்டில் இந்தியாவில் புதிதாக பதிவு செய்யப்பட்ட நிறுவனங்களின் எண்ணிக்கையில் சாதனை : கடந்த 2023 ஆம் ஆண்டு ஏப்ரலில் தொடங்கி நடப்பாண்டின் மாா்ச் மாதத்தோடு நிறைவடைந்த நிதியாண்டில் 1,85,315 நிறுவனங்களும் 58,990 வரையறு பொறுப்பு கூட்டாண்மைகளும் (எல்எல்பி) பதிவு செய்யப்பட்டுள்ளன. 

இந்த எண்ணிக்கை ஒரு புதிய வருடாந்திர உச்சமாகும். இதற்கு முன்னர் கடந்த 2022-23-ஆம் ஆண்டில் பதிவு செய்யப்பட்ட நிறுவனங்களின் எண்ணிக்கையே அதிபட்சமாக இருந்தது. அப்போது 1,59,339 நிறுவனங்களும் 36,249 எல்எல்பி-க்களும் பதிவு செய்யப்பட்டிருந்தன.

விருதுகள்

சா்வதேச அளவில் கண் சிகிச்சையில் சிறப்புற செயல்படும் பெண் மருத்துவா்களில் 17 வது இடத்தில் டாக்டர் அகர்வால்ஸ் மருத்துவமனையின் முதுநிலை மருத்துவா் டாக்டா் சூசன் ஜேக்கப் தோ்வாகியுள்ளனா். கண் மருத்துவவியல் துறைக்காகவே பிரத்யேகமாக வெளியாகிற முதன்மையான சா்வதேச இதழ் ‘தி ஆப்தால்மாலஜிஸ்ட்’ வெளியிட்டுள்ள உலகின்  சிறந்து விளங்குகிற 100 மருத்துவா்களின் பட்டியலில் 17 வது இடத்தை டாக்டா் சூசன் ஜேக்கப்  பெற்றுள்ளார். 

முக்கிய தினங்கள்


திராவிட மொழிகளின் ஒப்பியல் அறிஞர் இராபர்ட் கால்டுவெல் பிறந்த தினம் - 07.05.2024 

கூ.தக. : 

  • திராவிட மொழிகளின் ஒப்பியல் அறிஞர் இராபர்ட் கால்டுவெல் அயர்லாந்தில் 07.051816இல் பிறந்து, ஸ்காத்லாந்தில் கல்விப் பயின்று, இங்கிலாந்து நாட்டில் பயிற்சிபெற்றுத் தமிழ்நாட்டில் ஐம்பத்து மூன்று ஆண்டுகள் இருந்து அளவில்லாத அரும்பணிகளை ஆற்றினார். 

  • கால்டுவெல் இளமையிலேயே மேலை நாட்டுச் செம்மொழிகளாகிய கிரேக்கமும் இலத்தீனும் கற்றிருந்தார்; கிறித்தவ சமய நுண் பொருளை அறிய ஈபுரு மொழியைப் படித்தார்; தமிழ் நாட்டுக்கு வந்த பின்னர் வடமொழியையும், தமிழையும் ஆர்வத்தோடு பயின்றார்; ஜெர்மானிய அறிஞர்கள் இந்திய மொழிகளைக் குறித்து எழுதிய ஆராய்ச்சி நூல்களைப் பயில ஜெர்மானிய மொழியைக் கற்றார். 

  • தமிழ் முதலிய திராவிட மொழிகளுக்கும், இந்திய மொழிகளுக்கும் தாய் சமஸ்கிருதமே எனப் பலரும் நம்பியிருந்த காலத்தில், அதனை மறுத்துத் திராவிட மொழிகளின் தொன்மையையும், தனித்தன்மையையும், வளமையையும் சான்றுகளுடன் நிறுவித் தமிழ் மொழியின் தனிப் பெருமையை உலகுக்கு உணர்த்திய தனிப்புகழ் இவரைச் சாரும். 

  • சமஸ்கிருதத்துக்குப் புறம்பான தனியான ஒரு மொழிக் குடும்பம் உண்டு என்றதோடு தமிழில் சமஸ்கிருதமும், பிற இந்திய-ஆரிய மொழிகள் பலவும் கூடச் சொற்களைக் கடன் வாங்கியுள்ளன என்று அவர் எழுதிய திராவிட மொழிகளின் ஒப்பிலக்கண நூல் (1856) காலத்தால் அழியாத நினைவுச் சின்னமாய் என்றென்றும் நிலைத்திருக்கும். 


உலக சிரிப்பு தினம் (World Laughter Day) 2024 - மே 5 

கூ.தக. உலக சிரிப்பு தினம் (WLD)  ஆண்டுதோறும் மே மாதத்தின் முதலாவது ஞாயிற்றுக்கிழமையில் அனுசரிக்கப்படுகிறது.  


சர்வதேச தாதியர் தினம் (International Day of the Midwife) - மே 5 


உலக கை சுகாதார தினம்  (World Hand Hygiene Day)  – மே 5

 

அறிவியல் தொழில்நுட்பம் 

3-ஆவது முறையாக விண்வெளி செல்லும் சுனிதா வில்லியம்ஸ் : 

  • இந்திய வம்சாவளியைச் சோ்ந்த அமெரிக்க விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ் (58), 3-ஆவது முறையாக 7.5.2024 அன்று விண்வெளிக்கு பயணிக்கிறார். 

  • தற்போதைய விண்வெளி பயணத்தின் மூலம், ’போயிங் ஸ்டார்லைனர்’ எனும்   அதிஉயரக விண்கலத்தில் செல்லும் முதல் பெண் என்ற சாதனையையும்   சுனிதா வில்லியம்ஸ் படைத்துள்ளார்.

  • அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் உள்ள கென்னடி விண்வெளி மையத்திலிருந்து 7.5.2024 அன்று இந்த விண்கலம் செலுத்தப்படுகிறது. 

  • போயிங் நிறுவனம் ‘ஸ்டாா்லைனா்’ என்ற விண்வெளி ஓடத்தை உருவாக்கியுள்ளது. இந்தச் சோதனை வெற்றியடைந்தால், ஸ்பேஸ் எக்ஸுக்கு அடுத்தபடியாக சா்வதேச விண்வெளி நிலையத்துக்கு ஆள்களை அனுப்பக்கூடிய 2-ஆவது தனியாா் நிறுவனம் என்ற பெருமையை போயிங் பெறும்.

கூ.தக. : இந்தியாவின் குஜராத்தை பூர்வீகமாகக் கொண்ட  சுனிதா வில்லியம்ஸ் கடந்த 2006-ம் ஆண்டில் நாசா மூலம் முதல்முறை தனது விண்வெளி பயணத்தை மேற்கொண்டார். அதனை அடுத்து 2012-ம் ஆண்டில் இரண்டாம் முறையாக விண்ணைத் தொட்டார். இதுவரை 322 நாட்களை அவர் விண்ணில் கழித்திருக்கிறார். அதுமட்டுமின்றி விண்ணில் நெடுநேரம் நடைபயின்ற முதல் பெண் என்ற சாதனைக்கும் சொந்தக்காரர். ஏழு முறை விண்வெளியில் நடைபயின்ற சுனிதா மொத்தம் 50 மணி நேரம் 40 நிமிடங்கள் விண்வெளியில் நடந்திருக்கிறார்.

 

விளையாட்டு

மாட்ரிட் ஓபன் ஆடவா் ஒற்றையா் பிரிவில் ரஷியாவின் ஆண்ட்ரே ரூபலேவ் சாம்பியன் பட்டத்தை முதல் முறையாகக் கைப்பற்றினாா். 

ஸ்பெயினில் நடைபெற்ற இந்த போட்டியில் மகளிா் இரட்டையா் பிரிவில், ஸ்பெயினின் கிறிஸ்டினா பக்ஸா/சாரா சொரைப்ஸ் டோா்மோ இணை சாம்பியன் பட்டம் பெற்றது. 


உலக பேட்மிண்டன் கூட்டமைப்பின்  தாமஸ் கோப்பை 2024 (Badminton World Federation (BWF) Thomas Cup 2024)இன் 33வது பதிப்பில், இந்தோனேசியாவைத் தோற்கடித்து சீன மக்கள் குடியரசு ஆண்கள் அணி வென்றது. இது சீனாவின் 11வது தாமஸ் கோப்பை பட்டமாகும். இந்த போட்டிகள், ஏப்ரல் 29 முதல் மே 5 வரை சீனாவின் செங்டுவில் நடைபெற்றது.


 

மெயின்ஸ் கட்டுரைகள்

நிலையான வளர்ச்சி  இலக்குகள் குறித்த உச்சி மாநாடு 2023 (United Nations summit on Sustainable Development Goals (SDG)) நிலையான வளர்ச்சி இலக்குகளை அடைவதில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் குறித்து ஆய்வு செய்தது.

2030 ஆம் ஆண்டளவில் நிறைவேற்றிட 169 இலக்குகளுடன் 17 நிலையான வளர்ச்சி இலக்குகள் (SDG) ‘செயல்திட்டம்-2030’, 2015 ஆம் ஆண்டு ஐநா பொதுச் சபையால் நிறைவேற்றப்பட்டது.

ஐநாவின் நிலையான வளர்ச்சி இலக்கின் அறிக்கை, 2023 அவசர நடவடிக்கைக்கான ஐந்து முக்கிய பகுதிகளை எடுத்துக்காட்டுகிறது: 

1. நிலையான வளர்ச்சி இலக்குகளை ஏழு ஆண்டுக்குள் விரைவாக நிறைவேற்றும் நடவடிக்கைகளை மேற்கொள்ள அரசாங்கங்கள் உறுதிப்பூண்டுள்ளன.

2. வறுமையை முடிவுக்குக் கொண்டுவருவதற்கும், சமத்துவமின்மையைக் குறைப்பதற்கும், இயற்கையைப் பாதுகாப்பதற்கும் குறிப்பிட்ட அரசாங்கக் கொள்கைகளை செயல்படுத்துதல், குறிப்பாக பெண்களின் உரிமைகளில் கவனம் செலுத்துதல் மற்றும் மிகவும் பாதிக்கப்படக்கூடியவர்களுக்கு உதவுதல்.

3. விரைவான முன்னேற்றத்திற்காக தேசிய மற்றும் உள்ளூர் திறன்கள், பொறுப்புக்கூறல் மற்றும் பொது நிறுவனங்களை வலுப்படுத்துதல்.

4. சர்வதேச உறுதிப்பாட்டை உறுதிப்படுத்துதல் மற்றும் வளரும் நாடுகளுக்கு உதவ வளங்களைத் திரட்டுதல்.

5. ஐ.நா. வளர்ச்சி அமைப்பை தொடர்ந்து வலுப்படுத்துதல்.



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Respected visitors , this is your area. Ask your queries, post your suggestions. If you know correct answers for other friend's questions, kindly reply them. Motivate One another . Your comments will be posted soon with a small moderation.
Note:Please avoid sharing phone numbers, email Ids and posting abusive comments against the government and recruitment agencies.

Post Bottom ads

Your Ad Spot